Showing posts with label தூத்துக்குடி. Show all posts
Showing posts with label தூத்துக்குடி. Show all posts

Thursday, 19 May 2022

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு: சிபிஐ விசாரணை அறிக்கை ஒரு மோசடி!

தூத்துக்குடியை மாசுபடுத்தும்  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய 100 நாள் போராட்டத்தில் அன்றைய எடப்பாடி அதிமுக அரசு காவல்துறையை ஏவி போராடும் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 15 பேரை படுகொலை செய்தது. 

துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை நடத்திய மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணை அறிக்கையை தற்போது தாக்கல் செய்துள்ளது. குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டிய காவல்துறையினரை சாட்சிகளாகவும், சாட்சிகளாக இருக்க வேண்டிய பொதுமக்களை குற்றவாளிகளாகவும் சிபிஐ யின் புலனாய்வு அறிக்கை கூறுகிறது. 

இந்த அறிக்கையை முற்றிலும் நிராகரிப்பதாகவும், நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் புதிய புலனாய்வை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு  சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பின்போது தெரிவித்த கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு.




Monday, 8 November 2021

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு! பொதுமக்களை குற்றவாளியாக்கிய சிபிஐ!

*ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கில் பொதுமக்களே குற்றவாளிகள்;*

*பொது மக்களை சுட்டுக் கொலை செய்த போலீசார் மீது CBI குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை:*

2018 மே -22 ல் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை அதிமுக அரசும், காவல்துறையும், ஸ்டெர்லைட் நிர்வாகமும் கூட்டு சேர்ந்து போராட்டத்தை சீர்குலைத்தது. மனு கொடுக்க வந்த பொதுமக்களை கார்ப்பரேட் நலனுக்காக, மீடியாக்கள் முன்னால் உலகமே பார்த்துக் கொண்டிருக்கும் போதே சுட்டுப் படுகொலை செய்தது.

தங்களின் சுகாதாரமான வாழ்க்கைக்கு வழி கேட்டு வந்த பல்லாயிரகக்கணக்கானவர்களில் 15 பேரின் இரத்தத்தைக் குடித்து வாழ்க்கையை முடித்து வைத்தது. 

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை-மகன் போலீஸ் கஸ்டடியில் படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழகமே நியாயம் கேட்டது. காவல் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு இதுவரை சிறையில் உள்ளனர். அதற்கு முன்னரே நடைபெற்ற, நெஞ்சை பதற வைத்த, உலகத்தையே உறையவைத்த, ஸ்டெர்லைட் படுகொலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸ்காரர்கள் யார்? சுட உத்தரவிட்டவர்கள் யார்? என்று தமிழகம் தாண்டி உலகம் முழுவதும் கேள்விகளோடு, நீதிக்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கான கேள்வி எழும்போதெல்லாம்  சி.பி.ஐ விசாரணையில் கொலை செய்த காவல் அதிகாரிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றது அதிகாரவர்க்கம். 

ஆனால்,
இதோ... சி.பி.ஐ 71 பேர் மீது குற்றம் சாட்டி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. முதல் கட்டமாக 27 பேருக்கு சம்மன் அனுப்பியதால் இன்று (08-11-21) மதுரை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர்.

எந்த தூத்துக்குடி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் போராடினார்களோ, காவல்துறையால் சித்திரவதை செய்யப்பட்டார்களோ, யாரெல்லாம் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்களோ அவர்களையே மீண்டும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியுள்ளது சி.பி.ஐ.

துப்பாக்கிச்சூடு வழக்கை தூத்துக்குடி மாநகராட்சி-மேற்கு மண்டலம் மில்லர்புரம் அலுவலகத்தில் வைத்து விசாரித்து வந்த CBI, விசாரணைக்கு வந்தவர்களை மிரட்டியுள்ளது. உடனடியாக வர இயலாதவர்களையும், விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பும்படி கேட்டவர்களையும் வழக்கில் சேர்த்து வாழ்க்கையை தொலைத்துவிடுவதாக வெறித்தனம் காட்டியுள்ளனர். 'இவன் யார்? அவன் யார்?' என்று வீடியோவைப் பார்த்து பொதுமக்களைப் பற்றி மட்டுமே விசாரித்து குற்றவாளியாக்கிய CBI அதிகாரிகள், துப்பாக்கிச் சூடு நடத்தியதையும், சுட்ட போலீஸ்காரர்களின் வீடியோவை காண்பித்து போலீசார் யார்,யார் சுட்டார்கள்கள்? என்று உப்புக்கு சப்பாக ஒரு கேள்வி கூட கேட்கவில்லை என்று விசாரணைக்குச் சென்றவர்கள் கூறினார்கள். இப்படித்தான் ஒரு தலைபட்சமாக விசாரணை நடந்துள்ளது.

பட்டப்பகலில் ஊரறிய, ஊடகம் முன்பு சுட்டுக்கொன்ற காவல்துறை மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்படவில்லையே ஏன்? என்பதுதான் இப்போது மக்கள் முன்பு உள்ள மிகப்பெரிய கேள்வியாகும்.

மோடியின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.ஐ.யே லஞ்ச, ஊழல், அதிகார துஷ்பிரயோகத்தில் சீரழிந்து உள்ளது. மோடி, அகர்வாலின் சட்டைப்பாக்கெட்டில் உள்ளார். அ.தி.மு.க. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 15 பேர் இறந்தது தனக்குத் தெரியாது என்றும், தான் டிவி பார்த்துதான் தெரிந்து கொண்டதாகவும், அது ஒரு கற்பனைக் கதை என்றும் வாய் கூசாமல் புளுகினார். தமிழக மக்கள் நூற்றாண்டு கடந்தாலும் மறக்க மாட்டார்கள். இவர்களின் ஆசிகளோடுதான் சி.பி.ஐ விசாரணை 'சிறப்பாக' நடந்துள்ளது.

அதிமுக அரசின் முக்கியப் புள்ளிகள் துணையோடும், காவல்துறை உயரதிகாரிகள், ஸ்டெர்லைட் நிர்வாகிகளின் கூட்டுச்சதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நாம் எதிர்பார்த்தபடியே, காவல்துறையைச் சேர்ந்த குற்றவாளிகள் தப்பித்துக் கொள்வதற்காக  உண்மையின் பக்கம் இல்லாமல், ஒரு தலைபட்சமாக குற்றப்பத்திரிக்கையை சி.பி.ஐ தாக்கல் செய்துள்ளது.

எனவே...
தமிழக மக்கள் அனைவரும், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு படுகொலைக்கு  நீதி எங்கே? என்று சி.பி.ஐ.யை நோக்கி கேள்வி எழுப்ப வேண்டும்.

நீதிமன்றத்தின் மூலம் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து கொலைகாரர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

அதற்கான சட்டப் போராட்டமும்,
மக்கள் போராட்டமும் தொடரும்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.




Monday, 24 May 2021

'சங்கத்தலைவனுக்கும்' பங்கிருக்கு!

சங்கத்தலைவனுக்கும் பங்கிருக்கு!

மே-22 தியாகிகள் நினைவு நாளில் PRPC-யின் zoom மீட்டிங் & பூவையா என்ற JP
தலைப்பு குழப்புதா?
அப்படித்தான் குழப்பும்.
அதுக்கு ஒன்னுஞ் செய்ய முடியாது...
"என்னண்ணே நினைவஞ்சலி பிளக்ஸ் போர்டு வந்துருச்சா..."
மே-21, இரவு10.30 மணிக்கு ஸ்டெர்லைட்டுக்கு பக்கத்து தெற்கு வீரபாண்டியபுரம் பூவையா என்ற ஜெயப்பிரகாஷ் (JP) அவர்களுக்கு போன் செய்கிறேன்.
"வந்துருச்சி சார், நான் பாக்கல, அம்மா சொன்னாங்க" என்றார்.
"அப்படியா வந்ததே தெரியாம ஏதும் முக்கியமான வேலையில இருந்தீங்களா?"
"இல்ல சார், விஜய் டிவியில சமுத்திரகனியும், கருணாஸும் நடிச்ச சங்கத்தலைவன் படம் போட்டாங்க,10 மணி வரை இந்தப்படம் பார்க்கும் போது வேற எந்த நினைப்பும் வரல சார்...
இப்ப என்னன்னா... பிளக்ஸ எடுத்து நைட்டே கட்டணும் போல இருக்கு, ஏற்பாடு பண்ண போறோம், கம்பெடுத்து போடணும் சார்" என்றார்.
"சரி, நைட் எதுக்கு?, மத்தவங்க தூங்கி இருப்பாங்க. காலையில சேர்ந்து கட்டுங்கண்ணே"
"சரிங்க சார் அப்படியே பண்ணிருவோம்" என்றார். செல்போனை வைத்துவிட்டேன்.
கொஞ்ச நேரத்தில் "தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு ஒரு நினைவேந்தல் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு வைக்கிறோம், போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேசுனா நல்லா இருக்கும்" என்று PRPC சென்னை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் மில்டன் என்னிடம் பேசினார்.
அதற்குப் பிறகு, நான் போராட்டக்களத்தில் இருந்த பல முன்னணியாளர்களுடன் தொடர்பு கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு பேசினேன்.
"அதைப்போல பூவையா அவர்களிடமும் கேட்போம். அவர் பேசத் தயங்குவார். ஒருவேளை அவர் தயங்கினால், அவரது மனைவியையோ அல்லது அவரது அம்மா ஜெயலட்சுமி அவர்களையோ பேசச் சொல்லலாம்" என்று நினைத்து தான் செல்போனில் கூப்பிட்டேன். "பூவையாண்ணே இதுமாதிரி நம்ம மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் நடத்துற நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் நாளை காலையில 11 மணிக்கு, உங்க போராட்ட அனுபவம் கவர்மெண்ட்டுக்கு நாம வைக்கக்கூடிய கோரிக்கைகள், இதெல்லாம் வைச்சு, நீங்க ஒரு அஞ்சு நிமிஷம் பேசணும்".
"யாரெல்லாம் பேசுகிறார்கள் சார்" என்றார்.
சரி... இந்த பெயரெல்லாம் சொன்னால், கண்டிப்பாக அவர் பேச மாட்டார் என்று நினைத்து தான் "ரிட்டயர்டு ஜட்ஜ் அரிபரந்தாமன் சார், நம்மளுக்கு மெட்ராஸ்ல கேஸ் நடத்தின லாயர் பாலன் ஹரிதாஸ் சார், டெல்லி லாயர் சபரீஸ் சார், விசிகட்சியின் ஆளூர் ஷாநவாஸ் எம்.எல்.ஏ, பிரபல ஊடகவியலாளர் செந்தில்வேல் சார், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் சார், அப்புறம் நம்ம வாஞ்சிநாதன் சார் பேசுறாங்க" என்று கூறிவிட்டு மௌனமானேன்.
"சரி சார் பேசுவோம், நான் பேசுறேன் சார்" என்றார். எனக்கு சந்தோசமும், வியப்பும் ஏற்பட்டதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
ஏனென்றால் அந்த மீட்டிங்கில் பேசப்போகிற தூத்துக்குடியின் பல பகுதிகள் - கிராமங்களை சேர்ந்த மீளவிட்டான் AS முத்து, பூவையா ஆகியோரைத் தவிர குமாரட்டியாபுரம் அ.முருகன், பண்டாரம்பட்டி வசந்தி அம்மா, மடத்தூர் சிம்லா, புதுத்தெரு ஆன்ஸ், பெரியநாயகிபுரம் மணி, இறந்த கிளாஸ்டன் மூத்த சகோதரி பாத்திமாநகர் ஜெனரோஸ், திருநங்கை சகோதரி ரீமா என்ற பியூட்லின், முத்தையாபுரம் சேமா சந்தனராஜ், தாளமுத்து நகரின் ராஜபாளையம் மைக்கேல் உட்பட ஸ்டெர்லைட் எதிர்ப்பு முன்னணியாளர்களில் பலர் இதற்கு முன்பு ஏதாவது ஒரு வகையில் போராட்டக்களத்தில் மீடியாவிலும், சிலர் அவர்களது ஊர் பிரச்சினைகளை சமூக வலைதளங்களிலும் பேசியவர்கள். ஆனால் பூவையா அவர்கள் பேட்டி கொடுக்க, சமூக வலைதளங்களில் பேச தயங்குவார். கூச்சப்படுவார். அவரை பேசுமாறு இதற்கு முன்பு பல நிகழ்வுகளில் கூறும்பொழுது
"நான் ஒரு ஆளுன்னு என்னை பேச சொல்றீங்க" என்பார். அதிமுக அரசு ஆக்ஸிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட்டுக்கு அனுமதி கொடுக்க மாவட்டாட்சியர் கருக் கேட்பு கூட்டம் நடத்தினார். எதிர்ப்பு தெரிவிக்க வந்த பூவையா ஆலை திறக்கப்படும் துயரம் கண்டு அழுது கதறியிருப்பார். செய்தி சேனல்களில் அவரை நீங்கள் ஒரு வேளை பாத்திருக்கலாம்.
இதற்கு எதற்கு பூவையாவை பேச வேண்டும்.
காரணம் இது தான்.
அவரது ஊரில் மட்டும்தான் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் பலர் இருக்கிறார்கள். அது வேறு ஒன்றுமில்லை. ஸ்டெர்லைட்டின் பல காண்ட்ராக்டர்கள் அந்த ஊரில் இருக்கிறார்கள். பெரிய தலைக்கட்டுகாரர்கள். அப்படிப்பட்ட ஊரில் தான் குறைவான எண்ணிக்கையில் உள்ளவர்களை பூவையா களத்தில் திரட்டியவர். மே-22 துப்பாக்கி சூடுக்கு இரண்டு மூன்று மாதம் கழித்த பிறகிலிருந்து சமீபகாலம் வரை ஸ்டெர்லைட் நிறுவனம் செடி நடுவது, தையல்மிஷின் பயிற்சி கொடுப்பது, கல்வித்தொகை கொடுப்பது, நோட்டுப் புத்தகங்கள் கொடுப்பது என்ற பெயரில் ஆலையின் அதிகாரிகள், பணிபுரிபவர்கள், ஆதரவாளர்கள் ஆகியோர் ஆட்களைப் பிடிக்க வருவார்கள்.


பூவையா உடனடியாக காவல் துறைக்கும், VAO, RI, தாசில்தார் என தகவல் சொல்வார். "சீல் வச்சி பூட்டுன கம்பெனி உனக்கென்ன ஊருக்குல்ல வேலை?, கொரானா காலத்துல இதுக்கு அனுமதி கொடுத்தது யார்?" என்று கேட்பார். "அரசின் அனுமதி இல்லாமல் எங்க ஊருக்குள்ள வந்து அதக் கொடுக்குறேன், இதக் கொடுக்குறேன்னு வந்திங்கன்னா நடக்குறதே வேற" என்பார்.
"ஊருல மரம் வைக்க இப்ப வந்துட்டீங்களே வெக்கமில்லாம.., 25 வருஷமா எங்கய்யா போனீங்க? இதுவரை ஸ்டெர்லைட்டு கம்பெனியை சுத்தி மரம் வச்சி, பசுமை வளையம் வைக்க துப்பிருக்கா?" என்பார்.
பிரச்சனை ஏற்பட்டு பெரிதாவதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் போய்விடுவார்கள். இதுதான் பூவையா.
ஆதரவாளர்கள் இவருக்கு விலை பேசுவார்கள், போலீஸ் மிரட்டும் (இப்ப இல்ல). "அப்படியா" என்று கேட்டுக்கொள்வார். அசர மாட்டார்.
மே-22 காலை 5.50 க்கு எழும்பி, மற்றவர்களையும் எழுப்பி விட்டு, காலையிலேயே ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளின் பிளக்ஸ் போர்டு கட்டி, நினைவஞ்சலி செலுத்தி, கபசுரக்குடிநீர், முகக்கவசம் வழங்கியுள்ளார்.
அதன் பின் ம.உ.பா.மை ஏற்பாடு செய்த ZOOM மீட்டிங்கிலும் அன்று காலை பேசினார். நல்லா எதார்த்தமாக அனுபவத்தை பகிர்ந்தார்.
"என்னண்ணே... நிகழ்ச்சி எப்படி போச்சு?"
இதெல்லாம் முடிந்த பிறகு அவரிடம் செல்போனில் பேசினேன்.
"சார்... என் கேரக்டர் கிட்டத்தட்ட சங்க தலைவன் படத்தில் வர்ற கருணாஸ் கேரக்டர். என்னால செய்ய முடியாது, மத்தவங்க மாதிரி பேச முடியாது, அதுக்கு நான் சரிப்பட மாட்டேன் (சிரித்தார்), அப்படின்னு தான் நினைப்பேன். சங்கத்தமிழன் படம் பார்த்த கொஞ்ச நேரத்துல நீங்க, இணைய தள மீட்டிங்குக்கு பேச கூப்பிட்டீங்க, ஏன் நம்மளால முடியாது?, இதை ஏன் முடியாதுன்னு சொல்லணும்? முடியும், பேசுவோம்" என்று நினைத்து பேசினேன் என்றார்.
ஒரு திரைப்படமும், அதிலுள்ள கேரக்டர்களும் இப்படி ஒரு பாசிட்டிவ் அப்ரோச்சை அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் ஒருவரை சிந்திக்க வைக்க முடியுமா?
முடிந்திருக்கிறது.
அடுத்து அவரிடம்...
"அண்ணே... இந்த படம் பார்த்த வேகத்துல உடனே போடு கட்டணும், zoom மீட்டிங்ல பேசணும்னு தோணுது"
"ஆமா சார்"
சங்கத் தலைவன் படம் வர்றதுக்கு முன்னாடியே... ஸ்டெர்லைட் போராட்டத்துல துப்பாக்கி சூட்டிற்கு முந்தி மொத ஒரு 100 நாளும், அப்புறம்...
இப்பவரை 3 வருஷ காலமா... ஒங்க ஊருல ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடுறீங்க, அது எப்படீண்ணே? பூவையா அவர்களிடம் கேட்டேன்.
அதற்கு அவர் மிக முக்கியமா ஒன்றை சொன்னார்.
"அதான் சார் தெரியல (மீண்டும் சிரித்தார்)" என்றார்.
அது என்னா...ன்னா
son of soil-ம், Love with Thoothukudi-யும்தான்.
அது தான்... மண்ணின் மைந்தன் என்ற திமிரும்,
தன் தூத்துக்குடி மண்ணின் மீதுள்ள பாசமும்தான்.❤️
சங்கத்தலைவனுக்கும் பங்கிருக்கு...👍





அரிராகவன்









Sunday, 23 May 2021

மூன்றாமாண்டிலும் தொடரும் தூத்துக்குடி மக்களின் கோபக் கனல்!

ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக 2018 , மே 22 அன்று தூத்துக்குடி மக்கள் நடத்திய வீரஞ்செரிந்த போராட்டத்தில் களப்பலியான தியாகிகளின் நினைவுகளை மூன்று ஆண்டுகள் கடந்த போதும் அம்மக்கள் தங்கள் நெஞ்சங்களில் சுமக்கின்றனர். ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும்வரை தூத்துக்குடி மக்கள் ஓயப்போவதில்லை என்பதை உணர்த்தும் வண்ணம் மே 22 அன்று தியாகிகளின் மூன்றாமாண்டு நினைவஞ்சலிக் கூட்டங்கள் தூத்துக்குடி எங்கும் நடைபெற்றது.

அதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பு.

கரோனாவைவிடக் கொடியது ஸ்டெர்லைட்

*வீட்டிலிருந்தபடியே உலகளாவிய இணையவழி தொடர் உண்ணாநிலை அறப்போராட்டம்*
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்களின் இயக்கம் தூத்துக்குடியில் நீதிக்காக மே 12 முதல் 22 வரைக்கும் ஒரு உலகளாவிய பட்டினி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து, பொதுநலனில் அக்கறையுள்ள அனைத்து மக்களையும், அமைப்புகளையும் மே 22- ஆம் தேதியை- ஸ்டெர்லைட் படுகொலையின் நினைவு நாளை- வேதாந்தா மற்றும் பெரு நிறுவன குழுமங்களின் குற்றங்களை எதிர்த்து நடவடிக்கை எடுக்கும் தினமாக கடைபிடிக்க அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி இன்று (21-05-2021) நாங்கள் (நானும் - எனது மனைவியும் கொரானோ பாசிடிவ் மே-10 லிருந்து வீட்டிலேயே தனிமைபடுத்துதலில் இருக்கிறோம்) மதியம் மட்டும் உணவருந்தாமல் இருந்தோம்.
தமிழக அரசே!
நீர் நிலம் காற்றை நாசப்படுத்திய குற்றத்திற்காக ஸ்டெர்லைட் நிறுவன உரிமையாளர்அனில் அகர்வால், நிறுவன அதிகாரிகள் மீது உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கிரிமினல் நடவடிக்கை எடுத்திடு!
கெ.அரி ராகவன் & சத்தியபாமா
முத்தம்மாள் காலனி
தூத்துக்குடி
கரோனா பாதித்த நிலையிலும் போராட்டக் களத்தில் வழக்குரைஞர் அரிராகவன் மற்றும் அவரது இணையர்

வேலை கொடுத்தமைக்கு நன்றி! அதே நேரத்தில் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் கோரிக்கை!

தமிழக முதல்வருக்கு...
நன்றி!
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கிய தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். தூத்துக்குடி மற்றும் 7 கோடி தமிழக மக்களின் கீழ்கண்ட முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1. ஸ்டெர்லைட் உரிமையாளர், நிர்வாகத்தின் மீது நீர், நிலம், காற்றை மாசுபடுத்திய குற்றத்திற்காக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் குறிப்பிட்டுள்ளபடி கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2) சிறப்புச் சட்டம் இயற்றி, ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்ற வேண்டும்.
3) மே-22ல் சுட்டுக்கொல்லப்பட்ட போராளிகளை சுற்றுச்சூழல் தியாகிகளாக அறிவித்திட வேண்டும்!
நினைவிடம் அமைத்திட வேண்டும்!
4) உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஸ்டெர்லைட் வழக்கை நீதிபதி ரோஹின்டன் நாரிமன் தலைமையிலான அமர்வில் விரைந்து விசாரித்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!
5) நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கையை மக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும்!
6) சுட்டுக்கொலை செய்த காவல்துறை/வருவாய் துறை உட்பட சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும்!
7) பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் வாங்ககப்பட வேண்டும்!
முதல்வர் ஸ்டாலின் (மே-21) இன்று நிறைவேற்றிய கோரிக்கைக்காக குரல் கொடுத்த, இன்னும் நிறைவேற்ற வேண்டிய முக்கிய கோரிக்கைகளுக்காக போராட்டம், ஆதரவு குரல் எழுப்பி வரும் அனைத்துக் கட்சிகள் (பாஜக தவிர), இயக்கங்கள், சங்கங்கள், சக தோழமை ஸ்டெர்லைட் எதிர்ப்பு அமைப்புகளுக்கும், அதன் தலைமைகளுக்கும், நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
*ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு*
9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 989457481

ஆலையை மூடக்கோரி கூட்டாக அறிக்கை
பத்திரிக்கை செய்தி:
தமிழக முதல்வருக்கு கோரிக்கை:
1. ஸ்டெர்லைட் நிர்வாகத்தை அழைத்துப்பேசி தூத்துக்குடி ஆலையை அகற்றிக் கொள்ள வலியுறுத்த வேண்டும் (இல்லையேல்)
ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட உச்சநீதிமன்ற நீதிபதி ரோகிண்டன் நாரிமன் அமர்வில் வழக்கு விசாரணையை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும்!
2. தூத்துக்குடி போராளிகளை சுற்றுச்சூழல் தியாகிகளாக அறிவிக்க வேண்டும்!
3. சுட்டுக் கொன்ற காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய காவல்துறை உயரதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கக் கூடாது!
4. தூத்துக்குடி மற்றும் தமிழகம் முழுவதும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது போடப்பட்ட வழக்குகளை வாபஸ்பெற வேண்டும்!
5. நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிட வேண்டும்!
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு முன்பே தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள் "ஸ்டெர்லைட் ஆலையை ஒருபோதும் திறக்க மாட்டோம்" என அறிவித்திருந்தார். நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களிலும் திமுக ஸ்டெர்லைட் எதிர்ப்பு நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. "ஸ்டெர்லைட்டை திறக்கவிட மாட்டோம்" என்ற முதல்வரின் கருத்துதான், ஒட்டுமொத்த தமிழக மக்கள், உலகத் தமிழர்களின் கருத்து.
நச்சாலை ஸ்டெர்லைட் இனி தமிழகத்திற்கு வேண்டாம் என்பதில் தூத்துக்குடி மக்கள், தமிழக மக்கள், பாஜக தவிர்த்த அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள், இயக்கத்தினர் உறுதியாக உள்ளனர். ஆனால் ஸ்டெர்லைட் நிர்வாகம், வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக, பசுமைத் தீர்ப்பாயம், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்ற வழக்குகள், அடுத்தடுத்து இடைக்கால மனுக்கள் என்று, எப்படியாவது மீண்டும் தூத்துக்குடியில் ஆலையை இயக்க வேண்டும் எனக்கருதி பல கோடிகள் செலவு செய்து வருகிறது. தற்போது உயிர் காக்கும் ஆக்ஸிஜன் 1050 மெட்ரிக் டன் தினமும் வழங்குகிறோம் என்று சொல்லி 10, 15 மெட்ரிக் டன்னுக்கே தடுமாறி வருகிறது. நூற்றுக்கணக்கான மக்கள் புற்று நோயில் மடிந்தும், பல முறை விசவாயு கசிந்தும், 2018 மே-22 அன்று 15 பேரின் உயிரைக் குடித்த பின்பும் மீண்டும் ஆலையை இயக்க வேதாந்தா நிறுவனம் முயற்சிப்பது 7 கோடித் தமிழர்கள், தமிழக அரசு, அனைத்து அரசியல் கட்சிகளை வெளிப்படையாக அவமதிப்பதாகும். தமிழக மக்களின் சுயமரியாதையை சீண்டுவதாகும். மகாராஷ்டிரா மாநிலம் இரத்தினகிரியில் அமைந்த வேதாந்தா தாமிர உருக்காலையை பாஜக, சிவசேனா கட்சியினரும், மக்களும் உடைத்தெறிந்தனர். அவ்வாலை மூடப்பட்டது. ஆனால் தமிழக மக்கள் சட்டம், ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து 24 ஆண்டுகளாக நீதிமன்றப் படியேறி வருகின்றனர். இதைப் புரிந்து கொண்டு ஸ்டெர்லைட் நிர்வாகம் தானே ஆலையை அகற்ற வேண்டும். தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்தபடி இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். முதல்வரே பேச்சு வார்த்தை நடத்தி ஸ்டெர்லைட் ஆலையை அகற்றி விட்டால் தூத்துக்குடி மக்களும், தமிழக மக்களும் என்றென்றும் அதற்கு நன்றியுடன் இருப்பர். திராவிட இயக்க வரலாறும் இதைப் பதிவு செய்யும். ஸ்டெர்லைட் நிர்வாகம் இதற்கு உடன்படாவிட்டால், விதிகளை மிக நீண்ட காலம் மீறி சுற்றுச் சூழலை நாசம் செய்த குற்றத்திற்காக உரிய கிரிமினல் வழக்குகள் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் தொடரப்பட்டு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
*ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மற்றும் தமிழகத்தின் பொது அமைதி கெட்டு சுமார் 300-க்கும் மேலான வழக்குகள், பல கோடி ரூபாய் சொத்துக்கள் நாசம், ஏராளமான மனித உயிர்கள் பலியாகி உள்ளதை கணக்கில் கொண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 133- ன் கீழ் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து ஆலையை நிரந்தரமாக அகற்ற உத்தரவிடலாம்.*
தமிழக அரசின் தொடர் நடவடிக்கைகள் மட்டுமே வேதாந்தா நிறுவனத்தை பின்வாங்கச் செய்யும். உச்ச நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றாலும் தூத்துக்குடியில் ஆலையை இயக்க முடியாது என்று கருதச் செய்யும். எனவே இரண்டாம் ஜாலியன் வாலாபாக் என்று கருதப்படும் தூத்துக்குடிப் படுகொலையின் மூன்றாமாண்டு நினைவு நாளான மே-22 அன்று தமிழக முதல்வர் ஸ்டெர்லைட்டை தூத்துக்குடியிலிருந்து நிரந்தரமாக அகற்றுவதற்கான அறிவிப்புகளைச் செய்ய வேண்டும் எனக் கோருகிறோம்.
-----------------------------------------
சே. வாஞ்சி நாதன். வழக்கறிஞர்.
சட்ட ஆலோசகர்,
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு.
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்
384, கிழக்கு 8-வது தெரு, கே.கே.நகர், மதுரை-20. தொடர்பு கொள்ள:
98653 48163

நினைவஞ்சலிக் கூட்டங்கள்

தூத்துக்குடியின் பல்வேறு இடங்களில் இன்று (மே-22) ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு பொதுமக்கள், மக்கள் கூட்டமைப்பு, கட்சிகள், இயக்கங்கள் சார்பில், செலுத்தப்பட்ட நினைவஞ்சலி புகைப்படங்கள்:


















தூத்துக்குடி எங்கும் எதிரொலித்த முழக்கங்கள்
வீரவணக்க முழக்கம்!
வீரவணக்கம்! வீரவணக்கம்!
மண்ணை காத்த
மாவீரர்களே...
உங்களுக்கு எங்கள்
வீரவணக்கம்! வீரவணக்கம்!
வீரவணக்கம்! வீரவணக்கம்!
மக்களைக் காத்த
தியாகிகளே...
உங்களுக்கு எங்கள்
வீரவணக்கம்! வீரவணக்கம்!
வீரவணக்கம்! வீரவணக்கம்!
தூத்துக்குடியின் போராளிகள்
ஸ்நோலின், தமிழரசன்...
ரஞ்சித், ஜெயராமன்...
மணிராஜ், ஜான்சி...
கந்தையா
அந்தோணி செல்வராஜ்...
கார்த்திக், காளியப்பன்...
சண்முகம், கிளாஸ்டன்...
செல்வசேகர், பரத்ராஜ்...
ஜஸ்டினுக்கு வீரவணக்கம்!
விடமாட்டோம்! விடமாட்டோம்!
ஸ்டெர்லைட்டை விரட்டி அடிக்காமல்...
விடமாட்டோம்! விடமாட்டோம்!
விஷத்தை கக்கும் வேதாந்தாவை...
விரட்டி அடிக்காமல் விடமாட்டோம்!
உங்கள் கனவை நிறைவேற்றாமல்...
விடமாட்டோம்! விடமாட்டோம்!
அறிவித்திடு! அறிவித்திடு!
ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளை...
ரத்தம் சிந்தி உயிர்நீத்த...
எங்கள் வீட்டு செல்வங்களை
சுற்றுச்சூழல் தியாகிகளாக...
அறிவித்திடு! அறிவித்திடு!
எங்களைக் காத்த குல சாமிகளுக்கு...
எம் சந்ததியை காத்த தெய்வங்களுக்கு... நினைவுச்சின்னம் அமைத்திடு!
வழக்குப் பதிவு செய்து, கைது செய்..!
நீர், நிலம், காற்றைக் கெடுத்த
அனில் அகர்வாலை கைது செய்..!
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி
வேதாந்தாவின் நிர்வாகிகளை...
கைது செய்து சிறையிலடை!
தீர்ப்பு எதுவந்தாலும்,
உச்சநிதிமன்ற தீர்ப்பு
எது வந்தாலும்...
பெருவீதத் தாமிர தொழிலை...
தமிழகத்தில் அனுமதியோம் என...
அமைச்சரவையை கூட்டி
கொள்கை முடிவெடுத்து...
சிறப்பு சட்டம் இயற்று!
ஸ்டெர்லைட்டை அகற்று!
தமிழக அரசே!
சிறப்பு சட்டம் இயற்று!
ஸ்டெர்லைட்டை அகற்று!
*ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு*
9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817

இணைய வழிக் கூட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 22.05.2021 அன்று காலையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பாக ஸ்டெர்லைட் தியாகிகள் மூன்றாமாண்டு நினைவஞ்சலி இணையவழிக் கூட்டம் நடைபெற்றது வழக்குரைஞர் மில்டன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்

நீதிபதி து.ஹரிபரந்தாமன் (ஓய்வு)* சென்னை உயர்நீதிமன்றம்
வழக்கறிஞர் திரு. பாலன்அரிதாஸ்* சென்னை உயர்நீதிமன்றம்
திரு. ஆளூர் ஷாநவாஸ் (வி.சி.க.)* சட்டமன்ற உறுப்பினர்
திரு. சுந்தராஜன்* பூவுலகில் நண்பர்கள்
திரு. செந்தில்வேல்* ஊடகவியலாளர்
வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்* மாநில ஒருங்கிணைப்பாளர், PRPC
நினைவேந்தல் உரை நிகழ்த்தினர்.
மேலும், துப்பாக்கிச்சூட்டில் உயிர் நீத்த தியாகிகளின் குடும்பத்தினர், போராட்ட முன்னணியாளர்கள் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினரான...
*திரு.பூவையா என்ற JP* தெற்கு வீரபாண்டியபுரம்
*திருமதி.ஜெனரோஸ்*
பாத்திமா நகர்
*திரு.அ. முருகன்*
குமரெட்டியாபுரம்
*திருமதி.க.வசந்தி*
பண்டாரம்பட்டி
*திரு.மணி*
பெரியநாயகிபுரம்
*திரு.சேமா சந்தணராஜ்*
முத்தையாபுரம்
*திருமதி. சிம்லா*
மடத்தூர்
*திரு.ஹான்ஸ்*
புதுத்தெரு
*சகோதரி.பியூட்லின்*
திரு நங்கை, தூத்துக்குடி
*திரு.மைக்கேல் அண்டோ ஜூனியஸ்*
ராஜபாளையம்
*திரு.A.S.முத்து*
மீளவிட்டான்த்தை நினைவு கூர்ந்தனர்.

தூத்துக்குடியில் கணன்று கொண்டிருக்கும் பெரு நெருப்பு ஸ்டெர்லைட்டை எரிக்காமல் அணையாது.

செய்தித் தொகுப்பு
பொன்.சேகர்

Thursday, 20 May 2021

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்று!

பத்திரிக்கைச் செய்தி:

தமிழக முதல்வருக்குக் கோரிக்கை:

1. ஸ்டெர்லைட் நிர்வாகத்தை அழைத்துப்பேசி  தூத்துக்குடி ஆலையை  அகற்றிக் கொள்ள வலியுறுத்த வேண்டும்  (இல்லையேல்) 

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட  உச்சநீதிமன்ற நீதிபதி ரோகிண்டன் நாரிமன் அமர்வில் வழக்கு விசாரணையை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும்! 

2. தூத்துக்குடி போராளிகளை சுற்றுச்சூழல் தியாகிகளாக அறிவிக்க வேண்டும்!

3. சுட்டுக் கொன்ற காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய காவல்துறை உயரதிகாரிகளுக்கு  முக்கிய பொறுப்புகள் வழங்கக் கூடாது!

4. தூத்துக்குடி மற்றும் தமிழகம் முழுவதும் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின்போது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்!

5. நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிட வேண்டும்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு முன்பே தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் "ஸ்டெர்லைட் ஆலையை  ஒருபோதும் திறக்க மாட்டோம்" என அறிவித்திருந்தார். நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களிலும் திமுக ஸ்டெர்லைட் எதிர்ப்பு நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. "ஸ்டெர்லைட்டை திறக்கவிட மாட்டோம்"  என்ற முதல்வரின் கருத்துதான், ஒட்டுமொத்த தமிழக மக்கள், உலகத் தமிழர்களின் கருத்து.

நச்சாலை ஸ்டெர்லைட்  இனி தமிழகத்திற்கு வேண்டாம் என்பதில்  தூத்துக்குடி மக்கள், தமிழக மக்கள், பாஜக தவிர்த்த அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள், இயக்கத்தினர் உறுதியாக உள்ளனர். ஆனால் ஸ்டெர்லைட் நிர்வாகம்,  வேதாளம் மீண்டும்  முருங்கை மரம் ஏறிய கதையாக, பசுமைத் தீர்ப்பாயம், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்ற வழக்குகள், அடுத்தடுத்து இடைக்கால மனுக்கள் என்று,  எப்படியாவது மீண்டும் தூத்துக்குடியில் ஆலையை இயக்க வேண்டும் எனக்கருதி பல கோடிகள் செலவு செய்து  வருகிறது. தற்போது உயிர் காக்கும் ஆக்ஸிஜன்  1050 மெட்ரிக் டன் தினமும் வழங்குகிறோம் என்று சொல்லி 10, 15 மெட்ரிக் டன்னுக்கே தடுமாறி வருகிறது. நூற்றுக்கணக்கான மக்கள் புற்று நோயில் மடிந்தும், பல முறை விசவாயு கசிந்தும், 2018 மே-22 அன்று 15 பேரின் உயிரைக் குடித்த பின்பும் மீண்டும் ஆலையை இயக்க வேதாந்தா நிறுவனம் முயற்சிப்பது 7 கோடித் தமிழர்கள், தமிழக அரசு, அனைத்து அரசியல் கட்சிகளை  வெளிப்படையாக அவமதிப்பதாகும். தமிழக மக்களின் சுயமரியாதையை சீண்டுவதாகும். மகாராஷ்டிரா மாநிலம் இரத்தினகிரியில் அமைந்த வேதாந்தா தாமிர உருக்காலையை பாஜக, சிவசேனா கட்சியினரும், மக்களும் உடைத்தெறிந்தனர். அவ்வாலை மூடப்பட்டது. ஆனால் தமிழக மக்கள் சட்டம், ஜனநாயகத்தில்  நம்பிக்கை வைத்து 24 ஆண்டுகளாக நீதிமன்றப் படியேறி வருகின்றனர். இதைப் புரிந்து கொண்டு ஸ்டெர்லைட் நிர்வாகம் தானே ஆலையை அகற்ற வேண்டும். தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்தபடி  இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். முதல்வரே பேச்சு வார்த்தை நடத்தி ஸ்டெர்லைட் ஆலையை அகற்றி விட்டால் தூத்துக்குடி மக்களும், தமிழக மக்களும் என்றென்றும் அதற்கு நன்றியுடன் இருப்பர். திராவிட இயக்க வரலாறும் இதைப் பதிவு செய்யும். ஸ்டெர்லைட் நிர்வாகம் இதற்கு உடன்படாவிட்டால், விதிகளை மிக நீண்ட காலம் மீறி சுற்றுச் சூழலை நாசம் செய்த குற்றத்திற்காக உரிய கிரிமினல் வழக்குகள் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் தொடரப்பட்டு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மற்றும் தமிழகத்தின் பொது அமைதி கெட்டு சுமார் 300-க்கும் மேலான வழக்குகள், பல கோடி ரூபாய் சொத்துக்கள் நாசம், ஏராளமான மனித உயிர்கள் பலியாகி உள்ளதை கணக்கில் கொண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 133-ன் கீழ் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து ஆலையை நிரந்தரமாக அகற்ற உத்தரவிடலாம்.

தமிழக அரசின் தொடர் நடவடிக்கைகள் மட்டுமே வேதாந்தா நிறுவனத்தை பின்வாங்கச் செய்யும். உச்ச நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றாலும் தூத்துக்குடியில் ஆலையை இயக்க முடியாது என்று கருதச் செய்யும். எனவே  இரண்டாம் ஜாலியன் வாலாபாக் என்று கருதப்படும் தூத்துக்குடி படுகொலையின் மூன்றாமாண்டு நினைவு நாளான மே-22 அன்று தமிழக முதல்வர் ஸ்டெர்லைட்டை தூத்துக்குடியிலிருந்து நிரந்தரமாக அகற்றுவதற்கான அறிவிப்புகளைச்  செய்ய வேண்டும் எனக் கோருகிறோம்.

-----------------------------------------

சே. வாஞ்சி நாதன், வழக்குரைஞர்
சட்ட ஆலோசகர், 
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு.

மாநில  ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

384, கிழக்கு 8-வது தெரு, கே.கே.நகர், மதுரை-20.  

தொடர்பு கொள்ள: 98653 48163

Tuesday, 27 April 2021

ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பது சரியா?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிந்து அடுத்து யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேளையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்காகத் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒப்புதல் தெரிவித்திருப்பது தூத்துக்குடி மக்களிடம் மட்டுமல்ல தமிழக மக்களிடையேயும் ஓர் அதிர்ச்சிப் பேரலையை ஏற்படுத்தி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு மோடியும் எடப்பாடியும்தான் முக்கியக் காரணம் என்றாலும்கூட திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்திருப்பது எந்த விதத்திலும் நியாயமானது அல்ல என்பதை அம்பலப்படுத்துகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள்.


நன்றி: Arakalagam

Sunday, 20 December 2020

ஸ்டெர்லைட் போராட்டம்: பொய் வழக்குகளைத் திரும்பப் பெறு!

"ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரி" என உச்சநீதிமன்றம் வரை வாதாடும் தமிழக அரசு, ஸ்டெர்லைட்டை மூடுவதற்காகப் போராடிய ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீது கடந்த இரண்டரை ஆண்டுகளாக போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறாமல் பழி வாங்குவது ஏன்?

ஸ்டெர்லைட் எதிர்ப்புத் துண்டறிக்கைகளை ஸ்ரீவைகுண்டத்தில் கொடுத்ததாக பண்டாரம் பட்டியைச் சேர்ந்த சந்தோசை காவல்துறையினர் சட்டவிரோதமாகக் கைது செய்ததைக் கண்டித்து சந்தோசை விடுவிக்கக்கோரி 17-01-2019 அன்று பண்டாரம்பட்டி சந்தன மாரியம்மன் கோயில் முன்பு மக்கள் ஒன்று கூடி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஸ்டெர்லைட் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பல ஸ்டெர்லைட் எதிர்ப்பு முன்னணியாளர்கள் அதில் கலந்து கொண்டனர். இந்த சம்பவத்திற்கு சிப்காட் காவல்துறை வழக்குப்பதிவு செய்து 2 ஆண்டுகள் கழித்து 10 நபர்கள் மீது இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 10 பேரில் ஒருவர் பண்டாரம்பட்டி வசந்தி அம்மா அவர்களின் கொழுந்தனார் பிரபாகரன் ஆவார். அவர் மாரடைப்பால் சிறிது காலத்திற்கு முன்பு இறந்து விட்டார்.

காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கையின்பேரில் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பி உள்ளது.

அதனால் தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-3ல் (JM3) நாங்கள் அனைவரும் ஆஜரானோம். இந்த வழக்கு வரும் 04-01-2021 வாய்தா போடப்பட்டுள்ளது.

ஏற்கனவே மூன்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட வழக்குகள் தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அதில் கடந்த 12-02-2018, 13-02-2018 ஆகிய நாட்களில் தூத்துக்குடி சிதம்பர நகர் அருகில் குழந்தைகள் கலந்து கொண்டு ஸ்டெர்லைட்டை மூடப் போராட்டம் நடத்தியதற்காக ஒரு வழக்கும், அந்தப் போராட்டத்தில் "ஸ்டெர்லைட்டை மூடு" என்ற வாசகம் அடங்கிய பேனர் இருந்ததற்காக  இரண்டாவது வழக்கும், அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னணியாளர்கள் மீது மூன்றாவது வழக்கும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது குமரெட்டியாபுரத்தில் உள்ள ஸ்டெர்லைட் எதிர்ப்பு முன்னணியாளர்கள் மீதும், மே-17 இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட பலர் மீதும் குமரெட்டியாபுரம் வேப்ப மரத்துக்கடியில் உட்கார்ந்து இருந்ததற்காக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேப்ப மரத்துக்கடியில் யார் யார் உட்கார்ந்து இருந்தார்கள்? என்று விசாரித்து நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தது தமிழக அரசின் *சிபிசிஐடி* போலீஸ் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். அந்த வழக்கில் வரும் 23-12-2020 அன்று கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜராக அழைப்பாணையும் தற்போது வந்துள்ளது.

(மே 22-23 ல் நடந்த போராட்டத்தில் போடப்பட்ட வழக்குகளை சிபிஐ விசாரித்து வருவது தனிக்கதை)

ஸ்டெர்லைட்டை மூட களத்தில் நின்ற, ஆதரவு தெரிவித்த கட்சிகள், அமைப்புகள் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீது போடப்பட்ட இந்த பொய் வழக்குகளை தமிழக அரசு ரத்து செய்ய கோரிக்கை வைக்கவும்,

தமிழக அரசும் இரத்து செய்ய முன் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு

9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.