Showing posts with label TASMAC. Show all posts
Showing posts with label TASMAC. Show all posts

Saturday, 16 May 2020

டாஸ்மாக் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

டாஸ்மாக் வழக்கு

16.05.2020 அன்று சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் நடந்தது என்ன?

மதுக்கடைகள் திறப்பதனால் ஏற்படப் போகும் விளைவுகள் என்ன?
நாம் என்ன செய்ய வேண்டும்?

மக்கள் அதிகாரம் மற்றும் மகளிர் ஆயம் அமைப்புகள் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் டாஸ்மாக் திறப்பதை எதிர்த்து வழக்கு நடத்தும் உயர் நீதிமன்ற வழக்குரைஞர் சு.ஜிம்ராஜ் மில்டன் அவர்கள் விளக்கம் அளிக்கிறார்.
14.05.2020 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தத என்ன?

கரோனா ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி மக்கள் அதிகாரம்,மகளிர் ஆயம் உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த வழக்குகள் 14.05.2020 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உட்பட 3 நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பாக காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வந்தது.

நமது சார்பாக மூத்த வழக்குரைஞர்கள் வைகை மற்றும் பாலன் ஹரிதாஸ் அவர்கள் இருவரும் ஆஜராகி, கரோனா நோய்த்தொற்று காலத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுவது அரசின் கொள்கை முடிவுக்கு எதிரானதல்ல, கொள்கை முடிவாயினும் மக்கள் நலனுக்கு எதிராக இருப்பின் அதில் நீதிமன்றம் தலையிட்டு அரசியலமைப்பில் வழங்கப்பட்ட உரிமை மற்றும் கடமைகளை (Article 47 & 21) உறுதி செய்ய வேண்டும் என பல வழக்குகளை மேற்கோள்காட்டி சிறப்பான வாதங்களை முன்வைத்தனர்.

அரசு தரப்பு தலைமை வழக்குரைஞர் கூடுதல் அவகாசம் கேட்டதன் அடிப்படையில், மனுதாரரின் அனைத்து கேள்விகளுக்கும் விளக்கமளித்து விரிவான பதில் மனுவை 15.05.2020 அன்று தாக்கல் செய்யக்கோரி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உயர் நீதிமன்றத்தில் நடந்த விவாதத்தின் சாரத்தை வழக்குரைஞர் சு.ஜிம்ராஜ் மில்ட்டன் விளக்குகிறார்.
தகவல்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
சென்னை

டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு! மக்கள் போராட்டத்தால் மாறியத் தீர்ப்பு !

Friday, 8 May 2020

டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு! மக்கள் போராட்டத்தால் மாறியத் தீர்ப்பு !

கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த 40 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது, திருமணம், இறப்பு போன்ற அத்தியாவசிய நிகழ்வுகளுக்குக் கட்டுப்பாடு, வேலை இல்லை, தொழில் இல்லை, உணவு தவிர்த்த அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்குக் கூட அரசு தடை விதித்திருக்கிறது. பெறுபான்மையான மக்கள் வருமானம் இல்லாத இந்தச் சூழலில், அதிக அளவில் கூட்டம் சேரும்மென்ற அடிப்படையில் ஏற்கனவே டாஸ்மாக் மூடப்பட்டிருந்தது. வருமானம் ஈட்டுவதற்காக டாஸ்மாக்கை திறப்பார்களேயானால் கோயம்பேடு போல நோய்த் தொற்று பரவும் இடமாக டாஸ்மார்க் மாறும் என்று 06.05.2020 அன்று மக்கள் அதிகாரம், மக்கள் ஆயம் சார்பாக நாம் வழக்கு தாக்கல் செய்திருந்தோம். நமது சார்பாக *மூத்த வழக்கறிஞர் வைகை மற்றும் பாலன் ஹரிதாஸ்* அவர்கள் வாதாடினார்.

நமது தரப்பில் பல்வேறு வாதங்களை முன்வைத்தாலும், அவற்றிற்கு எந்தவித பதில்களையும் எடுத்துரைக்காமல் மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் ஒரு நாளைக்கு 90 கோடி ரூபாய்க்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவது உட்பட சில விசயங்களை அரசு தரப்பில் முன் வைத்தனர். நீதிமன்றமும் டாஸ்மாக்கை திறக்க தடைகோரிய வாதத்தை ஏற்றுக்கொள்ளாமல் சில ஆகாத கட்டுப்பாடுகளை விதித்து திறக்க அனுமதி அளித்தது.

ஆனால், நேற்றைய ஒரே நாளில் தமிழகம் முழுவதும் பொதுமக்கள், பெண்கள் வீதியில் இறங்கி ஆவேசத்துடன் போராடினர். சில இடங்களில் கடைகளை மூடவும் வைத்தனர். அமைப்புகள், எதிர்க்கட்சிகள் என அனைவரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். நீதிமன்றமும் மக்களின் விமர்சனத்திலிருந்து தப்பவில்லை.

இப்படி இருக்கக்கூடிய சூழலில் மீண்டும் மக்கள் நீதி மய்யம் சார்பாக மனு தாக்கல் செய்திருந்தார்கள். ஏற்கனவே மனு தாக்கல் செய்து வழக்கு நடத்திய வழக்கறிஞர் G.ராஜேஷ் இணையவழியில் விற்பனை செய்வதை அரசு தொடங்கவில்லை. அதுவரை டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என்று ஒரு இடைநிலை மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த இடைக்கால மனுவுடன் நாம் தாக்கல் செய்த வழக்கு உட்பட அனைத்து வழக்குகளும் இன்று அவசர விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டு லாக் டவுன் முடியும் வரை டாஸ்மாக் நேரடி விற்பனைக்கு தடை விதித்தது.

பொதுமக்கள், எதிர்கட்சிகள், அமைப்புகளின் களப்போராட்டம்தான் இன்று நீதிமன்றத் தீர்ப்பை மாற்றி இந்த வெற்றிக்கு வழிவகுத்துள்ளது.

நாளை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யப்போவதாக அறிந்தோம். உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்ய உள்ளோம்.

40 நாட்கள் தந்த இடைவெளியைப் பயன்படுத்தி டாஸ்மாக்கை முழுமையாக மூட வேண்டும் என்பதே தமிழக மக்களின் - பெண்களின் கோரிக்கை.

சுஜிம்ராஜ் மில்ட்டன்
தற்போது கரோனா காலத்திலாவது மூட வேண்டும் என்பதே வழக்கு. மக்களின் கோப ஆவேசத்தைப் பார்த்துதான் உயர்நீதிமன்றம் தீர்ப்பை மாற்றி டாஸ்மாக்கை மூடியுள்ளது. பொறுக்க முடியாமல் மேல்முறையீடு செய்ய துடிக்கிறது குடி கெடிக்கும் அரசு.

உச்ச நீதிமன்றத்திலும் நமது சட்டப் போராட்டத்தை தொடர்வோம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் அரசுக்குச் சாதகமாக அமையலாம். ஆனால் டாஸ்மாக் கொடுமைக்கு பலியான மக்களின் போராட்டம் அதற்கு எதிராகவும் பொங்கி எழும் என்பது நிச்சயம். மக்களின் வேதனை, வலியின் உணர்வோடு வழக்கை நடத்தி டாஸ்மாக்கை மூடும் உத்தரவை பெற நாமும் சட்டப் போராட்டத்தை நடத்திடுவோம்.

சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பு

தோழமையுடன்,
சு. ஜிம்ராஜ் மில்ட்டன்
வழக்குரைஞர்

மக்கள்உரிமைப் பாதுகாப்பு மையம்
08.05.2020

தொடர்புடைய பதிவுகள்

டாஸ்மாக்கை மூடச்சொன்ன முதியவர் சிறைக் கொட்டடியில்!

டாஸ்மாக்கை மூடச்சொன்ன முதியவர் சிறைக் கொட்டடியில்!


சுமார் இரண்டு மாத காலமாக கரோனாவால் உலகமே முடங்கிக் கிடக்கிறது. தமிழகத்தில் சிறு தொழில் முதல் பெரிய ஆலைகள் வரை அனைத்தும் இயங்கவில்லை. சிறு கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை  மூடப்பட்டுள்ளன. ஒரு பக்கம் வருவாய் இன்றி அடித்தட்டு மக்கள் அல்லல்படுகின்றனர். அத்தியாவசியப் பொருட்கள்கூட கிடைக்காமல் மக்கள் அலைகின்றனர். இப்படி மக்கள் சொல்லொனாத் துயரத்தில் இருக்கும் போது 07.05.2020 முதல் சாராயக் கடைகளைத் திறக்கப் போவதாக எடப்பாடி அரசு அறிவித்தது. கடந்த 40 நாட்களில் குடியை மறந்திருந்த மக்களை “குடிக்க வா!” என அழைப்பு விடுத்தார் எடப்பாடி.
இதற்குத் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தன. சாராயக் கடைகளைத் திறக்கக் கூடாது என மக்கள் கடந்த இரண்டு நாட்களாகவே ஆங்காங்கே போராடத் தொடங்கி விட்டனர். சாராயக் கடைகள் திறக்கப்பட்ட 07.05.2020 அன்று தமிழகத்தின் பல்வேறு பகுிதிகளில் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்பினர் அமைதியான முறையில் கரோனா காலத்தில் கடைபிடிக்க வேண்டிய சமூக இடைவெளியைக் கடைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் இராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர் மோகன் மற்றும் 72 வயதான அவரது தந்தை வெங்கடேசன் இருவரும் நெமிலி வட்டம், அவலூர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு வாலாசாப்பேட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு அரக்கோணம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இருவர் மீதும் சட்டவிரோதமாகக் கூடியது (143), தடை உத்தரவை மதிக்காமல் நடந்து கொண்டது (188), நோய்த் தொற்றை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டது (269, 270), ஐந்துக்கும் மேற்பட்ட எந்த ஒரு கூட்டத்திலும் தெரிந்தே கலந்து கொண்டது (151) ஆகிய இந்திய தண்டனைச் சட்டம் பிரிகளிலும் அதனுடன் ஒருவரின் சட்டபூர்வ நடவடிக்கையை தடுத்தல் என்கிற குற்றவியல் சட்டத் திருத்தம் பிரிவு 7(1)(a) ன் கீழும் வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளது.

பிரிவு 188 ன்கீழ் காவல் துறை நேரடியாக வழக்குப் பதிவு செய்ய முடியாது. மாறாக இந்தப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமானால் 144 தடை உத்தரவு பிறப்பித்த அரசு அதிகாரி புகார் அளித்தால் மட்டுமே காவல்துறை வழக்குப் பதிவு செய்ய முடியும் என சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. சட்டமும் அதைத்தான் சொல்கிறது. ஐந்து பேர் மற்றும் அதற்கு மேல் கூடினால்தான் பிரிவு 151 ஐ பிரயோகிக்க முடியும். ஆனால் இங்கே இரண்டு பேர்தான் போராட்டம் நடத்தி உள்ளனர். பிறகு எப்படி 151 வரும் என்பது ஒரு எளிய பாமரனுக்கும் புரியும்தானே! அடிப்படையில் 143, 151, 188 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுத்ததே அடிமுட்டாள்தனமானது.

மேற்கண்ட பிரிவுகளின் கீழ் ஒரு வேளை குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கினால் அதிகபட்சம் 2 ஆண்டுகள் மட்டும்தான் வழங்க முடியும். ஆனால் அர்னேஷ் குமார் வழக்கில் 7 ஆண்டுகளுக்கு மிகாமல் தண்டனை வழங்கக்கூடிய வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவரை நீதிமன்றக் காவலில் வைக்கக் கூடாது; அதாவது சிறையில் அடைக்கக்கூடாது என்ற வரலாற்று சிறப்புமிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் குற்றவியல் நடுவர்கள் மதிப்பதில்லை.

சட்டத்தின்படியும், கரோனா நோய்த் தீவிரமாகப் பரவி வரும் இன்றைய சூழலையும் கணக்கில் கொண்டு இருவரையும் குற்றவியல் நடுவரே சொந்த முறையில் பிணையில் விடுதலை செய்திருக்க வேண்டும். மேலும் நீதிமன்றக் காவலில் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வழக்கறிஞர்கள் முயன்றபோது கரோனா கட்டுப்பாடு இருப்பதாகக்கூறி நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கவில்லை. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆட்சேபனை மனுவையும் கணக்கில் கொள்ளாமல் எந்திரகதியாக 72 வயது முதியவர் என்றும் பாராமல் சிறையில் அடைத்துள்ளனர்.

கரோனாவை கட்டுப்படுத்துவது அரசின் நோக்கமல்ல. மாறாக சாராயத்தைப் பாதுகாப்பதே நோக்கம் என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.

ஊரடங்கு முடியும் வரை சாராயக் கடைகள் திறக்கக்கூடாது என இன்று சென்னை உயர்நீதி மன்றம் சொல்லிவிட்டது. இதைத்தானே மோகனும் வெங்கடேசனும் நேற்று சொன்னார்கள். அதற்காக இருவரும் இன்று சிறைக் கொட்டடியில். பொய் வழக்குப் புனைந்த அவலூர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமிபதியும், கண்ணை மூடிக் கொண்டு இருவரையும் சிறைக்கு அனுப்பிய வாலாசாப்பேட்டை குற்றவியல் நீதிபதியும் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?

தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்