Showing posts with label vedhantha. Show all posts
Showing posts with label vedhantha. Show all posts

Friday, 18 June 2021

சிறப்புச் சட்டம் இயற்று! ஸ்டெர்லைட்டை மூடு! முதல்வரைச் சந்திக்க ஆட்சியரிடம் மனு!

வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள முதல் சட்டமன்ற கூட்டத் தொடரில் ஸ்டெர்லைட்டை அகற்ற சிறப்புச் சட்டம் இயற்றுமாறும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஸ்டெர்லைட் நிறுவனத்தினர் அனுமதி இல்லாமல் கட்டில் உட்பட சில உபகரணங்கள் கொடுப்பதையும், அதில் வேதாந்தாவின் விளம்பரங்களைத் தடை செய்யக் கோரியும், சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்திக்கவும் 17-06-2021 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கொடுத்த மனுவின் விவரம்.

------------------------------------------------------------------------------

அனுப்புனர்:

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
50/B போல்டன்புரம்,
திருச்செந்தூர் ரோடு,
தூத்துக்குடி.

பெறுநர்:

மதிப்புக்குரிய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்
கோரம்பள்ளம், தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம்

பொருள்: வருகின்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழக அரசு ஸ்டெர்லைட்டை மூடுவதற்கு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக

பெரும் மதிப்பிற்குரிய ஆட்சியர் அவர்களுக்கு,

நீர், நிலம், காற்றை நஞ்சாக்கி மக்களுக்கு கேன்சர், உள்ளிட்ட உயிர் கொல்லி நோய்களுக்கு பலியாக்கிய வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 25 ஆண்டு காலமாக பொதுமக்கள் போராடி வந்தார்கள். அதிமுக ஆட்சியில் 2018-ல் பிப்ரவரி 12-ம் தேதியிலிருந்து 100 நாட்கள் தொடர் போராட்டம் நடந்தது. அதனைத் தொடர்ந்து மே-22-2018 இல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கச் சென்ற பொதுமக்கள் 15 பேரை ஈவிரக்கமின்றி காவல்துறை சுட்டுக் கொன்றது. பலரும் முடமானார்கள். இதனால் அரசாணை மூலம் தமிழக அரசு சீல் வைத்து ஸ்டெர்லைட்டை மூடியது.

"மேற்படி அரசாணை பலவீனமானது, மீண்டும் ஆலையைத் திறக்க வாய்ப்பு உள்ளது" என அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், திமுகவின் தலைவருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், அறிவுத்துறையினர், பத்திரிக்கைகள் உட்பட கருத்து தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து அப்போதைய எதிர்கட்சித் தலைவராக இருந்த இன்றைய தமிழக முதல்வர் "திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு கொள்கை முடிவெடுத்து சிறப்புச் சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் அகற்றப்படும்" என அறிக்கைகள், பேட்டி வாயிலாகவும், தேர்தல் வாக்குறுதியாகவும் கொடுத்திருந்தார்.

ஆட்சிக்கு வந்தவுடன் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு கல்வித் தகுதிக்கேற்ற வேலை, சட்ட முரணாக போலீஸ் காவலில் இருந்த 93 பேருக்கு ரூபாய் ஒரு லட்சம் நஷ்டஈடு , வழக்குகள் வாபஸ், போராட்ட வழக்கிலுள்ள ஒருவர் பாஸ்போர்ட், அரசு வேலையில் சேர்வதற்கு தடையில்லாச் சான்று என அறிவித்து நடைமுறைப்படுத்தினார். இது தமிழக மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்று நம்பிக்கையை ஏற்படுத்தியது.

உச்சநீதிமன்றத்தில் கொரானோ பேரிடரில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்ற சூழலைச் சாதகமாக்கி ஆக்ஸிஜன் தயார் செய்வதற்கு ஜூலை 31 வரை ஸ்டெர்லைட் ஆலை அனுமதி பெற்றது. அதனைப் பயன்படுத்தி மக்கள் நலத் திட்டங்கள் என்ற பெயரில் மக்களுக்குப் பணம், பொருள் இலவசமாக கொடுத்து வருகிறது. தூத்துக்குடி அரசு கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு கட்டில், வீல் சேர், வர்ணம் பூசுதல், எலக்ட்ரிக்கல் வேலை செய்து வருகிறது. ஸ்டெர்லைட் வழங்கிய மேற்படி பொருள்களுக்கு "வேதாந்தா ஸ்டெர்லைட் காப்பர்" என்று எழுதி விளம்பரம் செய்து வருவது மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதனால் ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படும் என்று விஷமப் பிரச்சாரம் செய்து வருகிறது. இதற்கு உடந்தையாக உள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே தமிழக முதல்வர் அவர்கள் பொதுமக்கள் நலன் கருதி வரும் 21-06-2021 அன்று நடைபெற உள்ள முதல் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே "தமிழகத்தில் பெருவீத தாமிர உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு அனுமதி இல்லை" என்று கொள்கை முடிவெடுத்து சிறப்பு ச் சட்டமாக இயற்றி, ஸ்டெர்லைட்டை தூத்துக்குடி மண்ணிலிருந்து நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.

மேற்படி கோரிக்கையை வலியுறுத்த மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை பொதுமக்கள் சார்பில் நாங்கள் சந்தித்துப் பேசவும் எங்களுக்கு ஏற்பாடு செய்து தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொள்கிறோம்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817