Wednesday, 28 October 2020

திருமா மீது வழக்கு: சென்னை வழக்குரைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் டாக்டர் தொல்.திருமாவளவன் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை இரத்து செய்ய வேண்டும். 

வெட்டிச் சிதைக்கப்பட்ட காணொளியைப் பரப்பி  பொய் வழக்குப் போட காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜனநாயக வழக்குரைஞர் சங்கம் சார்பில்  சென்னை உயர்நீதி மன்றம் வாயிலில்  கண்டன ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் சமூக அக்கறை கொண்ட வழக்குரைஞர்கள் கலந்துகொண்டனர். வழக்குரைஞர் பாரதி தலைமை தாங்கினார்.  வழக்குரைஞர்கள் கண்டன உரை ஆற்றினர்.

இதில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சென்னை செயலர் மில்டன் கண்டன உரையாற்றினார். PRPC வழக்குரைஞர்களும் கலந்து கொண்டனர்.

தகவல்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை




Saturday, 17 October 2020

கரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்குவதில் முறைகேடு!

கரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்குவதில் முறைகேடு. மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநிலப் பொருளாளர் லயனல் அந்தோணிராஜ் அவர்களுடன் நேர்காணல்.


மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

Wednesday, 14 October 2020

"மக்கள் நலன்" என்ற பெயரில் தொடரும் ஸ்டெர்லைட்டின் சதித்தனம்!

ஸ்டெர்லைட்டின் கைக்கூலிகள் விநியோகம் செய்த SDR தண்ணீர் கேன்கள் சோரீஸ்புரத்தில் தடுத்து நிறுத்தம்:

தூத்துக்குடி, அய்யனடைப்பு-சோரீஸ்புரம் பகுதியில் இன்று (14-10-2020) காலை 7.00 மணியளவில் ஒரு தனியார் வாகனத்தில் SDR குடிதண்ணீர் கேன்கள் மூலம் இலவசமாக ஸ்டெர்லைட் ஆதரவாளர்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டது. கேன் தண்ணீர் வாங்குபவர்களுக்கு ஸ்டெர்லைட் ஆலையின் "தாமிர சுரபி" என்ற பிரிண்ட் செய்யப்பட்ட QR கோடுடன் உள்ள அடையாள அட்டை கொடுக்கப்பட்டு, செல்போன் மூலம் ஸ்கேன் செய்து விவரக்குறிப்புகள் பெற்று பதிவுசெய்து கொண்டு அதன் பின்னர் தண்ணீர் கொடுக்கிறார்கள்.

இதை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் அரசின் அனுமதியில்லாமல் தண்ணீர் விநியோகம் செய்த வாகனத்தை தடுத்து நிறுத்தினார்கள். தண்ணீர் விநியோகம் செய்த நபர் தண்ணீர் கேன்களை அப்படியே போட்டுவிட்டு தப்பியோடிவிட்டார்.

கிராம நிர்வாக அலுவலருக்கும், சிப்காட் காவல் துறையினருக்கும் மற்றும் உளவுத்துறை போலீசுக்கும் தகவல் கூறினார்கள். ஆனால் பிடிபட்டது "ஸ்டெர்லைட் விவகாரம்"  என்பதால் யாருமே சம்பவ இடத்திற்கு வரவில்லை. இதனால் சோரீஸ்புரம் பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு திரண்டு சென்று எழுத்துப் பூர்வமான புகார் ஒன்றை கொடுத்து 30 க்கும் மேற்பட்ட தண்ணீர் கேன்களையும் ஒப்படைத்துள்ளனர். புகாரை பெற்ற கிராம நிர்வாக அலுவலர் "தான் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது, காவல்துறையினர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். "உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், காவல்துறையை வரச்சொல்லுங்கள்" என்று விடாப்பிடியான போராட்டத்திற்கு பிறகு காவல்துறையினர் பகல் 12.00 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்தனர். அதன்பிறகு தண்ணீரை தடுத்து நிறுத்திய சோரீஸ்புரம் இளைஞர்களை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு கூறிச்சென்றுள்ளனர்.

அதன்பிறகு  நமது ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நாமும் சட்ட உதவிக்கு காவல் நிலையம் சென்றோம். நடந்த விபரத்தை எழுதி புகாராக காவல் ஆய்வாளரிடம் கொடுக்கப்பட்டது. விசாரணையின் முடிவில் அரசின் அனுமதி இல்லாத காரணத்தால் தண்ணீர் விநியோகம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறாக பல மணிநேர போராட்டத்திற்கு பிறகுதான், புகார் கொடுக்கும் நபர்கள் உறுதியாக இருந்ததைக் கண்டுதான் குறைந்தபட்சம் இதையாவது செய்தார்கள். 

சென்னை உயர்நீதிமன்றத்தின் ஸ்டெர்லைட்டை மூடிய உத்தரவிற்குப் பிறகு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடத்துவது குறித்து குமரெட்டியாபுரம் மக்களை சந்திக்க மக்கள் கூட்டமைப்பினர் சென்றபோது ஊருக்குள் நாங்கள் சென்ற 2-வது நிமிடத்தில் தலையாரி வந்தார். "ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் வந்தால் உடனடியாக தகவல் சொல்ல எனது மேலதிகாரிகள் உத்தரவிட்டுள்ளார்கள், அதனால் என்னை தப்பாக நினைக்க வேண்டாம், உங்கள் பெயர் முகவரியை கொடுங்கள்" என்றார். அதன்பிறகு 5-வது நிமிடத்தில் சிப்காட் காவலர்கள் புயல் வேகத்தில் வந்தனர். எங்களை விசாரித்தனர்.

ஆனால் இன்று தகவல் சொல்லி சுமார் 5 மணி நேரத்திற்கு பின்புதான் காவல்துறை வருகிறது. காவல்துறை இவ்வளவு காலதாமதமாக வருவதற்குள் சம்பவ இடத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பேற்பது?  ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் அடித்துச் சாகட்டும் என்று சிப்காட் காவல்துறை நினைத்துக் கொள்கிறதா? இதுபோல சம்பவங்கள் தொடர்வதால் ஜனநாயக பூர்வமான போராட்டங்களை மீண்டும் மக்கள் எடுக்க வேண்டிய சூழல்  ஏற்பட்டுள்ளது.

எனவே, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி வரும் நிலையில் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல் துறையும் ஸ்டெர்லைட் ஆதரவாளர்களை கடுமையாக எச்சரித்து சட்டப்படியான நடவடிக்கைகளை அவர்கள் மீது மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள்  உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக அமைதியாக இருக்கிறார்கள். ஆனால் ஸ்டெர்லைட் கைக்கூலிகளின் நோக்கம் அதுவல்ல. சட்டம் ஒழுங்கை கெடுப்பதுதான் அவர்கள் திட்டம்.

இப்படியே சதித்தனமான வேலைகளை "மக்கள் நலன்" என்ற பெயரில் ஸ்டெர்லைட் ஆலை அரங்கேற்றுவதை தூத்துக்குடி மக்கள் அறியாமல் இல்லை. அமைதி காக்கிறார்கள். சட்டம் ஒழுங்கை மதிக்கிறார்கள். ஆனால் ஸ்டெர்லைட் ஆரவாளர்கள் நீதிமன்ற உத்தரவையும், தமிழக அரசின் அரசாணையையும் எப்போதுமே மதிப்பதில்லை என்பது தூத்துக்குடி மக்களுக்கு தெரியாததா? வேதாந்தா கார்ப்பரேட்டால் அரசு துறைகளின் கைகள் கட்டப்பட்டுள்ளன. நாம் தான் கட்டவிழ்க்க வேண்டும்.

ஸ்டெர்லைட்டின் கடைசி செங்கலும் அகற்றப்படும் வரை தூத்துக்குடி தூங்காது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு.

9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.



Saturday, 26 September 2020

வேளாண் சட்டங்களின் நோக்கம் என்ன?

"வேளாண் சட்டங்களின் நோக்கம், விவசாயத்தில் கார்ப்பரேட் சக்திகளை வலுப்படுத்துவதுதான். - பி. சாய்நாத்

23 செப்டெம்பர் 2020, BBC News

கேள்வி: ஒப்பந்த விவசாய முறையைப் பொறுத்தவரை, ஏற்கனவே கரும்பு விவசாயத்தில் இருக்கிறது. அதனைச் சட்டபூர்வமாக்கியிருப்பதில் என்ன தவறு?

பதில்: இவை எந்த மாதிரி ஒப்பந்தம் எனப் பார்க்க வேண்டும். இந்த ஒப்பந்தங்களில் விவசாயிக்கு எந்த அதிகாரமும் கிடையாது. பேரம் பேசும் வலிமை இருக்காது. இதில் எழுத்து மூலமான ஒப்பந்தம் தேவையில்லை. சிவில் கோர்ட்களை அணுக முடியாது. விவசாயிகள் கொத்தடிமைகளாக மாற, அவர்களே செய்துகொள்ளும் ஒப்பந்தமாக இருக்கும். 

உதாரணமாக, மகாராஷ்டிர மாநிலத்தில் பாலின் விலையை எடுத்துக்கொள்வோம். மும்பையில் ஒரு லிட்டர் பசுவின் பால் 48 ரூபாய். எருமைப் பால் ஒரு லிட்டர் 60 ரூபாய். மாடு வைத்திருக்கும் விவசாயியிக்கு இந்த 48 ரூபாயிலிருந்து என்ன கிடைக்கிறது? 2018-19ல் பெரிய அளவில் விவசாயிகள் பாலை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினார்கள். அதன் முடிவில் விவசாயிக்கு ஒரு லிட்டர் பாலுக்கு 30 ரூபாய் விலை தருவதாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பெருந்தொற்று துவங்கிய பிறகு, ஏப்ரல் மாதம் முதல் விவசாயிக்கு கிடைப்பது லிட்டருக்கு 17 ரூபாய்தான். 50 சதவீதம் விலை குறைந்துவிட்டது. இது எப்படி நடந்தது? 

ஆகவே இந்தச் சட்டங்களின் நோக்கம், விவசாயத்தில் கார்ப்பரேட் சக்திகளை வலுப்படுத்துவதுதான். இது பெரும் குழப்பத்தில்தான் போய் முடியும். இந்தக் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் சொந்தப் பணத்தை விவசாயத் துறையில் முதலீடு செய்ய மாட்டார்கள். பொதுமக்களின் பணம்தான் இதில் முதலீடு செய்யப்படும். 

பிஹாரில் விவசாய ஒழுங்குமுறை விற்பனைக்கூட சட்டமே கிடையாது. 2006ல் நீக்கிவிட்டார்கள். என்ன ஆனது? கார்ப்பரேட் நிறுவனங்கள் அங்கே விவசாயிகளுக்கு சேவை செய்கின்றனவா? முடிவில் பிஹார் விவசாயிகள் சோளத்தை ஹரியானா விவசாயிகளுக்கு விற்கிறார்கள். இதில் இருவருக்குமே லாபமில்லை. 

கேள்வி: விவசாய ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களுக்கு வெளியிலும் விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்கலாம் என அனுமதிப்பன் மூலம் என்ன மோசமாகிவிடும்?

பதில்: இப்போதும் பெரும்பாலான விவசாயிகள் ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களுக்கு வெளியில்தான் விற்கிறார்கள். அது ஒன்றும் புதிது அல்ல. ஆனால், சில விவசாயிகள் விற்பனைக்கூடங்கள் மூலம் நன்மையடைகிறார்கள். அதையும் சிதைக்கப்பார்க்கிறார்கள்.

தொடரும்...!

Tuesday, 22 September 2020

வழக்குப் பதிந்தாலே பார் கவுன்சிலிலிருந்து வழக்குரைஞரை நீக்குவதா?

ஒரு வழக்குரைஞர் மீது காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தாலே அந்த  வழக்குரைஞரை, வழக்குரைஞர் தொழிலில் இருந்து நீக்கம் செய்யலாம் என தமிழ்நாடு பார் கவுன்சிலின் முடிவை எதிர்த்துத் தமிழக வழக்குரைஞர்கள் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர்.

பென்னாகரம்

வழக்குரைஞர்கள் மீதான முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் தொழில் தடை செய்யலாம் என்ற தமிழ்நாடு பார் கவுன்சிலில் நடவடிக்கையை கண்டித்து பென்னாகரம் வழக்குரைஞர் சங்கம் சார்பில் இன்று நடைபெற்ற  ஆர்ப்பாட்டம்!


கோவில்பட்டி

வழக்குரைஞர் மீது விசாரணையின்றி நடவடிக்கை எடுக்கக் கூடாது!

- கோவில்பட்டி வழக்குரைஞர்கள் சங்கம்

22-09-2020 (JAAC தீர்மானத்தின்படி) தமிழ்நாடு பார்கவுன்சில் எந்த ஒரு வழக்குரைஞர் மீதும் விசாரணையின்றி நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதையும் உடனடியாக இடை நீக்க உத்தரவுகளை திரும்பப் பெற  வலியுறுத்தி கோவில்பட்டி வழக்குரைஞர்கள் சங்கத்தின் மாபெரும் ஆர்பாட்டம்!


கோவை

வழக்குரைஞர் மீது விசாரணையின்றி நடவடிக்கை எடுக்கக் கூடாது!

- கோவை வழக்குரைஞர்கள் சங்கம்

22-09-2020 (JAAC தீர்மானத்தின்படி) தமிழ்நாடு பார்கவுன்சில் எந்த ஒரு வழக்குரைஞர் மீதும் விசாரணையின்றி நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதையும் உடனடியாக இடை நீக்க உத்தரவுகளை திரும்பப் பெற  வலியுறுத்தி கோயமுத்தூர் வழக்குரைஞர்கள் சங்கத்தின் மாபெரும் ஆர்ப்பாட்டம்!


ஈரோடு

வழக்குப் பதிந்தாலே பார் கவுன்சிலில் இருந்து நீக்குவதா? -நீதிமன்ற வளாகத்தில் ஈரோடு வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்குரைஞர்கள் சங்க பொதுக்குழு முடிவின்படி, ஈரோடு சம்பத் நகரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் அசோசியேஷன் சார்பில் இன்று (22.09.2020) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, ஈரோடு வழக்குரைஞர்கள் அசோசியேஷன் தலைவர் நல்லசிவம் தலைமை தாங்கினார். செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். இதில், "வழக்குரைஞர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தாலே, பார் கவுன்சிலில் இருந்து நீக்கி விடுகின்றனர். ஆகையால், வழக்குரைஞர்களிடம் உரிய விசாரணை மேற்கொண்ட பிறகே, இனி பார்கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்நது, வழக்குரைஞர்கள் அசோசியேஷனை சேர்ந்த வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பிலும் ஈடுபட்டனர்.

- நக்கீரன், 22/09/20



Sunday, 20 September 2020

'நீட்' எதிர்ப்பு: மக்கள் பாதை மீது காவல்துறை அடக்குமுறை!

 பத்திரிக்கைச் செய்தி:

'நீட்' தேர்வை எதிர்த்து சென்னையில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்திய மக்கள் பாதை அமைப்பின் மீதான காவல்துறையின்  தாக்குதலைக் கண்டிக்கிறோம்!!

'நீட்' தேர்வை எதிர்த்து கடந்த 6 நாட்களாக சென்னையில் உள்ள  தங்கள் தலைமை அலுவலகத்தில்  உண்ணாநிலைப் போராட்டம் நடத்திவந்த மக்கள் பாதை அமைப்பைச் சேர்ந்த 6 பேர் இன்று காலை 6 மணிக்குக் கைது செய்யப்பட்டு  கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் மக்கள் பாதை தலைமை அலுவலகத்தில் இருந்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்கள் பாதை அலுவலகம் காவல்துறையால்  சூறையாடப்பட்டது,  ஏராளமான கோப்புகள் திருடப்பட்டுள்ளதாக அந்த அமைப்பைச் சேர்ந்த வெற்றிசெல்வி தெரிவித்துள்ளார்.

அலுவலகம் காவல்துறையால் சட்டவிரோதமாக மூடிவைக்கப்பட்டுள்ளது. 

ஒருபுறம் 'நீட்' தேர்வை எதிப்பதாக பேசிக்கொண்டே,  'நீட்' தேர்வை எதிர்த்து அமைதி வழியில்  போராடுபவர்களைக் காவல்துறையைக் கொண்டு தாக்கும் தமிழக அரசின் இரட்டை வேடத்தை, காவல்துறை தர்பாரைக் கண்டிக்கிறோம். 

இது தொடர்பாக மக்கள் பாதை அமைப்பைச் சார்ந்த திரு.நாகல்சாமி அவர்களைத் தொடர்பு கொண்டு மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பாக நடந்ததைக் கேட்டுத் தெரிந்து கொண்டோம்.  அவர் சென்னை காவல்துறை ஆணையர் அவர்களை தொடர்புகொண்டு பேசியதாகவும், போராட்டத்தை கண் கைவிட்டால் அலுவலகத்திற்குள் அனுமதிப்பதாக காவல் ஆணையர்  கூறியதாகத் தெரிவித்தார். காவல் ஆணையர் இப்படிப் பேசுவதே மிரட்டல், சட்டவிரோதம். அமைதிவழிப் போராட்டத்தை ஒடுக்கும் குறுக்குவழி. அரசியல்அமைப்புச் சட்டம் கொடுத்திருக்கும் அமைதி வழியில் போராடும் உரிமைக்கு எதிரானது. உச்சநீதிமன்ற, உயர்நீதி மன்றத் தீர்ப்புகளுக்கு எதிரானது.  

'நீட்' தேர்வை எதிர்ப்பதாக நாடகமாடும் எடப்பாடி அரசாங்கம் காவல்துறை மூலம் நீட்டுக்கு எதிராகப் பேசுவதை, போராடுவதைத் தடி கொண்டு ஒடுக்கி பா.ஜ.கா - மோடி அரசுக்குச் சேவகம் செய்வதை ம.உ.பா.மையம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் - சென்னை

Thursday, 17 September 2020

வழக்குரைஞர்களைப் பாதுகாக்க JAAC போராட்டம் அறிவிப்பு!!

 JAAC_பொதுக்குழு_தீர்மானம் 

தமிழ்நாடு பார்கவுன்சில் வழக்குரைஞர்களை விசாரணையின்றியும், குற்றம்சாட்டப்பட்ட வழக்குரைஞர்களிடம் எந்தவித விளக்கம் கேட்காமலும் இடைநீக்கம் செய்வதை பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

மேற்படி இடைநீக்கத்தை உடனடியாக திரும்பப் பெற பொதுக்குழு வலியுறுத்துகிறது. அவ்வாறு இடைநீக்கத்தைத் திரும்ப பெறவில்லையெனில் வரும் 22-9-2020 அன்று தமிழகம் முழுக்க நீதிமன்றங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அந்தந்த வழக்குரைஞர் சங்கங்கள் நடத்த முடிவு செய்யபடுகிறது.

அதன் பின்பும் இடைநீக்கம் திரும்ப பெறும் கோரிக்கையை பார்கவுன்சில் ஏற்காவிட்டால் 34(1) போராட்டத்தின் பொழுது நடைபெற்ற உயர்நீதிமன்றம் முற்றுகை போராட்டம் போன்று தமிழகம் முழுக்க உள்ள வழக்குரைஞர்களைத் திரட்டி தமிழ்நாடு பார்கவுன்சிலை  முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என பொதுக்குழு முடிவு செய்கிறது. 

மேலும் வழக்குரைஞர் தொழில் சம்மந்தம் இல்லாத பிரச்சனைகளில் வழக்குரைஞர்களுக்கு எதிராகத் தமிழ்நாடு பார்கவுன்சில் தலையீடு செய்யகூடாது என பொதுக்குழு வலியுறுத்துகிறது.

மேலும், நீதிமன்றத்தை உடனடியாகத் திறக்க வலியுறுத்தப்படுகிறது.

JAAC, 

தமிழ் நாடு


பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அதிமுக அரசு அகற்றுமா?

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் -  தமிழ்நாடு

(PEOPLE’S RIGHT PROTECTION CENTRE - TAMILNADU)

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் - தமிழ்நாடு

(TAMILNADU ASSOCIATION FOR TRAINED ARCHAKAS)

150-E, K.K.NAGAR, MADURAI-20, 

98653 48163, 90474 00485.

++++++++++++++++

நாள்:17.09.2020

பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அதிமுக அரசு அகற்றுமா?

அர்ச்சக அரசுப் பணியில் அனைத்து இந்துக்களுக்குமான இடஒதுக்கீடு அமலாவது எப்போது? 

பத்திரிக்கைச் செய்தி

 தந்தை பெரியார் இந்தியாவில் சாதிய ஏற்றத் தாழ்வுகள் சட்டப்பாதுகாப்புடனும், சாத்திரப் பாதுகாப்புடனும் நிலைநிறுத்தப்படுகிறது என்று திண்ணமாக  எண்ணியதன் விளைவாகவே, சாதியொழிப்பிற்குச் சட்டமாற்றங்களும், சாத்திர நம்பிக்கை உடைப்பும் தேவை என்று தீவிரக் களப்பணியாற்றினார். அரசியல் சட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு என்று கூறப்பட்டிருக்கிறதே தவிர, சாதி ஒழிப்பு , சாதிப் படிநிலைகள் ஒழிப்பு கூறப்படவில்லை என்றும், சமூகமாற்றம் , சமதர்மம் என்பது சாதிகளை ஒழித்தால்தான் நிகழும் என்றும் கருதிய பெரியார், அரசியல் அமைப்பின் 25 மற்றும் 26 ஆவது மதப்பாதுகாப்புப் பிரிவுகளைக் கடுமையாக எதிர்த்தார், அந்தச் சட்டப் பிரிவுகளுக்காக இந்திய அரசியல் சட்டத்தினை எரிக்கவும் செய்தார். தந்தை பெரியார் அவர்கள் 1957 இல் சட்டஎரிப்புப் போராட்டம் அறிவிக்கும்வரை, இந்தியாவில் சட்டத்தினைக் கொளுத்தினால் என்ன தண்டனை என்பது குறித்துச் சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

கடவுள் இல்லை என்று தன் வாழ்நாள் முழுவதும் பரப்புரை செய்த பெரியார் நடத்திய கோவில் நுழைவுப் போராட்டங்களும், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று நடத்திய போராட்டங்களும்  சாதியொழிப்புத் தளத்திலிருந்து நடத்தப் பட்டவை. சாதியப் படிநிலைகள் காக்கப்படும் கருவறைகளில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று ஒலித்தது பெரியாரின் குரல்.

இறைவன் முன்னால் அனைவரும் சமம் என அனைத்துச் சமயங்களும் போதித்தாலும் குறிப்பிட்ட சமூகத்தவர்கள் மட்டுமே கருவறையில் நுழைந்து பூஜை செய்ய முடியும் என்ற நிலை காலங்காலமாக இருந்து வருகிறது.

கடந்த 28-2-2007 அன்று அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் பயிற்சிக்கான சேர்க்கை விண்ணப்பப் படிவும் வெளியானதும் திருவண்ணாமலை கோயிலில் 600 பேர் விண்ணப்பித்தனர். மூன்று நாட்கள் நேர்காணல் நடைபெற்றது. 40 மாணவர்கள்  மட்டுமே தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டனர். அதுபோல் மதுரை திருச்செந்தூர், பழனி ஆகிய கோயில்களில்  1000க்கும் மேற்பட்டோர் நேர்காணல் செய்யப்பட்டு 120 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்கள். திருவரங்கம், சென்னை பார்த்தசாரதி கோயில்களில்  50க்கும் மேற்பட்டோர் நேர்காணல் செய்யப்பட்டு 80 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்கள். இறுதியில் 206 பேர் மட்டும் ஒன்றரை ஆண்டு காலம் அர்ச்சகர் பயிற்சியை நிறைவு செய்தனர். ஆனால் கடவுளைத் தொட்டு வழிபாடு செய்யவேண்டும் என்ற  மாணவர்களின் எண்ணம் இன்னும் நிறைவேறவில்லை.

இத்தகைய திறன் படைத்த மாணவர்களுக்கு இன்றுவரை ஆகமக் கோவில்களில் பணிநியமனம் வழங்கப்படவில்லை. குறிப்பாக மதுரை மீனாட்சியம்மன், பழனி, திருச்செந்தூர் முருகன், சிறீரங்கம் ரெங்கநாதன், மயிலை கபாலீசுவரர் உள்ளிட்ட முக்கியக் கோவில்களில் பணிநியமனம் எப்படி செய்யப்படுகிறது? என்பது மிகவும் இரகசியமாகவே உள்ளது. பரம்பரை வழி அர்ச்சகர் உரிமை சட்டப்படி ஒழிக்கப்பட்டு, அதனைப் பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் உறுதி செய்தபின்பும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 100% தமிழகத்தின் பெரிய கோவில்களில் அர்ச்சகர்களாக உள்ளனர். இவர்கள் நியமனம், வெளிப்படையான அறிவிப்பு, முறையான தேர்வு இன்றி நடைபெற்று வருகிறது. அர்ச்சகர் என்பது அரசுப் பணி. அனைத்து அரசுப் பணிகளும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே நியமிக்கப்பட வேண்டும். ஆனால், சட்டம், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் செல்லாத இடமாக ஆகமக் கோயில்கள் உள்ளன.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என தமிழக அரசு 2006 –ல் கொண்டு வந்த அரசாணைக்கு எதிரான வழக்கு 2015-ஆம் ஆண்டு தமிழக அரசின் அரசாணை செல்லும், குறிப்பிட்ட கோயில்கள் பணி நியமனம் குறித்து முடிவு செய்யலாம், ஆனால் பிறப்பின் அடிப்படையில் பணி நியமனம் கூடாது  என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு வந்தது. ஆனால் ஆகமப்படி அர்ச்சகர் நியமனமா? அரசியல் சட்டப்படி அர்ச்சகர் நியமனமா? என்பதில் தெளிவு இல்லை. திராவிட இயக்கத்தின் வழிவந்ததாய் சொல்லும் தமிழக அரசு 2015 உச்சநீதிமன்றத் தீர்ப்பின் சட்டத்தன்மை குறித்து இன்றுவரை கருத்துச் சொல்லவில்லை. 

அதனால் பயிற்சி முடித்த அர்ச்சக மாணவர்களுக்கு இன்றுவரை பணி நியமனம் வழங்கப்படாமல் உள்ளது. தமிழகம் முழுவதும் சைவத்திலும், வைணவத்திலும் பாடல் பெற்ற பிரபலமான பல நூறு பொதுக் கோவில்கள் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. அர்ச்சகர் பணி காலியிடங்களும் அதிகம் உள்ளது. இந்து மதத்தில் அனைவரும் சமம், பிறப்பால் உயர்வு - தாழ்வு இல்லை என்றால் கருவறையில் உள்ள  சாதி - தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அனைத்துச் சாதி அர்ச்சகர் பணி என்று தந்தை பெரியார் சொன்னார். தந்தை பெரியார் வழிவந்த திராவிட இயக்கமாய் தன்னை சொல்லிக் கொள்ளும் எடப்பாடி அரசு தீர்ப்பு வந்தும் நான்கு ஆண்டுகளாய் மவுனம் காக்கிறது.

சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றம் “தீட்டு என்ற அடிப்படையில் பெண்களை ஒதுக்குவதும் தீண்டாமைதான் – எனவே அது குற்றம் என்றது. ஆனால் தமிழகத்தில் கடந்த பல நூற்றாண்டுகளாகத் தொடரும்  கருவறைத் தீண்டாமை அரசியல் சட்ட ஆட்சி வந்தபின்பும் நீடிக்கிறது. தந்தை பெரியார் பிறந்த நாளிலாவது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், தமிழக முதல்வர் ஆகியோர் தங்கள் நிலைப்பாடுகளை தெரிவிக்க வேண்டும். உடனே, இந்து அறநிலையத் துறையின் கீழான முக்கியக் கோவில்களில் உள்ள காலியிடங்களில் அனைத்துச் சாதி அர்ச்சகர் பயிற்சி முடித்த  203 மாணவர்களுக்கு,  இந்து சமய அறநிலையத்துறை  பணிநியமனம் வழங்க வேண்டும். எந்தக் காரணமும் இன்றி மூடப்பட்ட அனைத்து சாதி மாணவர்களுக்கான சைவ - வைணவ அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் திறந்து அர்ச்சகர் பயிற்சி அளிக்க வேண்டும். அனைத்து சாதி அர்ச்சகர் பணி என்பது வெறும் வேலைவாய்ப்பு தொடர்பானது மட்டுமல்ல! இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள உயர்ந்த கருத்தாக்கங்களான குடிமக்கள்  அனைவருக்கும் சமத்துவம், சமவாய்ப்பு, சமூக நீதி, தனி மனித மாண்பு காத்தல் போன்ற அடிப்படை உரிமைகள் தொடர்பானது; கருவறைத் தீண்டாமையை ஒழிப்பது.  

எனவே தந்தை பெரியாரின் 141-வது பிறந்த நாளில் கருவறைத் தீண்டாமையை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அர்ச்சகர் பள்ளியில் ஆகமம் கற்று. தீட்சை பெற்ற 203 மாணவர்களுக்கும் ஆகமக் கோயில்களில் பணி நியமனம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் வரலாறு உங்களை மன்னிக்காது.

-------------------------------------

வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன், 

மாநில ஒருங்கிணைப்பாளர்,

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு


வா.ரங்கநாதன், 

தலைவர், 

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் - தமிழ்நாடு

Tuesday, 15 September 2020

தமிழ் நாட்டின் கல்வி உரிமையைக் காலி செய்யவே "நீட்"!

+2 வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சிறந்த மாணவர்களின் மருத்துவர் கனவு "நீட்" தேர்வால் கானல் நீராகி வருகிறது. நீட் தேர்வு கொண்டு வந்த பிறகு ஆண்டுக்கு ஆண்டு தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. நீட் மூலம் தமிழக மக்களின் கல்வி உரிமை எவ்வாறு பறிக்கப்படுகிறது என்பது குறித்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்களின் உரை.

நன்றி: Arakalagam tv

இளம் வழக்குரைஞர்களுக்கு உதவித் தொகை!

இளம் வழக்குரைஞர்களுக்கு உதவித்தொகை !

BAR council Chairman அவர்களைச் சந்தித்து நன்றி அறிவிப்பு!!

சென்னையில் அரசு சட்டக்கல்லூரி !

BAR council Chairman உறுதி!!

AIBE தேர்ச்சி பெறாதவர்களுக்கும் COVID உதவித்தொகை தர நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை இளம் வழக்குரைஞர்கள் சார்பாக 176 இளம் வழக்குரைஞர்கள் ஆதரவோடு பார்கவுன்சிலுக்கு 18.04.2020 & 24.05.2020 அன்று இரண்டு மனுக்கள் அளித்திருந்தோம்.

அம்மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தற்போது AIBE தேர்வாகாத வழக்குரைஞர்களுக்கும் சென்ற வாரம் முதல் 4000 ரூபாய்க்கான Cheque வழங்கப்பட்டு வருகிறது.

BAR council ன் இந்த செயலுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று மாலை 3.30 மணிக்கு BCTNP Chairman திரு. அமல்ராஜ் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கச் சென்றிருந்தோம்.

நாம் சென்ற விஷயத்தை தெரிந்துகொண்ட பின், "உண்மையில் உங்களது மனுக்கள் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதால்தான் தமிழ்நாடு முழுக்க உள்ள வழக்குரைஞர்களுக்கு என்னால் இதனைச் செய்ய முடிந்தது." என்று வெளிப்படையாக நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவரது வார்த்தைகள் நம்முடைய உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக இருந்தது.

பிறகு Chennai Young Advocates செயல்பாடுகளான Physically Challenged PIL, Manual Scavengil PIL, Legal Seminars போன்றவற்றைப் பகிர்ந்து கொண்டோம். நமது செயல்பாடுகள் மிகுந்த மகிழச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.

Chennai Young Advocates குழுவிலுள்ள மூவர் (Thilagavathy, Singaravelan, Sarathkumar) University Gold Medal வாங்கும்பொழுது மேடையில் அவரிடம் வாழ்த்து பெற்றதை நினைவுகூர்ந்து மகிழ்ந்தார்.

நாம் சென்னை சட்டக் கல்லூரிக்குள் 16 நாட்கள் தங்கி போராடியதையும், அதன்பின் இடமாற்றத்தை மையப்படுத்தி நீதியரசர் திரு.ஹரிபரந்தாமன் அவர்களை அழைத்து பார்கவுன்சில் கட்டிடத்தில் அரங்கக் கூட்டம் ஏற்பாடு செய்து நடத்தியதை நினைவு படுத்தியதோடு, புதுப்பாக்கம் சட்டக்கல்லூரி பொங்கல் தினத்தில் சென்னையில் சட்டக்கல்லூரி மீண்டும் கொண்டுவரப்படும் என பேட்டியளித்தது எங்களுக்கு மிகுந்த மன நிறைவாக இருந்ததென பகிர்ந்து கொண்டோம்.

சட்டக் கல்லூரிக்காக நாம் நடத்தியப் போராட்டத்தை நெகிழ்ச்சியோடு பகிர்ந்தார். அதன் பின் கல்லூரி இடமாற்றம் செய்யப்பட்டது மிகுந்த வருத்தமளிப்பதாகப் பகிர்ந்துகொண்டார்.

பிறகு, "எனது பதவிக்காலம் முடிவதற்குள் சென்னையில் நிச்சயம் அரசு சட்டக்கல்லூரி கொண்டுவரப்படும்" என்று உறுதியளித்தார்.

மேலும், மாவட்டந்தோறும் சட்டக்கல்லூரி திறக்கப்பட BAR Council தீர்மானம் நிறைவேற்றி, 09.09.2020 அன்று தமிழக அரசிடம் அளித்த மனுவினை கொண்டுவரச்சொல்லி நம்மிடம் காண்பித்தார்.

உதவித்தொகை வழங்கப்பட்டதை விட இந்தத் தகவல்கள்தான் உண்மையில் எங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்பதை பகிர்ந்து கொண்டோம்.

பின்பு, நமது செயல்பாடுகளை அங்கீகரித்து, இளம் தலைமுறையினர் இப்படி சமூக உணர்வோடு செயல்படுவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகக் கூறி, சென்னை இளம் வழக்குரைஞர்களுக்கு தமது பாராட்டுதலைத் தெரிவித்தார்.

இறுதியாக, இளம் வழக்குரைஞர்களுக்கு உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்த Bar Council Chairman அவருக்கும், இதர Bar Council உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து, நாம் கொண்டு சென்ற நன்றி அறிவிப்புக் கடிதத்தை கொடுத்து வந்தோம்.

தொடர்ந்து பணியில்...

தகவல்

சென்னை இளம் வழக்குரைஞர்கள்

#Chennai_Young_Advocates

தொடர்ந்து உற்சாகமாக வேலை செய்யும் இளம் வழக்கறிஞர்களை வாழ்த்துகிறோம்! 

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் தமிழ்நாடு

Monday, 24 August 2020

தமிழ்நாடு-புதுச்சேரி வழக்குரைஞர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம்!

19-08-2020-ம் தேதி தமிழ்நாடு புதுச்சேரி வழக்குரைஞர் சங்கங்களின் கூட்டுக்குழு (JAAC)  இணைய வழிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் திரு.பிரசாந்த் பூஷன் அவர்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் கைவிடவேண்டுமென்றும்;

மேற்படி கோரிக்கையை வலியுறுத்தும் முகமாக 24-08-2020 ம்தேதி காலை 11 மணியளவில் அந்தந்த நீதிமன்றங்களின் முன்பாக  சமூக இடைவெளிவிட்டு ஆர்பாட்டம் நடத்துவதென்றும்; 

மேற்படி ஆர்ப்பாட்டத்தில் இணையவழி நீதிமன்றங்களுக்குப் பதிலாக திறந்த நீதிமன்றங்களில் (open court) வழக்குகளை நடத்த வலியுறுத்த வேண்டுமென்றும்,

2. குற்றவியல் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட 5 நபர் கொண்ட குழுவை எதிர்ப்பதற்கு பிராந்தியக் குழு அமைக்கப்படும் பட்சத்தில் அதில் நமது கூட்டுக்குழு வின் உறுப்பினர்கள் இடம்பெறவேண்டுமென்றும்:

3. Contempt Of Courts Act, Judicial Officers Protection Act ஆகிய இரண்டு சட்டங்களையும் இரத்து செய்திட வேண்டுமென்றும் மற்றும்

4. ஐந்து மாதங்களாகியும் வழக்குரைஞர்களுக்கு அரசு எந்த நிவாரணமும் வழங்கவில்லை, எனவே உடனடியாக வழக்குரைஞர்களுக்கு நிவாரணம் வழங்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும்

தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

ப.நந்தகுமார் 

தலைவர் 

JAAC

மேற்கண்ட தீர்மானங்களின் ஒரு பகுதியாக 24.08.2020 அன்று பல்வேறு வழக்குரைஞர் சங்கங்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். 

மதுரை


கும்பகோணம்


விருத்தாச்சலம்


உடுமலைப்பேட்டை


பத்மநாபபுரம்


திருச்சி


கோயம்புத்தூர்


நாகப்பட்டினம்


வேலூர்

தமிழ் இந்து 25.08.2020

திருவாரூர்



குழித்துறை


நாகர்கோவில்


தருமபுரி


காவல்துறையினரிடம் அதிகாரத்தைக் குவிக்கும் குற்றவியல் சட்டத் திருத்தங்கள்!

காவல்துறையினரிடம் அதிகாரத்தைக் குவிக்கும் குற்றவியல் சட்டத் திருத்தங்கள் குறித்து தெளிவு படுத்துகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சென்னை கிளைச் செயலாளர் வழக்குரைஞர் ஜிம்ராஜ் மில்டன் அவர்கள்.

Zhagaram voice utube channel-லுக்கு அளித்த நேர்காணல்.

கீழுள்ள இணைப்பில்....

https://youtu.be/ELjHoT9ZpJY

Saturday, 22 August 2020

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவதைத் தடுப்பது யார்?

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் -  தமிழ்நாடு

(PEOPLE’S RIGHT PROTECTION CENTRE - TAMILNADU)

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் - தமிழ்நாடு

(TAMILNADU ASSOCIATION FOR TRAINED ARCHAKAS)

150-E, K.K.NAGAR, MADURAI-20, 

98653 48163, 90474 00485.

+++++++++++++++++

நாள்:22.08.2020

14 ஆண்டுகளாய் நீதி இல்லை! அர்ச்சக அரசுப் பணியில் அனைத்து இந்துக்களுக்குமான இடஒதுக்கீட்டை தடுப்பது யார்?

பத்திரிக்கை செய்தி

இந்திய அளவில் சமூக நலத் திட்டங்களின் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. கல்வி, மருத்துவம், தொழில் துறை என பலவற்றில் பிற மாநிலங்களைவிட முன்னணியில் இருக்கும் தமிழகம் சமூக நீதியை நிலைநாட்டுவதிலும் முன்மாதிரியாக விளங்குகிறது. அந்த வகையிலே 'அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்' என்ற சட்டம் இயற்றப்பட்டு சுமார் 14 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையிலும் எந்தவித நீதியும் கிடைக்கப்பெறவில்லை.  இறைவன் முன்னால் அனைவரும் சமம் என அனைத்து சமயங்களும் போதித்தாலும் குறிப்பிட்ட சமூகத்தவர்கள் மட்டுமே கருவறை நுழைந்து பூஜை செய்ய முடியும் என்ற நிலை காலங்காலமாக இருந்து வருகிறது.

 "அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்" என தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2-ஆவது முறையாக சட்டம் நிறைவேற்றி இன்றுடன் (ஆகஸ்ட் 22 ) 14 ஆண்டுகள் முடிவடைகிறது. 

28-2-2007 , அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் பயிற்சிக்கான சேர்க்கை விண்ணப்பப் படிவும் வெளியானதும் திருவண்ணாமலை கோயிலில் 600 பேர் விண்ணப்பித்தனர். மூன்று நாட்கள் நேர்காணல் நடைபெற்றது. 40 மாணவர்கள்  மட்டுமே தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டனர். அதுபோல் மதுரை திருச்செந்தூர், பழனி ஆகிய கோயில்களில்  1000க்கும் மேற்பட்டோர் நேர்காணல் செய்யப்பட்டு 120 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்கள்.திருவரங்கம், சென்னை பார்த்தசாரதி கோயில்களில்  50க்கும் மேற்பட்டோர் நேர்காணல் செய்யப்பட்டு 80 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்கள். இறுதியில் 206 பேர் மட்டும் ஒன்றரை ஆண்டு காலம் அர்ச்சகர் பயிற்சியை நிறைவு செய்தனர்.

கடவுளைத் தொட்டு வழிபாடு செய்யவேண்டும் என்ற  மாணவர்களின் எண்ணம் இன்னும் நிறைவேறவில்லை.

ஆனால், இத்தகைய திறன் படைத்த மாணவர்களுக்கு இன்றுவரை ஆகமக் கோவில்களில் பணிநியமனம் வழங்கப்படவில்லை. குறிப்பாக மதுரை மீனாட்சியம்மன், பழனி, திருச்செந்தூர் முருகன், சிறீரங்கம் ரெங்கநாதன், மயிலை கபாலீசுவரர் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் பணிநியமனம் எப்படி செய்யப்படுகிறது? என்பது மிகவும் இரகசியமாகவே உள்ளது. பரம்பரை வழி அர்ச்சகர் உரிமை சட்டப்படி ஒழிக்கப்பட்டு, அதனைப் பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் உறுதி செய்தபின்பும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 100% தமிழகத்தின் பெரிய கோவில்களில் அர்ச்சகர்களாக உள்ளனர். இவர்கள் நியமனம், வெளிப்படையான அறிவிப்பு, முறையான தேர்வு இன்றி நடைபெற்று வருகிறது. அர்ச்சகர் என்பது அரசுப் பணி. அனைத்து அரசுப் பணிகளும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே நியமிக்கப்பட வேண்டும்.ஆனால், சட்டம், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் செல்லாத இடமாக ஆகமக் கோயில்கள் உள்ளன.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என தமிழக அரசு 2006 –ல் கொண்டு வந்த அரசாணைக்கு எதிரான வழக்கு 2015-ஆம் ஆண்டு தமிழக அரசின் அரசாணை செல்லும், குறிப்பிட்டு கோயில்கள் பணி நியமனம் குறித்து முடிவு செய்யலாம், ஆனால் பிறப்பின் அடிப்படையில் பணிநியமனம் கூடாது  என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு வந்தது. ஆனால் ஆகமப்படி அர்ச்சகர் நியமனமா? அரசியல் சட்டப்படி அர்ச்சகர் நியமனமா? என்பதில் தெளிவு இல்லை. திராவிட இயக்கத்தின் வழிவந்ததாய் சொல்லும் தமிழக அரசு 2015 உச்சநீதிமன்ற தீர்ப்பின் சட்டத்தன்மை குறித்து இன்றுவரை கருத்துச் சொல்லவில்லை. 

அதனால் பயிற்சி முடித்த அர்ச்சக மாணவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படாமல் இருந்து வந்தது. இரண்டாண்டுகளுக்கு முன்பு மதுரை அர்ச்சக பாடசாலை மாணவர் திரு.மாரிச்சாமி என்பவருக்கு மதுரை புதூர் அய்யப்பன் கோவிலில் பணி வழங்கப்பட்டது. அதன்பிறகு தற்போது தியாகராஜன் என்ற மதுரை பாடசாலை மாணவருக்கு மதுரை நாகமலை பிள்ளையார் கோவிலில் இந்துசமய அறநிலையத்துறை அர்ச்சகர் பணி வழங்கி உள்ளது.தமிழகம் முழுவதும் சைவத்திலும், வைணவத்திலும் பாடல் பெற்ற பிரபலமான பல நூறு பொதுக் கோவில்கள் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.அர்ச்சகர் பணி காலியிடங்களும் அதிகம் உள்ளது. இந்துமதத்தில் அனைவரும் சமம், பிறப்பால் உயர்வு - தாழ்வு இல்லை. கருவறையில் உள்ள  சாதி - தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அனைத்து சாதி அர்ச்சகர் பணி என்று தமிழக அரசு சொன்னது. ஆனால் தமிழக அரசு தயங்கித் தயங்கி,  ஒவ்வொரு சாதிக்கும் தனிசுடுகாடு அமைத்துக் கொடுப்பதுபோல, தனியாக உள்ள சிறு கோவில்களில்  பிராமணர் அல்லாத மற்ற சாதி மாணவர்களை பணி நியமனம் செய்கிறது. இதுவும் மொத்தமாக செய்யப்படுவதில்லை. நியமனம் செய்யப்படும் இந்த மாணவர்களுக்கு  ஓய்வு பெறும் வரையில் பணி உயர்வு கிடையாது. பணி மாறுதல் கிடையாது. 

சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றம் “தீட்டு என்ற அடிப்படையில் பெண்களை ஒதுக்குவதும் தீண்டாமைதான் – எனவே அது குற்றம் என்றது. ஆனால் தமிழகத்தில் கடந்த பல நூற்றாண்டுகளாகத் தொடரும்  கருவறை தீண்டாமை அரசியல் சட்ட ஆட்சி வந்தபின்பும் நீடிக்கிறது. இப்பிரச்சனையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், தமிழக முதல்வர் தங்கள் நிலைப்பாடுகளைத் தெரிவிக்க வேண்டும்.

பல்லாண்டுகளாக அனைவரும் போராடிப் பெற்ற அர்ச்சகர் பணி நியமன செய்தியைக்கூட  மாணவர்கள் வெளியே சொல்ல அஞ்சுகின்றனர். இந்த நிலைமாற வேண்டும். எனவே, தமிழக அரசு இந்து அறநிலையத் துறையின் கீழான முக்கிய கோவில்களில் உள்ள காலியிடங்களில் அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி முடித்த   200-க்கும் மேலான மாணவர்களுக்கு,  இந்துசமய அறநிலையத்துறை  பணிநியமனம் வழங்க வேண்டும். 

பணிநியமன நிகழ்வு  இந்துசமய அறைநிலையத்துறை அமைச்சர், அதிகாரிகள் முன்னிலையில் விழாவாக  நடைபெற வேண்டும். எந்தக் காரணமும் இன்றி மூடப்பட்ட அனைத்து சாதி மாணவர்களுக்கான சைவ - வைணவ அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் திறந்து அர்ச்சகர் பயிற்சி அளிக்க வேண்டும். அனைத்து சாதி அர்ச்சகர் பணி என்பது வெறும் வேலைவாய்ப்பு தொடர்பானது மட்டுமல்ல! இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள உயர்ந்த கருத்தாக்கங்களான குடிமக்கள்  அனைவருக்கும் சமத்துவம், சமவாய்ப்பு, சமூக நீதி,தனி மனித மாண்பு காத்தல் போன்ற அடிப்படை உரிமைகள் தொடர்பானது; கருவறைத் தீண்டாமையை ஒழிப்பது.  

எனவே கருவறை தீண்டாமையை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு அர்ச்சகர் பள்ளியில் பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சங்கங்களும், அனைத்து முற்போக்கு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், தலைவர்களும் வலியுறுத்த வேண்டும் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

எனவே, 

தமிழக அரசிடம் !

தமிழகத்தில்  அரசு கட்டுப்பாட்டில் 38,000 கோயில்கள் உள்ளன. அதில்  தகுதி திறமை  உள்ள அனைத்து சாதியினரையும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி அமர்த்த வேண்டும்

சைவ-வைணவ வழிபாட்டு முறையில் முறையாக பயிற்சி பெற மூடப்பட்ட அர்ச்சகர் பயிற்சி நிலையங்களை அரசு மீண்டும்  திறக்க வேண்டும்.

என்று கோருகிறோம்.

-------------------------------------

வழக்கறிஞர்.வாஞ்சிநாதன், 

மாநில ஒருங்கிணைப்பாளர்,

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு

வா.ரங்கநாதன், 

தலைவர், 

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் - தமிழ்நாடு

#கருவறையில்_தீண்டாமை

#SaveTemplesFromBrahmanism