Wednesday, 25 November 2020

உதயமானது "நிவர்" நிவாரணக் குழு!

நண்பர்களே,

"நிவர் புயல்" - பேரிடர் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக இன்று  ஆலோசனை நடத்தப்பட்டது. ஏற்கனவே கொரானா மீட்பு பணியில் ஈடுபட்ட  சென்னை மக்கள் உதவிக்குழு, வடசென்னை மக்கள் உதவிக்குழு, வியாசை தோழர்கள் உள்ளிட்ட நண்பர்கள் கலந்து கொண்டனர்.

இதில் முதற்கட்டமாக நமது தோழர்கள் வசிக்கும் பகுதிகள் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நிவாரணப்பணிகளில் ஈடுபடுவது என்றும் குறிப்பாக வியாசை மற்றும் வடசென்னை பகுதிகள் மற்றும் கடலோர பகுதிகள் என முடிவு செய்யப்பட்டுள்ளது.  

இதை ஒருங்கிணைக்கும் வகையில் 9 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. 

PS, NN, Sarath ஒருங்கிணைக்க பொறுப்பெடுத்துக் கொண்டுள்ளனர். 

*உடனடியாக திட்டமிட்ட வேலைகள்*

1. அதிகாரிகளுடன் தொடர்பு கொள்வது,

2.அத்தியாவசியமான நிவாரண உதவிகளை வழங்குவது

3.  உதவி எண்கள் அறிவிப்பது

4. உதவிப்பணிகளுக்கு  நிதி திரட்டுவது

5. நாளை காலை 9 மணிக்கு கள ஆய்வு செய்வது, 

என்ற வகையில் தற்போது திட்டமிட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

நிலைமைகளையொட்டி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தகவல்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
சென்னை


பாடத்திட்டத்தில் மீண்டும் அருந்ததி ராயின் "வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்!" சேர்ப்பா?

அருந்ததி ராய் புத்தகம் மீண்டும் பாட திட்டத்தில் சேர்ப்பா? மனோன்மனியம் பல்கலை. துணை வேந்தர் விளக்கம்

#குறிப்பு : அருந்ததிராய் புத்தகம் மீண்டும் பாடத்திட்டத்தில் இணைத்ததாக வந்த தகவல்களை ஒட்டி, நாம் ஒரு பதிவை இன்று காலையில் வெளியிட்டோம். இப்பொழுது பிபிசியில் (ஒரு மணி நேரத்திற்கு முன்பு) வந்த செய்தி துணைவேந்தர் மறுத்து சொன்ன செய்தி வெளியாகியிருக்கிறது. 

ஜனநாயக சக்திகளுடன் இணைந்து நமது போராட்டத்தையும், பிரச்சாரத்தையும் மக்களிடம் கொண்டு செல்வோம்.

****

திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பாட திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட அருந்ததி ராயின் 'Walking With The Comrades' புத்தகத்தை மீண்டும் சேர்ப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்று அந்த பல்கலைக்கழக துணை வேந்தர் பிச்சுமணி தெரிவித்துள்ளார்.

அருந்ததி ராயின் புத்தகம் கடந்த 11-ம் தேதி பாட திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர்தான் அந்தப் புத்தகம் மாணவர்களிடையே தவறான கருத்துகளைப் பரப்புகிறது என்பதால் அதை நீக்க வேண்டும் என அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

அந்த அமைப்பின் அழுத்தம் காரணமாகவே புத்தகம் பாட திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டினர். ஆனால் அந்த கருத்துக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி மறுப்பு தெரிவித்திருந்தார். மாணவர்கள் நலன் கருதியே புத்தகம் நீக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த வாரம் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் முன்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய காவல்துறையினர், சில மாணவர்களை மட்டும் துணைவேந்தரைச் சந்திக்க ஏற்பாடு செய்தனர்.

இதையடுத்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன் தலைமையில் சில மாணவர்கள் மட்டும் துணைவேந்தரைச் சந்தித்தனர். அப்போது நீக்கப்பட்ட புத்தகத்தை மீண்டும் சேர்க்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

அது மட்டுமின்றி கடந்த வாரத்தில் திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் துணைவேந்தரைச் சந்தித்து மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் 'Walking With The Comrades' புத்தகம் மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு விட்டதாக புதன்கிழமை தகவல்கள் வெளிவந்தன. சில தொலைக்காட்சிகளிலும் அந்த செய்தி ஒளிபரப்பாயின.

அந்த செய்தியைப் பார்த்த அருந்ததி ராய் நன்றி தெரிவிப்பதாகக் கூறும் அறிக்கையும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.

இந்த அறிக்கை தொடர்பாகத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யாவிடம் கேட்ட போது 'கடந்த 23-ம் தேதி நடந்த பாடத்திட்டத் தேர்வுக் குழுக் கூட்டத்தின் போது அருந்ததி ராயின் புத்தகத்தை மீண்டும் சேர்க்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எங்களுக்கு கிடைத்த உறுதியான தகவல்களுக்குப் பின்னரே எங்கள் அமைப்பு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது' என்று கூறினார்.

பல்கலைக்கழகத்தின் முடிவு அருந்ததிராயின் கவனத்துக்கும் சென்றிருக்கிறது. கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்ட பின்னரும் அது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் சார்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. மேலும் எங்கள் அமைப்பின் அறிக்கைக்கோ, அருந்ததி ராயின் அறிக்கைக்கோ துணைவேந்தர் இன்னும் மறுப்பு தெரிவிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே பாடத்திட்டத் தேர்வுக் குழுவின் முடிவைப் பற்றி துணைவேந்தர் வெளிப்படையாக அறிவிக்க முன்வர வேண்டும்' என்று ஆதவன் தீட்சண்யா தெரிவித்தார்.

இது தொடர்பாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பிச்சுமணியிடம் கேட்ட போது இது தொடர்பாக தற்போது வெளியாகும் தகவல்கள் தவறானவை என்று கூறினார். பாட திட்டத் தேர்வுக் குழுக் கூட்டத்தின் போது இது பற்றி விவாதிக்கப்பட்டதாகக் கூறிய அவர், அருந்ததி ராயின் புத்தகத்தை மீண்டும் சேர்ப்பது தொடர்பான கோரிக்கை இன்னும் பரிசீலனை அளவிலேயே உள்ளது என்றும் அதில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

- BBC NEWS

https://www.bbc.com/tamil/india-55074700

முன்பு வெளியான தகவல்

பாடத்திட்டத்தில் மீண்டும் ‘வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்’: அருந்ததிராய் நன்றி!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் மீண்டும் அருந்ததி ராயின் நூல் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து எழுத்தாளர் அருந்ததி ராய் வெளியிட்டுள்ள அறிக்கை: 

“திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ‘ வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்’ என்ற எனது நூலை மீண்டும்  அதன் பாடத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டிருப்பதாக அறிந்தேன். 

தனிநபர்கள், அமைப்புகள், அரசியல்வாதிகள் மற்றும் செய்தி ஊடகங்கள் முன்னெடுத்த பொது விவாதம் இல்லாமல் இது ஒருபோதும் நடந்திருக்க முடியாது. அறிவுபூர்வமாக முதிர்ச்சியடைந்த சமூகங்கள், மக்கள், நாடுகள் இப்படித்தான் துடிப்பாக மற்றும் உயிரோட்டமாக இருக்க முயற்சிக்கின்றன.

புத்தகத்திற்காகப் பேசிய அனைவருக்கும் மற்றும் எம்.எஸ் பல்கலைக்கழகத்திற்கும், அழுத்தத்துக்கும், மிரட்டலுக்கும் பணியாமல் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை எடுத்த பல்கலைக்கழகத்துக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். "

-அருந்ததி ராய்

நன்றி: Gunaa Gunasekaran


Monday, 16 November 2020

ஸ்டெர்லைட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில்  விசாரணை:

ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலைத் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

அதை  தொடர்ந்து ஸ்டெர்லைட்  நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு இன்று 16.11.2020 நீதிபதிகள் நவீன் சின்ஹா  மற்றும் கே.எம். ஜோசஃப் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பாக  மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி  மற்றும்  முகுல் ரோதங்கி ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். 

அதில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஸ்டெர்லைட் ஆலை மீறியதாக கூறப்பட்ட பல விதிமீறல்கள் சரிசெய்யப்பட்டுவிட்டன. இன்னும் மூன்று மாத காலம் அவகாசம் கொடுத்து ஆலையைத் திறக்க அனுமதி கொடுத்தால் அனைத்து நிபந்தனைகளும் சரி செய்யப்படும் என்றும்,  பிரச்சனையை சுமூகமாக முடிக்க வேண்டும் எனவும்,  இந்திய காப்பர் உற்பத்தியை கணக்கில் எடுத்துகொண்டு பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும்;அதற்கேற்ற பொருத்தமான வடிவில் குறைந்த பக்க அளவில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாக வாதிட்டார். மேலும் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தங்கி, விசாரணை ஆணையம் அமைத்துதான் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று வாதிட்டார்.

அதற்கு எதிராக அரசு தரப்பு சார்பாக மூத்த  வழக்கறிஞர்கள் சி.எஸ் . வைத்தியநாதன், கே.வி.விஸ்வநாதன் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக மூத்த வழக்கறிஞர் காலின் கொன்சால்வேஸ், வழக்கறிஞர் சபரீஷ் ஆகியோர் ஆஜராகி ஸ்டெர்லைட்  நிறுவனத்தின் வாதங்களை ஏற்றுக்கொள்ள முடியாது, சுற்றுப்புறச்சூழலை மாசு படுத்தியதால் தமிழக அரசு நிரந்தரமாக அந்த ஆலையை மூடியது, பின்னர் விரிவான விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம்  ஆலையை நிரந்தமாக மூடியதை ஏற்று  இறுதித் தீர்ப்பு வழங்கியது என்று வாதிட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வாய்ப்பே இல்லை என்று அரசு தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

இந்த நிலையில் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி  பிரமாண பத்திரம் தாக்கல் செய்யட்டும், இருதரப்பு வாதத்தையும் கேட்ட பிறகே இடைக்கால தீர்ப்பு தேவையா என்பதை முடிவு செய்வோம் என்று தெரிவித்து, டிசம்பர் மாதம் முதல்வாரத்திற்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

- சு . ஜிம்ராஜ்  மில்ட்டன்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

Wednesday, 11 November 2020

குரங்கு சேனா ஸ்ரீதர் படுத்தே விட்டானடா|

தொல்.திருமாவளவனுக்கு எதிராக உதார்விட்ட குரங்கு சேனாவைச் சேர்ந்த ஸ்ரீதர் உள்ளிட்ட சங்கிகளைத் தோலுரிக்கிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள். பாருங்கள்!பகிருங்கள்!

நன்றி: அறக்கலகம்

Tuesday, 10 November 2020

திருமாவளவன் மீதான வழக்குத் தள்ளுபடி - பாஜகவுக்குப் பின்னடைவா?

 திருமாவளவன் மீதான வழக்கு தள்ளுபடி - பாஜகவுக்கு பின்னடைவா?

வழக்குப் போட்டவர் மீது வழக்கு போடணும்

வழக்கறிஞர் வாஞ்சிநாதன்,
ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
தமிழ்நாடு

நன்றி: லிபர்ட்டி



Wednesday, 4 November 2020

கேரள மாவோயிஸ்ட் வேல்முருகன் படுகொலை! மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் கடும் கண்டனம்!

 04.11.2020

பத்திரிகைச் செய்தி

கேரளாவில் மாவோயிஸ்ட் தோழர் வேல்முருகன் போலி மோதலில் சுட்டுப் படுகொலை

மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கும் பினராயி விஜயன் அரசு உடனடியாகப் பதவி விலக வேண்டும்!

தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த 33 வயது மாவோயிஸ்ட் இளைஞர் வேல்முருகன் நவம்பர் 3 செவ்வாய்க்கிழமை காலை கேரள அதிரடிப்படை போலீசாரால் போலி மோதலில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை காலை வயநாடு காவல் எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில் அதிரடிப்படை போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்களாம். அப்போது மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினார்களாம். தற்காப்புக்காகப் போலீசார் திருப்பிச் சுட்டதில் மாவோயிஸ்ட் அமைப்பைச் சார்ந்த வேல்முருகன் இறந்துவிட்டாராம். போலி மோதல் படுகொலைகளை நியாயப்படுத்தும் வழக்கமானப் புனை கதையைத்தான் பினராய் விஜயன் அரசும் சொல்லிக் கொண்டிருக்கிறது..

கேரளாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள், இது சட்டவிரோதப் போலி மோதல் படுகொலை என்றும், இது குறித்து நீதி விசாரணை தேவை என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். மோதல் நடந்த இடத்திற்குச் செல்ல ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும் அனுமதி மறுத்து வருவதோடு குற்றத்தை மறைக்கவும் ஆதாரங்களை அழிக்கவும் பினராய் விஜயன் அரசு முயற்சி செய்வதாக மனித உரிமை சபை எனும் அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் நிர்மல் சாரதி அம்பலப்படுத்தி உள்ளார்.  பொதுவுடைமைக் கட்சி என்ற பெயரில் ஆட்சி நடத்திக் கொண்டு இது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை பினராயி விஜயன் அரசு மேற்கொள்வது வெட்கித் தலைகுனிய வேண்டிய செயலாகும்.

வேல்முருகன்

கேரளாவில் மாவோயிஸ்ட் அமைப்பினர் மக்களைத் துன்புறுத்தும் வகையில் எந்தவித சட்ட விரோத நடவடிக்கைகளிலும் இதுவரை ஈடுபட்டதில்லை என்று  சொல்லப்படுகிறது. அவ்வாறு இருக்க பினராய் விஜயன் ஆட்சியமைத்த கடந்த நான்காண்டுகளில் நடத்தப்படும் நான்காவது போலி மோதல் படுகொலை இதுவாகும். மற்ற முதலாளித்துவ ஆளும் வர்க்கக் கட்சிகளைவிட மிகக் கீழ்த்தரமான முறையில் மக்களுக்காகப் பாடுபடும் போராளிகளைப் படுகொலை செய்து வரும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான பினராய் விஜயன் அரசு தொடர்ந்து மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்து வருகிறது. எனவே பினராயி விஜயன் அரசு உடனடியாகப் பதவி விலக வேண்டும். வேல்முருகன் படுகொலையைக் கண்டிக்கின்ற அதேவேளையில் இந்தப் படுகொலை குறித்து வெளிப்படையான, முறையான நீதி விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலைக்குற்றம் பதிவு செய்து தண்டிக்கப்பட வேண்டும் என மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் வலியுறுத்துகிறது.

வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

Wednesday, 28 October 2020

திருமா மீது வழக்கு: சென்னை வழக்குரைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் டாக்டர் தொல்.திருமாவளவன் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை இரத்து செய்ய வேண்டும். 

வெட்டிச் சிதைக்கப்பட்ட காணொளியைப் பரப்பி  பொய் வழக்குப் போட காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜனநாயக வழக்குரைஞர் சங்கம் சார்பில்  சென்னை உயர்நீதி மன்றம் வாயிலில்  கண்டன ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் சமூக அக்கறை கொண்ட வழக்குரைஞர்கள் கலந்துகொண்டனர். வழக்குரைஞர் பாரதி தலைமை தாங்கினார்.  வழக்குரைஞர்கள் கண்டன உரை ஆற்றினர்.

இதில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சென்னை செயலர் மில்டன் கண்டன உரையாற்றினார். PRPC வழக்குரைஞர்களும் கலந்து கொண்டனர்.

தகவல்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை




Saturday, 17 October 2020

கரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்குவதில் முறைகேடு!

கரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்குவதில் முறைகேடு. மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநிலப் பொருளாளர் லயனல் அந்தோணிராஜ் அவர்களுடன் நேர்காணல்.


மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

Wednesday, 14 October 2020

"மக்கள் நலன்" என்ற பெயரில் தொடரும் ஸ்டெர்லைட்டின் சதித்தனம்!

ஸ்டெர்லைட்டின் கைக்கூலிகள் விநியோகம் செய்த SDR தண்ணீர் கேன்கள் சோரீஸ்புரத்தில் தடுத்து நிறுத்தம்:

தூத்துக்குடி, அய்யனடைப்பு-சோரீஸ்புரம் பகுதியில் இன்று (14-10-2020) காலை 7.00 மணியளவில் ஒரு தனியார் வாகனத்தில் SDR குடிதண்ணீர் கேன்கள் மூலம் இலவசமாக ஸ்டெர்லைட் ஆதரவாளர்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டது. கேன் தண்ணீர் வாங்குபவர்களுக்கு ஸ்டெர்லைட் ஆலையின் "தாமிர சுரபி" என்ற பிரிண்ட் செய்யப்பட்ட QR கோடுடன் உள்ள அடையாள அட்டை கொடுக்கப்பட்டு, செல்போன் மூலம் ஸ்கேன் செய்து விவரக்குறிப்புகள் பெற்று பதிவுசெய்து கொண்டு அதன் பின்னர் தண்ணீர் கொடுக்கிறார்கள்.

இதை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் அரசின் அனுமதியில்லாமல் தண்ணீர் விநியோகம் செய்த வாகனத்தை தடுத்து நிறுத்தினார்கள். தண்ணீர் விநியோகம் செய்த நபர் தண்ணீர் கேன்களை அப்படியே போட்டுவிட்டு தப்பியோடிவிட்டார்.

கிராம நிர்வாக அலுவலருக்கும், சிப்காட் காவல் துறையினருக்கும் மற்றும் உளவுத்துறை போலீசுக்கும் தகவல் கூறினார்கள். ஆனால் பிடிபட்டது "ஸ்டெர்லைட் விவகாரம்"  என்பதால் யாருமே சம்பவ இடத்திற்கு வரவில்லை. இதனால் சோரீஸ்புரம் பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு திரண்டு சென்று எழுத்துப் பூர்வமான புகார் ஒன்றை கொடுத்து 30 க்கும் மேற்பட்ட தண்ணீர் கேன்களையும் ஒப்படைத்துள்ளனர். புகாரை பெற்ற கிராம நிர்வாக அலுவலர் "தான் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது, காவல்துறையினர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். "உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், காவல்துறையை வரச்சொல்லுங்கள்" என்று விடாப்பிடியான போராட்டத்திற்கு பிறகு காவல்துறையினர் பகல் 12.00 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்தனர். அதன்பிறகு தண்ணீரை தடுத்து நிறுத்திய சோரீஸ்புரம் இளைஞர்களை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு கூறிச்சென்றுள்ளனர்.

அதன்பிறகு  நமது ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நாமும் சட்ட உதவிக்கு காவல் நிலையம் சென்றோம். நடந்த விபரத்தை எழுதி புகாராக காவல் ஆய்வாளரிடம் கொடுக்கப்பட்டது. விசாரணையின் முடிவில் அரசின் அனுமதி இல்லாத காரணத்தால் தண்ணீர் விநியோகம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறாக பல மணிநேர போராட்டத்திற்கு பிறகுதான், புகார் கொடுக்கும் நபர்கள் உறுதியாக இருந்ததைக் கண்டுதான் குறைந்தபட்சம் இதையாவது செய்தார்கள். 

சென்னை உயர்நீதிமன்றத்தின் ஸ்டெர்லைட்டை மூடிய உத்தரவிற்குப் பிறகு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடத்துவது குறித்து குமரெட்டியாபுரம் மக்களை சந்திக்க மக்கள் கூட்டமைப்பினர் சென்றபோது ஊருக்குள் நாங்கள் சென்ற 2-வது நிமிடத்தில் தலையாரி வந்தார். "ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் வந்தால் உடனடியாக தகவல் சொல்ல எனது மேலதிகாரிகள் உத்தரவிட்டுள்ளார்கள், அதனால் என்னை தப்பாக நினைக்க வேண்டாம், உங்கள் பெயர் முகவரியை கொடுங்கள்" என்றார். அதன்பிறகு 5-வது நிமிடத்தில் சிப்காட் காவலர்கள் புயல் வேகத்தில் வந்தனர். எங்களை விசாரித்தனர்.

ஆனால் இன்று தகவல் சொல்லி சுமார் 5 மணி நேரத்திற்கு பின்புதான் காவல்துறை வருகிறது. காவல்துறை இவ்வளவு காலதாமதமாக வருவதற்குள் சம்பவ இடத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பேற்பது?  ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் அடித்துச் சாகட்டும் என்று சிப்காட் காவல்துறை நினைத்துக் கொள்கிறதா? இதுபோல சம்பவங்கள் தொடர்வதால் ஜனநாயக பூர்வமான போராட்டங்களை மீண்டும் மக்கள் எடுக்க வேண்டிய சூழல்  ஏற்பட்டுள்ளது.

எனவே, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி வரும் நிலையில் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல் துறையும் ஸ்டெர்லைட் ஆதரவாளர்களை கடுமையாக எச்சரித்து சட்டப்படியான நடவடிக்கைகளை அவர்கள் மீது மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள்  உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக அமைதியாக இருக்கிறார்கள். ஆனால் ஸ்டெர்லைட் கைக்கூலிகளின் நோக்கம் அதுவல்ல. சட்டம் ஒழுங்கை கெடுப்பதுதான் அவர்கள் திட்டம்.

இப்படியே சதித்தனமான வேலைகளை "மக்கள் நலன்" என்ற பெயரில் ஸ்டெர்லைட் ஆலை அரங்கேற்றுவதை தூத்துக்குடி மக்கள் அறியாமல் இல்லை. அமைதி காக்கிறார்கள். சட்டம் ஒழுங்கை மதிக்கிறார்கள். ஆனால் ஸ்டெர்லைட் ஆரவாளர்கள் நீதிமன்ற உத்தரவையும், தமிழக அரசின் அரசாணையையும் எப்போதுமே மதிப்பதில்லை என்பது தூத்துக்குடி மக்களுக்கு தெரியாததா? வேதாந்தா கார்ப்பரேட்டால் அரசு துறைகளின் கைகள் கட்டப்பட்டுள்ளன. நாம் தான் கட்டவிழ்க்க வேண்டும்.

ஸ்டெர்லைட்டின் கடைசி செங்கலும் அகற்றப்படும் வரை தூத்துக்குடி தூங்காது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு.

9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.



Saturday, 26 September 2020

வேளாண் சட்டங்களின் நோக்கம் என்ன?

"வேளாண் சட்டங்களின் நோக்கம், விவசாயத்தில் கார்ப்பரேட் சக்திகளை வலுப்படுத்துவதுதான். - பி. சாய்நாத்

23 செப்டெம்பர் 2020, BBC News

கேள்வி: ஒப்பந்த விவசாய முறையைப் பொறுத்தவரை, ஏற்கனவே கரும்பு விவசாயத்தில் இருக்கிறது. அதனைச் சட்டபூர்வமாக்கியிருப்பதில் என்ன தவறு?

பதில்: இவை எந்த மாதிரி ஒப்பந்தம் எனப் பார்க்க வேண்டும். இந்த ஒப்பந்தங்களில் விவசாயிக்கு எந்த அதிகாரமும் கிடையாது. பேரம் பேசும் வலிமை இருக்காது. இதில் எழுத்து மூலமான ஒப்பந்தம் தேவையில்லை. சிவில் கோர்ட்களை அணுக முடியாது. விவசாயிகள் கொத்தடிமைகளாக மாற, அவர்களே செய்துகொள்ளும் ஒப்பந்தமாக இருக்கும். 

உதாரணமாக, மகாராஷ்டிர மாநிலத்தில் பாலின் விலையை எடுத்துக்கொள்வோம். மும்பையில் ஒரு லிட்டர் பசுவின் பால் 48 ரூபாய். எருமைப் பால் ஒரு லிட்டர் 60 ரூபாய். மாடு வைத்திருக்கும் விவசாயியிக்கு இந்த 48 ரூபாயிலிருந்து என்ன கிடைக்கிறது? 2018-19ல் பெரிய அளவில் விவசாயிகள் பாலை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினார்கள். அதன் முடிவில் விவசாயிக்கு ஒரு லிட்டர் பாலுக்கு 30 ரூபாய் விலை தருவதாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பெருந்தொற்று துவங்கிய பிறகு, ஏப்ரல் மாதம் முதல் விவசாயிக்கு கிடைப்பது லிட்டருக்கு 17 ரூபாய்தான். 50 சதவீதம் விலை குறைந்துவிட்டது. இது எப்படி நடந்தது? 

ஆகவே இந்தச் சட்டங்களின் நோக்கம், விவசாயத்தில் கார்ப்பரேட் சக்திகளை வலுப்படுத்துவதுதான். இது பெரும் குழப்பத்தில்தான் போய் முடியும். இந்தக் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் சொந்தப் பணத்தை விவசாயத் துறையில் முதலீடு செய்ய மாட்டார்கள். பொதுமக்களின் பணம்தான் இதில் முதலீடு செய்யப்படும். 

பிஹாரில் விவசாய ஒழுங்குமுறை விற்பனைக்கூட சட்டமே கிடையாது. 2006ல் நீக்கிவிட்டார்கள். என்ன ஆனது? கார்ப்பரேட் நிறுவனங்கள் அங்கே விவசாயிகளுக்கு சேவை செய்கின்றனவா? முடிவில் பிஹார் விவசாயிகள் சோளத்தை ஹரியானா விவசாயிகளுக்கு விற்கிறார்கள். இதில் இருவருக்குமே லாபமில்லை. 

கேள்வி: விவசாய ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களுக்கு வெளியிலும் விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்கலாம் என அனுமதிப்பன் மூலம் என்ன மோசமாகிவிடும்?

பதில்: இப்போதும் பெரும்பாலான விவசாயிகள் ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களுக்கு வெளியில்தான் விற்கிறார்கள். அது ஒன்றும் புதிது அல்ல. ஆனால், சில விவசாயிகள் விற்பனைக்கூடங்கள் மூலம் நன்மையடைகிறார்கள். அதையும் சிதைக்கப்பார்க்கிறார்கள்.

தொடரும்...!

Tuesday, 22 September 2020

வழக்குப் பதிந்தாலே பார் கவுன்சிலிலிருந்து வழக்குரைஞரை நீக்குவதா?

ஒரு வழக்குரைஞர் மீது காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தாலே அந்த  வழக்குரைஞரை, வழக்குரைஞர் தொழிலில் இருந்து நீக்கம் செய்யலாம் என தமிழ்நாடு பார் கவுன்சிலின் முடிவை எதிர்த்துத் தமிழக வழக்குரைஞர்கள் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர்.

பென்னாகரம்

வழக்குரைஞர்கள் மீதான முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் தொழில் தடை செய்யலாம் என்ற தமிழ்நாடு பார் கவுன்சிலில் நடவடிக்கையை கண்டித்து பென்னாகரம் வழக்குரைஞர் சங்கம் சார்பில் இன்று நடைபெற்ற  ஆர்ப்பாட்டம்!


கோவில்பட்டி

வழக்குரைஞர் மீது விசாரணையின்றி நடவடிக்கை எடுக்கக் கூடாது!

- கோவில்பட்டி வழக்குரைஞர்கள் சங்கம்

22-09-2020 (JAAC தீர்மானத்தின்படி) தமிழ்நாடு பார்கவுன்சில் எந்த ஒரு வழக்குரைஞர் மீதும் விசாரணையின்றி நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதையும் உடனடியாக இடை நீக்க உத்தரவுகளை திரும்பப் பெற  வலியுறுத்தி கோவில்பட்டி வழக்குரைஞர்கள் சங்கத்தின் மாபெரும் ஆர்பாட்டம்!


கோவை

வழக்குரைஞர் மீது விசாரணையின்றி நடவடிக்கை எடுக்கக் கூடாது!

- கோவை வழக்குரைஞர்கள் சங்கம்

22-09-2020 (JAAC தீர்மானத்தின்படி) தமிழ்நாடு பார்கவுன்சில் எந்த ஒரு வழக்குரைஞர் மீதும் விசாரணையின்றி நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதையும் உடனடியாக இடை நீக்க உத்தரவுகளை திரும்பப் பெற  வலியுறுத்தி கோயமுத்தூர் வழக்குரைஞர்கள் சங்கத்தின் மாபெரும் ஆர்ப்பாட்டம்!


ஈரோடு

வழக்குப் பதிந்தாலே பார் கவுன்சிலில் இருந்து நீக்குவதா? -நீதிமன்ற வளாகத்தில் ஈரோடு வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்குரைஞர்கள் சங்க பொதுக்குழு முடிவின்படி, ஈரோடு சம்பத் நகரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் அசோசியேஷன் சார்பில் இன்று (22.09.2020) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, ஈரோடு வழக்குரைஞர்கள் அசோசியேஷன் தலைவர் நல்லசிவம் தலைமை தாங்கினார். செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். இதில், "வழக்குரைஞர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தாலே, பார் கவுன்சிலில் இருந்து நீக்கி விடுகின்றனர். ஆகையால், வழக்குரைஞர்களிடம் உரிய விசாரணை மேற்கொண்ட பிறகே, இனி பார்கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்நது, வழக்குரைஞர்கள் அசோசியேஷனை சேர்ந்த வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பிலும் ஈடுபட்டனர்.

- நக்கீரன், 22/09/20



Sunday, 20 September 2020

'நீட்' எதிர்ப்பு: மக்கள் பாதை மீது காவல்துறை அடக்குமுறை!

 பத்திரிக்கைச் செய்தி:

'நீட்' தேர்வை எதிர்த்து சென்னையில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்திய மக்கள் பாதை அமைப்பின் மீதான காவல்துறையின்  தாக்குதலைக் கண்டிக்கிறோம்!!

'நீட்' தேர்வை எதிர்த்து கடந்த 6 நாட்களாக சென்னையில் உள்ள  தங்கள் தலைமை அலுவலகத்தில்  உண்ணாநிலைப் போராட்டம் நடத்திவந்த மக்கள் பாதை அமைப்பைச் சேர்ந்த 6 பேர் இன்று காலை 6 மணிக்குக் கைது செய்யப்பட்டு  கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் மக்கள் பாதை தலைமை அலுவலகத்தில் இருந்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்கள் பாதை அலுவலகம் காவல்துறையால்  சூறையாடப்பட்டது,  ஏராளமான கோப்புகள் திருடப்பட்டுள்ளதாக அந்த அமைப்பைச் சேர்ந்த வெற்றிசெல்வி தெரிவித்துள்ளார்.

அலுவலகம் காவல்துறையால் சட்டவிரோதமாக மூடிவைக்கப்பட்டுள்ளது. 

ஒருபுறம் 'நீட்' தேர்வை எதிப்பதாக பேசிக்கொண்டே,  'நீட்' தேர்வை எதிர்த்து அமைதி வழியில்  போராடுபவர்களைக் காவல்துறையைக் கொண்டு தாக்கும் தமிழக அரசின் இரட்டை வேடத்தை, காவல்துறை தர்பாரைக் கண்டிக்கிறோம். 

இது தொடர்பாக மக்கள் பாதை அமைப்பைச் சார்ந்த திரு.நாகல்சாமி அவர்களைத் தொடர்பு கொண்டு மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பாக நடந்ததைக் கேட்டுத் தெரிந்து கொண்டோம்.  அவர் சென்னை காவல்துறை ஆணையர் அவர்களை தொடர்புகொண்டு பேசியதாகவும், போராட்டத்தை கண் கைவிட்டால் அலுவலகத்திற்குள் அனுமதிப்பதாக காவல் ஆணையர்  கூறியதாகத் தெரிவித்தார். காவல் ஆணையர் இப்படிப் பேசுவதே மிரட்டல், சட்டவிரோதம். அமைதிவழிப் போராட்டத்தை ஒடுக்கும் குறுக்குவழி. அரசியல்அமைப்புச் சட்டம் கொடுத்திருக்கும் அமைதி வழியில் போராடும் உரிமைக்கு எதிரானது. உச்சநீதிமன்ற, உயர்நீதி மன்றத் தீர்ப்புகளுக்கு எதிரானது.  

'நீட்' தேர்வை எதிர்ப்பதாக நாடகமாடும் எடப்பாடி அரசாங்கம் காவல்துறை மூலம் நீட்டுக்கு எதிராகப் பேசுவதை, போராடுவதைத் தடி கொண்டு ஒடுக்கி பா.ஜ.கா - மோடி அரசுக்குச் சேவகம் செய்வதை ம.உ.பா.மையம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் - சென்னை

Thursday, 17 September 2020

வழக்குரைஞர்களைப் பாதுகாக்க JAAC போராட்டம் அறிவிப்பு!!

 JAAC_பொதுக்குழு_தீர்மானம் 

தமிழ்நாடு பார்கவுன்சில் வழக்குரைஞர்களை விசாரணையின்றியும், குற்றம்சாட்டப்பட்ட வழக்குரைஞர்களிடம் எந்தவித விளக்கம் கேட்காமலும் இடைநீக்கம் செய்வதை பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

மேற்படி இடைநீக்கத்தை உடனடியாக திரும்பப் பெற பொதுக்குழு வலியுறுத்துகிறது. அவ்வாறு இடைநீக்கத்தைத் திரும்ப பெறவில்லையெனில் வரும் 22-9-2020 அன்று தமிழகம் முழுக்க நீதிமன்றங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அந்தந்த வழக்குரைஞர் சங்கங்கள் நடத்த முடிவு செய்யபடுகிறது.

அதன் பின்பும் இடைநீக்கம் திரும்ப பெறும் கோரிக்கையை பார்கவுன்சில் ஏற்காவிட்டால் 34(1) போராட்டத்தின் பொழுது நடைபெற்ற உயர்நீதிமன்றம் முற்றுகை போராட்டம் போன்று தமிழகம் முழுக்க உள்ள வழக்குரைஞர்களைத் திரட்டி தமிழ்நாடு பார்கவுன்சிலை  முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என பொதுக்குழு முடிவு செய்கிறது. 

மேலும் வழக்குரைஞர் தொழில் சம்மந்தம் இல்லாத பிரச்சனைகளில் வழக்குரைஞர்களுக்கு எதிராகத் தமிழ்நாடு பார்கவுன்சில் தலையீடு செய்யகூடாது என பொதுக்குழு வலியுறுத்துகிறது.

மேலும், நீதிமன்றத்தை உடனடியாகத் திறக்க வலியுறுத்தப்படுகிறது.

JAAC, 

தமிழ் நாடு