Wednesday, 5 February 2025

அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம்: மோடி அடிவாங்கி பின்வாங்கியது எப்படி?

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அரிட்டாபட்டி ஊராட்சியை சுற்றியுள்ள 40க்கும் மேற்பட்ட தொன்மையான கிராமங்கள் ஒன்றிய அரசின்   வேட்டைக்கு தப்பிப் பிழைத்திருக் கிறது.

அரிட்டாபட்டி பல்லுயிர் பெருக்கத்திற்காக பாதுகாக்கப்பட்ட மண்டலமாக தமிழக அரசினால் அறிவிக்கப்பட்ட பகுதி. 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் எழுத்துக்கள் சிற்பங்கள் குடைவரை கோவில்கள் சமணர் படுக்கைகள் போன்ற தமிழரின் மரபு சார்ந்த தொல்லியல் எச்சங்கள் மற்றும்  வற்றாத அருஞ்சுனைகள் நீர்நிலைகள் கனிமங்கள் விளைநிலங்கள் தோட்டம் துரவுகள் என்று பல்லாயிரம் ஏக்கர் இயற்கை வனப்புடன் கூடிய மண்ண்ணுலகின் சொர்க்கமாக இந்தப் பகுதி விளங்கி வருகின்றது.  

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மதுரை கிளை தோழர்கள்

இதில் நாயக்கர் பட்டி என்ற கிராமத்தை மையமாகக் கொண்டு  5000 ஏக்கர் நிலத்தினை ஒன்றிய அரசு தேர்வு செய்து டங்ஸ்டன் என்ற கனிம சுரங்கம் தோண்டுவதற்காக ஏலம் விட்டது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருட்டு  ஆலை நிறுவி அதன் மூலமாக சுற்றுவட்டார நிலத்தடி நீர் மற்றும் சுவாசிக்கும் காற்றை நஞ்சாக்கி ஏழை மக்கள் பலரின் சாவுக்கு காரணமாக இருந்த அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனம் தான் டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தத்தை பெற்றது. அனில் அகர்வால் பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பர்.

 டங்ஸ்டன் சுரங்க ஏல விவரம் சென்ற மாதம் நாடாளுமன்ற கூட்டம் நடைபெறும் போது அங்கே அறிவிக்கப்பட்டது. இந்த செய்தி    அரிட்டாபட்டி பகுதி மக்களிடம் காட்டு தீ போல் பரவியது. பாதிக்கப்படும் கிராமங்கள் மட்டுமன்றி பல்வேறு சமுதாயத் தலைவர்கள், மேலூர் வட்ட ஒருபோக விவசாயிகள் சங்கத்தின் முயற்சியில் சுற்றுப்பட்டு கிராமங்கள் அனைத்திலும் கடுமையான எதிர்ப்பும் போராட்டமும் வெடித்துக் கிளம்பியது. போராட்டத்திற்கு ஆதரவாக நகர்ப்புறங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து பல்வேறு இயக்கங்கள் கிராமம் கிராமமாக சென்று போராடும் மக்களுடன் கலந்துகொண்டு ஆதரவைத் தெரிவித்தன.


 "தமிழக அரசின் அனுமதி இல்லாமல் ஒரு பிடி மண்ணைக் கூட இங்கிருந்து அள்ள முடியாது. நான் இருக்கும் வரை சுரங்கத்தை அனுமதிக்க மாட்டேன்" என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும் சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசியல் கட்சித் தலைவர்கள் தத்தம் பங்குக்கு உத்தரவாதம் அளித்தனர்.

நெடுங்காலமாக தங்களின் வாழ்வாதாரமாக இருந்து வரும் இந்த மண்ணை இழக்க தயாராக இல்லை என்பதை உறுதிபட உலகுக்கு தெரிவிக்கும் வகையில் ஜனவரி மாதம் ஏழாம் தேதி அனைத்து தரப்பு மக்களும் தன்னெழுச்சியாகத் திரண்டு           மேலூரில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக வந்து மதுரை தல்லாகுளம் அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டனர். ஊர்வலத்தை தடுப்பதற்கு முற்பட்ட காவல் துறையின் தடைகள் அனைத்தையும் மக்கள் தகர்த்து எறிந்தனர். ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக, கூடங்குளம் அணு உலைக்கு எதிராக, தஞ்சை டெல்டா மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக, தூத்துக்குடி நாசகர ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மற்றும் டெல்லியில் ஒன்றிய அரசுக்கு எதிராக போராடிய விவசாயிகளைப் போல எழுச்சிமிகு போராட்டத்தை நடத்தினர்.மக்களின் உறுதியையும் எழுச்சியையும் கண்ட ஒன்றிய அரசு அதைப் புறக்கணித்து சுரங்கத் திட்டத்தை அமல்படுத்த முயற்சி செய்தால் தமிழ்நாட்டுக்குள் தலை காட்டவே முடியாது என்ற அச்சத்திற்குள் தள்ளப்பட்டது. 


தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் திட்டத்துடன் முக்கிய கிராமத் தலைவர்களை அணுகி அரிட்டா பட்டியில் டங்க்ஸ்டன்  சுரங்கம் வராது என்ற உத்தரவாதத்தை பாஜக சார்பாக அளித்தார். இது பற்றி மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி  இதை அறிவிப்பார் என்று தெரிவித்தார். அதை உள்ளூர் மக்கள் தலைவர்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ள மறுத்த நிலையில் போராட்டத்தை தொடர்வது என்று முடிவெடுத்தனர். இதனால் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்ட அண்ணாமலை முக்கிய தலைவர்கள் சிலரை அழைத்துக் கொண்டு டெல்லி சென்று அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து பேசி     18- 1- 2025 அன்று மாலை டங்க்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து என்ற செய்தியை அமைச்சர் கிஷன் ரெட்டி டெல்லியில் அறிவித்தார். இது மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்திற்கு  கிடைத்த மகத்தான  வெற்றியாகக் கொண்டாடப்பட்டது.


சுரங்க திட்டம் ரத்தான அன்று காலை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மதுரைக் கிளை நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் எட்டு பேர்:

தோழர்கள்
பேராசிரியர் அ.சீநிவாசன், தலைவர்
ம. லயனல் அந்தோணி ராஜ், செயலர்
மு. சங்கையா, பொருளாளர்
சு. கருப்பையா, செ.குழு உறுப்பினர்
எம். டி. ராஜசேகரன்,          "
வே. டேவிட்                            "
வி. அய்யாக்காளை           "
க. கவிராஜன்                       "

ஆகியோர் அரிட்டாபட்டி, அ. வல்லாள பட்டி, நாயக்கர் பட்டி, மீனாட்சிபுரம் மற்றும் குடைவரைக் கோயில், சமணர் படுக்கைகள், தமிழ் பிராமி,     வட்டெழுத்துக்கள் எழுதப்பட்ட பாறை குகைகள், கல்வெட்டுகள், தீர்த்தங்கரர்களின் பாறை புடைப்புச் சிற்பங்கள், சுனைகள், ஊருணிகள், தாமரை குளங்கள், ஏந்தல்கள், வயல்வெளிகள், வாழை,கரும்பு தோட்டங்கள், நாட்டார் குலதெய்வ கோவில்கள், கிராமசாவடிகள், மதுரை மாவட்டத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த,இயற்கை மதில் (மதிரை- மதுரை) போல் அமைந்துள்ள குன்றுகள், கழிஞ்ச மலை உள்ளிட்ட மூன்று மலைகள் அனைத்தையும் பார்வையிட்டோம். மீனாட்சிபுரம் மலை உச்சியில் நின்று நாற்புறமும் சுற்றிப் பார்க்கின்ற எந்த ஒரு மனிதனுக்கும் அதன் மனம் கவர் வனப்பை அழிக்க வேண்டும் என்று தோன்றவே தோன்றாது. அதையும் மீறி ஒருவனுக்குத் தோன்றினால் அவன் மனிதனே கிடையாது.

அப்படியானால் பல ஆயிரம் ஆண்டுகளாக லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்ந்துவரும் அந்த மண்ணின் மைந்தர்களுக்கு அதை இழக்கும் துணிவு எங்கிருந்து வரும். ஆசிய வகையிலான சுய தேவைகளை பூர்த்தி செய்யும் எளிய வேளாண் உற்பத்தி மற்றும் சிறு தொழில்கள் நிலவும் அந்த அமைதி மண்டலத்தை சீர்குலைக்க முயற்சி செய்தால் அதை அந்த மக்கள் எப்படி பொறுத்துக் கொள்வார்கள்? அந்தப் பகுதி பல அரிய வகையான உயிரினங்கள், மூலிகை தாவர வகைகள், வல்லூறு போன்ற எண்ணற்ற பறவை இனங்கள், சுவைமிக்க குடிநீரை வழங்கும் இயற்கை தன்னூற்றுகள் நிரம்பி இருப்பதினால் தான் இது பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக தமிழக அரசினால் அறிவிக்கப்பட்டது.

அரிட்டாபட்டி மலையில் சிவன் மற்றும் லகுலீசர் குடைவரை கோவில் உள்ளது. அக் கோவில் ஒரு சமுதாய மக்களால் காலம் காலமாக பராமரிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதுபோல மேலும் பல கோவில்கள் இந்த மலைகளில் இருக்கின்றன. அவற்றிலும் பூஜைகள் திருவிழாக்கள் இவை எல்லாம் பன்னெடும் காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த மலைகளையும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளையும் அருகில் இருக்கும் அழகர் மலை உட்பட தங்களை வாழ வைக்கும் தெய்வங்களாக இந்த மக்கள் மனப்பூர்வமாக கருதி வழிபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பல சமூகங்களைச் சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக உறவினர்களைப் போல வாழ்ந்து வருகின்றனர். இப்படிப்பட்ட இந்த வாழ்க்கைச் சூழலை அழிப்பதற்கு எந்த ஒரு மக்களும் அனுமதிக்க மாட்டார்கள். அதன் வெளிப்பாடு தான் ஜனவரி 7ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் தன்னெழுச்சிப் அறப் போராட்டம். அந்த ஒற்றுமையும் உறுதியுமே அவர்களுக்கு அந்த வெற்றியை ஈட்டித் தந்தது.

சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்ட பின் பலரும் அந்த வெற்றிக்கு சொந்தம் கொண்டாடுகின்றனர். அந்தப் பகுதிகளில் இருக்கும் அரசியல் கட்சிகள் அவரவர் கட்சித் தலைவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சுரங்க திட்டம் அறிவிக்கப்பட்ட உடனேயே அதை அனுமதிக்க மாட்டேன் என்று உறுதிபட தெரிவித்தார். சட்டமன்றத்தில் அனைத்து கட்சி ஆதரவுடன் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகும் ஒன்றிய பாஜக அரசு தமிழர்களின் தொன்மச் சான்றுகள் அமைந்துள்ள இடங்களை விட்டுவிட்டு மீதி இடங்களில் சுரங்கம் தோண்டலாம் என்று பேசிப் பார்த்தது. ஆனால் மக்கள் சுரங்கம் தோண்டும் எண்ணத்தையே குழி தோண்டிப் ஆழமாக புதைக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தனர். அதனால் பாரதிய ஜனதா கட்சி மாற்றி யோசித்தது. மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆதாயம் அடையலாம் என்ற திட்டத்துடன் களம் இறங்கியது. அந்தக் கனவுடன் இப்பகுதி அரசியல் சமூக பிரமுகர்களை அழைத்துக் கொண்டு டெல்லி சென்றார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. ஒன்றிய அமைச்சரை சந்தித்த பிறகு சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

பிரதமர் மோடி தமிழ் சமூகத்தின் மீது வைத்திருக்கின்ற அளவு கடந்த அன்பினால் தான் இந்தத் திட்டத்தை ரத்து செய்தார் என்று பாஜகவினர் பரப்புரை செய்கின்றனர். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினால் அல்ல என்று சொல்கிறார்கள். திட்டத்தை அவர்கள் தான் கொண்டு வந்தார்கள். திட்டம் வந்ததால் தான் மக்கள் கிளர்ந்து எழுந்தார்கள்.மக்களுடைய எழுச்சியைப் பார்த்து தான் ரத்து செய்தார்கள். தமிழக அரசு திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்பதற்கு ஆதாரமாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. பாஜக தலைவர்களை பார்த்து மக்கள்

"நீங்களே திட்டத்தைக் கொண்டு வருவீர்கள். கொண்டு வந்த திட்டத்தை ரத்து செய்துவிட்டு அதை பெரிய சாதனையாக காட்டிக் கொள்வீர்களா? " 
இந்தக் கேள்வியை எழுப்புகின்றனர். 

மேலும் மக்கள் ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலில் "திட்டம் அறிவிக்கப்பட்ட உடன் ஒன்று திரண்டு போராடி வெற்றி பெற்றது மக்களாகிய நாங்கள். ஆனால் எங்களை மறந்து விட்டு அரசியல் கட்சிகள் அதை சுவிகரித்துக் கொள்வது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. எங்கள் போராட்டங்களை கொச்சைப்படுத்துவதாக இருக்கின்றது" 

என்று வெளிப்படையாகக் கூறுகின்றனர். இதுதான் உண்மை. வரலாற்றில் எப்போதும் மக்களின் ஒன்றுபட்ட மாபெரும் போராட்டங்களே வெற்றியை விடையாக தந்திருக்கின்றன. அப்படித்தான் டங்ஸ்டன் சுரங்கத் திட்டமும் வெற்றி கொள்ளப்பட்டது என்பதை மக்கள் அழுத்தமாகப் புரிந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை ஒன்று திரட்டியது எது என்பதை ஆய்வு செய்து அறிந்து கொள்வதே அரசியல் கட்சிகளின் பணியாக இருக்கின்றது.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் இந்தக் கள ஆய்வுகளுக்கு வழிகாட்டிய, இந்தப் போராட்டத்தில் மக்களோடு நின்று போராடிய எங்களது மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தோழர் வாஞ்சிநாதன், அறக்கலகம் யூடியூப் சேனலின் இயக்குனர் தோழர் தவமணி ராஜா, களத்தில் எங்களோடு உடன் நின்று அனைத்து பின்னணிகளையும் எங்களுக்கு விளக்கிச் சொல்லி உடன் வந்து ஒத்துழைத்த அருமைச் சகோதரர் அரிட்டாபட்டி திரு. செல்வராஜ் ஆகியோருக்கு மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் உளப்பூர்வமாக நன்றி பாராட்டுகிறது.

தகவல் 
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 
மதுரை

No comments:

Post a Comment