Friday 18 June 2021

சிறப்புச் சட்டம் இயற்று! ஸ்டெர்லைட்டை மூடு! முதல்வரைச் சந்திக்க ஆட்சியரிடம் மனு!

வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள முதல் சட்டமன்ற கூட்டத் தொடரில் ஸ்டெர்லைட்டை அகற்ற சிறப்புச் சட்டம் இயற்றுமாறும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஸ்டெர்லைட் நிறுவனத்தினர் அனுமதி இல்லாமல் கட்டில் உட்பட சில உபகரணங்கள் கொடுப்பதையும், அதில் வேதாந்தாவின் விளம்பரங்களைத் தடை செய்யக் கோரியும், சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்திக்கவும் 17-06-2021 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கொடுத்த மனுவின் விவரம்.

------------------------------------------------------------------------------

அனுப்புனர்:

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
50/B போல்டன்புரம்,
திருச்செந்தூர் ரோடு,
தூத்துக்குடி.

பெறுநர்:

மதிப்புக்குரிய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்
கோரம்பள்ளம், தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம்

பொருள்: வருகின்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழக அரசு ஸ்டெர்லைட்டை மூடுவதற்கு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக

பெரும் மதிப்பிற்குரிய ஆட்சியர் அவர்களுக்கு,

நீர், நிலம், காற்றை நஞ்சாக்கி மக்களுக்கு கேன்சர், உள்ளிட்ட உயிர் கொல்லி நோய்களுக்கு பலியாக்கிய வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 25 ஆண்டு காலமாக பொதுமக்கள் போராடி வந்தார்கள். அதிமுக ஆட்சியில் 2018-ல் பிப்ரவரி 12-ம் தேதியிலிருந்து 100 நாட்கள் தொடர் போராட்டம் நடந்தது. அதனைத் தொடர்ந்து மே-22-2018 இல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கச் சென்ற பொதுமக்கள் 15 பேரை ஈவிரக்கமின்றி காவல்துறை சுட்டுக் கொன்றது. பலரும் முடமானார்கள். இதனால் அரசாணை மூலம் தமிழக அரசு சீல் வைத்து ஸ்டெர்லைட்டை மூடியது.

"மேற்படி அரசாணை பலவீனமானது, மீண்டும் ஆலையைத் திறக்க வாய்ப்பு உள்ளது" என அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், திமுகவின் தலைவருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், அறிவுத்துறையினர், பத்திரிக்கைகள் உட்பட கருத்து தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து அப்போதைய எதிர்கட்சித் தலைவராக இருந்த இன்றைய தமிழக முதல்வர் "திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு கொள்கை முடிவெடுத்து சிறப்புச் சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் அகற்றப்படும்" என அறிக்கைகள், பேட்டி வாயிலாகவும், தேர்தல் வாக்குறுதியாகவும் கொடுத்திருந்தார்.

ஆட்சிக்கு வந்தவுடன் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு கல்வித் தகுதிக்கேற்ற வேலை, சட்ட முரணாக போலீஸ் காவலில் இருந்த 93 பேருக்கு ரூபாய் ஒரு லட்சம் நஷ்டஈடு , வழக்குகள் வாபஸ், போராட்ட வழக்கிலுள்ள ஒருவர் பாஸ்போர்ட், அரசு வேலையில் சேர்வதற்கு தடையில்லாச் சான்று என அறிவித்து நடைமுறைப்படுத்தினார். இது தமிழக மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்று நம்பிக்கையை ஏற்படுத்தியது.

உச்சநீதிமன்றத்தில் கொரானோ பேரிடரில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்ற சூழலைச் சாதகமாக்கி ஆக்ஸிஜன் தயார் செய்வதற்கு ஜூலை 31 வரை ஸ்டெர்லைட் ஆலை அனுமதி பெற்றது. அதனைப் பயன்படுத்தி மக்கள் நலத் திட்டங்கள் என்ற பெயரில் மக்களுக்குப் பணம், பொருள் இலவசமாக கொடுத்து வருகிறது. தூத்துக்குடி அரசு கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு கட்டில், வீல் சேர், வர்ணம் பூசுதல், எலக்ட்ரிக்கல் வேலை செய்து வருகிறது. ஸ்டெர்லைட் வழங்கிய மேற்படி பொருள்களுக்கு "வேதாந்தா ஸ்டெர்லைட் காப்பர்" என்று எழுதி விளம்பரம் செய்து வருவது மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதனால் ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படும் என்று விஷமப் பிரச்சாரம் செய்து வருகிறது. இதற்கு உடந்தையாக உள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே தமிழக முதல்வர் அவர்கள் பொதுமக்கள் நலன் கருதி வரும் 21-06-2021 அன்று நடைபெற உள்ள முதல் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே "தமிழகத்தில் பெருவீத தாமிர உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு அனுமதி இல்லை" என்று கொள்கை முடிவெடுத்து சிறப்பு ச் சட்டமாக இயற்றி, ஸ்டெர்லைட்டை தூத்துக்குடி மண்ணிலிருந்து நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.

மேற்படி கோரிக்கையை வலியுறுத்த மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை பொதுமக்கள் சார்பில் நாங்கள் சந்தித்துப் பேசவும் எங்களுக்கு ஏற்பாடு செய்து தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொள்கிறோம்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817



அனைத்து சாதி அர்ச்சகர்: பார்ப்பனர்கள் கோவிலுக்குள் வரக்கூடாது!

அனைத்து சாதி அர்ச்சகர் பிரச்சனையில் ஆகமங்கள் என்ன சொல்கின்றன?;  பார்ப்பனர்கள் கோவிலுக்குள் வரக்கூடாது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து தெளிவு படுத்துகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள். பாருங்கள். பகிருங்கள்.


நன்றி: U2 BRUTUS

Wednesday 16 June 2021

நித்யானந்தாவை விட மோசமானவன் சிவசங்கர் பாபா!

பாலியில் குற்றச்சாட்டுகளுக்காக 'போக்சோ' சட்டத்தின் கீழ் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா என்ற சாமியார் எவ்வளவு மோசமானவன் என்பதை விவரிக்கிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள். பாருங்கள். பகிருங்கள்.



நன்றி: அறக்கலகம்

Saturday 12 June 2021

தமிழில் அர்ச்சனை, பெண்களும் அர்ச்சகராகலாம்: சீர்திருத்தமா? அரசியலா?

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், பெண்களும் அர்ச்சகராகலாம், தமிழில் அர்ச்சனை: சீர்திருத்தமா? அரசியலா?

சன் நியூஸ் விவாத மேடையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன். பாருங்கள். பகிருங்கள்.


நன்றி: சன் நியூஸ்

Friday 11 June 2021

அர்ச்சகர் நியமனம் குறித்து சன் நியூஸ் தொலைக் காட்சியில் வாஞ்சிநாதன்

100 நாட்களில் அனைத்துச் சாதி மாணவர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவர் என தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை அமைச்சர் திரு.சேகர் பாபு அவர்களின் அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள் சன்நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி. பாருங்கள் பகிருங்கள்.



Tuesday 8 June 2021

நூறு நாட்களில் அனைத்து சாதி மாணவர்களும் அர்ச்சகர்களாக நியமனம்!

 மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

07.06.2021


வழக்கறிஞர் சே.வாஞ்சி நாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்
384, முதல் தளம், கிழக்கு 8-வது தெரு, கே.கே.நகர், மதுரை-20
9865348163

பத்திரிக்கை செய்தி!

 ·        100 நாட்களில் அனைத்து சாதி மாணவர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவர் என்ற தமிழக அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க, சமூக நீதி அறிவிப்பை வரவேற்கிறோம்!

·        தமிழக அரசின் பொதுக் கோயில்களான - மதுரை மீனாட்சியம்மன், பழனி, திருச்செந்தூர் முருகன், சிறீரங்கம் ரெங்கநாதர், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில்களில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனம் நடைபெற வேண்டும்!

------------------------------------------------------------------------------

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேகர்பாபு அவர்கள் 100 நாட்களுக்குள் அனைத்து சாதி அர்ச்சகர் நியமனம் நடைபெறும், தமிழக முதல்வர் திரு. மு..ஸ்டாலின் அவர்கள் முறைப்படி இதனை அறிவிப்பார் எனத் தெரிவித்துள்ளார். கொரானா பேரிடர் காலத்திலும், தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தஅனைத்து சாதி அர்ச்சகர்நியமனத்திற்கு தமிழக அரசு முன்னுரிமை அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், அனைத்து சாதி அர்ச்சக மாணவ சங்கத்தின் சட்ட ஆலோசகர், உச்சநீதிமன்றத்தில் அர்ச்சகர் வழக்கை நடத்தியவர்கள் என்ற வகையில், அர்ச்சகர் நியமனத்தில் கடந்த கால சட்டச் சிக்கல்கள் குறித்து தமிழக அரசிற்குத் தெரிவிப்பது எங்களது கடமை.

தந்தை பெரியார் அவர்களின் கருவறைத் தீண்டாமை ஒழிப்புப் போராட்ட அறிவிப்பு மற்றும் இளையபெருமாள் கமிட்டி அறிக்கை அடிப்படையில், பரம்பரை வழி அர்ச்சகர் நியமனம் என்பதை ஒழிக்க, கடந்த 1970-ஆம் ஆண்டு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில், ஒரு திருத்தம் கொண்டு வந்தார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட சேசம்மாள்எதிர் - தமிழக அரசு என்ற வழக்கில் தீர்ப்பளித்த அரசியல் சாசன அமர்வு "பரம்பரை வழி அர்ச்சகர் முறையை ஒழித்த தமிழக அரசின் சட்டத்திருத்தம் செல்லும்என்று சொல்லி, ஆனால் அர்ச்சகர் நியமனங்கள் ஆகமத்தை மீறக்கூடாது என்றது. இத்தீர்ப்பினைத் தொடர்ந்து 35 ஆண்டு காலம் அனைத்து சாதி அர்ச்சகர் நியமனம் நடக்கவில்லை. 2006-ஆம் ஆண்டு மீண்டும் கலைஞர் அவர்கள் அனைத்து சாதி அர்ச்சகர் நியமனத்திற்கு அரசாணை பிறப்பித்தார். தொடர்ந்து அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் அமைக்கப்பட்டு, அதில் அனைத்து சமூகத்தைச் சேர்ந்த 206 இந்து மாணவர்கள் முறையாக பயிற்சி பெற்று முறையாக தீட்சையும் பெற்றனர். இந்த அரசாணை சட்ட விரோதமானது, மாணவர்களை அர்ச்சகர்களாக நியமனம் செய்வது, அரசியல் சட்டத்தின் பிரிவு 25, 26, இந்து மத நம்பிக்கை, மரபுகளுக்கும் எதிரானது என்று கூறி அரசாணைக்கு உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்றார்கள் மதுரை ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கத்தினர்.

நீண்ட நாட்கள் இழுத்தடிக்கப்பட்ட வழக்கில் அர்ச்சக மாணவர்களை ஒரு தரப்பாக இணைத்து வழக்கை நடத்தினோம். 2015-ல் தீர்ப்பு வந்தது. தீர்ப்பில், தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்படவில்லை. 206 மாணவர்களை ஆகம விதிப்படி அமைந்த கோயில்களில் நியமிக்கக் கூடாது என்றும் கூறவில்லை. பிறப்பின் அடிப்படையில் யாரும் அர்ச்சகர் வேலை வாய்ப்பில் முன்னுரிமை கோர முடியாது. ஆனால் அந்த நியமனம் ஆகம விதிகள், மரபுகள் சம்பிரதாயங்களுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும், என்று சொல்லப்பட்டது. இத்தீர்ப்பின்படி மயிலை கபாலீசுவரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, திருவரங்கம், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலோ மாணவர்களில் சிலரை அர்ச்சகர்களாக நியமிக்கும் பட்சத்தில், இந்தக் கோயில்களில் பரம்பரையாகப் பணி புரியும் அர்ச்சகர்கள், “அர்ச்சக மாணவர்களின் நியமனம் ஆகம விதிக்கு முரணானது என்று கூறி உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம்.

பிறப்பால்பிராமணர்கள்தான் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும்என்று ஆகம நூல்கள் எதிலும் கூறப்படவில்லை. ஆனால், ஆகம விதி என்று சொல்லும் இடங்களிலெல்லாம் மரபுபழக்க வழக்கம் என்ற சொற்றொடர்களையும் சேர்த்துத்தான் எப்போதும் பயன்படுத்துகின்றனர். எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகின்ற இந்தச் சொற்றொடர்களின் துணை கொண்டுதான் இன்றுவரை அர்ச்சகர் நியமனம் தடுக்கப்படுகிறது. தமிழக அரசின் தற்போதைய முயற்சிக்கும் சேசம்மாள், ஆதி சைவ சிவாச்சாரியார்கள் வழக்குகளின் தீர்ப்புகளைக் காட்டி தடுக்கும் முயற்சி நடைபெறலாம். அதனை சட்டப்பூர்வமாக சமாளித்து 50 ஆண்டு காலப் போராட்டத்தை தமிழக அரசு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.

2015 அர்ச்சகர் தீர்ப்பிற்குப்பின் சபரிமலை அய்யப்பன் கோயில் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பு மிகவும் முக்கியமானது. இத்தீர்ப்பில்இந்திய அரசியல் சட்டம் சமூக மாற்றம், சமூக சமத்துவத்திற்கான ஓர் ஆவணம்; அரசியல் சட்ட அடிப்படையிலான முன்னுரிமை என வரும்போது ஒரு தனி நபர், குழுவின் மத உரிமைசுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், தனி மனித கண்ணியம் உள்ளிட்டவைகளை முன்னிருத்தும் அரசியல் சட்ட ஒழுங்கமைவுக்கு உட்பட்டே செயல்பட முடியும். பிறப்பு, உடற்கூறு வகைப்பட்ட பாகுபாடுகள் அரசியல் சட்டத்திற்கு எதிரானது. தனி மனித கண்ணியத்தை, மற்ற குடிமக்களை கீழானதாகக் கருதும் எதையும் ஏற்க முடியாது. பிரிவு 26-ன் கீழான மத உட்பிரிவுகளின் உரிமை, பிரிவு 25 (2) ()-வுக்கு உட்பட்டே இயங்கும். தனி நபரின் சுதந்திரம், கண்ணியம், சமத்துவத்தை மீறி எந்த மதக் கோட்பாடு, பழக்க வழக்கம்,மரபுகள், நம்பிக்கைகள் இருக்க முடியாது. அவ்வாறு இருந்தால் அவை அரசியல் சட்டப் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அரசியல் சட்டத்திற்கு அர்த்தம் உள்ளதென்றால் மதம், தனி மனித நம்பிக்கையாகவோ, மதக் கோட்பாடாகவோ யாரையும் இழிவு படுத்த முடியாதுமிகவும் ஆணித் தரமாகக் குறிப்பிடப்படுகிறது.

அர்ச்சகர் தீர்ப்பு இரண்டு நீதிபதிகள் வழங்கியது. சபரிமலை தீர்ப்பு 5 நீதிபதிகள் வழங்கியது. எனவே சபரிமலைத் தீர்ப்பின் ஒளியிலேயே, அர்ச்சகர் தீர்ப்பு பொருள் விளக்கம் கொள்ளப்பட வேண்டும். மேலும் சேசம்மாள் வழக்கு முதல் 2015 மதுரை ஆதி சைவ சிவாச்சாரியார்கள் வழக்கு வரை கூறப்பட்ட தீர்ப்புகளில் "அர்ச்சகர் நியமனம் என்பது அரசின் மதச் சார்பற்ற நடவடிக்கைஎன்று மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசும், மற்ற அரசு ஊழியர்களுக்கு இருப்பதுபோல், அர்ச்சகர் மற்றும் கோயில் ஊழியர்களுக்கான, தமிழ்நாடு இந்து சமய நிறுவனப் பணியாளர்கள் பணிவரன்முறை விதிகள்,2020-அய் உருவாக்கியுள்ளது. இந்த விதிகளின்படி அர்ச்சகர்கள், தவறு செய்தால் அரசு நடவடிக்கை எடுக்க முடியும். எனவே அர்ச்சகர் நியமனம் என்பது அனைத்து இந்துக்களுக்கான அரசின் பொது வேலை வாய்ப்பு. கட்டாயம் அதில் பொது அறிவிப்பு, தேர்வு முறைகள், இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்.

மிகவும் குறிப்பாக தமிழக அரசின் பொதுக் கோயில்களான - மதுரை மீனாட்சியம்மன், பழனி, திருச்செந்தூர் முருகன், சிறீரங்கம் ரெங்கநாதர், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில்களில் அர்ச்சக மாணவர்களுக்கு பணி நியமனம் வழங்குவது மட்டுமேதந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளான கருவறைத் தீண்டாமையை அகற்றும்; கலைஞரின் சமூக நீதிக் கொள்கையை பறைசாற்றும். அரசியல் சட்டப்படியான சமத்துவத்தை மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுக்கோயில்களில் நிலைநாட்டும் திராவிட முன்னேற்றக் கழக அரசின் வரலாற்றுச் சிறப்பு மிக்க முயற்சியை, அனைவரும் வரவேற்பதுடன், கடந்த காலத்தில் செய்தது போல் தடுக்க யாரும் முனைய வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் - தமிழ்நாடு