Monday 1 June 2020

ரயில்வே நிலையங்களில் இருந்த வாட்டர் கேரியர்க‌ள் ஒழிக்கப்பட்டது உங்களுக்குத் தெரியுமா?

தண்ணீர் தனியார்மயம் ஆனபின் ரயில் நிலையங்களில் இருந்த வாட்டர் கேரியர் பணியிடங்கள் ஒழிக்கப்பட்டது உங்களுக்குத் தெரியுமா?

நண்பர்களே,

அம்மா இறந்தது கூடத் தெரியாமல் குழந்தை அவரை எழுப்பும் காட்சியைப் பார்த்து துயரம் கொள்ளும் நாம், இவ்வாறு ஏற்படாமல் இதற்கு முன்பு தடுத்தப் பணி, இன்று ஒழிக்கப்பட்ட உண்மையைத் தெரிந்து கொள்வோம்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் ரயில்வே துறையில் வாட்டர் கேரியர் என்ற பணி நியமனம் இருந்தது. இந்தப் பணியாளர்கள் ஒவ்வொரு ஸ்டேசனிலும் , ஸ்டேசன் மாஸ்டர் அறைக்கு முன்பாக கேன்களில் தண்ணீரை நிரப்பி ட்ராலிகளில் வைத்துக் கொண்டு தயாராக இருப்பார்கள். ரயில் ஸ்டேசனுக்கு வந்ததும், ரயிலுக்கு அருகில் சென்று பயணிகளுக்கு இலவசமாக தண்ணீர் வழங்குவார்கள். ரயில் சென்றவுடன் மீண்டும் தண்ணீரை நிரப்பிக் கொண்டு காத்திருப்பார்கள் அடுத்த ரயிலுக்காக. ஆச்சர்யமாக உள்ளதா இந்தச் செய்தி.

ஆனால் இந்த உயிர் காக்கும் சேவை சத்தம் இல்லாமல் இன்று ஒழிக்கப்பட்டு விட்டது. என்றைக்கு நம் நாட்டில் தண்ணீர் தனியார் விற்பனைப் பொருளாக ஆனதோ அப்போதே இந்தப் பணிக்கான நியமனங்கள் நிறுத்தப்பட்டு விட்டன.
தனியார்மயம் உயிர் காக்கும் சேவைகளான தண்ணீர், மருத்துவம் உள்ளிட்ட அனைத்துச் சேவைகளையும் பணம் இருந்தால்தான் பெறமுடியும் என்ற அபாயத்தை உருவாக்கியது. மக்களும் தரம், முன்னேற்றம் என பல ஏமாற்று வார்த்தைகளுக்கு மயங்கினர். அதன் விளைவுகளைத்தான் இன்று அனுபவித்து வருகின்றோம்.

ஷார்மிக் சிறப்பு ரயிலில் 19 நாட்களில் 80 பேர் இறந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி, இது இறப்பா அல்லது படுகொலையா என்று விவாதம் கிளம்பிய பின்புதான் உறக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டு உச்ச நீதின்றம் மே 28 ஆம் தேதி ரயிலில் செல்லும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு தண்ணீரும், உணவும் கொடுக்க வேண்டும் என்று 'கடுமையான' உத்தரவை பிறப்பிக்கின்றது.

மத்திய உள்துறை அமைச்சகமோ ஒரு படி மேலே போய்,  மே 17 ஆம் தேதி அன்றே (ஆணை 40-3/2020 DM -I (A) படி) உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பிற நோயுற்றவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயணத்தைத்  தவிர்க்கலாம் என்று புத்திசாலித்தனமாக வெளியிடுகிறது.

அடிப்பட்ட விரலின் வலியைப் போக்க வைத்தியம் கேட்டால், மொத்தமாக மூச்சையே நிறுத்திவிட்டால் எந்த வலியும் தெரியாது என்று சொல்வதுபோலதான் அரசு கூறுகிறது.

நடப்பது மக்கள் ஆட்சி அல்ல. இது நாடும் அல்ல, பெரிய கம்பெனி. இதன் உரிமையாளர்கள் முதலாளிகள். விற்பனைப் பிரதிநிதிகள்தான் ஆட்சியாளர்கள். நாமெல்லாம் குடிமக்கள் அல்ல, வாடிக்கையாளர்கள். இங்கு நம்மை இணைப்பது பணம் மட்டுமே. எனவே சேவை, உரிமையைக் கேட்கமுடியாது.

பொதுத்துறை நிறுவனங்கள், இயற்கை வளங்கள் உள்ளிட்டவை தனியாருக்கு விற்கப்பட்டு வரும் நிகழ்வுகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள். நாளைக்கு நமக்கு வர இருக்கும் அபாயத்தையும் உணர முடியும்.

வா. பொற்கொடி
வழக்குரைஞர்,
உயர் நீதிமன்றம், சென்னை