Wednesday 22 December 2021

பாஜகவில் நீதிபதிகள் அணி!

14.12.2021 அன்று திருச்சியில் நடைபெற்ற மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ஒன்பதாவது மாநில மாநாட்டில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள் ஆற்றிய உரை. 

00000

அனைவருக்கும் வணக்கம்,

நாடு எத்தகைய நெருக்கடியான, அபாயகரமான சூழலில் இருக்கிறது என்பதை மக்கள் உணராமல் இருப்பதாகத்தான் நான் கருதுகிறேன்.

ஆர்எஸ்எஸ்-பாஜகவின் ஊதுகுழலாகச் செயல்படும் யு-டியூபர் மாரிதாஸ் என்பவர் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சூழலில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அவரது பிணை மனு 13.-12-2021 திங்கள் காலை 10.30 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. எத்தனையோ வழக்குகள் வரிசையில் காத்துக் கிடக்கும் போது, இந்த வழக்கை முதல் வழக்காக எடுத்து நீதிமன்றம் விசாரிக்கிறது. முதல் தகவல் அறிக்கையின் நகல்கூட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. தமிழக அரசு இவ்வழக்கை விசாரிக்கக் கால அவகாசம் கோருகிறது. ஆனால் நீதிபதியோ, அன்றே விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறார். மாரிதாஸ் மீது புகார் கொடுத்த புகார்தாரர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்தவர் வெளியூரில் காரில் பயணித்துக் கொண்டிருக்கிறார். அவரோடு ஆன்லைனிலேயே வழக்கு விசாரிக்கப்படுகிறது. தான் காரில் பயணம் செய்வதால் எதையும் சரியாக உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை என்று அவர் கூறுகிறார். அவரும் அவகாசம் கோருகிறார். ஆனால் இதை எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமலேயே மாரிதாஸ் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. தள்ளுபடி செய்யப்பட்டது மிகச் சாதாரண வழக்கு அல்ல, தேசத்துரோக வழக்கு, 124 A, IPC. வழக்கு போடப்பட்ட நான்காவது நாளிலேயே தள்ளுபடி செய்யப்படுகிறது.

ஆனால் தோழர் காளியப்பன், தோழர் கோவன், தோழர் வாஞ்சிநாதன், தோழர் ராஜு மீது போடப்பட்ட தேசத்துரோக வழக்குகளில் அவர்கள் சில மாதங்கள் சிறையில் இருந்து போராடிய பிறகுதான் பிணையில் வெளி வரமுடிந்தது. ஆண்டுகள் கடந்து போனாலும் இன்றும் அவர்கள் அந்த வழக்குகளுக்காக நீதிமன்ற வாசற்படிகளில் ஏறிக் கொண்டிருக்கிறார்கள்.
பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட சுதா பரத்வாஜ் வரவரராவ் உள்ளிட்ட சமூகச் செயல்பாட்டாளர்கள் ஆண்டுக் கணக்கில் சிறையில் வாடுகிறார்கள். இவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளும் தேசத்துரோக வழக்குகள்தான். இவர்களால் இன்றுவரை வழக்கிலிருந்து விடுபட முடியவில்லை. ஆனால் மாரிதாஸ் மீதான வழக்கு நான்கு நாட்களிலேயே தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆர்எஸ்எஸ் - பாஜகவினர், நீதிபதிகள் அணி ஒன்றை வைத்துள்ளனர் என்பதைத்தானே இது உணர்த்துகிறது. 

இராணுவம், போலீசு, RAW, IB, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உள்ளிட்ட அரசின் அத்தனை துறைகளிலும் அவர்கள் தங்களது அணியை ஏற்கனவே உருவாக்கி விட்டனர். இதுதான் அபாயம். இந்த அபாயத்தைத்தான் மக்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

சுதா பரத்வாஜ் அவர்களுக்கு தற்போதுதான் நிபந்தனையில் பிணை கிடைத்துள்ளது. ஸ்டேன் சாமி மிகவும் உடல் நலிவுற்ற நிலையில் பிணை கோரி முறையிட்ட போதும் ஈவிரக்கமின்றி பிணை மறுக்கப்பட்டதால் அவர் சிறையிலேயே மாண்டு போனார். நீரிழிவு நோயினால் சிறுநீர் கழிக்கக் கூட சிரமப்படும் வரவர ராவ் மீதான பிணை மனு நிராகரிக்கப் படுகிறது. ஆர்எஸ்எஸ் சங் பரிவாரங்களின் ஊதுகுழலான அர்னாப் கோஸ்வாமி மீதான வழக்கு மறுபரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அவர் உடனடியாக விடுவிக்கப்படுகிறார். 

இவையெல்லாம் எதை உணர்த்துகின்றன? நடப்பது சங்க்பரிவார சனாதனிகளின் ஆட்சிதான் என்பதை உணர்த்த வில்லையா? "சனாதனம்தான் நாட்டின் பண்பாடு" என வாரணாசியில் மோடி பேசியிருப்பதைப் பொருத்திப் பாருங்கள், உண்மை புரியும்.

உரை மேலும் தொடர்கிறது. பாருங்கள்! பகிருங்கள்!



Tuesday 21 December 2021

சீமான் ஒரு பொறுக்கியா? நாம் தமிழர் கூட்டம் ஒரு லூசுக் கூட்டமா?

மோடி தலைமையிலான பாஜக ஆர்எஸ்எஸ் கும்பல் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய பின்பு, பொதுத் துறைகள் தனியாருக்குத் தாரை வார்க்கப்படுகின்றன; நாட்டின் கனிம வளங்கள் அதானி அம்பானி போன்ற பார்ப்பன பனியா பெரு முதலாளிகள் கொள்ளையடிக்க பட்டுக் கம்பளம் விரிக்கப்படுகின்றது; தொழிலாளர்களை நிரந்தரக் கொத்தடிமைகளாக மாற்றுவதற்கு ஏற்ப 44 தொழிலாளர் நலச்சட்டங்களை 4 சட்டத் தொகுப்புகளாக மாற்றி அமைத்துள்ளது மோடி அரசு. விவசாயிகளை ஓட்டாண்டியாக்கும் வேளாண் சட்டத் திருத்தங்கள் பெரும் போராட்டத்திற்குப் பிறகே ஒன்றிய அரசு திரும்பப் பெற்றுள்ளது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட எண்ணற்ற மக்கள் விரோத நடவடிக்கைகளால் மக்கள் வாழ்விழந்து அல்லல்படுகின்றனர். 

பாஜக ஆர்எஸ்எஸ் மோடி கும்பலுக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போட திராணியற்ற நாம் தமிழர் சீமான், ஏதோ தமிழர்களை உய்விக்க வந்த இரட்சகர் போல, ஊர் ஊராய் கொக்கரித்துக் கொண்டிருக்கிறார். விமர்சனம் என்ற பெயரில் பொது வெளியில் செருப்பைத் தூக்கிக் காட்டுவதும், "செருப்பு தானே காட்டினேன், விட்டிருந்தால் ......" என பேசும் இவர், அரசியல்வாதியா இல்லை பொறுக்கியா? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. 

சாதி ஆணவப் படுகொலையை  'குடிப் பெருமை'  கொலை என பெருமை பேசி சாதியத்தை உயர்த்திப் பிடிக்கிறார். கீழடி அகழ்வாய்வு பார்ப்பனர்களுக்கும் கசக்கிறது; இவருக்கும் கசக்கிறது என்றால் இவர் யார்? இவரை தமிழ்ச் சங்கி என்று அழைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? 

வாய்க்கு வந்ததை எல்லாம் அன்றாடம் உளறிக் கொண்டிருக்கிறார். இவரது உளறலையும் கைகொட்டி ஆரவாரிக்கிறது ஒரு லூசுக் கூட்டம். தமிழகத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டிய ஒரு லும்பன் கூட்டம் சீமானும் அவரது நாம் தமிழர் கட்சியும். இது குறித்து விரிவாக விளாசுகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள். பாருங்கள்! பகிருங்கள்!



நன்றி : Arakalagam

Sunday 19 December 2021

"சாதி எனும் பெரும் தொற்று!" - நூல் திறனாய்வு!

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை கிளையின் பொருளாளர் தோழர் சங்கைய்யா அவர்கள் எழுதிய "சாதி எனும் பெரும் தொற்று - தொடரும் விவாதங்கள்" நூல் திறனாய்வுக் கூட்டம் 18.12.2021, சனிக்கிழமை மாலை மதுரை மூட்டா அரங்கத்தில் நடைபெற்றது.

கிளைத் தலைவர் பேராசிரியர் அ.சீனிவாசன் அவர்கள் கூட்டத்தைத் தலைமை ஏற்று நடத்தினார். கிளைச் செயலாளர் தோழர் லயனல் அந்தோணிராஜ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள் நோக்க உரை நிகழ்த்தினார்.

சாதி என்பது தொற்றாக மட்டுமல்லாமல், சமூக சமத்துவத்தைக் கொல்லும் பயங்கர நோயாக உள்ளது என்பதை நூலின் அடி ஆழம் வரை சென்று நூலில் விரவிக் கிடக்கும் ஆதாரங்களைக் கொண்டு மிக நேர்த்தியாக விளக்கினார் நூல் திறனாய்வாளர் முனைவர் ந.முருகேசன் அவர்கள்.

அதன் பிறகு, பார்வையாளர்களின் கேள்விகளுக்கு நூலாசிரியரும்  கருத்தாளர்களும் விளக்கமளித்தனர். நூலாசிரியர் சங்கையா அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவடைந்தது. 50க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். TN-PRPC முகநூலில் இந்நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதுவரை சங்கையா அவர்கள் எழுதிய ரூ 675 மதிப்புள்ள மூன்று நூல்கள் ரூ.450க்கு அரங்கில் விற்பனை செய்யப்பட்டன.





தகவல் 

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
மதுரை கிளை
73393 26807


Saturday 18 December 2021

பாக்ஸ்கான் ஆலைத் தொழிலாளர்கள் போராட்டத்தில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்!

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்திரம், சிப்காட் தொழிற்பேட்டை வளாகம் - II ல் தைவான் நாட்டைச் சேர்ந்த வானொலி, தொலைக்காட்சி மற்றும் கைபேசி உபகரணங்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் என்கிற பன்னாட்டுக் கம்பெனி செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள், ஆலை வளாகத்திற்குள்ளேயே தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர். தங்குமிடம் மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படும் என்று ஆசை வார்த்தைகளைக் கூறிதான் இவர்களை எல்லாம் ஆலை நிர்வாகம் அழைத்து வருகிறது. கிராமப்புறங்களில் வாழ வழியற்று கிடக்கும் எண்ணற்றோர் இத்தகைய நிறுவனங்களை நோக்கி படையெடுப்பது தவிர்க்க முடியாததுதான். 

ஒரு காலத்தில் பண்ணையடிமைகள், பண்ணைகளில் தங்க வைக்கப்பட்டு, உயிர் வாழ்வதற்கும் உழைப்பதற்கும் மட்டும் உணவு வழங்கப்பட்டு, 24 மணி நேரமும் அவர்களது உழைப்புச் சுரண்டப்பட்டதோ அதுபோலத்தான், இன்றைய பன்னாட்டுக் கம்பெனிகளில் உழைப்பு சுரண்டப்படுகிறது. காற்றோட்டமில்லாத, சுகாதாரமற்ற இடங்களில் தொழிலாளர்கள் தங்க வைக்கப்படுவதும், அவர்களுக்கு தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதுவும் வாடிக்கையாகிவிட்டது. 

இப்படித்தான் பாக்ஸ்கான் நிறுவனம் 17.12.2021 அன்று தொழிலாளர்களுக்கு வழங்கிய உணவு தரமற்றதாக இருந்ததால், அது பலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி உடல் நலத்தைக் கெடுத்துள்ளது. ஒரு சில தொழிலாளர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் என்னவானார்கள், அவர்களுடைய உடல்நிலை எப்படி இருக்கிறது, அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்களா? என்பதை ஆலை நிர்வாகம் தெரிவிக்காத காரணத்தால் ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள், இரவு கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராடும் பெண் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், ஆலை நிர்வாகத்திற்கு எதிராகவும் தமிழகமெங்கும் கண்டனக் குரல்கள் எழுந்தன. 

போராடும் தொழிலாளர்களுக்கு துணை நிற்பது நமது அவசிய அவசரக் கடமை என்பதை உணர்ந்து, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின், சென்னை கிளை வழக்குரைஞர்கள் போராடும் பெண் தொழிலாளர்களுடன் போராட்டத்தில் நேரடியாகப் பங்கேற்று அவர்களுக்கு  ஆதரவுக் கரம் நீட்டி உள்ளனர்.  

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் ஏற்படுத்திய சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் அவல நிலை இதுதான். 



தகவல்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
சென்னை கிளை


Friday 17 December 2021

மாரிதாஸ் பேசுவது கருத்துரிமையா அல்லது கலவர உரிமையா?

சங்பரிவார அரசியலின், ஆர்எஸ்எஸின் நேரடிப் பிரதிநிதிகளான மாரிதாஸ், பாண்டே போன்றவர்கள் ஆபத்தானவர்களா அல்லது தமிழ் தேசியப் போர்வையில் சங்பரிவார அரசியலுக்கும், ஆர்எஸ்எசுக்கும் பல்லக்குத் தூக்கும் சீமான் போன்றவர்கள் ஆபத்தானவர்களா?

மாரிதாஸ் போன்ற பாசிஸ்டுகள் பேசுவது கருத்துரிமையா அல்லது கலவர உரிமையா?

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து: முப்படைத் தளபதி பிவின் ராவத் மரணம்: யார் குற்றவாளி?

மேற்கண்ட விசயங்கள் குறித்து தெளிவு படுத்துகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள். பாருங்கள்! பகிருங்கள்!


நன்றி : Arakalgam tv


Wednesday 17 November 2021

ஜெய்பீம் சர்ச்சை: பாமக குண்டர்கள் மீது குண்டர் சட்டத்தை ஏவு!

ஜெய்பீம் திரைப்படத்தை உலகமே கொண்டாடுகிறது. ஆனால் அன்புமணி இராமதாசோ பாட்டாளி மக்கள் கட்சியினரை, ஜெய்பீம்  திரைப்படத்திற்கு எதிராகவும் சூர்யாவுக்கு எதிராகவும் கொம்பு சீவிவிடுகிறார். இதன்மூலம், 'கழுதை தேய்ந்து கட்டெறும்பு' ஆகிவரும் பாட்டாளி மக்கள் கட்சியைக் கரைசேர்க்க முயலுகிறார் அன்புமணி. எந்த அளவிற்கு ஜெய்பீம் திரைப்படத்திற்கும் சூர்யாவிற்கும் பொதுச் சமூகம் ஆதரவளிக்கிறதோ அந்த அளவிற்கு அன்புமணி இராமதாஸ் மீதும் பாட்டாளி மக்கள் கட்சி மீதும் எதிர்ப்பைப் பதிவு செய்கிறது. பாமகவினர் கிட்டத்தட்ட ஒரு குண்டர் படையாகவே மாறிவிட்டனர். எனவே, வன்முறைக்குத் தூபம் போடும் பாமக-வினர்  மீது தமிழக அரசு குண்டர் சட்டத்தை ஏவி கட்டுப்படுத்த வேண்டுமென ஆவேசமாகக் குரல் எழுப்புகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள் பாருங்கள்! பகிருங்கள்!

நன்றி: Arakalagam tv

Monday 8 November 2021

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு! பொதுமக்களை குற்றவாளியாக்கிய சிபிஐ!

*ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கில் பொதுமக்களே குற்றவாளிகள்;*

*பொது மக்களை சுட்டுக் கொலை செய்த போலீசார் மீது CBI குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை:*

2018 மே -22 ல் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை அதிமுக அரசும், காவல்துறையும், ஸ்டெர்லைட் நிர்வாகமும் கூட்டு சேர்ந்து போராட்டத்தை சீர்குலைத்தது. மனு கொடுக்க வந்த பொதுமக்களை கார்ப்பரேட் நலனுக்காக, மீடியாக்கள் முன்னால் உலகமே பார்த்துக் கொண்டிருக்கும் போதே சுட்டுப் படுகொலை செய்தது.

தங்களின் சுகாதாரமான வாழ்க்கைக்கு வழி கேட்டு வந்த பல்லாயிரகக்கணக்கானவர்களில் 15 பேரின் இரத்தத்தைக் குடித்து வாழ்க்கையை முடித்து வைத்தது. 

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை-மகன் போலீஸ் கஸ்டடியில் படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழகமே நியாயம் கேட்டது. காவல் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு இதுவரை சிறையில் உள்ளனர். அதற்கு முன்னரே நடைபெற்ற, நெஞ்சை பதற வைத்த, உலகத்தையே உறையவைத்த, ஸ்டெர்லைட் படுகொலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸ்காரர்கள் யார்? சுட உத்தரவிட்டவர்கள் யார்? என்று தமிழகம் தாண்டி உலகம் முழுவதும் கேள்விகளோடு, நீதிக்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கான கேள்வி எழும்போதெல்லாம்  சி.பி.ஐ விசாரணையில் கொலை செய்த காவல் அதிகாரிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றது அதிகாரவர்க்கம். 

ஆனால்,
இதோ... சி.பி.ஐ 71 பேர் மீது குற்றம் சாட்டி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. முதல் கட்டமாக 27 பேருக்கு சம்மன் அனுப்பியதால் இன்று (08-11-21) மதுரை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர்.

எந்த தூத்துக்குடி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் போராடினார்களோ, காவல்துறையால் சித்திரவதை செய்யப்பட்டார்களோ, யாரெல்லாம் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்களோ அவர்களையே மீண்டும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியுள்ளது சி.பி.ஐ.

துப்பாக்கிச்சூடு வழக்கை தூத்துக்குடி மாநகராட்சி-மேற்கு மண்டலம் மில்லர்புரம் அலுவலகத்தில் வைத்து விசாரித்து வந்த CBI, விசாரணைக்கு வந்தவர்களை மிரட்டியுள்ளது. உடனடியாக வர இயலாதவர்களையும், விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பும்படி கேட்டவர்களையும் வழக்கில் சேர்த்து வாழ்க்கையை தொலைத்துவிடுவதாக வெறித்தனம் காட்டியுள்ளனர். 'இவன் யார்? அவன் யார்?' என்று வீடியோவைப் பார்த்து பொதுமக்களைப் பற்றி மட்டுமே விசாரித்து குற்றவாளியாக்கிய CBI அதிகாரிகள், துப்பாக்கிச் சூடு நடத்தியதையும், சுட்ட போலீஸ்காரர்களின் வீடியோவை காண்பித்து போலீசார் யார்,யார் சுட்டார்கள்கள்? என்று உப்புக்கு சப்பாக ஒரு கேள்வி கூட கேட்கவில்லை என்று விசாரணைக்குச் சென்றவர்கள் கூறினார்கள். இப்படித்தான் ஒரு தலைபட்சமாக விசாரணை நடந்துள்ளது.

பட்டப்பகலில் ஊரறிய, ஊடகம் முன்பு சுட்டுக்கொன்ற காவல்துறை மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்படவில்லையே ஏன்? என்பதுதான் இப்போது மக்கள் முன்பு உள்ள மிகப்பெரிய கேள்வியாகும்.

மோடியின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.ஐ.யே லஞ்ச, ஊழல், அதிகார துஷ்பிரயோகத்தில் சீரழிந்து உள்ளது. மோடி, அகர்வாலின் சட்டைப்பாக்கெட்டில் உள்ளார். அ.தி.மு.க. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 15 பேர் இறந்தது தனக்குத் தெரியாது என்றும், தான் டிவி பார்த்துதான் தெரிந்து கொண்டதாகவும், அது ஒரு கற்பனைக் கதை என்றும் வாய் கூசாமல் புளுகினார். தமிழக மக்கள் நூற்றாண்டு கடந்தாலும் மறக்க மாட்டார்கள். இவர்களின் ஆசிகளோடுதான் சி.பி.ஐ விசாரணை 'சிறப்பாக' நடந்துள்ளது.

அதிமுக அரசின் முக்கியப் புள்ளிகள் துணையோடும், காவல்துறை உயரதிகாரிகள், ஸ்டெர்லைட் நிர்வாகிகளின் கூட்டுச்சதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நாம் எதிர்பார்த்தபடியே, காவல்துறையைச் சேர்ந்த குற்றவாளிகள் தப்பித்துக் கொள்வதற்காக  உண்மையின் பக்கம் இல்லாமல், ஒரு தலைபட்சமாக குற்றப்பத்திரிக்கையை சி.பி.ஐ தாக்கல் செய்துள்ளது.

எனவே...
தமிழக மக்கள் அனைவரும், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு படுகொலைக்கு  நீதி எங்கே? என்று சி.பி.ஐ.யை நோக்கி கேள்வி எழுப்ப வேண்டும்.

நீதிமன்றத்தின் மூலம் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து கொலைகாரர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

அதற்கான சட்டப் போராட்டமும்,
மக்கள் போராட்டமும் தொடரும்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.




Thursday 12 August 2021

வேலுமணி எனும் பொருளாதார பயங்கரவாதி!

மொள்ளமாரி, முடிச்சவிக்கி, கன்னக்கோல், பிக்பாக்கெட், போர்ஜரி, 420 என படிப்படியாக வளர்ந்து, இன்று பொருளாதார பயங்கரவாதியாக உயர்ந்து நிற்கும் ஜெயலலிதாவின் வளர்ப்பு நாய், எடப்பாடியின் அல்லக்கை முன்னாள் அமைச்சர் வேலுமணியைக் கிழித்து தொங்க விடுகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் வாஞ்சிநாதன் அவர்கள். பாருங்கள்! பகிருங்கள்!

நன்றி: Arakalagam tv

Tuesday 20 July 2021

நாட்டு மக்களை வேவு பார்க்கும் தேசத் துரோகிகள்!

பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள், மந்திரிகள் உள்ளிட்ட எண்ணற்ற இந்தியர்களை, இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் என்ற உளவு பார்க்கும் மென்பொருளைக் கொண்டு மோடி-அமித்ஷா கும்பல் தலைமையிலான ஒன்றிய அரசு வேவு பார்ப்பதாக பெரும் சர்ச்சை கிளம்பி உள்ளது.

நாட்டு மக்களை வேவு பார்க்கும் மோடியும் அமித்ஷாவும் சைபர் பயங்கரவாதிகள், தேசத்துரோகிகள், ஆயுள் தண்டனை விதிக்கக் கூடிய அளவுக்கு குற்றமிழைத்தவர்கள். சாடுகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள். பாருங்கள்! பகிருங்கள்!

நன்றி: Arakalagam tv

Wednesday 14 July 2021

கொங்கு நாடு: பாஜக-வின் பித்தலாட்டம்!

கொங்கு நாடு: பிஜேபி RSS கிளப்பிய திசை திருப்பல் மட்டுமே..!!

-வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
ஒருங்கிணைப்பாளர்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்- தமிழ்நாடு 

18 நிமிட வீடியோ..!

பாருங்கள். பகிருங்கள்.


நன்றி: அறக்கலகம்

Wednesday 7 July 2021

மனித உரிமைப் போராளி ஸ்டேன்சாமி மரணமா? படுகொலையா?

மனித உரிமைப் போராளி ஸ்டேன்சாமி சிறையிலேயே மாண்டுபோனது தற்செயலானதா? அல்லது படுகொலையா? இந்தியாவில் சட்டம் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கிறதா? இந்தியா ஒரு ஜனநாயக நாடா? விவரிக்கிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள். பாருங்கள். பகிருங்கள்.

நன்றி: Arakalagam TV

Thursday 1 July 2021

எது தேசத் துரோகம்? யார் தேசத் துரோகி?

பாரதிய ஜனதா கட்சியையோ அல்லது அதன் தலைவர்களையோ அல்லது இந்திய தலைமை அமைச்சர் பிரதமர் நரேந்திரன் அவர்களையோ அவர்களின் செயல்பாடுகள் தவறு என்று விமர்சித்தாலே அதைத் தேசத் துரோகம் என்கின்றன சங்பரிவாரங்கள். 

இலட்சத் தீவு பிரச்சனையையொட்டி கேரள பத்திரிக்கையாளர் ஆயிஷா சுல்தானா மீது புனையப்பட்டுள்ள தேசத் துரோக வழக்கைத் தொடர்ந்து எது தேசத் துரோகம்? யார் தேசத் துரோகி? என கேள்வி எழுப்பி இந்திய தண்டனைச் சட்டம் 124A குறித்து தெளிவுபடுத்துகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தருமபுரி மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் ஜானகிராமன் அவர்கள். பாருங்கள். பகிருங்கள்.  


நன்றி: SPEECHLESS

Friday 18 June 2021

சிறப்புச் சட்டம் இயற்று! ஸ்டெர்லைட்டை மூடு! முதல்வரைச் சந்திக்க ஆட்சியரிடம் மனு!

வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள முதல் சட்டமன்ற கூட்டத் தொடரில் ஸ்டெர்லைட்டை அகற்ற சிறப்புச் சட்டம் இயற்றுமாறும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஸ்டெர்லைட் நிறுவனத்தினர் அனுமதி இல்லாமல் கட்டில் உட்பட சில உபகரணங்கள் கொடுப்பதையும், அதில் வேதாந்தாவின் விளம்பரங்களைத் தடை செய்யக் கோரியும், சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்திக்கவும் 17-06-2021 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கொடுத்த மனுவின் விவரம்.

------------------------------------------------------------------------------

அனுப்புனர்:

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
50/B போல்டன்புரம்,
திருச்செந்தூர் ரோடு,
தூத்துக்குடி.

பெறுநர்:

மதிப்புக்குரிய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்
கோரம்பள்ளம், தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம்

பொருள்: வருகின்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழக அரசு ஸ்டெர்லைட்டை மூடுவதற்கு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக

பெரும் மதிப்பிற்குரிய ஆட்சியர் அவர்களுக்கு,

நீர், நிலம், காற்றை நஞ்சாக்கி மக்களுக்கு கேன்சர், உள்ளிட்ட உயிர் கொல்லி நோய்களுக்கு பலியாக்கிய வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 25 ஆண்டு காலமாக பொதுமக்கள் போராடி வந்தார்கள். அதிமுக ஆட்சியில் 2018-ல் பிப்ரவரி 12-ம் தேதியிலிருந்து 100 நாட்கள் தொடர் போராட்டம் நடந்தது. அதனைத் தொடர்ந்து மே-22-2018 இல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கச் சென்ற பொதுமக்கள் 15 பேரை ஈவிரக்கமின்றி காவல்துறை சுட்டுக் கொன்றது. பலரும் முடமானார்கள். இதனால் அரசாணை மூலம் தமிழக அரசு சீல் வைத்து ஸ்டெர்லைட்டை மூடியது.

"மேற்படி அரசாணை பலவீனமானது, மீண்டும் ஆலையைத் திறக்க வாய்ப்பு உள்ளது" என அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், திமுகவின் தலைவருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், அறிவுத்துறையினர், பத்திரிக்கைகள் உட்பட கருத்து தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து அப்போதைய எதிர்கட்சித் தலைவராக இருந்த இன்றைய தமிழக முதல்வர் "திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு கொள்கை முடிவெடுத்து சிறப்புச் சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் அகற்றப்படும்" என அறிக்கைகள், பேட்டி வாயிலாகவும், தேர்தல் வாக்குறுதியாகவும் கொடுத்திருந்தார்.

ஆட்சிக்கு வந்தவுடன் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு கல்வித் தகுதிக்கேற்ற வேலை, சட்ட முரணாக போலீஸ் காவலில் இருந்த 93 பேருக்கு ரூபாய் ஒரு லட்சம் நஷ்டஈடு , வழக்குகள் வாபஸ், போராட்ட வழக்கிலுள்ள ஒருவர் பாஸ்போர்ட், அரசு வேலையில் சேர்வதற்கு தடையில்லாச் சான்று என அறிவித்து நடைமுறைப்படுத்தினார். இது தமிழக மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்று நம்பிக்கையை ஏற்படுத்தியது.

உச்சநீதிமன்றத்தில் கொரானோ பேரிடரில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்ற சூழலைச் சாதகமாக்கி ஆக்ஸிஜன் தயார் செய்வதற்கு ஜூலை 31 வரை ஸ்டெர்லைட் ஆலை அனுமதி பெற்றது. அதனைப் பயன்படுத்தி மக்கள் நலத் திட்டங்கள் என்ற பெயரில் மக்களுக்குப் பணம், பொருள் இலவசமாக கொடுத்து வருகிறது. தூத்துக்குடி அரசு கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு கட்டில், வீல் சேர், வர்ணம் பூசுதல், எலக்ட்ரிக்கல் வேலை செய்து வருகிறது. ஸ்டெர்லைட் வழங்கிய மேற்படி பொருள்களுக்கு "வேதாந்தா ஸ்டெர்லைட் காப்பர்" என்று எழுதி விளம்பரம் செய்து வருவது மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதனால் ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படும் என்று விஷமப் பிரச்சாரம் செய்து வருகிறது. இதற்கு உடந்தையாக உள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே தமிழக முதல்வர் அவர்கள் பொதுமக்கள் நலன் கருதி வரும் 21-06-2021 அன்று நடைபெற உள்ள முதல் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே "தமிழகத்தில் பெருவீத தாமிர உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு அனுமதி இல்லை" என்று கொள்கை முடிவெடுத்து சிறப்பு ச் சட்டமாக இயற்றி, ஸ்டெர்லைட்டை தூத்துக்குடி மண்ணிலிருந்து நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.

மேற்படி கோரிக்கையை வலியுறுத்த மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை பொதுமக்கள் சார்பில் நாங்கள் சந்தித்துப் பேசவும் எங்களுக்கு ஏற்பாடு செய்து தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொள்கிறோம்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817



அனைத்து சாதி அர்ச்சகர்: பார்ப்பனர்கள் கோவிலுக்குள் வரக்கூடாது!

அனைத்து சாதி அர்ச்சகர் பிரச்சனையில் ஆகமங்கள் என்ன சொல்கின்றன?;  பார்ப்பனர்கள் கோவிலுக்குள் வரக்கூடாது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து தெளிவு படுத்துகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள். பாருங்கள். பகிருங்கள்.


நன்றி: U2 BRUTUS

Wednesday 16 June 2021

நித்யானந்தாவை விட மோசமானவன் சிவசங்கர் பாபா!

பாலியில் குற்றச்சாட்டுகளுக்காக 'போக்சோ' சட்டத்தின் கீழ் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா என்ற சாமியார் எவ்வளவு மோசமானவன் என்பதை விவரிக்கிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள். பாருங்கள். பகிருங்கள்.



நன்றி: அறக்கலகம்

Saturday 12 June 2021

தமிழில் அர்ச்சனை, பெண்களும் அர்ச்சகராகலாம்: சீர்திருத்தமா? அரசியலா?

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், பெண்களும் அர்ச்சகராகலாம், தமிழில் அர்ச்சனை: சீர்திருத்தமா? அரசியலா?

சன் நியூஸ் விவாத மேடையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன். பாருங்கள். பகிருங்கள்.


நன்றி: சன் நியூஸ்

Friday 11 June 2021

அர்ச்சகர் நியமனம் குறித்து சன் நியூஸ் தொலைக் காட்சியில் வாஞ்சிநாதன்

100 நாட்களில் அனைத்துச் சாதி மாணவர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவர் என தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை அமைச்சர் திரு.சேகர் பாபு அவர்களின் அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள் சன்நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி. பாருங்கள் பகிருங்கள்.



Tuesday 8 June 2021

நூறு நாட்களில் அனைத்து சாதி மாணவர்களும் அர்ச்சகர்களாக நியமனம்!

 மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

07.06.2021


வழக்கறிஞர் சே.வாஞ்சி நாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்
384, முதல் தளம், கிழக்கு 8-வது தெரு, கே.கே.நகர், மதுரை-20
9865348163

பத்திரிக்கை செய்தி!

 ·        100 நாட்களில் அனைத்து சாதி மாணவர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவர் என்ற தமிழக அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க, சமூக நீதி அறிவிப்பை வரவேற்கிறோம்!

·        தமிழக அரசின் பொதுக் கோயில்களான - மதுரை மீனாட்சியம்மன், பழனி, திருச்செந்தூர் முருகன், சிறீரங்கம் ரெங்கநாதர், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில்களில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனம் நடைபெற வேண்டும்!

------------------------------------------------------------------------------

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேகர்பாபு அவர்கள் 100 நாட்களுக்குள் அனைத்து சாதி அர்ச்சகர் நியமனம் நடைபெறும், தமிழக முதல்வர் திரு. மு..ஸ்டாலின் அவர்கள் முறைப்படி இதனை அறிவிப்பார் எனத் தெரிவித்துள்ளார். கொரானா பேரிடர் காலத்திலும், தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தஅனைத்து சாதி அர்ச்சகர்நியமனத்திற்கு தமிழக அரசு முன்னுரிமை அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், அனைத்து சாதி அர்ச்சக மாணவ சங்கத்தின் சட்ட ஆலோசகர், உச்சநீதிமன்றத்தில் அர்ச்சகர் வழக்கை நடத்தியவர்கள் என்ற வகையில், அர்ச்சகர் நியமனத்தில் கடந்த கால சட்டச் சிக்கல்கள் குறித்து தமிழக அரசிற்குத் தெரிவிப்பது எங்களது கடமை.

தந்தை பெரியார் அவர்களின் கருவறைத் தீண்டாமை ஒழிப்புப் போராட்ட அறிவிப்பு மற்றும் இளையபெருமாள் கமிட்டி அறிக்கை அடிப்படையில், பரம்பரை வழி அர்ச்சகர் நியமனம் என்பதை ஒழிக்க, கடந்த 1970-ஆம் ஆண்டு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில், ஒரு திருத்தம் கொண்டு வந்தார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட சேசம்மாள்எதிர் - தமிழக அரசு என்ற வழக்கில் தீர்ப்பளித்த அரசியல் சாசன அமர்வு "பரம்பரை வழி அர்ச்சகர் முறையை ஒழித்த தமிழக அரசின் சட்டத்திருத்தம் செல்லும்என்று சொல்லி, ஆனால் அர்ச்சகர் நியமனங்கள் ஆகமத்தை மீறக்கூடாது என்றது. இத்தீர்ப்பினைத் தொடர்ந்து 35 ஆண்டு காலம் அனைத்து சாதி அர்ச்சகர் நியமனம் நடக்கவில்லை. 2006-ஆம் ஆண்டு மீண்டும் கலைஞர் அவர்கள் அனைத்து சாதி அர்ச்சகர் நியமனத்திற்கு அரசாணை பிறப்பித்தார். தொடர்ந்து அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் அமைக்கப்பட்டு, அதில் அனைத்து சமூகத்தைச் சேர்ந்த 206 இந்து மாணவர்கள் முறையாக பயிற்சி பெற்று முறையாக தீட்சையும் பெற்றனர். இந்த அரசாணை சட்ட விரோதமானது, மாணவர்களை அர்ச்சகர்களாக நியமனம் செய்வது, அரசியல் சட்டத்தின் பிரிவு 25, 26, இந்து மத நம்பிக்கை, மரபுகளுக்கும் எதிரானது என்று கூறி அரசாணைக்கு உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்றார்கள் மதுரை ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கத்தினர்.

நீண்ட நாட்கள் இழுத்தடிக்கப்பட்ட வழக்கில் அர்ச்சக மாணவர்களை ஒரு தரப்பாக இணைத்து வழக்கை நடத்தினோம். 2015-ல் தீர்ப்பு வந்தது. தீர்ப்பில், தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்படவில்லை. 206 மாணவர்களை ஆகம விதிப்படி அமைந்த கோயில்களில் நியமிக்கக் கூடாது என்றும் கூறவில்லை. பிறப்பின் அடிப்படையில் யாரும் அர்ச்சகர் வேலை வாய்ப்பில் முன்னுரிமை கோர முடியாது. ஆனால் அந்த நியமனம் ஆகம விதிகள், மரபுகள் சம்பிரதாயங்களுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும், என்று சொல்லப்பட்டது. இத்தீர்ப்பின்படி மயிலை கபாலீசுவரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, திருவரங்கம், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலோ மாணவர்களில் சிலரை அர்ச்சகர்களாக நியமிக்கும் பட்சத்தில், இந்தக் கோயில்களில் பரம்பரையாகப் பணி புரியும் அர்ச்சகர்கள், “அர்ச்சக மாணவர்களின் நியமனம் ஆகம விதிக்கு முரணானது என்று கூறி உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம்.

பிறப்பால்பிராமணர்கள்தான் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும்என்று ஆகம நூல்கள் எதிலும் கூறப்படவில்லை. ஆனால், ஆகம விதி என்று சொல்லும் இடங்களிலெல்லாம் மரபுபழக்க வழக்கம் என்ற சொற்றொடர்களையும் சேர்த்துத்தான் எப்போதும் பயன்படுத்துகின்றனர். எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகின்ற இந்தச் சொற்றொடர்களின் துணை கொண்டுதான் இன்றுவரை அர்ச்சகர் நியமனம் தடுக்கப்படுகிறது. தமிழக அரசின் தற்போதைய முயற்சிக்கும் சேசம்மாள், ஆதி சைவ சிவாச்சாரியார்கள் வழக்குகளின் தீர்ப்புகளைக் காட்டி தடுக்கும் முயற்சி நடைபெறலாம். அதனை சட்டப்பூர்வமாக சமாளித்து 50 ஆண்டு காலப் போராட்டத்தை தமிழக அரசு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.

2015 அர்ச்சகர் தீர்ப்பிற்குப்பின் சபரிமலை அய்யப்பன் கோயில் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பு மிகவும் முக்கியமானது. இத்தீர்ப்பில்இந்திய அரசியல் சட்டம் சமூக மாற்றம், சமூக சமத்துவத்திற்கான ஓர் ஆவணம்; அரசியல் சட்ட அடிப்படையிலான முன்னுரிமை என வரும்போது ஒரு தனி நபர், குழுவின் மத உரிமைசுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், தனி மனித கண்ணியம் உள்ளிட்டவைகளை முன்னிருத்தும் அரசியல் சட்ட ஒழுங்கமைவுக்கு உட்பட்டே செயல்பட முடியும். பிறப்பு, உடற்கூறு வகைப்பட்ட பாகுபாடுகள் அரசியல் சட்டத்திற்கு எதிரானது. தனி மனித கண்ணியத்தை, மற்ற குடிமக்களை கீழானதாகக் கருதும் எதையும் ஏற்க முடியாது. பிரிவு 26-ன் கீழான மத உட்பிரிவுகளின் உரிமை, பிரிவு 25 (2) ()-வுக்கு உட்பட்டே இயங்கும். தனி நபரின் சுதந்திரம், கண்ணியம், சமத்துவத்தை மீறி எந்த மதக் கோட்பாடு, பழக்க வழக்கம்,மரபுகள், நம்பிக்கைகள் இருக்க முடியாது. அவ்வாறு இருந்தால் அவை அரசியல் சட்டப் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அரசியல் சட்டத்திற்கு அர்த்தம் உள்ளதென்றால் மதம், தனி மனித நம்பிக்கையாகவோ, மதக் கோட்பாடாகவோ யாரையும் இழிவு படுத்த முடியாதுமிகவும் ஆணித் தரமாகக் குறிப்பிடப்படுகிறது.

அர்ச்சகர் தீர்ப்பு இரண்டு நீதிபதிகள் வழங்கியது. சபரிமலை தீர்ப்பு 5 நீதிபதிகள் வழங்கியது. எனவே சபரிமலைத் தீர்ப்பின் ஒளியிலேயே, அர்ச்சகர் தீர்ப்பு பொருள் விளக்கம் கொள்ளப்பட வேண்டும். மேலும் சேசம்மாள் வழக்கு முதல் 2015 மதுரை ஆதி சைவ சிவாச்சாரியார்கள் வழக்கு வரை கூறப்பட்ட தீர்ப்புகளில் "அர்ச்சகர் நியமனம் என்பது அரசின் மதச் சார்பற்ற நடவடிக்கைஎன்று மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசும், மற்ற அரசு ஊழியர்களுக்கு இருப்பதுபோல், அர்ச்சகர் மற்றும் கோயில் ஊழியர்களுக்கான, தமிழ்நாடு இந்து சமய நிறுவனப் பணியாளர்கள் பணிவரன்முறை விதிகள்,2020-அய் உருவாக்கியுள்ளது. இந்த விதிகளின்படி அர்ச்சகர்கள், தவறு செய்தால் அரசு நடவடிக்கை எடுக்க முடியும். எனவே அர்ச்சகர் நியமனம் என்பது அனைத்து இந்துக்களுக்கான அரசின் பொது வேலை வாய்ப்பு. கட்டாயம் அதில் பொது அறிவிப்பு, தேர்வு முறைகள், இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்.

மிகவும் குறிப்பாக தமிழக அரசின் பொதுக் கோயில்களான - மதுரை மீனாட்சியம்மன், பழனி, திருச்செந்தூர் முருகன், சிறீரங்கம் ரெங்கநாதர், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில்களில் அர்ச்சக மாணவர்களுக்கு பணி நியமனம் வழங்குவது மட்டுமேதந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளான கருவறைத் தீண்டாமையை அகற்றும்; கலைஞரின் சமூக நீதிக் கொள்கையை பறைசாற்றும். அரசியல் சட்டப்படியான சமத்துவத்தை மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுக்கோயில்களில் நிலைநாட்டும் திராவிட முன்னேற்றக் கழக அரசின் வரலாற்றுச் சிறப்பு மிக்க முயற்சியை, அனைவரும் வரவேற்பதுடன், கடந்த காலத்தில் செய்தது போல் தடுக்க யாரும் முனைய வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் - தமிழ்நாடு