Tuesday 28 June 2022

தீஸ்தா செதல்வாத் கைது! சட்டத்தின் ஆட்சி மீதான பாசிசக் காவி புல்டோசர் தாக்குதல்!

2002 கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் மிகப் பெரிய கலவரத்தைத் திட்டமிட்டு நடத்தி, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களைப் படுகொலை செய்தது ஆர்எஸ்எஸ்-பாஜக உள்ளிட்ட சங் பரிவாரக் கும்பல்.  

இந்தப் படுகொலைக்கு எதிராக நாடெங்கிலும் பரவலாகக் கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்ட அதேவேளையில், பிரபல சமூக செயல்பாட்டாளரும் வழக்கறிஞருமான தீஸ்தா செதல்வாத், மோடி உள்ளிட்ட குற்றவாளிகளை தண்டிக்கக் கோரி  நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார். மோடி உள்ளிட்டோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இல்லை என உச்ச நீதிமன்றம் நியமித்த ‘சிறப்பு விசாரணைக் குழு' அளித்த அறிக்கைக்கு எதிராக மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடிய போது, வழக்கைத் தள்ளுபடி செய்கிறது உச்ச நீதிமன்றம்.

வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்ட அடுத்த 24 மணி நேரத்திற்குள், தீஸ்தா செதல்வாத் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இந்த வழக்குக்கு ஆதரவாகச் செயல்படும் முன்னாள் டிஜிபி ஆர்.பி. ஸ்ரீகுமார் மற்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோர் மீது, இந்த வழக்கில் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி, போலியானத் தகவல்களை அளித்து, ஒரு சிலருக்கு மரண தண்டனை பெறும் நோக்கத்தோடு தவறான சாட்சியங்களைக் கொடுத்து, ஏமாற்றும் நோக்கத்தோடு செயல்பட்டதாக பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வழக்கு தொடுத்துள்ளது குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு.

மதவாத, அரசு பயங்கரவாத நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக, நீதி கேட்டுப் போராடும் சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமைப் போராளிகளுக்கு இது ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை மணி. எத்துணை கொடூரங்கள் நடந்தாலும் அதற்கு எதிராக யாரும் நீதி கேட்டு நீதிமன்றத்திற்கு வரக்கூடாது என்கிறது மோடி அரசு. இது போன்ற வழக்குகளால் மனித உரிமைப் போராளிகளை நசுக்குவதன் மூலம் மதவாத மற்றும் அரசு பயங்கரவாத கும்பல்கள் அப்பாவி மக்களை சித்திரவதைக்குள்ளாக்கவும் படுகொலை செய்யவும் வழிவகை செய்கிறது.

தீஸ்தா செதல்வாத்

உத்திர பிரதேசத்தில் சங்பரிவாரக் கும்பலுக்கு எதிராகப் போராடியவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடித்ததும், தீஸ்தா சேதல்வாத் கைதும் வேறு வேறு அல்ல. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அறிவித்துள்ளபடி, வருணாசிரம இந்து சாம்ராஜ்யத்திற்கான வாகனம் வேகமெடுத்து முன் செல்கிறது. இதைத் தடுக்க முனைவோர் அகற்றப்படுகிறார்கள்; இனியும் அகற்றப்படுவார்கள். தீஸ்தா சேதல்வாத்தின் கைது இதைத்தான் உணர்த்துகிறது. 

குஜராத் இனப்படுகொலைக்கு எதிராக நீதி கேட்டது குற்றமா? சட்டத்தை நம்பி, நீதிமன்றங்களை  நாடினால் நீதிக்காகப் போராடுவோரை உச்சநீதிமன்றமே சிறைக்கு அனுப்பத் துணை நிற்கிறது. இது என்ன நாடா அல்லது காடா? முசோலினி, ஹிட்லர் ககாலத்திலகூட நடக்காத அநீதிகள் இந்தியாவில் அரங்கேறுகின்றன. 

சமூக செயல்பாட்டாளர்களும், மனித உரிமைப் போராளிகளும், வழக்குரைஞர்களும் முடக்கப்பட்டு விட்டால் வஞ்சிக்கப்படும் மக்களுக்கு நாதி ஏது? 

தீஸ்தா செதல்வாத் கைது மற்றும்  ஸ்ரீகுமார், சஞ்சீவ் பட் ஆகியோருக்கு எதிரான வழக்கை முறியடிக்கக் குரல் கொடுப்போம்!

படர்ந்து வரும் பார்ப்பன பாசிச பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைவோம்!

சமூக செயல்பாட்டாளர்களையும், மனித உரிமைப் போராளிகளையும், வழக்கறிஞர்களையும் பாதுகாக்க அணியமாவோம்!

வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்
மாநில ஒருங்கிணைப்பாளர் 
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் தமிழ்நாடு

நாள்: 28.06.2022
மதுரை