Friday, 1 August 2025

வாஞ்சிநாதனா? சுவாமிநாதனா? மதுரையில் நடந்தது என்ன? ---1

பார்ப்பனர் அல்லாத மக்கள் மீது ஆதிக்கம் செலுத்திவந்த சனாதன சக்திகளுக்கு எதிராக, விந்திய மலைக்குத் தெற்கே இருந்த மன்னர்களால் அன்று தொடங்கி வைக்கப்பட்ட போர், அதன் பிறகு சித்தர்களாலும், நவீன காலத்தில் வள்ளலார், அய்யங்காளி, ஐயா வைகுந்தர், ஜோதிராவ் புலே, தந்தை பெரியோர் போன்றோராலும் முன்னெடுக்கப்பட்ட சனாதனத்திற்கு எதிரான போர் இன்றும் தொடர்கிறது. 

ஆம்! நீதிபதி சுவாமிநாதனுக்கும் வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கும் இடையில் நடக்கும் போராட்டம் அவர்கள் இருவருக்கும் இடையிலான தொழில் தொடர்பான போராட்டம் அல்ல; அது பெரும்பான்மை மக்களுக்கும் சனாதானத்துக்கும் இடையிலான போராட்டம். 

25.07.2025 மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்தது என்ன?

நீதிபதி சுவாமிநாதன் பல்வேறு வழக்குகளில் பாரபட்சமாக நடந்து கொண்டதாக 14.06.2025 அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களுக்கு வாஞ்சிநாதன் அவர்கள் ஒரு புகார் மனுவை பதிவுக் தபாலில் அனுப்பி வைத்துள்ளார். இந்த புகார் மனு அதிமுக வழக்கறிஞர் ஒருவர் மூலம் புலனத்தில் பகிரப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக இதை மனதில் வைத்துக் கொண்டு 25.07.2025 அன்று வாஞ்சிநாதனுக்குத் தொடர்பு இல்லாத ஒரு வழக்கில் அவரை வரவழைத்து தன்னைப் பற்றி தவறாக பேசுவதாக சுவாமிநாதன் அவர்கள் வாஞ்சிநாதனிடம் கேள்வி எழுப்பியதோடு, 'உங்களது கருத்தில் உறுதியாக இருக்கிறீர்களா?' என்றும் வினவி உள்ளார். அது என்னவென்று எழுத்து பூர்வமாகக் கொடுத்தால் தான் பதில் அளிக்கத் தயார் என்று வாஞ்சிநாதன் கூறியபோது, 'நீங்கள் என்ன கோழையா?' என்று நீதிமன்றத்தில் பலர் முன்னிலையில் வாஞ்சிநாதனை சுவாமிநாதன் அவமானப்படுத்தி உள்ளார். மேலும் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்ததோடு 27.07.2025 அன்று அதன் மீதான விசாரணைக்கு வருமாறும் ஆணை பிறப்பித்துள்ளார்.

இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் காட்டுத்தீயாய்ப் பரவியது

சாமிநாதனின் இந்த ஏதேச்சதிகாரமான போக்கைக் கண்டித்து ஓய்வு பெற்ற நீதி அரசர்களும், வழக்கறிஞர்களும், ஜனநாயக சக்திகளும், அரசியல் கட்சிகளும் வாஞ்சிநாதனுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியதோடு சுவாமிநாதனின் போக்கை வன்மையாகக் கண்டித்தனர். 

உச்சநீதிமன்றத்திற்கு தான் அனுப்பிய புகார் மனு எப்படி வெளியில் கசிந்தது என்பது குறித்து மதுரை 'சைபர் கிரைம்' காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றையும் வாஞ்சிநாதன் கொடுத்துள்ளார்.

சமூகம் ஊடகங்களில் விரவிக் கிடக்கும் இந்தப் போராட்டம் தொடர்பான செய்திகளைத் தொகுத்து இந்த வலைப்பூவில் தருவது பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதுகிறேன்.

தொடரும்..

பொன்.சேகர்
வழக்கறிஞர்

உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பிய புகார் மனு நகல்:















No comments:

Post a Comment