Thursday 30 July 2020

சட்டத் திருத்தக் குழுவைக் கலைத்திட வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்!

முப்பெரும் குற்றவியல் சட்டங்கள் திருத்தக் குழுவை கலைத்திடு!
திருத்தங்களைத் திரும்பப் பெறு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு நடத்தும் ஆர்ப்பாட்டம்.

31.07.2020  - மாவட்ட நீதிமன்றங்கள் முன்
(JAAC) ஆர்ப்பாட்டம்.

இந்திய அரசு  
இந்திய தண்டனைச் சட்டம்,  குற்றவியல் நடைமுறைச் சட்டம்,  இந்திய சாட்சியச் சட்டம் இவைகளில் மாற்றம் கொண்டுவரக் கருதுகிறது .

இதற்கு மே நான்காம் தேதி அன்று உள்துறை அமைச்சகம் ஒரு குழுவை அமைத்துள்ளது.

குழுவில் உள்ளவர்கள். 

1. தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் Dr. ரன்பீர் சிங், தலைவர். இவர் கார்ப்பரேட் சட்டம், ஆளுமை, கார்ப்பரேட் சமூக பொறுப்பணர்வு போன்ற விஷயங்களிலும் ஆர்வமாக உள்ளவர்.  

2.  மேற்கண்ட பல்கலைக்கழகத்தின் பதிவாளர்  பாஜ்பாய், இவர் காவல்துறைக்கான (police  academy) பயிற்சியாளர். 

3.   தாரா சாஸ்திரா தேசிய பல்கலைக்கழக துணைவேந்தர் 
பால்ராஜ் சவுகான் . இவர் தர்மசாஸ்திரங்கள் அக்கடமி உறுப்பினர் .
 
4. உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி. இவர் டாடா, பிர்லா, அம்பானி போன்றவர்களின் சொத்து வழக்கு , குஜராத் கலவர வழக்கு ஆகியவைகளை நடத்துபவர். 

5.  டெல்லி முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதி ஜிபி ரோஜா. இவர் வேதியியல் துறைசார்ந்து மட்டுமே அனுபவம் உள்ளவர்.

இக்குழுவில் மேற்கண்ட ஐந்து நபர்கள் உட்பட மொத்தம் 30 நபர்கள் உள்ளனர்.
28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் உட்பட மொத்தம் 36 மாநிலங்களை உள்ளடக்கியது இந்திய ஒன்றியம். 

இந்திய அரசு கொண்டு வருகின்ற குற்றவியல் சட்டத் திருத்தக் குழுவில் மேற்குறிப்பிட்ட  எந்த மாநிலங்களுக்கும் எந்த ஒரு பிரதிநிதித்துவமும் இல்லை.
முதலில் இந்தக் குழுவின் தன்மையே கேள்விக்குறியாக உள்ளது. 
இரண்டாவது மாநிலத்தின் உரிமையை மறுப்பது. இதனால் இவை முற்றிலும் ஜனநாயக விரோதமானது. 

யாருக்கு அதிகாரம் உள்ளது?

மேற்கண்ட சட்டத்தில் திருத்தம் செய்வது சட்டத்துறையைச் சார்ந்தது .
ஆனால் அமித்சாவை அமைச்சராகக் கொண்ட உள்துறை அமைச்சகம்  இந்த திருத்தங்களை செய்ய முன்வந்திருப்பது சரியானது அல்ல. 

மூன்றாவது இவ்வளவு பெரிய சட்டங்களுக்குக் கருத்து கூற மூன்று மாதங்கள் மட்டுமே கால அவகாசம் கொடுப்பது சரியானது அல்ல. இறுதிநாள் 09.10.2020 .

வெகுமக்கள் மற்றும் பிற அமைப்புகள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கருத்துக்கூற வழியில்லை. வெகுமக்களைச் சேர்க்க எந்த முயற்சியும் இல்லை. ஆகவே இக்குழு கலைக்கப்பட்டு சட்டத் திருத்தங்களுக்கான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். 

சட்டத்திருத்தம் தொடர்பாக கேட்கப்பட்டுள்ள  மொத்த வினாக்கள் 89.

I.P.C, Cr.P.C, Evidence Act ஆகிய சட்டங்கள் உள்ளடக்கிய 68 சட்டங்களில் மாற்றம் கொண்டு வர உள்ளனர்.  

1.காவல்துறைக்கு முழு அதிகாரம் வழங்குதல்

2. புலனாய்வு அறிக்கை சீல் செய்யப்பட்டு சமர்ப்பித்தல் 

3.அனைத்து சட்டங்களையும் சுமையாக மாற்றுவது

 4. யாரை வேண்டுமானாலும் குற்றவாளியாக்கி அவர்களின் குற்றங்களை தடுப்பது என்ற பெயரில் அவர்கள் மீது தடுப்புச் சட்டங்களை ஏவுவது 

5. குற்ற மனப்பான்மை இருக்கிறதா என்பதை கணக்கில் கொள்ளத் தேவை இல்லை

6. தேடுவதற்கான ஆணை இல்லாமல், சர்ச் வாரண்ட் இல்லாமல் யாரை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும்  கைது செய்யலாம்

என  இன்னும் பல ஜனநாயக விரோத திருத்தங்களை இக்குழு பரிந்துரைக்கிறது.

எனவே இவை மக்கள் விரோதமானது இதை முற்றாக நிராகரிக்கின்றோம்.

சி.முருகேசன்
இணைச் செயலர்
JAAC

ஆர்ப்பாட்ட முழக்கங்கள்:

வழக்கறிஞர்கள் ஒற்றுமை - ஓங்குக!

கைவிடு! கைவிடு!
குற்றவியல் நடைமுறைச்சட்டம் 
இந்தியச் சாட்சியச்சட்டம் 
இந்திய தண்டனைச்சட்டம் 
ஆகியவற்றில் மேற்கொள்ளவிருக்கும் 
சட்டத்திருத்தத்தைக் கைவிடு!
மத்தியஅரசே கைவிடு!

கலைத்திடு! கலைத்திடு!
கிரிமினல்சட்டங்களை திருத்திஅமைக்க 
உருவாக்கிய ஐவர்குழுவை 
உடனடியாகக் கலைத்திடு!
மத்தியஅரசே கலைத்திடு!

போலீசையே நீதிபதிகளாக்கும்
கிரிமினல்சட்டத் திருத்தத்தைக்
கைவிடு! கைவிடு!
மத்தியஅரசே கைவிடு!

திறந்திடு! திறந்திடு!
கரோனாவைக் காரணம்காட்டி
மூடிக்கிடக்கும் நீதிமன்றங்களை
உடனடியாகத் திறந்திடு!

பறிக்காதே! பறிக்காதே!
கரோனாவைக் காரணம்காட்டி
நீதிமன்றங்களை பூட்டிவைத்து
வழக்கறிஞர்களின் வாழ்வாதாரத்தைப் 
பறிக்காதே! பறிக்காதே!

காவல்நிலையங்கள் இயங்கும்போது 
நீதிமன்றங்கள் இயங்கினால்என்ன? 
கலெக்டர்ஆபீஸ் இயங்கும்போது 
கோர்ட்டுகள் இயங்கினால்என்ன? 

ஊரெங்கும் சாராயக்கடைகள் 
அலைமோதும் குடிகாரர்கள் 
அதற்கெல்லாம் வராதகரோனா
நீதிமன்றங்களைத் திறந்தால்மட்டும் 
வந்துவிடுமா? வந்துவிடுமா?
கரோனா வந்துவிடுமா?

வழக்குஇல்லை விசாரணைஇல்லை 
வேலைஇல்லை வருவாய்இல்லை
வஞ்சிக்காதே! வஞ்சிக்காதே!
வழக்கறிஞர்களை  வஞ்சிக்காதே!

துப்புறவுப் பணியாளர்கள் 
செவிலியர்கள் மருத்துவர்கள் 
அரசுஊழியர் அலுவலர்கள் 
தைரியமாக இயங்கும்போது 
நீதிமன்றங்களால் முடியாதா?

நீதிமன்றங்கள் இயங்குவது 
அரசியலமைப்புச் சட்டப்படியா?
ஒருசிலரின் விருப்பப்படியா?
அனுமதியோம்! அனுமதியோம்! 
நீதிமன்றங்கள் பூட்டிக்கிடப்பதை
அனுமதியோம்! அனுமதியோம்!

கைதுசெய்ய போலீஸ்வருது 
ரிமாண்ட்செய்ய நீதிபதிவாரார் 
பெயில்எடுக்க வக்கீல்மட்டும் 
நேரில்வந்தால் கரோனாவருமா? 
என்னங்கடா நியாயமிது?

வெட்கக்கேடு! வெட்கக்கேடு!
ஜனநாயகம் பேசும்நாட்டில் 
ஐந்துமாதமாய் நீதிமன்றங்கள் 
பூட்டிக்கிடப்பது வெட்கக்கேடு!
திறந்திடு! திறந்திடு! 
நீதிமன்றங்களைத் திறந்திடு!

நெட்வொர்க்இல்லா ஊரிலே 
வெண்ணைவெட்டவா வெர்ச்சுவல்கோர்ட்டு?
இழப்பீடுவேண்டாம் லோனும்வேண்டாம் 
நீதிமன்றங்களைத் திறந்திடு
வேலைசெய்து பிழைக்கத்தெரியும்!

மறுக்காதே! மறுக்காதே! 
கரோனாவைக் காரணம்காட்டி 
நீதிமன்றங்களைப் பூட்டிவைத்து 
சட்டபூர்வ நிவாரணம்தேடும் 
பொதுமக்களுக்கான நீதியை 
மறுக்காதே! மறுக்காதே!



















Monday 27 July 2020

ஹோமியோபதி மருத்துவ முகாம்கள்! களத்தில் PRPC வழக்குரைஞர்கள்!!

நண்பர்களே!

கரோனா பேரிடரின் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் பொதுநலன் வழக்குகள், உதவிக் குழுக்கள் என நாம் செயல்பட்டு வருகின்றோம்.

அதோடு நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும் ஹோமியோ மருந்தை (ஆர்சனிக் ஆல்ப் 30c) மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் வழங்கி வருகின்றோம்.

குறிப்பாக ஏழை, எளிய மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளில் நோய்த் தொற்றை தடுக்கும் முயற்சியாக மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றோம். நமது அமைப்பு செயல்பாடுகளுடன் பயணித்து வரும் மருத்துவர்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் மூலம் சென்னையின் பல பகுதிகளில் நடத்தி வருகின்றோம்.

அந்த வகையில் மதுரவாயல் பகுதியில் கடந்த 23.07.2020 மற்றும் 25.07.2020  அன்றும் அங்கு செயல்பட்டு வரும் RSYF அமைப்பு மற்றும் பகுதி இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று முகாம் நடத்தப்பட்டது.

ஒவ்வொரு இடத்திலும் 1000 பேருக்கு மருந்து வழங்கப்பட்டது. நமது சார்பில் வழக்குரைஞர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார்.   Dr.சுப்ரியா மற்றும் Dr.கீதா ப்ரியா ஆகியோரின் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கலந்துகொண்டு மருந்துகளை வழங்கினர்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை.

Sunday 26 July 2020

அர்ச்சகருக்குக் கொலை மிரட்டல் விடும் பார்ப்பனர்கள்!

அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சிபெற்ற
மாணவர் சங்கத் தலைவர் அரங்கநாதனை மிரட்டும்  பார்ப்பனர்கள்!

பத்திரிக்கைச் செய்தி
நாள்: 26.07.2020

கருவறையில் 
தமிழ் நுழைந்தாலும்
தமிழன் நுழைந்தாலும்
பெண்கள் நுழைந்தாலும்
தீட்டாகிவிடும் என பாரப்பனர்கள் இன்றுவரை நம்மை தடுத்து வருகிறார்கள்.

ரத்தம் சிந்தி தமிழர்கள் கட்டி, அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில்
சாதி வேறுபாடின்றி தகுந்த பயிற்சி முடித்த அனைவரும் அர்ச்சகராகலாம் எனக் கோரினால் பார்ப்பனர்கள் ஆத்திரம் அடைகிறார்கள்.

அரங்கநாதன் பேட்டி

அனைத்து சாதியினரும் அரசு அலுவலகங்களில் பணிசெய்வது போன்று ஏன் கோவில்களில் பணி செய்ய முடியாது?  பார்ப்பான் பிறப்பால் உயர்ந்தவன், மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற சாதி இழிவை எப்படி ஏற்க முடியும்?

மூடப்பட்ட அனைத்துசாதி அர்ச்சகர் பயிற்சி பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும்.

பெரிய கோவில்களிலும் பயிற்சி முடித்த மாணவர்களை பணியமர்த்த வேண்டும். என முகநூல், வாட்ஸ்அப் என சமூக ஊடகங்களில்  நாங்கள்  தொடர்ந்து  பிரச்சாரம் செய்வதை  பொறுக்க முடியாத சிலர் போனில்  என்னை மிரட்டுகிறார்கள். கடந்த காலத்தில் ஆட்களை வைத்துத் தாக்கினார்கள்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஜுலை 24-ம் தேதி காலையில் 9597187410 என்ற எண்ணிலிருந்து தமிழ்நாடு அந்தணர் சங்கத்தில்  இருந்து மாநிலத் தலைவர் பேசுவதாக ஒருவர் பேசினார்.  பிறகு ஒரு மணிநேரம் கழித்து பிராமணர் சங்கத்தில் இருந்து பேசுவதாக 7548815221 என்ற எண்ணிலிருந்து வேறு ஒருவர் பேசினார்.  பெயர் சொல்லவில்லை. “நீங்கள் ஆகம கோவில்களில் அர்ச்சகராக வரமுடியாது. ஆகமம் இல்லாத கோவில்களில் போகலாம். நீங்கள் என்ன செய்தாலும் நீங்க  ஒரு மயிறும் புடுங்க முடியாது. ஒழுங்கா இருந்துக்கோ” என மிரட்டினார்.

நேரடியாக பார்ப்பனர்களோ அல்லது அவர்கள் தூண்டுதலில் மற்றவர்கள் மிரட்டுவது, தாக்குதலில் ஈடுபடுவது இது முதல் முறை அல்ல. திருவண்ணாமலை அர்ச்சகர் பாடசாலையில் நாங்கள் படித்துக்கொண்டிருந்த பொழுது எங்களுக்கு ஆகமம் கற்றுக்கொடுத்த ஆசிரியரைத் தாக்கினார்கள். அர்ச்சகர் மாணவர்கள் சங்கம் வைத்து செயல்படுவதற்கு எதிராக என்னிடம் பேரம் பேசினார்கள். ஒத்து கொள்ளவில்லை என்பதால் தாக்கினார்கள்.

"கவனமாக அர்ச்சனை செய்யுங்கள்" என சொன்னதற்காக பெண் பக்தரை சிதம்பரம் தீட்சிதர்  கன்னத்தில் அறைந்தான். தேவாரம்பாட சென்ற சிவனடியார் ஆறுமுகசாமியை  தாக்கினார்கள். இன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கோரிக்கைகாக அர்ச்சக மாணவர்களின் பிரதிநிதியாக  பத்திரிக்கை,  தொலைகாட்சிகளில் பேசி வருகிறேன். ஆகையால் பார்ப்பனர்களால் எனக்கும் ஏதாவது நடக்கலாம்.

எனவே தமிழக மக்களின் கவனத்திற்கும், தமிழக அரசின் கவனத்தி்ற்கும் பார்ப்பனர்களின் மிரட்டலை கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதற்காகவே  இந்த பத்திரிக்கை செய்தியை வெளியிடுகிறோம்.

வா.அரங்கநாதன்,
தலைவர்
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் -  தமிழ்நாடு
9047400485

தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் திருவண்ணாமலை

தொடர்புடைய பதிவுகள்

கருவறைத் தீண்டாமைக்கு முடிவு எப்பொழுது?


நீதிமன்றங்களைத் திறக்கக்கோரி திருச்சி வழக்குரைஞர்கள் போராட்டம்!

நீதிமன்றங்களைத் திறக்கக் கோரியும், ஊரடங்கை முழுமையாக நீக்கக் கோரியும் திருச்சி வழக்குரைஞர்கள் போராட்டம்





Thursday 23 July 2020

போராட்டக்களத்தில் தமிழக வழக்குரைஞர்கள்!

அன்புடையீர் வணக்கம்!

22.07.2020 ஆம் தேதி (புதன்கிழமை) நமது கூட்டுக்குழுவின் பொதுக்குழுக்கூட்டம்  மாலை 5 மணியளவில் ' Google Meet' என்ற இணைய வழியாக நடைபெற்றது. மேற்படி கூட்டத்தில் முன்னாள்  தலைவர் திரு. P. திருமலைராஜன் அவர்களும், முன்னாள் பொதுச்செயலாளரும், பார்கவுன்சில் உறுப்பினருமான திரு. MRR. சிவசுப்பிரமணியன் அவர்களும் கலந்து கொண்டனர். 

கரோனா பெருந்தொற்றின் காரணமாக ஊரடங்கு அமுலில் உள்ள நிலையிலியிலும் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களைக் கூறிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினை தெறிவித்துக்கொள்கிறேன். மேற்படி கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. குற்றவியல் சட்டங்களில் திருத்தங்கள் செய்வதற்காக மத்திய உள்துறை  அமைச்சகம் Dr.Ranbir Singh அவர்கள் தலைமையில் அமைத்த 5 பேர் கொண்ட குழுவினை கலைத்திட வேண்டுமென்றும்;

2. மேற்படி குழு அமைக்கப்பட்டதற்கு நமது கூட்டுக்குழுவின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் ஒரு அறிக்கையினை அந்தக் குழுவிற்கு அனுப்பிவைப்பதென்றும்; 

3. கரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் மத்திய அரசு மேற்படி 5 பேர் கொண்ட குழுவினை அமைத்து குற்றவியல் சட்டங்களில் அடிப்படைத் தன்மையை மாற்றி அமைக்கும் விதமாக திருத்தங்கள் கொண்டுவர முற்படுவதால் அதனைத் தடுக்கும் பொருட்டு நாடு தழுவிய மிகப்பெரிய போராட்டம் நடத்தவேண்டியுள்ள நிலையில், அப்படிப்பட்ட  போராட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல தலைவர் தலைமையில் கீழ் கண்ட 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

1. திரு. ப. நந்தகுமார் ( தலைவர், கோவை)

2. திரு. O. சகாபுதீன் ( பொதுச்செயலாளர், திருச்சி)

3. திரு. R. மகேஷ் (பொருளாளர், நாகர்கோவில்)

4. திரு.P. திருமலைராஜன்
(முன்னாள் தலைவர், ஈரோடு)

5. திரு. MRR. சிவசுப்பிரமணியன்
( முன்னாள் பொதுச்செயலாளர்,மற்றும்  பார்கவுன்சில் உறுப்பினர், தஞ்சாவூர்)

6. திரு. V.K. சுப்பிரமணியன்
( துணைத்தலைவர்,  அவினாசி)

7. திரு. தமிழ் இராஜேந்திரன்
 ( அட்வகேட், கரூர்)

8 திரு. கண்ணன்
( துணைத்தலைவர், திருவண்ணாமலை) மற்றும்

9. திரு. செந்தில்குமார்
( துணைத்தலைவர், திருநெல்வேலி 

4. நான்கு மாதங்களாக மூடப்பட்ட நிலையில் உள்ள நீதிமன்றங்களைத் திறக்க வேண்டுமென்றும்,
குற்றவியல் சட்டங்களில் திருத்தங்கள் செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்த 5 பேர் கொண்ட குழுவினை கலைத்திட வேண்டுமென்றும்,  அதனை வலியுறுத்தும் வகையில்
31.07.2020 ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் அந்தந்த நீதிமன்றங்களின் முன்பாக தனி மனித இடைவெளிவிட்டு மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடுத்துவதென்றும்.
ஏகமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ப. நந்தகுமார்
தலைவர்
JAAC

தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் திருவண்ணாமலை

Monday 20 July 2020

சாத்தான்குளப் படுகொலையை திசைதிருப்பும் ஆர்எஸ்எஸ் மாரிதாஸ்!

ஊடகவியலாளர்களைச் சாடுவதன் மூலம் சாத்தான்குளம் காவல்நிலைய லாக்கப் படுகொலையை திசை திருப்புகிறார் ஆர்எஸ்எஸ் சின் மாரிதாஸ் என்பதை விளக்குகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள்.

நன்றி:ARAKALAGAM tv



சாத்தான்குளம் படுகொலை: CBI விசாரணை ஒரு கண்துடைப்பு!

சாத்தான்குளம் காவல்நிலைய லாக்கப் படுகொலை விசாரணை சிபிஐக்கு மாற்றம். இது ஒரு மோசடி என்பதை விளக்குகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்கள்.
நன்றி: Arakalagam tv


மலத்தைத் தின்னு! இல்லை கையால் அள்ளு!

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், கோடாரம்பட்டி கிராமத்தில், பள்ளிச் சிறுவனை மலத்தைக் கையால் அள்ளச் சொல்லிய ஆதிக்கச் சாதி  நபர் ராஜேசகர்.

15.07.2020 மாலை 5 மணிக்கு கோடாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவருக்குச் சொந்தமான புதர்மண்டிக் கிடக்கும் காலி இடத்தில்  அந்தக் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டச் சாதியைச் சேர்ந்த மாணவன் இயற்கை உபாதையால் மலம் கழித்துள்ளார். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த ராஜசேகர் சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தி  மலத்தைக் கையால் அள்ளிச் சென்று அருகில் உள்ள ஏரியில் போட கட்டளையிட்டுள்ளார். "மலத்தை நீ தின்னு! இல்லை கையில் அள்ளு"   என்று கேட்டு அடித்துள்ளார். மலத்தை அள்ளி வீசிவிட்டு மலக்கையுடன் வீட்டிற்குச் சென்றுள்ளான் அச்சிறுவன். இதைக் கண்ட அவனது தந்தை பதறிப் போய் உள்ளார்.  பின்னர் பென்னாகரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து,  அப்புகாரின் மீது பென்னாகரம் காவல் நிலையத்தில் கு. எண் 1090/2020 U/s 323 I.P.C உடன் இணைந்த 3 (1) (i) SC/ST Act 1989 வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தையின் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டு அதன் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை கூறும்போது, புகார் கொடுப்பதற்கு காவல் நிலையத்திற்குச் சென்ற பொழுது அருகிலுள்ள புகார் பெட்டியில் போட்டு விட்டுச் செல்லுங்கள் என்று போலீசார் அலட்சியமாக கூறியிருக்கிறார்கள்.  பெட்டியில் போட்டு விட்டு வெளியே வரும்போது மீண்டும் அழைத்து விசாரிக்கும் பொழுது "அடுத்தவர் நிலத்தில் ஏன் மலம் போனீங்க?" என்று அங்கு இருக்கின்ற காவலர் கேட்டிருக்கிறார்.
சிறுவன்

சிறுவனின் தந்தை

இதை விசாரிப்பதற்காக 18.07.2020 ஆம் தேதி இரவு சுமார் 10 மணிக்குச் சென்ற  மாவட்ட ஆட்சித் தலைவர்  "அரசு கழிவறை கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதில் கழிக்காம ஏன் அங்கே போனான்?" என்று  கேள்வி கேட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பள்ளி மாணவனுக்கும் அவரது குடும்பத்திற்கும் எவ்வித ஆறுதலும் கூறாமல் மாவட்ட ஆட்சியர்
இவ்வாறு கேட்டு, ஆதிக்கச் சாதி ஆணவத்திற்கு வலு சேர்க்கும் விதமாக நடந்து கொண்டிருக்கிறார். காவல் துறையினரோ புகாரை பெற்று உடனே வழக்குப்பதிவு செய்வதற்குப் பதிலாக குறை கண்டுபிடித்திருக்கிறார்கள். அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீது பொய் வழக்கு போட்டு, மொத்த வன்கொடுமை சட்டவழக்கினுடைய அடிப்படையையே மாற்றி அமைப்பதற்கான வேலையை செய்திருக்கிறது போலீஸ். மலத்தை அள்ளச் சொன்னவரை காவல் நிலையத்தில் வைத்தே கைது செய்திருக்க முடியும்.  ஆனால் அவரைத் தப்பிக்க விட்டிருக்கிறது போலீஸ்.

வழக்கமாக எந்த வழக்கையும் காவல்துறை பதிவு செய்வதில்லை. ஆதிக்கச் சாதி நபர் கொடுத்த வழக்கு பொய் வழக்கு என்று தெரிந்தே அதை பதிவு செய்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி போடப்பட்ட வழக்கின் அனைத்து அம்சங்களையும் உடைத்தெறிவதற்கு வேலையை செய்திருக்கிறது காவல்துறை. இப்படி காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் ஒன்றிணைந்து கொண்டு தருமபுரி மாவட்ட தலித் மக்களின் மீது திணிக்கிற வன்கொடுமைகளை எவ்வாறு தடுத்து நிறுத்திட முடியும்? ஒரு சிறுவன் தனக்கு பாத்ரூம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிந்தும் ஏதோ குற்ற நோக்கத்தில் ராஜசேகர்  காலி நிலத்தில் இயற்கை  உபாதைகள் கழித்ததாக சித்தரிப்பதும் கூட ஆதிக்க சாதி மனோபாவம் ஆகும்.

பாதிக்கப்பட்டவர்களிடமே குறை கண்டு மொத்த பாதிப்பையும் நீர்த்துப்போகச் செய்வது என்பது அதிகார வர்க்கம் கண்டுபிடித்திருக்கிற சட்டம் கெட்ட வழியாகும்.

தகவல்.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
தருமபுரி

மூத்த வழக்குரைஞர் முத்து கிருஷ்ணன் அவர்களுக்கு இதய அஞ்சலி!

நம்முடன் இணைந்து நீண்ட காலமாக மனித உரிமை செயல்பாட்டாளராக இருந்த மூத்த வழக்குரைஞர் முத்து கிருஷ்ணன் அவர்கள் நம்மை விட்டு பிரிந்தது மிகவும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

தன்னளவில் கடவுள் நம்பிக்கை உடையவராக இருந்தாலும், இந்துத்துவ மதவெறியை தூண்டி, நாட்டை துண்டாடும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜெ.பி. இந்துத்துவக் கும்பலை எதிர்த்து தன் வாழ்நாள் முழுவதும்  பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தவர். ஆரம்ப காலங்களில் காங்கிரஸ், ஜனதா கட்சியில் இருந்தவர். அவர் பேசிய உரைகள் இன்றைக்கும் சமூக வலைத்தளங்களில் இருக்கின்றன.


  • அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010 ம் ஆண்டு அயோத்தி வழக்கிற்கு வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து நாம் நடத்திய கருத்தரங்கத்திலும், பின்பு உச்ச நீதிமன்றம் அயோத்தி வழக்கிற்கு வழங்கிய இறுதித் தீர்ப்பினை எதிர்த்து நாம் கடந்த ஆண்டு நடத்திய கருத்தரங்கத்திலும், சமீபத்தில் செய்த பெரிய அறுவை சிகிச்சை செய்திருந்த போதிலும் பங்கேற்று, தனது எதிர்ப்பைத் தெளிவாகவும், துணிவாகவும் முன்வைத்தார்.

இவர் தொடர்ந்து நாம் முன்னெடுக்கும் சட்ட ரீதியான செயல்பாடுகளுக்கு ஆலோசனை தந்துகொண்டும், நம்முடைய நல்ல சமூக செயல்பாடுகளுக்கு ஆதரவு அளித்துக் கொண்டும் நம்மை அன்பாக அரவணைத்தும் வந்தார். நாம் வயதில் சிறியவர்கள், இளைஞர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் சமமாகவும், நட்பாகவும் பழகும் தம்மை உடையவர்.

அவருக்கு வயது 79. அவருடைய மகன் அருண்குமார் மூலம் நாம் இரங்கல் செய்தியை அறிந்தோம். மேலும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அரசியல் நண்பர்கள் அனைவருக்கும் இவரது இழப்பு ஈடு செய்ய இயலாத ஒன்று. அவர்கள் அனைவருக்கும் எங்களது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
சென்னை.

தொடர்புடைய பதிவுகள்:
CAA வுக்கு எதிரான அவரது உரை
https://m.facebook.com/story.php?story_fbid=2542734939345536&id=244283735645979&sfnsn=scwshwa&extid=1tIcmRnBOstpREYn&d=w&vh=e

கருவறைத் தீண்டாமைக்கு முடிவு எப்பொழுது?

அரசுப் பள்ளி அர்ச்சக மாணவர் தியாகராஜன்
மதுரை நாகமலை கோவிலில் நியமனம்!

மீனாட்சி அம்மன் கோவிலில்
நியமிக்கப்படாதது ஏன்?

203 மாணவர்களுக்கு
பணி நியமனம் வழங்கு!

சைவ, வைணவ அர்ச்சகப் பள்ளிகளை
மீண்டும் திற!

பெண்களையும் அர்ச்சராக்கு!

வா.ரங்கநாதன்,
தலைவர்,
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் - தமிழ்நாடு

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் - தமிழ்நாடு
(PEOPLE’S RIGHT PROTECTION CENTRE - TAMILNADU)

Friday 17 July 2020

சாத்தான்குளம் லாக்கப் படுகொலை! சிபிஐயிடம் நீதி கிடைக்குமா?


'தமிழ் முருகனும்' "நேபாள ராமனும்!"

கருப்பர் கூட்டமா? காவிக் கூட்டமா? 

எச்.ராஜாக்கள் ஏன் அலறுகிறார்கள்?

கருப்பர் கூட்டம் கைது! சட்டப்படி சரியா?

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்களின் உரை.


நன்றி: ARAKALAGAM TV