Wednesday 28 October 2020

திருமா மீது வழக்கு: சென்னை வழக்குரைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் டாக்டர் தொல்.திருமாவளவன் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை இரத்து செய்ய வேண்டும். 

வெட்டிச் சிதைக்கப்பட்ட காணொளியைப் பரப்பி  பொய் வழக்குப் போட காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜனநாயக வழக்குரைஞர் சங்கம் சார்பில்  சென்னை உயர்நீதி மன்றம் வாயிலில்  கண்டன ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் சமூக அக்கறை கொண்ட வழக்குரைஞர்கள் கலந்துகொண்டனர். வழக்குரைஞர் பாரதி தலைமை தாங்கினார்.  வழக்குரைஞர்கள் கண்டன உரை ஆற்றினர்.

இதில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சென்னை செயலர் மில்டன் கண்டன உரையாற்றினார். PRPC வழக்குரைஞர்களும் கலந்து கொண்டனர்.

தகவல்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை




Saturday 17 October 2020

கரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்குவதில் முறைகேடு!

கரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்குவதில் முறைகேடு. மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநிலப் பொருளாளர் லயனல் அந்தோணிராஜ் அவர்களுடன் நேர்காணல்.


மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

Wednesday 14 October 2020

"மக்கள் நலன்" என்ற பெயரில் தொடரும் ஸ்டெர்லைட்டின் சதித்தனம்!

ஸ்டெர்லைட்டின் கைக்கூலிகள் விநியோகம் செய்த SDR தண்ணீர் கேன்கள் சோரீஸ்புரத்தில் தடுத்து நிறுத்தம்:

தூத்துக்குடி, அய்யனடைப்பு-சோரீஸ்புரம் பகுதியில் இன்று (14-10-2020) காலை 7.00 மணியளவில் ஒரு தனியார் வாகனத்தில் SDR குடிதண்ணீர் கேன்கள் மூலம் இலவசமாக ஸ்டெர்லைட் ஆதரவாளர்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டது. கேன் தண்ணீர் வாங்குபவர்களுக்கு ஸ்டெர்லைட் ஆலையின் "தாமிர சுரபி" என்ற பிரிண்ட் செய்யப்பட்ட QR கோடுடன் உள்ள அடையாள அட்டை கொடுக்கப்பட்டு, செல்போன் மூலம் ஸ்கேன் செய்து விவரக்குறிப்புகள் பெற்று பதிவுசெய்து கொண்டு அதன் பின்னர் தண்ணீர் கொடுக்கிறார்கள்.

இதை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் அரசின் அனுமதியில்லாமல் தண்ணீர் விநியோகம் செய்த வாகனத்தை தடுத்து நிறுத்தினார்கள். தண்ணீர் விநியோகம் செய்த நபர் தண்ணீர் கேன்களை அப்படியே போட்டுவிட்டு தப்பியோடிவிட்டார்.

கிராம நிர்வாக அலுவலருக்கும், சிப்காட் காவல் துறையினருக்கும் மற்றும் உளவுத்துறை போலீசுக்கும் தகவல் கூறினார்கள். ஆனால் பிடிபட்டது "ஸ்டெர்லைட் விவகாரம்"  என்பதால் யாருமே சம்பவ இடத்திற்கு வரவில்லை. இதனால் சோரீஸ்புரம் பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு திரண்டு சென்று எழுத்துப் பூர்வமான புகார் ஒன்றை கொடுத்து 30 க்கும் மேற்பட்ட தண்ணீர் கேன்களையும் ஒப்படைத்துள்ளனர். புகாரை பெற்ற கிராம நிர்வாக அலுவலர் "தான் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது, காவல்துறையினர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். "உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், காவல்துறையை வரச்சொல்லுங்கள்" என்று விடாப்பிடியான போராட்டத்திற்கு பிறகு காவல்துறையினர் பகல் 12.00 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்தனர். அதன்பிறகு தண்ணீரை தடுத்து நிறுத்திய சோரீஸ்புரம் இளைஞர்களை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு கூறிச்சென்றுள்ளனர்.

அதன்பிறகு  நமது ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நாமும் சட்ட உதவிக்கு காவல் நிலையம் சென்றோம். நடந்த விபரத்தை எழுதி புகாராக காவல் ஆய்வாளரிடம் கொடுக்கப்பட்டது. விசாரணையின் முடிவில் அரசின் அனுமதி இல்லாத காரணத்தால் தண்ணீர் விநியோகம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறாக பல மணிநேர போராட்டத்திற்கு பிறகுதான், புகார் கொடுக்கும் நபர்கள் உறுதியாக இருந்ததைக் கண்டுதான் குறைந்தபட்சம் இதையாவது செய்தார்கள். 

சென்னை உயர்நீதிமன்றத்தின் ஸ்டெர்லைட்டை மூடிய உத்தரவிற்குப் பிறகு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடத்துவது குறித்து குமரெட்டியாபுரம் மக்களை சந்திக்க மக்கள் கூட்டமைப்பினர் சென்றபோது ஊருக்குள் நாங்கள் சென்ற 2-வது நிமிடத்தில் தலையாரி வந்தார். "ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் வந்தால் உடனடியாக தகவல் சொல்ல எனது மேலதிகாரிகள் உத்தரவிட்டுள்ளார்கள், அதனால் என்னை தப்பாக நினைக்க வேண்டாம், உங்கள் பெயர் முகவரியை கொடுங்கள்" என்றார். அதன்பிறகு 5-வது நிமிடத்தில் சிப்காட் காவலர்கள் புயல் வேகத்தில் வந்தனர். எங்களை விசாரித்தனர்.

ஆனால் இன்று தகவல் சொல்லி சுமார் 5 மணி நேரத்திற்கு பின்புதான் காவல்துறை வருகிறது. காவல்துறை இவ்வளவு காலதாமதமாக வருவதற்குள் சம்பவ இடத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பேற்பது?  ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் அடித்துச் சாகட்டும் என்று சிப்காட் காவல்துறை நினைத்துக் கொள்கிறதா? இதுபோல சம்பவங்கள் தொடர்வதால் ஜனநாயக பூர்வமான போராட்டங்களை மீண்டும் மக்கள் எடுக்க வேண்டிய சூழல்  ஏற்பட்டுள்ளது.

எனவே, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி வரும் நிலையில் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல் துறையும் ஸ்டெர்லைட் ஆதரவாளர்களை கடுமையாக எச்சரித்து சட்டப்படியான நடவடிக்கைகளை அவர்கள் மீது மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள்  உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக அமைதியாக இருக்கிறார்கள். ஆனால் ஸ்டெர்லைட் கைக்கூலிகளின் நோக்கம் அதுவல்ல. சட்டம் ஒழுங்கை கெடுப்பதுதான் அவர்கள் திட்டம்.

இப்படியே சதித்தனமான வேலைகளை "மக்கள் நலன்" என்ற பெயரில் ஸ்டெர்லைட் ஆலை அரங்கேற்றுவதை தூத்துக்குடி மக்கள் அறியாமல் இல்லை. அமைதி காக்கிறார்கள். சட்டம் ஒழுங்கை மதிக்கிறார்கள். ஆனால் ஸ்டெர்லைட் ஆரவாளர்கள் நீதிமன்ற உத்தரவையும், தமிழக அரசின் அரசாணையையும் எப்போதுமே மதிப்பதில்லை என்பது தூத்துக்குடி மக்களுக்கு தெரியாததா? வேதாந்தா கார்ப்பரேட்டால் அரசு துறைகளின் கைகள் கட்டப்பட்டுள்ளன. நாம் தான் கட்டவிழ்க்க வேண்டும்.

ஸ்டெர்லைட்டின் கடைசி செங்கலும் அகற்றப்படும் வரை தூத்துக்குடி தூங்காது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு.

9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.