Monday 22 March 2021

மதுரையில் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கம்!

ஒரு பக்கம் கோடையின் வெக்கை; கரோனா இரண்டாவது அலையின் அச்சுறுத்தல். மறுபக்கம் கார்ப்பரேட் காவிப் பாசிசம் எனும் அரசியல் கரோனா. இது முன்னெப்போதைக் காட்டிலும் கொடும் பெரு நெருப்பைக் கக்கத் தேர்தல் எனும் சாரதியில் தன்பரிவாரங்களோடு படையெடுத்து வருகிறது.

பருவகாலத் தொல்லைகளும், பெருந்தொற்று இழப்புகளும் தற்காலிகமானவைதான்; சிறிது விலை கொடுத்தாலும் நம்மால் எளிதாய் பழைய நிலைக்கு மீண்டுவிட முடியும். ஆனால் காவிப் பாசிசம் எனும் அரசியல் கரோனா நம்மைக் கவ்விவிட்டால், அழிவு ஒன்றைத் தவிர வேறு எதுவும் மிஞ்சாது. சிறு துரும்பெனினும் கிடைத்ததைக் கொண்டு நம்மைத் துரத்தும் காவிப் பாசிசம் எனும் அரசியல் கரோனாவை குறைந்தபட்சம் தட்டிவிடக்கூட முயலவில்லை எனில் இளைப்பாறக்கூட வழியின்றி நாம் வீழ்த்தப்படுவோம். எனவே நாம் இன்று விழித்தெழ வேண்டியது காலத்தின் கட்டாயம்.

பெரியாரிய-அம்பேத்கரிய-மார்க்சிய கருத்தியலைக் கண்டு தமிழகத்தில் தனது வாலை நுழைக்க அஞ்சிய பார்ப்பனியம், இன்று சாதி-மத-பிழைப்புவாதக் கூட்டங்களை ஒருங்கிணைத்துக் கொண்டு அதிமுக-பாஜக-பாமக கூட்டணி என்ற பெயரில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் நேரடியாகக் களத்தில் இறங்கி உள்ளது. தமிழ்த் தேசியம்-ஊழல் ஒழிப்பு என்ற போர்வையில் நாம் தமிழர்-மக்கள் நீதி மய்யம் மற்றும் ‘அம்மாவின்’ பெயரில் தமிழகத்தையே ஆட்டயப் போட்ட தினகரன் வகையறாக்கள் காவிகளின் வாலாக தனித்தனியாகக் களம் காண்கின்றனர்.

அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்குத் தாரைவார்க்கப்படுகின்றன. நாட்டின் கனிம வளங்களைக் கொள்ளையடிக்க காடுகள் கார்ப்பரேட்டுகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. ஹைட்ரோ கார்பன்-மீத்தேன், எட்டுவழிச் சாலை என எண்ணற்ற திட்டங்கள் கார்ப்பரோட்டுகளின் நலனைக் காப்பதற்காகத் தீட்டப்படுகின்றன.

குடியுரிமை திருத்தச் சட்டங்கள், வேளாண் திருத்தச் சட்டங்கள், தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்கள், மின்சாரத் திருத்தச் சட்டம், காஷ்மீருக்கான 370 நீக்கம் என எண்ணற்ற மக்கள் விரோதச் சட்டங்கள் நாளும் அரங்கேறி வருகின்றன.

ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே சட்டம் என்ற போர்வையில் சிறுபான்மை மக்களின் மொழி, உணவு உள்ளிட்ட பண்பாட்டு உரிமைகள் நசுக்கப்பட்டு வருகின்றன. மாட்டிறைச்சி வைத்திருந்தற்காக இஸ்லாமிய மற்றும் தலித் சிறுபான்மை மக்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்படுகின்றனர்.

அரசின் மக்கள் விரோத் திட்டங்களையும், சட்டங்களையும், செயல்பாடுகளையும் எதிர்த்துக் கேள்வி எழுப்பும் சமூகச் செயற்பாட்டாளர்கள் ‘ஊபா’ (UAPA)-தேசியப் புலனாய்வு முகமைச் (NIA) சட்டங்கள் மூலம் கைது செய்யப்பட்டு ஆண்டுக் கணக்கில் சிறை படுத்தப்படுகின்றனர். படுகொலை செய்யப்பட்ட போராளிகளின் இறுதி நிகழ்வில் பங்கேற்பவர்கள்கூட ‘ஊபா’ சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். ஒரு கொடியப் பாசிச காட்டாட்சியை நோக்கி இந்தியா இழுத்துச் செல்லப்படுகிறது.

கார்ப்பரேட் காவிப் பாசிஸ்டுகளின் கொடும் பற்கள் நம்மைக் கடித்துக் குதர துரத்திக் கொண்டு வருகிறது. தேர்தல் மூலம் அவர்களை நம்மால் முற்றிலுமாக விரட்டிவிட முடியாது என்றாலும், நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவாவது அவர்களின் வேகத்தைிற்குத் தடை ஏற்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

இந்தத் தேர்தல் தமிழக மக்களுக்கு வாழ்வா சாவாப் போராட்டம். இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதைவிட யார் வீழ்த்தப்பட வேண்டும் என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். ஆம்! வீழ்த்தப்பட வேண்டியர்கள் கார்ப்பரேட்-காவி பாசிஸ்டுகளின் நேரடிக் கூட்டாளிகளான பாஜக-அதிமுக-பாமக கூட்டணியும் மற்றும் திரைமறைவில் காவிகளின் பினாமிகளாக உலாவரும் சீமானின் நாம் தமிழர்-கமலின் மக்கள் நீதி மய்யம் மற்றும் தினகரனின் அமமுக-வினருமே என்பதை தமிழக மக்கள் கவனத்தில் கொண்டால் குறைந்தபட்சம் தமிழகமாவது தப்பிக்கும்.

இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக் கிளை சார்பாக 21.03.2021 அன்று மாலை மதுரையில் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பேராசிரியர் அ.சீனிவாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் தொடக்க உரை நிகழ்த்தினார்.

“பாசிசமா? ஜனநாயகமா? விழித்தெழு தமிழகமே!” என்ற தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநிலத் தலைவர் தோழர் மதுக்கூர் இராமலிங்கம் அவர்களும், “பாசிசத்தின் ஆயுதமாக ‘ஊபா’ (UAPA)-எதிர் கொள்வது எப்படி?”  என்ற தலைப்பில் பெங்களூரு உயர்நீதி மன்ற வழக்குரைஞர் எஸ்.பாலன் அவர்களும் சிறப்புரையாற்றினர். மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் கோவன் தலைமையிலான கலைக்குழுவினர் எழுச்சிகரமானப் பாடல்களைப் பாடி கலை நிகழ்சிகள் நடத்தினர். இறுதியாக மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் லயனல் அந்தோனி ராஜ் அவர்கள் நன்றி கூறினார். நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இக்கருத்தரங்கம் உரிய நேரத்தில் சரியானக் கருத்தைத் தமிழக மக்களுக்கு உணர்த்தியுள்ளது என்றே கருதுகிறோம்..


செய்தித் தொகுப்பு
பொன்.சேகர்

தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
மதுரை மாவட்டக் கிளை

அ.சீனிவாசன்

சே.வாஞ்சிநாதன்

லயனல் அந்தோனி ராஜ்


மதுக்கூர் இராமலிங்கம்




எஸ்.பாலன்






No comments:

Post a Comment