Thursday 17 December 2020

வேளாண் சட்டங்கள்: சொரணை அற்றவர்கள் சொரணை உள்ளவர்களை உரசிப் பார்க்கிறார்கள்!

 வேளாண் சட்டங்கள் 

  1. விளைபொருள் ஊக்குவிப்புச் சட்டம் என்று சொல்லக்கூடிய விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தகச் சட்டம்.

  2. ஒப்பந்தச் சாகுபடிச் சட்டம் என்று சொல்லக்கூடிய விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் சட்டம்.

  3. அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்.


மேற்கண்ட மூன்று சட்டங்களும் கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் கொண்டுவரப்பட்டு 05.05.2020 முதல் நடைமுறைக்கு வந்துவிட்டது.


இவை விவசாயிகளுக்கு எதிரானவை மட்டுமல்ல மாநில உரிமைகளையும் பறிக்கக் கூடியவை என்பதனால் பஞ்சாப் சட்டசபையில் ஆகஸ்டு 28 அன்று இச்சட்டங்களை ஏற்க முடியாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஹரியானாவிலும் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.


விவசாயிகளிடம் இருந்து முப்பது ரூபாய்க்கு வாங்கப்படும் ஆப்பிள் நம்மிடம் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதுவரை இடைத்தரகர்கள் கொள்ளையடித்த அந்த 70 ரூபாயும் விவசாயிகளுக்கு சென்றடையும்; அதேபோல மிளகாய் சாகுபடி செய்யும் விவசாயிகள் மிளகாய்பொடி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு நேரடியாக விற்பனை செய்து அதிக லாபம் பெற முடியும் என்றும், காஷ்மீரில் இருக்கின்ற விவசாயி நேரடியாக தமிழகத்திலும், தமிழகத்தில் உள்ள விவசாய நேரடியாக காஷ்மீரிலும் இணையவழி மூலம் தங்களுடைய உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்து அதிக லாபம் பெற முடியுமென்றும், இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவதால் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும் என்றும் இந்தச் சட்டங்களை ஆதரிப்போர் பேசி வருகின்றனர். இவையெல்லாம் உண்மையா என்பதை அந்தச் சட்டங்களை முழுமையாக தெரிந்து கொண்டால்தான் புரிந்து கொள்ள முடியும். 


முதல் இரண்டு சட்டங்களும் மாநில உரிமைகளைப் பறிக்கக்கூடியவை. வேளாண்மை, நிலம், சந்தை, விவசாய வருமானத்தின் மீதான வரிகள், நிலம் தொடர்பான வரிகள், நிலத்தின் மீதான உரிமைகள் இவை அனைத்தும் இந்திய அரசியல் சட்டம் அட்டவணை 7 ன் கீழ் பட்டியல் 2 அதாவது மாநிலப் பட்டியலில் (14, 18, 28, 46, 47, 48, 49) வரக்கூடியவை.  மாநில அரசுகளின் அதிகாரங்களை மத்திய அரசு பறித்துக் கொண்டு விட்டது. இதன் மூலம் மாநில அரசு தன்னுடைய அதிகாரத்தை இழந்தது மட்டுமல்ல கணிசமான வருவாயையும் இழக்க வேண்டி வரும். இந்தக் குறைந்தபட்ச அறிவுகூட இல்லாமல் எடப்பாடி அரசு இந்தச் சட்டங்களை வரவேற்கிறது.


விலை பொருள் ஊக்குவிப்புச் சட்டம்


காஷ்மீர் ஆப்பிளை தமிழகத்தில் விற்பனை செய்வதற்கும் தமிழக அரிசியை காஷ்மீரில் விற்பனை செய்வதற்கும் ஏற்கனவே சுதந்திரம் மறுக்கப்பட்டு வந்தது போல ஒரு பொய் தோற்றத்தை உருவாக்கி இனி மாநிலங்களுக்கு உள்ளேயும் மாநிலங்களுக்கு இடையிலும் இணைய வழி மூலமாக வர்த்தகம் செய்வதற்கு சுதந்திரம் அளிக்கப்படுவதாக இந்தச் சட்டம் சொல்கிறது. வர்த்தகம் முடிந்த அன்றோ அல்லது மூன்று நாட்களுக்குள்ளோ பொருளுக்கான தொகையை செலுத்தி விட வேண்டும் என்கிறது சட்டம். ஆனால் எந்த ஒரு தனிநபரும் இந்த வர்த்தகத்தில் ஈடுபட முடியாது (பிரிவு:5). கூட்டுறவு அமைப்புகள் மூலம்தான் இணையவழி வர்த்தகத்தைச் செய்ய முடியும். இந்த கூட்டுறவு அமைப்புகளை யார் உருவாக்குவார்கள், அதிகாரம் யார் கையில் இருக்கும் என்பது குறித்து எந்த விளக்கமும் சட்டத்தில் இல்லை. 


பொருளை விற்ற விவசாயிக்கும் பொருளை வாங்கிய வியாபாரிக்கும் வர்த்தகத்தில் பிரச்சினை ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர் வருவாய் கோட்ட அலுவலர் அல்லது உதவி ஆட்சியர் பொறுப்பிலுள்ள அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தால் அவர் ஒரு சமரசக் குழுவை ஏற்படுத்துவார். அதில் அவரோ அல்லது அவரால் நியமிக்கப்படும் ஒரு அரசு அதிகாரியோ தலைவராக இருப்பார்.  இருதரப்பிலிருந்தும் ஒருவரோ அல்லது இருவரோ அந்தக் குழுவில் இடம் பெறலாம். குறைந்தபட்சம் இரண்டு பேர் அதிகபட்சம் நான்கு பேர் இடம் பெறலாம். இந்த ஏற்பாட்டை 7 நாட்களுக்குள் அந்த அதிகாரி செய்து முடிக்க வேண்டும். அதன்பிறகு இரு தரப்பையும் விசாரித்து 30 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவருக்குப் பணம் செலுத்தவோ அல்லது அபராதம் செலுத்தவோ அல்லது வர்த்தகத்தை தடை செய்தோ உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றால் பாதிக்கப்பட்டவர் மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம். அவர் அதன்மீதான உத்தரவை 30 நாட்களுக்குள் பிறப்பிக்க வேண்டும். 90 நாட்கள் வரைகூட மேல்முறையீடு செய்ய இச்சட்டம் அனுமதிக்கிறது. (பிரிவு:8). அதிகாரிகள் பிறப்பிக்கும் இந்த உத்தரவுகள் உரிமையியல் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புக்குச் சமமானது. 


ஒரு கிராம நிர்வாக அலுவலரை சந்திப்பதே ஒரு விவசாயிக்கு குதிரைக்கொம்பாக இருக்கும்பொழுது தான் விற்ற பொருளுக்கு பணம் கிடைக்கவில்லை என்று கோட்ட வருவாய் அலுவலர் அல்லது மாவட்ட ஆட்சியரை அவ்வளவு எளிதில் சந்தித்துவிட முடியுமா? அல்லது அந்த விசாரணைக் குழுவில் தனது வாதங்களை முன்வைத்து வாதிட முடியுமா? இணையவழி வர்த்தகத்தை ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் வைத்துள்ள சிறு குறு விவசாயிகள் எண்ணிக்கூடப் பார்க்க முடியாது. விற்ற பொருளுக்கான பணம் கைக்கு வராதது மட்டுமல்ல, இதற்கான செலவுகளும் கூடுதலாக விவசாயி தலையில்தான் விழும். 


இதுகுறித்த முழு அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு (பிரிவு:12), மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக எந்த நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுக்க முடியாது (பிரிவு:13), விவசாய உற்பத்தி சந்தை குழு (APMC-Agriculture Produce Market Committee) உள்ளிட்ட மாநில அரசின் சட்டங்கள் அனைத்திற்கும் மேலானது இந்த சட்டம் (பிரிவு:14), உரிமையியல் நீதிமன்றங்கள் தலையிட முடியாது (பிரிவு:15) என மாநில அரசு, நீதிமன்றங்கள், வழக்குரைஞர்கள் என அனைவரின் உரிமைகளையும் பறித்து விட்டது இந்தச் சட்டம்.


இணையவழி விற்பனையை ஊக்குவிப்பதன் மூலம் விளை பொருட்களை கொள்முதல் செய்யும் கடமையை அரசு கைவிடுகிறது. வேளாண்மை விளைபொருள் விற்பனை கூடங்கள் இனி இருக்காது. வேண்டிய மட்டும் கார்ப்பரேட் முதலாளிகள் விளைபொருட்களை வாங்கிக் குவித்துக் கொள்வார்கள். இணையவழியில் யாரும் வாங்க முன்வரவில்லை என்றால் விளைந்த பொருளை தனியாரிடம் அடிமாட்டு விலைக்குதான் விவசாயி விற்க வேண்டும். அதற்கும் வழி இல்லை என்றால் சாலையில்தான் கொட்டவேண்டும். 


கொள்முதலை அரசு கைவிடுவதால் இனி தானியக் கிடங்குகள் இருக்காது. தானியக் கிடங்குகள் இல்லை என்றால் நியாய விலைக் கடைகளுக்கு பொருட்கள் கிடைக்காது. கார்ப்பரேட் முதலாளிகளிடம் இருந்து கூடுதல் பணம் கொடுத்து அரசு நியாயவிலைக் கடைகளை நடத்த முன் வருவதற்கான வாய்ப்பே கிடையாது. நியாயவிலைக் கடைகளை நம்பி உயிர் வாழும் 76 கோடி மக்களின் உயிர்வாழும் உரிமையை இந்த சட்டம் பறித்து விடுகிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 21 வழங்கியுள்ள உயிர்வாழும் உரிமைக்கு எதிரானது இந்தச் சட்டம். 


ஒப்பந்தச் சாகுபடிச் சட்டம்


பணக்கார விவசாயிகள் அல்லது பண்ணையார்கள் வேண்டுமானால் தனிப்பட்ட முறையில் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும். சிறு குறு விவசாயிகள் அப்படி செய்வது நடைமுறை சாத்தியமில்லை. அவர்கள் ஒரு சிலர் சேர்ந்து சங்கமானால் மட்டுமே ஒப்பந்தம் சாத்தியமாகும். அப்படிச் சங்கமாகும் போது அவர்களது சங்கம் பதிவு செய்யப் வேண்டும் என்கிறது சட்டம் (பிரிவு: 2). ஒருமுறை பதிவு செய்வதற்கான கட்டணம் அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் அதைப் புதுப்பிப்பதற்கான கட்டணம். இது ஒரு தனி செலவு அலைச்சல்.


விலை பொருளின் தரம், எப்பொழுது தர வேண்டும், விலை என்ன என்பதை எல்லாம் முன்கூட்டியே ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும் (பிரிவு:2-g, 3). விளைபொருளின் தரத்தை முன்கூட்டியே தீர்மானிப்பதற்கான அளவுகோல் என்ன? விலையைத் தீர்மானிப்பதற்கான அளவுகோல் என்ன? என்பது பற்றியெல்லாம் எந்த விளக்கமும் சட்டத்தில் இல்லை. ஒரு விளை பொருளின் தரம் விதையின் தன்மை, மண்ணின் தன்மை, நீர், உரம், பூச்சி மருந்து, வறட்சி வெள்ளம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் மாறுபடும். அப்படி இருக்க முன்கூட்டியே தரத்தைத் தீர்மானிப்பது இறுதியில் விவசாயிக்குத்தான் பிரச்சனையை ஏற்படுத்தும். 


ஒப்பந்தப்படி வேளாண்மை நடைபெறுகிறதா என்பதை இடையில் ஒரு மூன்றாம் நபரை வைத்துச் சான்றிதழ் பெற வேண்டும் (பிரிவு: 4). இதற்கான செலவு யார் தலையில் விழும்?


விளை பொருளைத் தரும்பொழுது ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விலையில் மாற்றம் ஏற்பட்டால் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி தொகையைக் கொடுக்க வேண்டும்.  வெளிச் சந்தையில் கூடுதல் விலை போகும் பட்சத்தில் அந்த கூடுதல் தொகையை தீர்மானிப்பதற்கான அளவுகோலாக அரசின் குறைந்த பட்ச ஆதார விலை அல்லது இணையவழி சந்தையில் விலை நிலவரம் ஆகியவற்றை வைத்து தீர்மானிக்க வேண்டும் என்கிறது சட்டம் (பிரிவு: 5). அவ்வளவு சுலபமாக ஒப்பந்தம் போட்ட முதலாளிகள் கொடுத்து விடுவார்களா என்ன? இந்தப் பஞ்சாயத்தை யார் தீர்ப்பது? கடைசியில் நட்டம் என்னவோ விவசாயிக்குதான்.


விளைபொருளை விளைந்த இடத்திலேயே வந்து ஒப்பந்தம் செய்து கொண்டவர் சோதனை செய்த பிறகு  எடுத்துச் செல்ல வேண்டும். விதைக்கான ஒப்பந்தம் என்றால் பொருளை பெற்றுக் கொண்டவுடன் மூன்றில் இரண்டு பங்குத் தொகையை உடனே செலுத்தி விட வேண்டும். மீதித் தொகையை 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். மற்ற விளை பொருட்களுக்கு பொருளைப் பெற்றுக் கொண்ட உடனேயே முழுத் தொகையையும் செலுத்தி விட வேண்டும் (பிரிவு: 6). ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி தரம் இல்லை என்று சொல்லி பொருளை எடுத்துச் செல்லவோ அல்லது பணத்தைத் தர மறுக்கவோ அல்லது பணத்தை தர தாமதிக்கவோ எல்லா சாத்தியக்கூறுகளும் உண்டு. இந்தச் சூழல் ஏற்பட்டால் நட்டம் என்னவோ மீண்டும் விவசாயிக்குத்தான். 


ஒப்பந்த விவசாயத்தில் வாங்கும் விளைபொருட்களை எவ்வளவு வேண்டுமானாலும் வியாபாரிகள் இருப்பு வைத்துக்கொள்ள முடியும். அத்தியாவசியப் பொருட்கள் பாதுகாப்புச்சட்டம் இங்கே செல்லுபடியாகாது (பிரிவு: 7). இந்தச் சட்டப்பிரிவு நேரடியான பதுக்கலுக்கு வழிகோலுகிறது.


தரம், விலை உள்ளிட்டவைகளில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான நடைமுறை விளைபொருள் ஊக்குவிப்புச் சட்டத்தில் உள்ளது போலவே வருவாய் கோட்டாட்சியரிடம் மனு, விசாரணைக் குழு, 30 நாட்களுக்குள் உத்தரவு, மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு-30 நாட்களுக்குள் உத்தரவு, உத்தரவுகள் உரிமையியல் நீதிமன்ற தீர்ப்புக்கு இணையானது ( பிரிவு: 14), உரிமையில் நீதிமன்றத்தில் வழக்குகள் போட முடியாது (பிரிவு:18,19), மாநிலச் சட்டங்கள் செல்லாது (பிரிவு:20) உள்ளிட்ட அம்சங்கள் இதிலும் உள்ளன.


அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்


சட்டத்தின் அட்டவணையில் மொத்தம் 7 வகையான பொருட்கள் அத்தியாவசியப் பொருட்கள் என  சட்டம் குறிப்பிடுகிறது. அதில் மாற்றம் செய்து தானியங்கள், பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு, வெங்காயம், சமையல் எண்ணெய் வித்துக்கள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை இனி அத்தியாவசியப் பொருள்கள் கிடையாது என்று  1(A) என்ற சட்டப்பிரிவை பிரிவு 3 ல் சொருகி உள்ளது மோடி அரசு. இதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களை கார்ப்பரேட் முதலாளிகள் பதுக்கி வைப்பதற்கு வழிவகை செய்துள்ளது இச்சட்டத் திருத்தம். கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளை லாபம் அடிப்பதற்கும் கருப்புச் சந்தைக்கு மட்டுமே இச்சட்டத் திருத்தம் பயன்படப் போகிறது. வெங்காயம் திங்காத சொரணையற்றவர்கள் நம்மை உரசிப் பார்க்கிறார்கள். 


இனி இடைத்தரகர்கள் இருக்கமாட்டார்கள்.  காவிகளே கார்ப்பரேட்டுகளுக்கு முழுத் தரகர்களாக மாறிய பிறகு இடைத்தரகர்களுக்கு என்ன வேலை? பத்து ரூபாய்க்கு உருளைக்கிழங்கை வாங்கி இருநூறு ரூபாய்க்கு விற்பனை செய்து கோடி கோடியாய் கொள்ளை அடிப்பார்கள்‌. 


இரயில், விமானம், வங்கி, உற்பத்தி, காப்பீடு என பல்வேறு துறைகளில் சுய சார்பாய் இருந்த நம்மை கார்ப்பரேட்டுகளுக்கு அடகு வைத்தார்கள்.  எஞ்சி நிற்கும் விவசாயிகளை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன? 


இது விவசாயிகளின் பிரச்சனை மட்டுமல்ல உணவு உட்கொள்ளும் அனைவரின் பிரச்சனை. உயிர் வாழும் உரிமை பற்றிய பிரச்சனை. இனி வாழ்வா? சாவா? முடிவு செய்!


பொன்.சேகர்

வழக்குரைஞர்


No comments:

Post a Comment