Sunday 20 December 2020

ஸ்டெர்லைட் போராட்டம்: பொய் வழக்குகளைத் திரும்பப் பெறு!

"ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரி" என உச்சநீதிமன்றம் வரை வாதாடும் தமிழக அரசு, ஸ்டெர்லைட்டை மூடுவதற்காகப் போராடிய ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீது கடந்த இரண்டரை ஆண்டுகளாக போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறாமல் பழி வாங்குவது ஏன்?

ஸ்டெர்லைட் எதிர்ப்புத் துண்டறிக்கைகளை ஸ்ரீவைகுண்டத்தில் கொடுத்ததாக பண்டாரம் பட்டியைச் சேர்ந்த சந்தோசை காவல்துறையினர் சட்டவிரோதமாகக் கைது செய்ததைக் கண்டித்து சந்தோசை விடுவிக்கக்கோரி 17-01-2019 அன்று பண்டாரம்பட்டி சந்தன மாரியம்மன் கோயில் முன்பு மக்கள் ஒன்று கூடி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஸ்டெர்லைட் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பல ஸ்டெர்லைட் எதிர்ப்பு முன்னணியாளர்கள் அதில் கலந்து கொண்டனர். இந்த சம்பவத்திற்கு சிப்காட் காவல்துறை வழக்குப்பதிவு செய்து 2 ஆண்டுகள் கழித்து 10 நபர்கள் மீது இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 10 பேரில் ஒருவர் பண்டாரம்பட்டி வசந்தி அம்மா அவர்களின் கொழுந்தனார் பிரபாகரன் ஆவார். அவர் மாரடைப்பால் சிறிது காலத்திற்கு முன்பு இறந்து விட்டார்.

காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கையின்பேரில் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பி உள்ளது.

அதனால் தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-3ல் (JM3) நாங்கள் அனைவரும் ஆஜரானோம். இந்த வழக்கு வரும் 04-01-2021 வாய்தா போடப்பட்டுள்ளது.

ஏற்கனவே மூன்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட வழக்குகள் தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அதில் கடந்த 12-02-2018, 13-02-2018 ஆகிய நாட்களில் தூத்துக்குடி சிதம்பர நகர் அருகில் குழந்தைகள் கலந்து கொண்டு ஸ்டெர்லைட்டை மூடப் போராட்டம் நடத்தியதற்காக ஒரு வழக்கும், அந்தப் போராட்டத்தில் "ஸ்டெர்லைட்டை மூடு" என்ற வாசகம் அடங்கிய பேனர் இருந்ததற்காக  இரண்டாவது வழக்கும், அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னணியாளர்கள் மீது மூன்றாவது வழக்கும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது குமரெட்டியாபுரத்தில் உள்ள ஸ்டெர்லைட் எதிர்ப்பு முன்னணியாளர்கள் மீதும், மே-17 இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட பலர் மீதும் குமரெட்டியாபுரம் வேப்ப மரத்துக்கடியில் உட்கார்ந்து இருந்ததற்காக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேப்ப மரத்துக்கடியில் யார் யார் உட்கார்ந்து இருந்தார்கள்? என்று விசாரித்து நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தது தமிழக அரசின் *சிபிசிஐடி* போலீஸ் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். அந்த வழக்கில் வரும் 23-12-2020 அன்று கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜராக அழைப்பாணையும் தற்போது வந்துள்ளது.

(மே 22-23 ல் நடந்த போராட்டத்தில் போடப்பட்ட வழக்குகளை சிபிஐ விசாரித்து வருவது தனிக்கதை)

ஸ்டெர்லைட்டை மூட களத்தில் நின்ற, ஆதரவு தெரிவித்த கட்சிகள், அமைப்புகள் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீது போடப்பட்ட இந்த பொய் வழக்குகளை தமிழக அரசு ரத்து செய்ய கோரிக்கை வைக்கவும்,

தமிழக அரசும் இரத்து செய்ய முன் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு

9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.

No comments:

Post a Comment