Tuesday 8 August 2023

கலைஞர் நூற்றாண்டு நூலகம் எனும் கேடில் விழுச் செல்வம்!

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரைக் கிளை செயற்குழு உறுப்பினர்கள் 06-08-2023 ஞாயிறன்று மாலை 3-00 மணியளவில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைப் பார்வையிடச் சென்றோம். எழுதுவதற்கான அட்டையைக் கையில் வைத்துக் கொண்டு வாசலில் அமர்ந்து  வருவோரை சிரித்த முகத்துடன் வரவேற்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களைக் கண்டு நின்று நிழற்படம் எடுத்துக் கொள்ளாமல் கடந்து செல்பவர்கள் எவருமில்லை எனலாம்.


உள்ளே நுழைந்தவுடன் மொத்தக் கட்டுமானத்தின் உட்தோற்றத்தையும் பார்க்கும் வகையில் உச்சிமுதல் பாதம் வரை உள்அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. ஆறு தளங்களில் ஐந்து தளங்கள் வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப் படுகின்றனர். விசாலமான படிக்கட்டுகளுடன் மின்தூக்கி வசதியும் உள்ளது. 

சிறுவர்கள் முதல் அறிஞர்கள் வரை எட்டுத் திக்கிலிருந்தும் வந்து கற்றுப் பயன் பெறும் வண்ணம் மேற்குலகிற்கு இணையாக நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

சனாதனத்தினைத் தகர்க்கும் சம்மட்டி அனைவருக்கும் கல்வி என்றறிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்றி வைத்த அறிவுச்சுடர் இது. இதை அணையாமல் பாதுகாத்து பகுத்தறிவு வளர்க்கும் பெரும் பொறுப்பு மக்களின் கைகளில் உள்ளது.

ஒருபுறம் திருவிழாக் கூட்டமாக மக்கள் குடும்பத்துடன் ஆரவாரமாக வருகின்றனர். மறுபுறம் வாசிப்பில் ஆர்வமுள்ளவர்கள் அநேகர் அமைதியாக அமர்ந்து கற்கின்றனர். வருகின்றோரில் 90 விழுக்காட்டினர் கற்கின்றவர்களாக மாறுவதே அதன் வெற்றி.

சங்க இலக்கியம், தொல்லியல் ஆய்வுகள், தரவுகள், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதியின் அனைத்து நூல்கள், ஆங்கில நூல்கள், போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள், சிறார் நூல்கள், விளையாட்டுப் பிரிவு, கணினிப் பிரிவு என பல பிரிவுகள் தனித்தனியே உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இவற்றையெல்லாம் பார்வையிடுவதும் கற்றுத் தேர்வதும் ஒரு சில நாட்களில் முடிவதல்ல. யார் ஒருவரோடும் முடிந்துவிடுவதும் அல்ல. ஆயிரங்காலத்துப் பயிர். அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கலைஞர் உருவாக்கினார். கலைஞருக்கு அது சாலப் பொருத்தம். தளபதி ஸ்டாலினுக்கு இது சாலப் பொருத்தம். 

அண்ணா நூலகத்தை சில அறிவிலிகள் முடக்க முயற்சித்தனர். சொல்லிக்கொள்ள அவர்களிடம் இதுபோன்ற எதுவும் இல்லை. பாவம் என்ன செய்வார்கள்? எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா திரைப்படங்களே அவர்களின் பொக்கிஷம். அவை காலாவதியாகிக் கொண்டிருக்கின்றன. அவர்களின் வாரிசுகள் வைத்துக்கொண்டு வஞ்சகம் செய்யவில்லை. ஸ்டாலின் என்ன செய்தார் என்று கேட்கிறவர்களுக்கு "கலைஞர் நூற்றாண்டு நூலகம்" எனும் கேடில் விழுச் செல்வத்தைத் தந்தார் என்று காலம் பதில் சொல்லும்.

"கற்றனைத் தூறும் அறிவு"

தகவல்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
மதுரை


No comments:

Post a Comment