Tuesday 27 June 2023

அருந்ததியர் முதல் ஸ்மார்த்த பார்ப்பனர் வரை அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம், 
தமிழ்நாடு
128, கோகுலம் இல்லம், அரசமரத் தெரு, 
திருவண்ணாமலை மாவட்டம். 
90474 0048.

மற்றும்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
384, முதல் தளம், கிழக்கு 8-வது தெரு, கே.கே.நகர், 
மதுரை-20. 
9865348163

************""

நாள் : 27.06.2023

பத்திரிக்கைச் செய்தி

  • அனைத்து இந்துக்கள் அர்ச்சகர் நியமனம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு.ஆனந்த வெங்கடேஷ் அவர்களின் தீர்ப்பை வரவேற்கிறோம்!

  • ஆதிதிராவிடர் முதல் ஸ்மார்த்த பிராமணர்வரையிலான அனைத்து சாதியினரும் முறையாகப் படித்து, தகுதிப்படுத்திக் கொண்டால் அர்ச்சகர் ஆகலாம்!

  • 14 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கும் அர்ச்சக மாணவர்களுக்கு உடனே பணிநியமனம் வழங்குக!

  • அர்ச்சகர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் 26.06.2023 அன்றைய தீர்ப்பு, அனைத்து இந்துக்களின் அர்ச்சகர் நியமனத்தில் முன்னேற்றத்தைக் காட்டும் தீர்ப்பாகும். முறையான அரசியல் சட்டக் கண்ணோட்டத்தோடு, உச்சநீதி மன்றத் தீர்ப்புகளை மேற்கோள் காட்டி சரியான கண்ணோட்டத்தில் அனுகியுள்ளது இந்தத் தீர்ப்பு. மிக நீண்ட காலமாக தெளிவாக்கப்படாத ஆகமத்தின் இருகூறுகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார். 

குறிப்பாக, ஆகமத்தின்  இரு பகுதிகளில் ஒன்றான பூஜை, சடங்குகள் தொடர்பான விசயங்களில் அரசு தலையிட முடியாதென்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை உறுதி செய்யும் நீதிபதி, ஆகமத்தின் மற்றொரு பகுதியென பிராமண அர்ச்சகர்கள் கூறும் அர்ச்சகர் நியமனம் குறித்துத் தெளிவுபடுத்தியுள்ளார். 

அர்ச்சகர் நியமனம் என்பது - மதச் சார்பற்ற நடவடிக்கை. அரசு, கோயில் நிர்வாகம், அறநிலையத்துறை ஆகியோர்  சாதி வேறு பாடின்றி  அர்ச்சகர் நியமனத்தை மேற்கொள்ளலாம். விண்ணப்பிக்கும் அர்ச்சகர்கள், சம்மந்தப்பட்ட கோயிலின் ஆகமத்தைப்  படித்து  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது மட்டுமே தகுதி என்று  தெளிவுபடுத்தியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் சேசம்மாள், நாராயண தீட்சிதலு, ஆதித்யன், ஆதி சைவ சிவாச்சாரியார்கள் உள்ளிட்ட அனைத்து தீர்ப்புகளையும்  முறையாக ஆராய்ந்து, சரியான பொருளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  ஆகமத்தில் குறிப்பிட்ட சாதியினர் மட்டும்தான் கருவறையில் பூஜை செய்ய முடியும் என்று சொல்லியிருந்தாலும் அது செல்லாது என்ற தீர்ப்பின் விளக்கமே அர்ச்சகர் நியமனத்தில் முக்கியமானது.

பரம்பரை வழி அர்ச்சகர் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் நிராகரித்த நீதிபதி, சாதியும் தகுதியல்ல என்பதைக் கூறுகிறார். எளிமையாகச் சொன்னால், ஆதிதிராவிடர், அருந்ததியர் முதல் ஸ்மார்த்த பிராமணர் வரையிலான சாதியில் உள்ள எவரும் முறையாக ஆகமம் கற்றுத் தேர்ந்தால் அர்ச்சகராகலாம் என்பதே தீர்ப்பின் சாரம்.

எனினும்,  தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளாக கலைஞரால் சொல்லப்பட்ட, அனைத்து சாதி அர்ச்சகர் நியமனம் என்ற கருவறைத் தீண்டாமை பிரச்சனை இன்னும் நிரந்தரத் தீர்வை எட்டவில்லை. மிகக் குறிப்பாக, அதிக வருமானம் வரும் தமிழகத்தின் பெருங்கோயில்களை தங்கள் சொத்துக்களாகக் கருதும் பிராமண அர்ச்சகர்கள், உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட பரம்பரை வழி, சாதி வழி அர்ச்சகர் என வழக்குத் தொடுப்பதில்லை. மாறாக, தாங்கள் தனி மத உட்பிரிவினர் (religious denomination) என்றும், நான்கு ரிஷி வழிவந்தவர்கள் என்றும், தாங்கள் மட்டுமே கோயிலில் பூஜை செய்வதென்பது கோயிலின் பழக்கம், வழக்கம், மரபென்றும் சொல்கிறார்கள்.

சேலம் சுகனேசுவரர் கோயில் வழக்கில் தனி மத உட்பிரிவினர் என்ற கோரிக்கை எழாததால், இதற்கு தீர்வு காணப்படவில்லை என்பதுடன் இந்தத் தீர்ப்பிற்கும் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. அர்ச்சகர் நியமனம் தொடர்பான அறநிலையத்துறை பணியாளர் விதிகள் 7 & 9 செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் 2022-ஆம் ஆண்டுத் தீர்ப்பிற்கு இன்றுவரை மேல்முறையீடோ, மறு ஆய்வு மனுவோ, இந்து சமய அறநிலையத்துறை தாக்கல் செய்யாததையும் இந்தத் தீர்ப்பு சுட்டிக் காட்டுகிறது. இத்தீர்ப்பிற்குப் பிறகும் பொருத்தமான தீர்வு காணப்படாவிட்டால், எதிர்கால அர்ச்சகர் நியமனம் சிக்கலுக்கு உள்ளாகும்.

எனவே, அர்ச்சகர் நியமனத்திற்கான தீர்வாக, அரசியல் சட்டப்பிரிவு 25 (2) ( b) - இன் கீழ் இந்து சமய அறநிலையத்துறை சட்டம் பிரிவு 55-ல் - சாதி, பிறப்பு அடிப்படையிலான மத உட்பிரிவு, அரசியல் சட்டத்திற்கு முரணான கூறுகள், ஆகமங்கள், அரசியல் சட்டம் வருவதற்கு முன்பாகப் பெற்றத் தீர்ப்புகள், கோயில் நிர்வாகத் திட்டங்களின் அடிப்படையில் எவரும் அர்ச்சகர் பணி உரிமை கோர முடியாது - என்று சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும்.

கோயில்களில் சமத்துவ உரிமைக்காக 50 ஆண்டுகளுக்கு மேலாகப் போராட வேண்டியிருப்பது. இது அரசியல் சட்ட அவமானம் என்பது உணரப்பட வேண்டும். அர்ச்சகர் நியமனங்கள் தமிழகத்தின் பெருங்கோயில்களில் உடனே மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவண்

ரெங்கநாதன் மற்றும் வாஞ்சிநாதன்






No comments:

Post a Comment