Wednesday 25 November 2020

பாடத்திட்டத்தில் மீண்டும் அருந்ததி ராயின் "வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்!" சேர்ப்பா?

அருந்ததி ராய் புத்தகம் மீண்டும் பாட திட்டத்தில் சேர்ப்பா? மனோன்மனியம் பல்கலை. துணை வேந்தர் விளக்கம்

#குறிப்பு : அருந்ததிராய் புத்தகம் மீண்டும் பாடத்திட்டத்தில் இணைத்ததாக வந்த தகவல்களை ஒட்டி, நாம் ஒரு பதிவை இன்று காலையில் வெளியிட்டோம். இப்பொழுது பிபிசியில் (ஒரு மணி நேரத்திற்கு முன்பு) வந்த செய்தி துணைவேந்தர் மறுத்து சொன்ன செய்தி வெளியாகியிருக்கிறது. 

ஜனநாயக சக்திகளுடன் இணைந்து நமது போராட்டத்தையும், பிரச்சாரத்தையும் மக்களிடம் கொண்டு செல்வோம்.

****

திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பாட திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட அருந்ததி ராயின் 'Walking With The Comrades' புத்தகத்தை மீண்டும் சேர்ப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்று அந்த பல்கலைக்கழக துணை வேந்தர் பிச்சுமணி தெரிவித்துள்ளார்.

அருந்ததி ராயின் புத்தகம் கடந்த 11-ம் தேதி பாட திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர்தான் அந்தப் புத்தகம் மாணவர்களிடையே தவறான கருத்துகளைப் பரப்புகிறது என்பதால் அதை நீக்க வேண்டும் என அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

அந்த அமைப்பின் அழுத்தம் காரணமாகவே புத்தகம் பாட திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டினர். ஆனால் அந்த கருத்துக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி மறுப்பு தெரிவித்திருந்தார். மாணவர்கள் நலன் கருதியே புத்தகம் நீக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த வாரம் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் முன்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய காவல்துறையினர், சில மாணவர்களை மட்டும் துணைவேந்தரைச் சந்திக்க ஏற்பாடு செய்தனர்.

இதையடுத்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன் தலைமையில் சில மாணவர்கள் மட்டும் துணைவேந்தரைச் சந்தித்தனர். அப்போது நீக்கப்பட்ட புத்தகத்தை மீண்டும் சேர்க்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

அது மட்டுமின்றி கடந்த வாரத்தில் திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் துணைவேந்தரைச் சந்தித்து மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் 'Walking With The Comrades' புத்தகம் மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு விட்டதாக புதன்கிழமை தகவல்கள் வெளிவந்தன. சில தொலைக்காட்சிகளிலும் அந்த செய்தி ஒளிபரப்பாயின.

அந்த செய்தியைப் பார்த்த அருந்ததி ராய் நன்றி தெரிவிப்பதாகக் கூறும் அறிக்கையும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.

இந்த அறிக்கை தொடர்பாகத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யாவிடம் கேட்ட போது 'கடந்த 23-ம் தேதி நடந்த பாடத்திட்டத் தேர்வுக் குழுக் கூட்டத்தின் போது அருந்ததி ராயின் புத்தகத்தை மீண்டும் சேர்க்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எங்களுக்கு கிடைத்த உறுதியான தகவல்களுக்குப் பின்னரே எங்கள் அமைப்பு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது' என்று கூறினார்.

பல்கலைக்கழகத்தின் முடிவு அருந்ததிராயின் கவனத்துக்கும் சென்றிருக்கிறது. கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்ட பின்னரும் அது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் சார்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. மேலும் எங்கள் அமைப்பின் அறிக்கைக்கோ, அருந்ததி ராயின் அறிக்கைக்கோ துணைவேந்தர் இன்னும் மறுப்பு தெரிவிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே பாடத்திட்டத் தேர்வுக் குழுவின் முடிவைப் பற்றி துணைவேந்தர் வெளிப்படையாக அறிவிக்க முன்வர வேண்டும்' என்று ஆதவன் தீட்சண்யா தெரிவித்தார்.

இது தொடர்பாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பிச்சுமணியிடம் கேட்ட போது இது தொடர்பாக தற்போது வெளியாகும் தகவல்கள் தவறானவை என்று கூறினார். பாட திட்டத் தேர்வுக் குழுக் கூட்டத்தின் போது இது பற்றி விவாதிக்கப்பட்டதாகக் கூறிய அவர், அருந்ததி ராயின் புத்தகத்தை மீண்டும் சேர்ப்பது தொடர்பான கோரிக்கை இன்னும் பரிசீலனை அளவிலேயே உள்ளது என்றும் அதில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

- BBC NEWS

https://www.bbc.com/tamil/india-55074700

முன்பு வெளியான தகவல்

பாடத்திட்டத்தில் மீண்டும் ‘வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்’: அருந்ததிராய் நன்றி!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் மீண்டும் அருந்ததி ராயின் நூல் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து எழுத்தாளர் அருந்ததி ராய் வெளியிட்டுள்ள அறிக்கை: 

“திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ‘ வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்’ என்ற எனது நூலை மீண்டும்  அதன் பாடத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டிருப்பதாக அறிந்தேன். 

தனிநபர்கள், அமைப்புகள், அரசியல்வாதிகள் மற்றும் செய்தி ஊடகங்கள் முன்னெடுத்த பொது விவாதம் இல்லாமல் இது ஒருபோதும் நடந்திருக்க முடியாது. அறிவுபூர்வமாக முதிர்ச்சியடைந்த சமூகங்கள், மக்கள், நாடுகள் இப்படித்தான் துடிப்பாக மற்றும் உயிரோட்டமாக இருக்க முயற்சிக்கின்றன.

புத்தகத்திற்காகப் பேசிய அனைவருக்கும் மற்றும் எம்.எஸ் பல்கலைக்கழகத்திற்கும், அழுத்தத்துக்கும், மிரட்டலுக்கும் பணியாமல் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை எடுத்த பல்கலைக்கழகத்துக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். "

-அருந்ததி ராய்

நன்றி: Gunaa Gunasekaran


No comments:

Post a Comment