Wednesday 4 November 2020

கேரள மாவோயிஸ்ட் வேல்முருகன் படுகொலை! மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் கடும் கண்டனம்!

 04.11.2020

பத்திரிகைச் செய்தி

கேரளாவில் மாவோயிஸ்ட் தோழர் வேல்முருகன் போலி மோதலில் சுட்டுப் படுகொலை

மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கும் பினராயி விஜயன் அரசு உடனடியாகப் பதவி விலக வேண்டும்!

தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த 33 வயது மாவோயிஸ்ட் இளைஞர் வேல்முருகன் நவம்பர் 3 செவ்வாய்க்கிழமை காலை கேரள அதிரடிப்படை போலீசாரால் போலி மோதலில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை காலை வயநாடு காவல் எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில் அதிரடிப்படை போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்களாம். அப்போது மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினார்களாம். தற்காப்புக்காகப் போலீசார் திருப்பிச் சுட்டதில் மாவோயிஸ்ட் அமைப்பைச் சார்ந்த வேல்முருகன் இறந்துவிட்டாராம். போலி மோதல் படுகொலைகளை நியாயப்படுத்தும் வழக்கமானப் புனை கதையைத்தான் பினராய் விஜயன் அரசும் சொல்லிக் கொண்டிருக்கிறது..

கேரளாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள், இது சட்டவிரோதப் போலி மோதல் படுகொலை என்றும், இது குறித்து நீதி விசாரணை தேவை என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். மோதல் நடந்த இடத்திற்குச் செல்ல ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும் அனுமதி மறுத்து வருவதோடு குற்றத்தை மறைக்கவும் ஆதாரங்களை அழிக்கவும் பினராய் விஜயன் அரசு முயற்சி செய்வதாக மனித உரிமை சபை எனும் அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் நிர்மல் சாரதி அம்பலப்படுத்தி உள்ளார்.  பொதுவுடைமைக் கட்சி என்ற பெயரில் ஆட்சி நடத்திக் கொண்டு இது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை பினராயி விஜயன் அரசு மேற்கொள்வது வெட்கித் தலைகுனிய வேண்டிய செயலாகும்.

வேல்முருகன்

கேரளாவில் மாவோயிஸ்ட் அமைப்பினர் மக்களைத் துன்புறுத்தும் வகையில் எந்தவித சட்ட விரோத நடவடிக்கைகளிலும் இதுவரை ஈடுபட்டதில்லை என்று  சொல்லப்படுகிறது. அவ்வாறு இருக்க பினராய் விஜயன் ஆட்சியமைத்த கடந்த நான்காண்டுகளில் நடத்தப்படும் நான்காவது போலி மோதல் படுகொலை இதுவாகும். மற்ற முதலாளித்துவ ஆளும் வர்க்கக் கட்சிகளைவிட மிகக் கீழ்த்தரமான முறையில் மக்களுக்காகப் பாடுபடும் போராளிகளைப் படுகொலை செய்து வரும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான பினராய் விஜயன் அரசு தொடர்ந்து மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்து வருகிறது. எனவே பினராயி விஜயன் அரசு உடனடியாகப் பதவி விலக வேண்டும். வேல்முருகன் படுகொலையைக் கண்டிக்கின்ற அதேவேளையில் இந்தப் படுகொலை குறித்து வெளிப்படையான, முறையான நீதி விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலைக்குற்றம் பதிவு செய்து தண்டிக்கப்பட வேண்டும் என மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் வலியுறுத்துகிறது.

வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

No comments:

Post a Comment