Tuesday 27 June 2023

3500 ஆண்டுகால பார்ப்பனிய சனாதன ஆதிக்க எதிர்ப்பு: கருத்தரங்கம்!

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக் கிளை சார்பில்

பார்ப்பனிய சனாதன ஆதிக்க எதிர்ப்பு: 3500 ஆண்டு கால விடுதலைப் போர் "

என்ற தலைப்பில், 25.06.2023 ஞாயிறு மாலை 6 மணி அளவில் மதுரையில்  ஹோட்டல் பியர்ள்ஸ்  அரங்கில் நடந்த கூட்டத்தில் 80-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பேராசிரியர் அ.கருணானந்தன்  அவர்களின் சிறப்புரை, அரங்கக்  கூட்டத்தை ஒரு வரலாற்றுக்கான வகுப்பறையாக மாற்றியது. பார்ப்பனியத்தின் 3500 ஆண்டுகால ஆதிக்க வரலாற்றையும், ரிக் வேதகால புரட்டுக்களையும், ஆரிய இனக்குழுக்கள் இடையே ஏற்பட்ட வேலைப்  பிரிவினைகளைப்  பிற்காலத்தில் வர்ணங்களாக மாற்றி, ஆரியர் அல்லாதவர்களைச்  சூத்திரர்கள் ஆக்கிய சதிகளையும் தோலுரித்துக் காட்டியதோடு, பார்ப்பனிய சித்தாந்தத்துக்கு  எதிராக எழுந்த இயக்கங்களையும், பின்னர்  பௌத்தம், சமணம் நடத்திய கருத்தியல் போராட்டங்களையும் விளக்கி  அவர்  ஆற்றிய ஆழமான  உரை பலருக்கும் புதிய செய்திகளைக்  கொண்டு சேர்த்தது.

மக்கள் உரிமைப்  பாதுகாப்பு மையத்தின் மாநில  ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன், சனாதனத்தை வீழ்த்துவதற்கான வழிமுறைகள் பற்றியக்  கேள்விகளை எழுப்ப, ம. உ. பா. மையத்தின் மதுரை  மாவட்டத்  தலைவர் பேராசிரியர் அ.சீநிவாசன் தமிழ்ச் சமூகத்தில்  தொல்காப்பியர் காலத்திலேயே பார்ப்பனியம் வேர் விடத்தொடங்கிய வரலாற்றை இலக்கியச் சான்றுகளோடு முன்வைக்க, பொருளாளர், எழுத்தாளர்  தோழர் மு.சங்கையா பார்ப்பனியத்தை வீழ்த்த வேண்டுமானால் அதற்கு எதிராக சமத்துவம், சமூக நீதிக் கோட்பாடுகளை  ஒரு கருத்தியல் ஆயுதமாக்கிக்  களம் காண வேண்டிய அவசியத்தை விளக்கினார். அரசியல் அதிகாரத்தைக்  கைப்பற்றாமல்  சனாதனத்தை, பார்ப்பனியத்தை வீழ்த்த முடியாது என்றார்.

அதன் பின்னர் பார்வையாளர்கள் அறிவார்ந்த கேள்விகளை  எழுப்ப அவற்றிற்கு பேரா.கருணானந்தன் அவர்கள் விளக்கம் அளித்தார்.   நிகழ்ச்சியைத்  தொய்வின்றி தொகுத்தளித்த  மாவட்டச் செயலர் தோழர் லயனல், காவி பாசிசத்திற்குக் கருத்தியல் ரீதியான சவாலாக இருக்கும் தமிழ்நாட்டைக்  குறி வைத்துத் தீவிரமாகத் தாக்கும் இந்தச்  சூழலில் சனாதானத்தை எதிர்க்கின்ற அனைவரும் ஓரணியில் நின்று தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பின்னர்  நன்றி கூறலுடன்  கூட்டம் இனிதே நிறைவுற்றது .

மொத்த நிகழ்ச்சியும் PRPC TN முக நூலில் ஒளி  பரப்பப்பட்டது.

ஆயிரக்கணக்கானோர் அதைப்  பார்த்து வருகின்றனர்.

தகவல்

லயனல்

பேரா. அ.கருணானந்தன் 


லயனல்

மு.சங்கையா

பேரா.சீனிவாசன்

வாஞ்சிநாதன்






No comments:

Post a Comment