Friday 22 May 2020

அரசு தலைமை மருத்துவர்களுக்குக் கரோனா! மூடிமறைக்கும் தமிழக அரசு!

*ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 15 துறைகளின் முதன்மை மருத்துவர்களுக்குக் (Chief Doctors) கரோனா நோய்த்தொற்று உறுதி…!*
*பொதுவெளியில் தெரியப்படுத்தாமல் இருட்டடிப்பு செய்யும் தமிழக அரசு…!!*

27.03.2020 அன்று தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ்- கரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கக் கோரி PRPC சார்பில் (சு.ஜிம்ராஜ் மில்ட்டன்) பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தோம். அவ்வழக்கில் முன்னணிப் பணியாளர்களின் (Front line Workers) பாதுகாப்பை உத்திரவாதப்படுத்தக்கோரிய இடைக்கால மனுவும் தாக்கல் செய்திருந்தோம்.

இந்த வழக்கில் 13.05.2020  மற்றும் 16.05.2020 தேதிகளில் அரசு தரப்பிலிருந்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த  அறிக்கைகளிலும் கரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்ட மருத்துவ மனைகளின் எண்ணிக்கை,  மொத்த மருத்துவர்களின் எண்ணிக்கை, Personal Protective Equipment (PPE) எனப்படும் பாதுகாப்பு உபகரணங்கள்,  அரசினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த எந்தவித தகவல்களும் இல்லை.

அவ்வறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக 18.05.2020 அன்றைய விசாரணையில் நாம் மறுப்பு அறிக்கையை  (Objections) தாக்கல் செய்தோம். அதில் PPE குறித்து WHO, தேசிய நோய்த் தடுப்பு மையம் (NCDC), சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ஆகியவற்றில் கொடுத்த விளக்கத்தைக் குறிப்பிட்டு, அரசு மருத்துவர்களுக்குக் கொடுத்தது PPE Kit – டே கிடையாது, அது வெறும் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மேலுடைதான் (Surgical Apron) என்று குறிப்பிட்டிருந்தோம்.
10.05.2020 அன்று 37 மருத்துவர்கள் உட்பட மொத்தம் 112 சுகாதாரப்  பணியாளர்களுக்குக் கரோனா உறுதியாகியிருப்பதை குறிப்பிட்டு கூடுதலாக COVID அல்லாத பிற நோய்களுக்குச் சிகிச்சையளிக்கும் பிற பிரிவு மருத்துவர்களுக்கும் (Surgery, Maternity Ward, etc) நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் முறையான பாதுகாப்பு உபகரணங்கள், பரிசோதனை, தனிமைப்படுத்தல் (Quarantine) வழங்கக்கோரியிருந்தோம்.

இந்த நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் Pediatrician (2), Radio diagnostic (2), Surgery (1), Medicine (2), Dermatologist (1) உள்ளிட்ட பல்வேறு துறைகளின் 15 முதன்மை மருத்துவர்களுக்கு (Chief Doctors) கரோனா நோய்த்தொற்று உறுதியாகியிருக்கும் செய்தி நமக்குக் கிடைத்துள்ளது.

சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த Dr.ரவீந்திரன் மற்றும் Dr.சாந்தி ஆகியோர்  இந்தச் செய்தியை உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் 15 முதன்மை மருத்துவர்கள் நோய்த்தொற்று குறித்து வெளிப்படையாக அறிவிக்காமல் தமிழக அரசால் இருட்டடிப்பு செய்யப்படுகிறது.

கரோனா பிரிவில் நோயாளிகளுக்கு நேரடியாக சிகிச்சையளிக்காத முதன்மை மருத்துவர்களுக்கே இந்த நிலை எனும்பொழுது, அடுத்த நிலையிலுள்ள நேரடி சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவப்பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்களின்  நிலை கேள்விக்குறியாக உள்ளது.

மேலும் ராயபுரம் அரசு பிரசவ மருத்துவமனையில் 47 கர்ப்பிணிப் பெண்களுக்குக் கரோனா நோய்த்தொற்று உறுதியாகியிருப்பதும் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட் போல, மருத்துவமனை நோய்த்தொற்றின் மையப் பகுதியாக (Hotspot) இருக்கிறது.

எனவே தமிழகத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளையும் High Risk Zone (அ) Moderate Risk Zone என மட்டுமே தரம் பிரிக்கப்பட்டு அதற்கேற்ப பாதுகாப்பு வழங்குவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். Low Risk Zone என்று வகைப்படுத்தக்கூடாது.

தொழிற்சாலைகள், அலுவலகங்கள் இயங்க அனுமதிக்கப்படும் நிலையில், மருத்துவமனைகள்தான் கரோனா நோய்த்தொற்றை தீவிரமாக எதிர்த்துப் போராடும் மையப்பகுதியாகிறது.

அவர்களின் பாதுகாப்பே கேள்விக்குறியாகும் பட்சத்தில் நிலைமை மேலும் தீவிரமாகக்கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த அபாய நிலையை உணர்ந்து தமிழக அரசானது, கரோனா வார்டு மருத்துவ பணியாளர்களுக்கும் மற்றும் கரோனா அல்லாத பிற துறை (Other Departments) வார்டுகளில் நேரடி சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கும் முறையான PPE kit கள், தனிமைப்படுத்தல், பரிசோதனை செய்வதோடு, கரோனா நோய்தொற்று இல்லாத பிற  நோயாளிகளுக்கும் பரிசோதனையை உடனே செய்யவேண்டும்.

மேலும் துவக்கத்தில் கரோனா நோய்த்தொற்று உறுதியான மருத்துவர்கள் குறித்து வெளிப்படையாக அறிவித்து வந்தது போலவே தினசரி செய்திக்குறிப்பில் (Daily Bulletin) மருத்துவர்கள் நோய்த்தொற்று குறித்தும் தனி அட்டவணை வெளியிடவேண்டும்.

*முன்னணிப்  பணியாளர்களின் இந்த அவல நிலைக்குத் தீர்வு காண, அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்ப வேண்டும்*.

- *வழக்கறிஞர்*
*சு. ஜிம்ராஜ் மில்ட்டன்*
சென்னை கிளை செயலாளர் –
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

தொடர்புடைய பதிவுகள்


No comments:

Post a Comment