Saturday 26 September 2020

வேளாண் சட்டங்களின் நோக்கம் என்ன?

"வேளாண் சட்டங்களின் நோக்கம், விவசாயத்தில் கார்ப்பரேட் சக்திகளை வலுப்படுத்துவதுதான். - பி. சாய்நாத்

23 செப்டெம்பர் 2020, BBC News

கேள்வி: ஒப்பந்த விவசாய முறையைப் பொறுத்தவரை, ஏற்கனவே கரும்பு விவசாயத்தில் இருக்கிறது. அதனைச் சட்டபூர்வமாக்கியிருப்பதில் என்ன தவறு?

பதில்: இவை எந்த மாதிரி ஒப்பந்தம் எனப் பார்க்க வேண்டும். இந்த ஒப்பந்தங்களில் விவசாயிக்கு எந்த அதிகாரமும் கிடையாது. பேரம் பேசும் வலிமை இருக்காது. இதில் எழுத்து மூலமான ஒப்பந்தம் தேவையில்லை. சிவில் கோர்ட்களை அணுக முடியாது. விவசாயிகள் கொத்தடிமைகளாக மாற, அவர்களே செய்துகொள்ளும் ஒப்பந்தமாக இருக்கும். 

உதாரணமாக, மகாராஷ்டிர மாநிலத்தில் பாலின் விலையை எடுத்துக்கொள்வோம். மும்பையில் ஒரு லிட்டர் பசுவின் பால் 48 ரூபாய். எருமைப் பால் ஒரு லிட்டர் 60 ரூபாய். மாடு வைத்திருக்கும் விவசாயியிக்கு இந்த 48 ரூபாயிலிருந்து என்ன கிடைக்கிறது? 2018-19ல் பெரிய அளவில் விவசாயிகள் பாலை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினார்கள். அதன் முடிவில் விவசாயிக்கு ஒரு லிட்டர் பாலுக்கு 30 ரூபாய் விலை தருவதாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பெருந்தொற்று துவங்கிய பிறகு, ஏப்ரல் மாதம் முதல் விவசாயிக்கு கிடைப்பது லிட்டருக்கு 17 ரூபாய்தான். 50 சதவீதம் விலை குறைந்துவிட்டது. இது எப்படி நடந்தது? 

ஆகவே இந்தச் சட்டங்களின் நோக்கம், விவசாயத்தில் கார்ப்பரேட் சக்திகளை வலுப்படுத்துவதுதான். இது பெரும் குழப்பத்தில்தான் போய் முடியும். இந்தக் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் சொந்தப் பணத்தை விவசாயத் துறையில் முதலீடு செய்ய மாட்டார்கள். பொதுமக்களின் பணம்தான் இதில் முதலீடு செய்யப்படும். 

பிஹாரில் விவசாய ஒழுங்குமுறை விற்பனைக்கூட சட்டமே கிடையாது. 2006ல் நீக்கிவிட்டார்கள். என்ன ஆனது? கார்ப்பரேட் நிறுவனங்கள் அங்கே விவசாயிகளுக்கு சேவை செய்கின்றனவா? முடிவில் பிஹார் விவசாயிகள் சோளத்தை ஹரியானா விவசாயிகளுக்கு விற்கிறார்கள். இதில் இருவருக்குமே லாபமில்லை. 

கேள்வி: விவசாய ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களுக்கு வெளியிலும் விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்கலாம் என அனுமதிப்பன் மூலம் என்ன மோசமாகிவிடும்?

பதில்: இப்போதும் பெரும்பாலான விவசாயிகள் ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களுக்கு வெளியில்தான் விற்கிறார்கள். அது ஒன்றும் புதிது அல்ல. ஆனால், சில விவசாயிகள் விற்பனைக்கூடங்கள் மூலம் நன்மையடைகிறார்கள். அதையும் சிதைக்கப்பார்க்கிறார்கள்.

தொடரும்...!

No comments:

Post a Comment