Wednesday 22 December 2021

பாஜகவில் நீதிபதிகள் அணி!

14.12.2021 அன்று திருச்சியில் நடைபெற்ற மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ஒன்பதாவது மாநில மாநாட்டில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள் ஆற்றிய உரை. 

00000

அனைவருக்கும் வணக்கம்,

நாடு எத்தகைய நெருக்கடியான, அபாயகரமான சூழலில் இருக்கிறது என்பதை மக்கள் உணராமல் இருப்பதாகத்தான் நான் கருதுகிறேன்.

ஆர்எஸ்எஸ்-பாஜகவின் ஊதுகுழலாகச் செயல்படும் யு-டியூபர் மாரிதாஸ் என்பவர் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சூழலில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அவரது பிணை மனு 13.-12-2021 திங்கள் காலை 10.30 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. எத்தனையோ வழக்குகள் வரிசையில் காத்துக் கிடக்கும் போது, இந்த வழக்கை முதல் வழக்காக எடுத்து நீதிமன்றம் விசாரிக்கிறது. முதல் தகவல் அறிக்கையின் நகல்கூட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. தமிழக அரசு இவ்வழக்கை விசாரிக்கக் கால அவகாசம் கோருகிறது. ஆனால் நீதிபதியோ, அன்றே விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறார். மாரிதாஸ் மீது புகார் கொடுத்த புகார்தாரர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்தவர் வெளியூரில் காரில் பயணித்துக் கொண்டிருக்கிறார். அவரோடு ஆன்லைனிலேயே வழக்கு விசாரிக்கப்படுகிறது. தான் காரில் பயணம் செய்வதால் எதையும் சரியாக உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை என்று அவர் கூறுகிறார். அவரும் அவகாசம் கோருகிறார். ஆனால் இதை எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமலேயே மாரிதாஸ் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. தள்ளுபடி செய்யப்பட்டது மிகச் சாதாரண வழக்கு அல்ல, தேசத்துரோக வழக்கு, 124 A, IPC. வழக்கு போடப்பட்ட நான்காவது நாளிலேயே தள்ளுபடி செய்யப்படுகிறது.

ஆனால் தோழர் காளியப்பன், தோழர் கோவன், தோழர் வாஞ்சிநாதன், தோழர் ராஜு மீது போடப்பட்ட தேசத்துரோக வழக்குகளில் அவர்கள் சில மாதங்கள் சிறையில் இருந்து போராடிய பிறகுதான் பிணையில் வெளி வரமுடிந்தது. ஆண்டுகள் கடந்து போனாலும் இன்றும் அவர்கள் அந்த வழக்குகளுக்காக நீதிமன்ற வாசற்படிகளில் ஏறிக் கொண்டிருக்கிறார்கள்.
பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட சுதா பரத்வாஜ் வரவரராவ் உள்ளிட்ட சமூகச் செயல்பாட்டாளர்கள் ஆண்டுக் கணக்கில் சிறையில் வாடுகிறார்கள். இவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளும் தேசத்துரோக வழக்குகள்தான். இவர்களால் இன்றுவரை வழக்கிலிருந்து விடுபட முடியவில்லை. ஆனால் மாரிதாஸ் மீதான வழக்கு நான்கு நாட்களிலேயே தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆர்எஸ்எஸ் - பாஜகவினர், நீதிபதிகள் அணி ஒன்றை வைத்துள்ளனர் என்பதைத்தானே இது உணர்த்துகிறது. 

இராணுவம், போலீசு, RAW, IB, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உள்ளிட்ட அரசின் அத்தனை துறைகளிலும் அவர்கள் தங்களது அணியை ஏற்கனவே உருவாக்கி விட்டனர். இதுதான் அபாயம். இந்த அபாயத்தைத்தான் மக்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

சுதா பரத்வாஜ் அவர்களுக்கு தற்போதுதான் நிபந்தனையில் பிணை கிடைத்துள்ளது. ஸ்டேன் சாமி மிகவும் உடல் நலிவுற்ற நிலையில் பிணை கோரி முறையிட்ட போதும் ஈவிரக்கமின்றி பிணை மறுக்கப்பட்டதால் அவர் சிறையிலேயே மாண்டு போனார். நீரிழிவு நோயினால் சிறுநீர் கழிக்கக் கூட சிரமப்படும் வரவர ராவ் மீதான பிணை மனு நிராகரிக்கப் படுகிறது. ஆர்எஸ்எஸ் சங் பரிவாரங்களின் ஊதுகுழலான அர்னாப் கோஸ்வாமி மீதான வழக்கு மறுபரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அவர் உடனடியாக விடுவிக்கப்படுகிறார். 

இவையெல்லாம் எதை உணர்த்துகின்றன? நடப்பது சங்க்பரிவார சனாதனிகளின் ஆட்சிதான் என்பதை உணர்த்த வில்லையா? "சனாதனம்தான் நாட்டின் பண்பாடு" என வாரணாசியில் மோடி பேசியிருப்பதைப் பொருத்திப் பாருங்கள், உண்மை புரியும்.

உரை மேலும் தொடர்கிறது. பாருங்கள்! பகிருங்கள்!



No comments:

Post a Comment