Monday 20 July 2020

மலத்தைத் தின்னு! இல்லை கையால் அள்ளு!

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், கோடாரம்பட்டி கிராமத்தில், பள்ளிச் சிறுவனை மலத்தைக் கையால் அள்ளச் சொல்லிய ஆதிக்கச் சாதி  நபர் ராஜேசகர்.

15.07.2020 மாலை 5 மணிக்கு கோடாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவருக்குச் சொந்தமான புதர்மண்டிக் கிடக்கும் காலி இடத்தில்  அந்தக் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டச் சாதியைச் சேர்ந்த மாணவன் இயற்கை உபாதையால் மலம் கழித்துள்ளார். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த ராஜசேகர் சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தி  மலத்தைக் கையால் அள்ளிச் சென்று அருகில் உள்ள ஏரியில் போட கட்டளையிட்டுள்ளார். "மலத்தை நீ தின்னு! இல்லை கையில் அள்ளு"   என்று கேட்டு அடித்துள்ளார். மலத்தை அள்ளி வீசிவிட்டு மலக்கையுடன் வீட்டிற்குச் சென்றுள்ளான் அச்சிறுவன். இதைக் கண்ட அவனது தந்தை பதறிப் போய் உள்ளார்.  பின்னர் பென்னாகரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து,  அப்புகாரின் மீது பென்னாகரம் காவல் நிலையத்தில் கு. எண் 1090/2020 U/s 323 I.P.C உடன் இணைந்த 3 (1) (i) SC/ST Act 1989 வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தையின் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டு அதன் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை கூறும்போது, புகார் கொடுப்பதற்கு காவல் நிலையத்திற்குச் சென்ற பொழுது அருகிலுள்ள புகார் பெட்டியில் போட்டு விட்டுச் செல்லுங்கள் என்று போலீசார் அலட்சியமாக கூறியிருக்கிறார்கள்.  பெட்டியில் போட்டு விட்டு வெளியே வரும்போது மீண்டும் அழைத்து விசாரிக்கும் பொழுது "அடுத்தவர் நிலத்தில் ஏன் மலம் போனீங்க?" என்று அங்கு இருக்கின்ற காவலர் கேட்டிருக்கிறார்.
சிறுவன்

சிறுவனின் தந்தை

இதை விசாரிப்பதற்காக 18.07.2020 ஆம் தேதி இரவு சுமார் 10 மணிக்குச் சென்ற  மாவட்ட ஆட்சித் தலைவர்  "அரசு கழிவறை கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதில் கழிக்காம ஏன் அங்கே போனான்?" என்று  கேள்வி கேட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பள்ளி மாணவனுக்கும் அவரது குடும்பத்திற்கும் எவ்வித ஆறுதலும் கூறாமல் மாவட்ட ஆட்சியர்
இவ்வாறு கேட்டு, ஆதிக்கச் சாதி ஆணவத்திற்கு வலு சேர்க்கும் விதமாக நடந்து கொண்டிருக்கிறார். காவல் துறையினரோ புகாரை பெற்று உடனே வழக்குப்பதிவு செய்வதற்குப் பதிலாக குறை கண்டுபிடித்திருக்கிறார்கள். அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீது பொய் வழக்கு போட்டு, மொத்த வன்கொடுமை சட்டவழக்கினுடைய அடிப்படையையே மாற்றி அமைப்பதற்கான வேலையை செய்திருக்கிறது போலீஸ். மலத்தை அள்ளச் சொன்னவரை காவல் நிலையத்தில் வைத்தே கைது செய்திருக்க முடியும்.  ஆனால் அவரைத் தப்பிக்க விட்டிருக்கிறது போலீஸ்.

வழக்கமாக எந்த வழக்கையும் காவல்துறை பதிவு செய்வதில்லை. ஆதிக்கச் சாதி நபர் கொடுத்த வழக்கு பொய் வழக்கு என்று தெரிந்தே அதை பதிவு செய்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி போடப்பட்ட வழக்கின் அனைத்து அம்சங்களையும் உடைத்தெறிவதற்கு வேலையை செய்திருக்கிறது காவல்துறை. இப்படி காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் ஒன்றிணைந்து கொண்டு தருமபுரி மாவட்ட தலித் மக்களின் மீது திணிக்கிற வன்கொடுமைகளை எவ்வாறு தடுத்து நிறுத்திட முடியும்? ஒரு சிறுவன் தனக்கு பாத்ரூம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிந்தும் ஏதோ குற்ற நோக்கத்தில் ராஜசேகர்  காலி நிலத்தில் இயற்கை  உபாதைகள் கழித்ததாக சித்தரிப்பதும் கூட ஆதிக்க சாதி மனோபாவம் ஆகும்.

பாதிக்கப்பட்டவர்களிடமே குறை கண்டு மொத்த பாதிப்பையும் நீர்த்துப்போகச் செய்வது என்பது அதிகார வர்க்கம் கண்டுபிடித்திருக்கிற சட்டம் கெட்ட வழியாகும்.

தகவல்.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
தருமபுரி

No comments:

Post a Comment