Friday 11 August 2023

ஆடையில்லாமல் பெண்களை இழுத்துச் சென்றது நியாயமா? ஸ்மிருதி ராணியே பதில் சொல்!

பாஜக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பார்த்து ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்ததாக குற்றம் சாட்டும் ஸ்மிருதி இராணியே,  மணிப்பூரில் பெண்கள் ஆடையில்லாமல் இழுத்துச் செல்லப்பட்டதற்கு பதில் என்ன?? பாஜககாரர்கள் தேச பக்தர்கள் அல்ல, தேசத் துரோகிகள்!!! 

அம்பலப்படுத்துகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள். பாருங்கள். பகிருங்கள். 

வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன்  ஒருங்கிணைப்பாளர் - PRPC TN

நன்றி: ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌arakalagamtv 



Tuesday 8 August 2023

கலைஞர் நூற்றாண்டு நூலகம் எனும் கேடில் விழுச் செல்வம்!

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரைக் கிளை செயற்குழு உறுப்பினர்கள் 06-08-2023 ஞாயிறன்று மாலை 3-00 மணியளவில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைப் பார்வையிடச் சென்றோம். எழுதுவதற்கான அட்டையைக் கையில் வைத்துக் கொண்டு வாசலில் அமர்ந்து  வருவோரை சிரித்த முகத்துடன் வரவேற்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களைக் கண்டு நின்று நிழற்படம் எடுத்துக் கொள்ளாமல் கடந்து செல்பவர்கள் எவருமில்லை எனலாம்.


உள்ளே நுழைந்தவுடன் மொத்தக் கட்டுமானத்தின் உட்தோற்றத்தையும் பார்க்கும் வகையில் உச்சிமுதல் பாதம் வரை உள்அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. ஆறு தளங்களில் ஐந்து தளங்கள் வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப் படுகின்றனர். விசாலமான படிக்கட்டுகளுடன் மின்தூக்கி வசதியும் உள்ளது. 

சிறுவர்கள் முதல் அறிஞர்கள் வரை எட்டுத் திக்கிலிருந்தும் வந்து கற்றுப் பயன் பெறும் வண்ணம் மேற்குலகிற்கு இணையாக நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

சனாதனத்தினைத் தகர்க்கும் சம்மட்டி அனைவருக்கும் கல்வி என்றறிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்றி வைத்த அறிவுச்சுடர் இது. இதை அணையாமல் பாதுகாத்து பகுத்தறிவு வளர்க்கும் பெரும் பொறுப்பு மக்களின் கைகளில் உள்ளது.

ஒருபுறம் திருவிழாக் கூட்டமாக மக்கள் குடும்பத்துடன் ஆரவாரமாக வருகின்றனர். மறுபுறம் வாசிப்பில் ஆர்வமுள்ளவர்கள் அநேகர் அமைதியாக அமர்ந்து கற்கின்றனர். வருகின்றோரில் 90 விழுக்காட்டினர் கற்கின்றவர்களாக மாறுவதே அதன் வெற்றி.

சங்க இலக்கியம், தொல்லியல் ஆய்வுகள், தரவுகள், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதியின் அனைத்து நூல்கள், ஆங்கில நூல்கள், போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள், சிறார் நூல்கள், விளையாட்டுப் பிரிவு, கணினிப் பிரிவு என பல பிரிவுகள் தனித்தனியே உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இவற்றையெல்லாம் பார்வையிடுவதும் கற்றுத் தேர்வதும் ஒரு சில நாட்களில் முடிவதல்ல. யார் ஒருவரோடும் முடிந்துவிடுவதும் அல்ல. ஆயிரங்காலத்துப் பயிர். அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கலைஞர் உருவாக்கினார். கலைஞருக்கு அது சாலப் பொருத்தம். தளபதி ஸ்டாலினுக்கு இது சாலப் பொருத்தம். 

அண்ணா நூலகத்தை சில அறிவிலிகள் முடக்க முயற்சித்தனர். சொல்லிக்கொள்ள அவர்களிடம் இதுபோன்ற எதுவும் இல்லை. பாவம் என்ன செய்வார்கள்? எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா திரைப்படங்களே அவர்களின் பொக்கிஷம். அவை காலாவதியாகிக் கொண்டிருக்கின்றன. அவர்களின் வாரிசுகள் வைத்துக்கொண்டு வஞ்சகம் செய்யவில்லை. ஸ்டாலின் என்ன செய்தார் என்று கேட்கிறவர்களுக்கு "கலைஞர் நூற்றாண்டு நூலகம்" எனும் கேடில் விழுச் செல்வத்தைத் தந்தார் என்று காலம் பதில் சொல்லும்.

"கற்றனைத் தூறும் அறிவு"

தகவல்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
மதுரை


Tuesday 27 June 2023

அருந்ததியர் முதல் ஸ்மார்த்த பார்ப்பனர் வரை அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம், 
தமிழ்நாடு
128, கோகுலம் இல்லம், அரசமரத் தெரு, 
திருவண்ணாமலை மாவட்டம். 
90474 0048.

மற்றும்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
384, முதல் தளம், கிழக்கு 8-வது தெரு, கே.கே.நகர், 
மதுரை-20. 
9865348163

************""

நாள் : 27.06.2023

பத்திரிக்கைச் செய்தி

  • அனைத்து இந்துக்கள் அர்ச்சகர் நியமனம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு.ஆனந்த வெங்கடேஷ் அவர்களின் தீர்ப்பை வரவேற்கிறோம்!

  • ஆதிதிராவிடர் முதல் ஸ்மார்த்த பிராமணர்வரையிலான அனைத்து சாதியினரும் முறையாகப் படித்து, தகுதிப்படுத்திக் கொண்டால் அர்ச்சகர் ஆகலாம்!

  • 14 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கும் அர்ச்சக மாணவர்களுக்கு உடனே பணிநியமனம் வழங்குக!

  • அர்ச்சகர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் 26.06.2023 அன்றைய தீர்ப்பு, அனைத்து இந்துக்களின் அர்ச்சகர் நியமனத்தில் முன்னேற்றத்தைக் காட்டும் தீர்ப்பாகும். முறையான அரசியல் சட்டக் கண்ணோட்டத்தோடு, உச்சநீதி மன்றத் தீர்ப்புகளை மேற்கோள் காட்டி சரியான கண்ணோட்டத்தில் அனுகியுள்ளது இந்தத் தீர்ப்பு. மிக நீண்ட காலமாக தெளிவாக்கப்படாத ஆகமத்தின் இருகூறுகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார். 

குறிப்பாக, ஆகமத்தின்  இரு பகுதிகளில் ஒன்றான பூஜை, சடங்குகள் தொடர்பான விசயங்களில் அரசு தலையிட முடியாதென்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை உறுதி செய்யும் நீதிபதி, ஆகமத்தின் மற்றொரு பகுதியென பிராமண அர்ச்சகர்கள் கூறும் அர்ச்சகர் நியமனம் குறித்துத் தெளிவுபடுத்தியுள்ளார். 

அர்ச்சகர் நியமனம் என்பது - மதச் சார்பற்ற நடவடிக்கை. அரசு, கோயில் நிர்வாகம், அறநிலையத்துறை ஆகியோர்  சாதி வேறு பாடின்றி  அர்ச்சகர் நியமனத்தை மேற்கொள்ளலாம். விண்ணப்பிக்கும் அர்ச்சகர்கள், சம்மந்தப்பட்ட கோயிலின் ஆகமத்தைப்  படித்து  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது மட்டுமே தகுதி என்று  தெளிவுபடுத்தியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் சேசம்மாள், நாராயண தீட்சிதலு, ஆதித்யன், ஆதி சைவ சிவாச்சாரியார்கள் உள்ளிட்ட அனைத்து தீர்ப்புகளையும்  முறையாக ஆராய்ந்து, சரியான பொருளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  ஆகமத்தில் குறிப்பிட்ட சாதியினர் மட்டும்தான் கருவறையில் பூஜை செய்ய முடியும் என்று சொல்லியிருந்தாலும் அது செல்லாது என்ற தீர்ப்பின் விளக்கமே அர்ச்சகர் நியமனத்தில் முக்கியமானது.

பரம்பரை வழி அர்ச்சகர் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் நிராகரித்த நீதிபதி, சாதியும் தகுதியல்ல என்பதைக் கூறுகிறார். எளிமையாகச் சொன்னால், ஆதிதிராவிடர், அருந்ததியர் முதல் ஸ்மார்த்த பிராமணர் வரையிலான சாதியில் உள்ள எவரும் முறையாக ஆகமம் கற்றுத் தேர்ந்தால் அர்ச்சகராகலாம் என்பதே தீர்ப்பின் சாரம்.

எனினும்,  தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளாக கலைஞரால் சொல்லப்பட்ட, அனைத்து சாதி அர்ச்சகர் நியமனம் என்ற கருவறைத் தீண்டாமை பிரச்சனை இன்னும் நிரந்தரத் தீர்வை எட்டவில்லை. மிகக் குறிப்பாக, அதிக வருமானம் வரும் தமிழகத்தின் பெருங்கோயில்களை தங்கள் சொத்துக்களாகக் கருதும் பிராமண அர்ச்சகர்கள், உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட பரம்பரை வழி, சாதி வழி அர்ச்சகர் என வழக்குத் தொடுப்பதில்லை. மாறாக, தாங்கள் தனி மத உட்பிரிவினர் (religious denomination) என்றும், நான்கு ரிஷி வழிவந்தவர்கள் என்றும், தாங்கள் மட்டுமே கோயிலில் பூஜை செய்வதென்பது கோயிலின் பழக்கம், வழக்கம், மரபென்றும் சொல்கிறார்கள்.

சேலம் சுகனேசுவரர் கோயில் வழக்கில் தனி மத உட்பிரிவினர் என்ற கோரிக்கை எழாததால், இதற்கு தீர்வு காணப்படவில்லை என்பதுடன் இந்தத் தீர்ப்பிற்கும் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. அர்ச்சகர் நியமனம் தொடர்பான அறநிலையத்துறை பணியாளர் விதிகள் 7 & 9 செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் 2022-ஆம் ஆண்டுத் தீர்ப்பிற்கு இன்றுவரை மேல்முறையீடோ, மறு ஆய்வு மனுவோ, இந்து சமய அறநிலையத்துறை தாக்கல் செய்யாததையும் இந்தத் தீர்ப்பு சுட்டிக் காட்டுகிறது. இத்தீர்ப்பிற்குப் பிறகும் பொருத்தமான தீர்வு காணப்படாவிட்டால், எதிர்கால அர்ச்சகர் நியமனம் சிக்கலுக்கு உள்ளாகும்.

எனவே, அர்ச்சகர் நியமனத்திற்கான தீர்வாக, அரசியல் சட்டப்பிரிவு 25 (2) ( b) - இன் கீழ் இந்து சமய அறநிலையத்துறை சட்டம் பிரிவு 55-ல் - சாதி, பிறப்பு அடிப்படையிலான மத உட்பிரிவு, அரசியல் சட்டத்திற்கு முரணான கூறுகள், ஆகமங்கள், அரசியல் சட்டம் வருவதற்கு முன்பாகப் பெற்றத் தீர்ப்புகள், கோயில் நிர்வாகத் திட்டங்களின் அடிப்படையில் எவரும் அர்ச்சகர் பணி உரிமை கோர முடியாது - என்று சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும்.

கோயில்களில் சமத்துவ உரிமைக்காக 50 ஆண்டுகளுக்கு மேலாகப் போராட வேண்டியிருப்பது. இது அரசியல் சட்ட அவமானம் என்பது உணரப்பட வேண்டும். அர்ச்சகர் நியமனங்கள் தமிழகத்தின் பெருங்கோயில்களில் உடனே மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவண்

ரெங்கநாதன் மற்றும் வாஞ்சிநாதன்






3500 ஆண்டுகால பார்ப்பனிய சனாதன ஆதிக்க எதிர்ப்பு: கருத்தரங்கம்!

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக் கிளை சார்பில்

பார்ப்பனிய சனாதன ஆதிக்க எதிர்ப்பு: 3500 ஆண்டு கால விடுதலைப் போர் "

என்ற தலைப்பில், 25.06.2023 ஞாயிறு மாலை 6 மணி அளவில் மதுரையில்  ஹோட்டல் பியர்ள்ஸ்  அரங்கில் நடந்த கூட்டத்தில் 80-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பேராசிரியர் அ.கருணானந்தன்  அவர்களின் சிறப்புரை, அரங்கக்  கூட்டத்தை ஒரு வரலாற்றுக்கான வகுப்பறையாக மாற்றியது. பார்ப்பனியத்தின் 3500 ஆண்டுகால ஆதிக்க வரலாற்றையும், ரிக் வேதகால புரட்டுக்களையும், ஆரிய இனக்குழுக்கள் இடையே ஏற்பட்ட வேலைப்  பிரிவினைகளைப்  பிற்காலத்தில் வர்ணங்களாக மாற்றி, ஆரியர் அல்லாதவர்களைச்  சூத்திரர்கள் ஆக்கிய சதிகளையும் தோலுரித்துக் காட்டியதோடு, பார்ப்பனிய சித்தாந்தத்துக்கு  எதிராக எழுந்த இயக்கங்களையும், பின்னர்  பௌத்தம், சமணம் நடத்திய கருத்தியல் போராட்டங்களையும் விளக்கி  அவர்  ஆற்றிய ஆழமான  உரை பலருக்கும் புதிய செய்திகளைக்  கொண்டு சேர்த்தது.

மக்கள் உரிமைப்  பாதுகாப்பு மையத்தின் மாநில  ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன், சனாதனத்தை வீழ்த்துவதற்கான வழிமுறைகள் பற்றியக்  கேள்விகளை எழுப்ப, ம. உ. பா. மையத்தின் மதுரை  மாவட்டத்  தலைவர் பேராசிரியர் அ.சீநிவாசன் தமிழ்ச் சமூகத்தில்  தொல்காப்பியர் காலத்திலேயே பார்ப்பனியம் வேர் விடத்தொடங்கிய வரலாற்றை இலக்கியச் சான்றுகளோடு முன்வைக்க, பொருளாளர், எழுத்தாளர்  தோழர் மு.சங்கையா பார்ப்பனியத்தை வீழ்த்த வேண்டுமானால் அதற்கு எதிராக சமத்துவம், சமூக நீதிக் கோட்பாடுகளை  ஒரு கருத்தியல் ஆயுதமாக்கிக்  களம் காண வேண்டிய அவசியத்தை விளக்கினார். அரசியல் அதிகாரத்தைக்  கைப்பற்றாமல்  சனாதனத்தை, பார்ப்பனியத்தை வீழ்த்த முடியாது என்றார்.

அதன் பின்னர் பார்வையாளர்கள் அறிவார்ந்த கேள்விகளை  எழுப்ப அவற்றிற்கு பேரா.கருணானந்தன் அவர்கள் விளக்கம் அளித்தார்.   நிகழ்ச்சியைத்  தொய்வின்றி தொகுத்தளித்த  மாவட்டச் செயலர் தோழர் லயனல், காவி பாசிசத்திற்குக் கருத்தியல் ரீதியான சவாலாக இருக்கும் தமிழ்நாட்டைக்  குறி வைத்துத் தீவிரமாகத் தாக்கும் இந்தச்  சூழலில் சனாதானத்தை எதிர்க்கின்ற அனைவரும் ஓரணியில் நின்று தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பின்னர்  நன்றி கூறலுடன்  கூட்டம் இனிதே நிறைவுற்றது .

மொத்த நிகழ்ச்சியும் PRPC TN முக நூலில் ஒளி  பரப்பப்பட்டது.

ஆயிரக்கணக்கானோர் அதைப்  பார்த்து வருகின்றனர்.

தகவல்

லயனல்

பேரா. அ.கருணானந்தன் 


லயனல்

மு.சங்கையா

பேரா.சீனிவாசன்

வாஞ்சிநாதன்






Saturday 22 April 2023

12 மணி நேர வேலை: திமுக-வின் வரலாற்றுப் பிழை!

ஆண்டாண்டு காலமாய் 8 மணி நேர வேலை என்கிற தொழிலாளர்களின் உரிமையைப் பறித்து 12 மணி நேர வேலை என 21/4/2023 அன்று திமுக அரசு ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறது. உத்திரபிரதேசம் மற்றும் குஜராத்தில் செயல்படும் பாஜக அரசு வழியிலே தமிழ்நாடு திமுக அரசு நடைபெறுகிறது. கலைஞர் மற்றும் பெரியாருக்கு எதிரான சட்டத் திருத்தம் இது. சமூக நீதிக்கு எதிரான நவீன கொத்தடிமைச்  சட்ட திருத்தம் குறித்து விளாசுகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள். பாருங்கள். பகிருங்கள். 



Sunday 26 March 2023

சங்கிகளுக்கு ஆதரவாக மதுரை கரிமேடு காவல்துறை!

ஜீ-க்களுக்கு ஆதரவாக மதுரை கரிமேடு காவல்துறை! 

காவல்துறை நிர்வாகத்தில் கோட்டைவிடும் மதுரை திமுக அமைச்சர்கள் -  நிர்வாகிகள்!

 ***"*

மதன் இரவிச்சந்திரன்-வெண்பா கூட்டணி வெளியிட்ட வீடியோக்களில் சிக்கியவர் மதுரை திருமாறன் ஜீ.

தென் இந்திய பார்வர்டு பிளாக் என்ற பெயரில் செயல்படும்  ஆர் எஸ் எஸ்- பா ஜ க- வின் நபர்தான் இந்தத் திருமாறன். திராவிட இயக்கங்களைக் கொச்சையாகப் பேசுவது, கலைஞர், கனிமொழி, பிடிஆர்-ஐ அவதூறாகப் பேசுவது என்ற வகையில் செயல்படும் மதுரை "அர்ஜூன் சம்பத்" தான்  இந்த ஜீ.

மதுரையின் முக்கிய இணையதள ஊடகமான "அறக்கலகத்தை" நடத்தி வருபவர் தவம். சமத்துவம், சமூக நீதி, மத வெறி எதிர்ப்பு என்ற வகையில் அறக்கலகத்தை, தனது கடும் உழைப்பில் கட்டமைத்துக் கொண்டவர் ஊடகவியலாளர்  தவம். சில நாட்களுக்கு முன் திருமாறன் அம்பலமானது தொடர்பாக, வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனிடம் பேட்டி எடுத்து அறக்கலகத்தில் வெளியிட்டுள்ளார் தவம். மேலும் மேலும் அம்பலமானதால், எரிச்சலான ஜீ-  மதுரை கரிமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்து முற்றுகை போராட்டமும் நடத்தியுள்ளார். உடனே, மிரண்ட கரிமேடு காவல் உதவி ஆணையர் மகேஷ், ஆய்வாளர்  இத்ரிஷ்  முகமது ஆகியோர், வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனுக்கும், அறக்கலகம் தவத்திற்கும் நேற்று (மார்ச்,21, 2023) மதியம் 3 மணிக்கு சம்மன் கொடுத்து, 5 மணிக்கு விசாரணைக்கு அழைத்துள்ளனர். கைது செய்யும் சூழலும் இருந்தது. வழக்கறிஞர்கள் தலையிட்டு கேட்ட பின்பு, தவத்தை தொடர்பு கொண்ட உதவி ஆணையர் மகேஷ், திருமாறன் தொடர்பான இரண்டு வீடியோக்களை உடனே நீக்குமாறு நெருக்கடி கொடுத்து நீக்க வைத்துள்ளார். தி.வி.க. மணி அமுதன், திருமாறன் தொடர்பாக கொடுத்த பேட்டியையும் நீக்கச் சொல்லுங்கள் எனச் சொல்லியுள்ளார். இப்போதுவரை திருமாறன் போட்டோவை எடுங்கள், தலைப்பை மாற்றுங்கள் எனப் பேசி நெருக்கடி தருகிறார் ஆய்வாளர் இத்ரிஷ். மதுரை காவல்துறையின் இச்செயல்பாடு தொடர்பாக எமக்கு எழும் கேள்விகள்.

1. அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமையான கருத்துரிமையை பாதுகாக்க வேண்டிய காவல்துறை, உரிமையை நசுக்க முயற்சிப்பதன் பின்னணி என்ன?

2.ஒரு நபர் குறித்து அவதூறான கருத்துக்களைச் சொன்னால், சம்மந்தப்பட்ட நபர் (திருமாறன்), பேசிய வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் மீது அவதூறு வழக்குத் தொடர்வதுதான் உரிய சட்ட நடைமுறை, இதனை அறிவுறுத்த வேண்டிய காவல்துறை சட்டமீறலில் ஈடுபட்டது ஏன்?

3.அறக்கலகம் தவத்திற்கு தொடர் நெருக்கடி கொடுத்து பேட்டியை நீக்க வைத்த கரிமேடு காவல்துறை, மதன் இரவிச்சந்திரன் வெளியிட்ட, தினமும் வெளியிடும் வீடியோக்களை நீக்கச் சொல்லுமா, தடுக்குமா?

4.அறக்கலகம் முகப்பிலேயே, பேட்டியளிக்கும் நபரின் கருத்துக்கும், தனக்கும் தொடர்பில்லை எனத் தெளிவாகக் குறிப்பிட்டு பேட்டிகளை ஒளிபரப்பும் தவத்தை மிரட்டியதுபோல், ஹிந்து, தினமலர், தினகரன், நக்கீரன் போன்ற ஊடகங்களை மிரட்டுமா காவல்துறை?

5.திருமாறன் என்ற நபர் தி.க.வை, திமுக.வை, கலைஞரை, ஸ்டாலினை, கனிமொழியை, பி டி ஆர் - யை, மிகக் கேவலமாக, ஆபாசமாகப் பேசிய வீடியோக்கள் எத்தனையை நீக்கச் சொன்னது காவல்துறை?  வழக்குப் பதிந்தது உண்டா?

6.திமுக என்ற கட்சி ஆட்சியில் இருப்பதற்கு சமூக நீதிக் கருத்தியலை மக்களிடம் தினமும் கொண்டு சேர்க்கும் யூ டியூப் சேனல்களின் பங்கு குறித்து அறிவார்களா மதுரை திமுக நிர்வாகிகள்?

இறுதியாக,

7.மதுரை கரிமேடு காவல்துறை திமுக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? அல்லது ஆர் எஸ் எஸ் - பா ஜ க - கட்டுப்பாட்டில் உள்ளதா?

சரியான நடவடிக்கை இல்லாவிட்டால் மதுரையின் அனைத்து முற்போக்கு இயக்கங்களும் விரைவில் வருவோம் கரிமேடு காவல் நிலையத்திற்கு.

சே.வாஞ்சிநாதன்
வழக்கறிஞர்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
மார்ச்.22, 2023.





திருச்சி குமார வயலூர் முருகன் கோயில்: அனைத்து சாதி அர்ச்சகர் நியமனம் இரத்து!

திருச்சி குமார வயலூர் முருகன் கோயில் அனைத்து சாதி அர்ச்சகர் நியமனம்  ரத்து!

• திருச்சி குமார வயலூர் முருகன் கோயில் - அனைத்து சாதி அர்ச்சகர் நியமனத்தை இரத்து செய்துள்ள பிப்ரவரி, 24, 2023 தேதி மதுரை உயர்நீதிமன்றத் தீர்ப்பு, மாண்புமிகு. உச்சநீதிமன்றத்தின்,  சேசம்மாள் (1972) நாராயண தீட்சிதலு (1996) , காசி விசுவநாதர் கோயில் (1997) ஆதித்யன் (2002), ஆதிசைவ சிவாச்சாரியார்கள்(2015), சபரிமலை (2018)  - ஆகிய அனைத்துத் தீர்ப்புகளுக்கும் எதிரானது!

• அரசியல் சட்ட சமத்துவ உரிமைக் கோட்பாட்டிற்கு முரணான இத்தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்க!

• அரசியல் சட்டம் பிரிவு 25(2)(b)- ன் கீழ், இந்து சமய அறநிலையத்துறை சட்டம் பிரிவு 55(2)-ல் - பழக்கம், வழக்கம், மரபு, சாதி, பிறப்பு அடிப்படையிலான மத, சாதி உட்பிரிவின் கீழ் அரசு பொதுக் கோயில்களில் அர்ச்சகர் நியமனம் கோர முடியாது - என்ற சட்டத்திருத்தம் கொண்டு வருக!

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் - தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு நியமன அர்ச்சர்கள் சங்கம்

128, கோகுலம் இல்லம், அரசமரத் தெரு
திருவண்ணாமலை மாவட்டம். தமிழ்நாடு - 90474 00485.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
384, முதல் தளம், கிழக்கு 8-வது தெரு, கே.கே.நகர், மதுரை-20, 9865348163
----------------------------------------------------------------------------
பத்திரிக்கை செய்தி
மார்ச் 7, 2023

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் எனப்பட்ட,  அனைத்து சாதி அர்ச்சகர் நியமனம்  மீண்டும் கடும் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது. 50 ஆண்டுகால  கருவறை தீண்டாமைக்கு எதிரானப் போராட்டம் பின்னடைவை சந்தித்துள்ளது. திருச்சி குமார வயலூர் முருகன் கோயில் நிர்வாகம் நியமித்த, பிராமணர் அல்லாத பிரபு, ஜெயபாலன் ஆகிய இந்து சைவ அர்ச்சகர்களின் பணிநியமன உத்தரவுகள் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.G.R.சுவாமிநாதன் அவர்களால் பிப்.24, 2023 தீர்ப்பின்படி இரத்து செய்யப்பட்டு, பிராமண உட்சாதியினரான கார்த்திக், பரமேஸ்வரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. பிராமண  சாதி உட்பிரிவுகளான ஆதிசைவர், சிவாச்சாரியார்கள், குருக்கள் மட்டுமே, காமிக ஆகம முறையிலான  திருச்சி வயலூர் முருகன் கோயிலில் அர்ச்சகராக முடியும், மற்ற இந்துக்கள் அர்ச்சகராக முடியாது,  என்பதே இத்தீர்ப்பின் சாரம்.

மார்ச்,3, 2023-அன்று மதுரை உயர்நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட இத்தீர்ப்பு,  உச்சநீதிமன்றத்தின் சேசம்மாள், ஆதி சைவ சிவாச்சாரியார்கள், ஆதித்யன், நாரயண தீட்சிதலு, காசிவிசுவநாதர், சபரிமலை ஆகிய தீர்ப்புகளுக்கு எதிரானது.

வழக்கை தொடுத்த மனுதாரர்கள் கார்த்திக், பரமேஸ்வரன் ஆகியோர், தாங்கள் மேற்குறிப்பிட்ட ஆதிசைவர் உள்ளிட்ட உட்பிரிவை சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆவணத்தை, அர்ச்சகர் பணிக்கு மனுச் செய்யும்போதோ, வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்திலோ சமர்பிக்காதபோது, கார்த்திக்கும், பரமேஸ்வரனும் ஆதிசைவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற முடிவிற்கு நீதிபதி எப்படி வந்தார்? என்பதற்கான விளக்கம் தீர்ப்பில் இல்லை. தாங்கள், ஆதி சைவர்களா?  சிவாச்சாரியார்களா?  குருக்களா?  என்று கூட தங்களது மனுவில் மனுதாரர்கள் சொல்லவில்லை. நீதிமன்றத்தில் கேட்டபோது மூன்று பிரிவுகளும் ஒன்றுதான் (denominational brahmins)  என்று மழுப்பினர். தங்கள் கூற்றுக்கான ஆதாரம் எதையும் காட்டவில்லை.

திருச்சி வயலூர் முருகன் கோயில் பழக்க, வழக்கப்படி அர்ச்சகரை நியமிக்க வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்த பிராமண  அர்ச்சகர்கள், அதற்கும் கூட எந்தவித ஆதாரத்தையும்  தரவில்லை. பழக்கம், வழக்கம் (custom and usage ) என்பதை சாட்சியங்கள் வழியே, சிவில் நீதிமன்றத்தில்தான் நிரூபணம் செய்ய முடியும். மனுதாரர்கள் குறிப்பிடும் பழக்க,வழக்கத்தை, இந்து சமய அறநிலையத்துறை ஏற்காதபோது, உயர்நீதிமன்றம் இதுதான் பழக்கம் என்ற முடிவிற்கு வர  சட்ட அடிப்படை இல்லை. சைவக் கோவில்களில் வைணவர்களையோ, சைவ மரபில் நம்பிக்கை அற்றவர்களையோ அர்ச்சகராக நியமிக்க யாரும் கோரவில்லை.

இந்திய சாட்சியச் சட்டம் பிரிவு106- ன் படி, வழக்குத் தொடுத்தவர்தான், தனது கூற்றை நிரூபிப்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வழக்கில் , நம்பிக்கை என்பதைத் தவிர எந்த ஆவணமும் மனுதாரர்களால் சமர்பிக்கப்படவில்லை. 

98 படலங்கள், 7128 சுலோகங்கள் உள்ள உத்தர காமிக ஆகமத்தில் 4 பக்கங்களை மட்டுமே நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில் அர்ச்சனை, ஆதிசைவர்களால் செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதாக  மொழிபெயர்ப்பு செய்துள்ளனர். இந்த ஆவணத்தின் உண்மைத் தன்மை தொடர்பான கேள்விகள் ஒருபுறம் இருக்க, மனுதாரர்கள் கவுசிக முனிவர் வழிவந்த ஆதிசைவர்கள் என்ற மத உட்பிரிவினர்தான் (denomination)  என்ற உறுதியான முடிவிற்கு நீதிபதி எப்படி வந்தார்? என்ற கேள்வி மீண்டும், மீண்டும் எழுகிறது. 

வயலூர் முருகன் கோயில் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட பிராமணர் அல்லாத அர்ச்சகர்கள் இருவரும் தாங்கள் சைவ மரபை பின்பற்றும், ஆதிசைவ மத உட்பிரிவினர் என்று மிகத் தெளிவாக பதில் மனுத் தாக்கல் செய்துள்ளபோது, அது குறித்து தீர்ப்பு மவுனம் சாதிக்கிறது. ஒரு தரப்பினரின் வாதத்தை நீதிபதி  ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம்; அவர்களின் முக்கிய வாதத்தைக் குறிப்பிட்டு, அதனை ஏற்கவியலாமைக்கான காரணத்தையும் தீர்ப்பு தெரிவிக்க வேண்டும். நீதிபரிபாலனத்தின் அடிப்படையான இந்த நெறியை இத்தீர்ப்பு மீறியிருக்கிறது.  

இவை தவிர மிக முக்கியமாக சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு W.P.NO.17802/2021 வழக்கின் தீர்ப்பில், ஆகமக் கோவில்கள் எவை என்பதை முடிவு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி திரு.சொக்கலிங்கம் தலைமையில் குழு அமைத்துள்ள நிலையில், வயலூர் முருகன் கோயில் ஆகமக் கோயில் என்று  தற்போது எவ்வாறு முடிவு செய்ய இயலும்? ஒருவேளை  இந்துசமய அறநிலையத்துறை  வயலூர் முருகன் கோவில் ஆகமக் கோவில் அல்ல என்ற நிலைப்பாட்டை எடுத்திருந்தால் நீதிமன்றம் ஏற்குமா?  

ஆகமங்கள் நான்கு வர்ணங்கள் குறித்து மட்டுமே பேசும்போது, வர்ணத்திற்கு வெளியே உள்ள பஞ்சமர்கள் எனப்படும் பட்டியல் சமூகத்தினர் தொடர்பாக நீதிமன்றத்தின் நிலை என்ன? அவர்கள் இந்துக்கள் இல்லையா? கோவிலில் பூஜை செய்யக் கூடாதா?  பூஜை செய்தால் தீட்டாகிவிடுமா?

 உச்சநீதிமன்றத்தின் 2015-ஆம் ஆண்டு ஆதிசைவ சிவாச்சாரியார்கள் வழக்கின் தீர்ப்பு – ஆகமங்கள் அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கு முரணாக  இருந்தால் ஏற்றுக் கொள்ளக் கூடாது; சாதி, பிறப்பின் அடிப்படையில் எவரும் அர்ச்சகர் உரிமை கோரமுடியாது என்று மிகத்தெளிவாக கூறி இருக்கும்போது, திருச்சி வயலூரில் உள்ள 5 பிராமண குடும்பங்கள் மட்டும், பிறப்பு, சாதி அடிப்படையில் அர்ச்சகர் உரிமை கோருவதை நீதிபதி எப்படி ஏற்றுக் கொண்டார்? 

அரசியல் சட்டம் பிரிவு 26-ன் படி,  அரசு பொதுக் கோவில்களில், தனிமத உட்பிரிவினர் (denomination) என்று சொல்லி பிராமணர் உள்ளிட்ட எந்தச் சாதியும்  அர்ச்சகர் நியமன உரிமை கோரமுடியாது.  ஒரு மத உட்பிரிவினர் (denomination)  சொந்தமாக கோயில் கட்டி, நிர்வாகம் செய்து வருவதற்கே  (establish and maintain) பிரிவு 26 பொருந்தும். உதாரணத்திற்கு ஜக்கிவாசுதேவ், ஒரு கோவில் கட்டி, தனி மத உட்பிரிவு என நிரூபித்து,  அக்கோவிலில் அந்த மதப்பிரிவின் கொள்கைப்படி, அர்ச்சகரை நியமிக்கலாம். அந்தத் தனியார் கோவிலும்,  பொதுமக்கள் வழிபாட்டிற்கு திறந்து விடப்பட்டால் அர்ச்சகர் நியமனம் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டே செய்ய இயலும்,  திருச்சி வயலூர் முருகன் கோவிலை மனுதாரர்கள் சார்ந்த பிராமண சமூகம் உருவாக்கி, நிர்வாகம் செய்யாதபோது, பிரிவு 26-ன் கீழ் எப்படி உரிமை கோர முடியும்?

அடுத்து, பிரிவு 25(1)-ன் படி மதவழிபாட்டு உரிமையைப் பிராமண அர்ச்சகர்கள் கோரும்போது, அவ்வுரிமை  பிராமணர் அல்லாத  அர்ச்சகர்களுக்கும் உண்டுதானே? 

மனுதாரர்களின் கூற்றுப்படி ஆதிசைவர்கள்  பின்பற்றுவதாக கூறப்படும் சைவ வழிபாட்டு மரபு,  தனியான மத உட்பிரிவு (religious denomination) அல்ல, இந்து மதத்தின் ஒரு அங்கம்தான் என்று மிகத் தெளிவாக காசி விசுவநாதர் கோயில் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  

மத  உட்பிரிவு (religious denomination) என்பதற்கு, ஒரு தனிக் கொள்கை, வழிபாட்டு முறை, பொது நம்பிக்கை, பொது நிர்வாக அமைப்பு, குறிப்பான பெயர், தனிச்சிறப்பான அடிப்படை நூல்கள், எவ்வளவு நபர்கள் அப்பிரிவில் உள்ளனர், அப்பிரிவை உருவாக்கியது யார்? – என்பன உள்ளிட்ட  அனைத்துக் கூறுகளும்  இருக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. வயலூர் முருகன் கோவில் பிராமண அர்ச்சகர்கள் இப்படி எதையும் நீதிமன்றத்தில் நிரூபிக்கவில்லை. 

வழக்குத் தொடுத்த மனுதாரர்கள் தங்கள் பணி விண்ணப்பத்தில் கார்த்திக் – இந்து - பிராமின், பரமேஸ்வரன் - இந்து - குருக்கள் என்று தெளிவாக  தங்கள் சாதியை  குறிப்பிட்டுள்ளனர். நேர்முகத் தேர்வில் தோற்றுள்ளனர். அவர்கள் அர்ச்சகர் பணிக்கே தேர்வாகாதபோது, பிறப்பு, சாதி அடிப்படையிலான கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றது உச்சநீதிமன்றத்தின் ஆதிசைவ சிவாச்சாரியார்கள் தீர்ப்பை நேரடியாக  மீறுவதாகும். மனுதாரர்கள் குறிப்பிடும் மத உட்பிரிவு என்பது பிறப்பின் அடிப்படையிலான சாதி உட்பிரிவுதான். ஆதிசைவர்கள்/சிவாச்சாரியார்கள்/குருக்கள் –  என்ற மத உட்பிரிவில்  சைவத்தை ஏற்கும் மற்ற இந்துக்கள் சேர முடியுமா?

கோயில் கருவறையில் குறிப்பிட்ட மத உட்பிரிவை (denomination) சேர்ந்த அர்ச்சகர்கள் மட்டுமே பூஜை செய்ய முடியுமா? மற்ற இந்துக்கள் தொட்டால் தீட்டாகி விடுமா? என்ற கேள்விக்கு A.S.Narayana Deekshitulu - Vs - State Of A.P (1996) 9 SCC 548 - வழக்கு தீர்ப்பின் பத்தி 125-ல்  "

It is next contended that as per rules laid down in Agmas, the archaka of particular denomination alone is entitled to enter sanctum sanctorum and touch the image of God. A touch by a person of different denomination defiles the image of God. Therefore, persons belonging to that particular family, sect or denomination alone are entitled to perform pooja or ceremonial rituals of daily worship and that the abolition of hereditary right amounts to interference with the religion offending Article 25(1). 

Therefore, what would be relevant is not that the candidate who seeks to serve as an archaka must be from that family etc., but must be an accomplished person in Agama rules having faith and devotion in that form of worship and also proficiency to perform rituals and rites, ceremonial rituals appropriate to the temple according to its customs, usages, Sampradayams etc. In other words, the faith and belief in the religion, customs, usages or Sampradayams in that particular Agamas and proficiency in performance of the rituals to the image of God in those particular rituals are conditions precedent to be eligible to hold office of the archaka. One who fulfils those pre-conditions is eligible to be considered and appointed to the office of archaka or other similar offices. The regulation of this secular activity, therefore, does not offend any faith or belief in the performance of those duties by a person other than one hailing from the family, sect/sub-sect or denomination hither to performing the same. Earlier, the field of choice to appoint a particular archaka was confined and limited to that family, sect/sub-sect or denomination, but after the statutory regulation the field of choice is widened and all eligible candidates including those available from the family etc. will be considered; competency is tested and when one is found qualified, appointment is made to the office of archaka according to the prescribed procedure. என்று தெள்ளத் தெளிவாக  உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை விசாரணையின்போது சுட்டிக் காட்டியும் நீதிமன்றம் கணக்கில் கொள்ளாதது ஏன்? 

மேற்கண்ட கேள்விகள் அனைத்தும் மிகத் தெளிவான வாதங்களாக பிராமணர் அல்லாத இந்து அர்ச்சகர்கள் சார்பில் பதில் மனுவாகவும், நேரடி வாதங்களாகவும் முன்வைக்கப்பட்டது. இந்த வாதங்கள் எதையும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிடவில்லை. விவாதிக்கவுமில்லை. மேற்கண்ட வாதங்களும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளும் இந்த வழக்கிற்கு பொருந்தாது என்றாவது சொல்ல வேண்டிய நீதிபதி, இந்நிலையில் இருந்து தவறியது அரசியல் சட்ட மாண்பிலிருந்து தவறியது ஆகாதா? இது பிராமணர் அல்லாத இந்து  அர்ச்சகர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கருதப்படாதா?

பிராமணர் அல்லாத மற்ற இந்து சாதியினர் மீது பிறப்பின் அடிப்படையில், தகுதியின்மையை (disability based on birth) இத்தீர்ப்பு சுமத்துகிறது. பணி உத்தரவு ரத்து செய்யப்பட்ட பிராமணர் அல்லாத  சைவ இந்து அர்ச்சகர்கள், ஆகமம், வேதம், மந்திரங்கள் கற்று தீட்சை பெற்று, முறையாக சான்றிதழ் பெற்று நேர்முகத் தேர்வில் தேர்ச்சியும் பெற்று, சரியாக பூஜை செய்து மக்கள் அங்கீகாரம் பெற்றவர்கள்தான். அவர்களின் பணிநியமனம் இன்று ரத்தாக நீதிமன்றம் சொன்ன ஒரே காரணம்  அவர்கள் பிறப்பும், சாதியும்தான்.  இது அரசியல் சட்டப்படி சரியா? 

தீண்டாமையின் அனைத்து வடிவங்களும் ஒழிக்கப்பட்டு விட்டது என்ற அரசியல் சட்டத்தின் பிரிவு 17 – ஐத் தவறாக பொருள் கொள்கிறது தீர்ப்பு. ஸ்மார்த்த பிராமணர்களே, கருவறைக்குள் சென்று பூஜை செய்ய முடியாது என்ற  இந்நடைமுறை தீண்டாமை இல்லை, மாறாக பட்டியல் சமூகத்தினர் மட்டும் பூஜை செய்யக் கூடாது என்று சொன்னால்தான் தீண்டாமை குற்றம் வரும் என்று சபரிமலை தீர்ப்பிற்கு மாறாக தீண்டாமையை சாதிக்கு மட்டும் சுருக்குகிறது தீர்ப்பு. சபரிமலை தீர்ப்பின்படி  புனிதம் - தீட்டு என்று ஒருவர் ஒதுக்கப்பட்டால் அது தீண்டாமைதான். 

மொத்தத்தில் அரசு பொதுக்கோவிலில் கருவறை தீண்டாமை மீண்டும்  ஆழமாய் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகமம், வேதம், மந்திரங்கள் கற்று, முறையாக தேர்வான அர்ச்சகர்களின் பணி உரிமை, பிறப்பின் அடிப்படையில் பறிக்கப்பட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு, அரசியல் சட்டத்தின் விழுமியங்களை (constitutional morality) அரசியல் சட்டத்தின் அடிப்படை கூறான(basic structure)  சமத்துவ கோட்பாட்டை மீறுகிறது. 

எனவே தமிழக அரசு, அரசியல் சட்ட விரோத இத்தீர்ப்பிற்கு எதிராக,

1. மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்வதுடன், 

2. இத்தீர்ப்பிற்கு மூலமாய் உள்ள  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு W.P.NO.17802/2021 வழக்கின் தீர்ப்பிற்கும் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய வேண்டும்.

3. அனைத்து சாதி இந்துக்களையும் அர்ச்சகர்  ஆக்க, கோவிலில் சமத்துவம் நிலவ, 2006-ஆம் ஆண்டு கலைஞர் கொண்டு வந்து சட்டமாகாமல் போன  இந்து சமய அறநிலையத்துறை சட்டம் பிரிவு 55(2) – ன் கீழான சட்டத்  திருத்தத்தை - குறிப்பாக பழக்கம், வழக்கம், மரபு, சாதி, பிறப்பு அடிப்படையிலான மத, சாதி உட்பிரிவின் கீழ் அரசு பொதுக் கோயில்களில் அர்ச்சகர் நியமனம் கோர முடியாது என மீண்டும் கொண்டு வந்து தந்தை பெரியார், அண்ணா, கலைஞரின் அடிப்படை கொள்கையான அனைத்து சாதி அர்ச்சகர் நியமனத்தை, கோயில்களில் அரசியல் சட்ட சமத்துவத்தை நிலைநிறுத்த வேண்டும்.

4. அனைத்து சாதி அர்ச்சகர் பிரச்சனையில் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து போராடிவரும் நாங்கள்  இந்து சமய அறநிலையத்துறையில்  ஆர் எஸ் எஸ் - பா ஜ க - பிராமணீய சிந்தனைப் போக்குள்ள சில சட்டத்துறை அதிகாரிகளின் ஊடுருவலை மிகவும் ஆபத்தான போக்காக பார்க்கிறோம். இந்நிலை நீடித்தால் தமிழக அரசால் செய்யப்பட்ட அனைத்து அர்ச்சகர் நியமனங்களும் ரத்தாகும். எனவே தமிழக முதல்வர் உடனே இதில் நேரடியாகத் தலையிட வேண்டுமெனக் கோருகிறோம். 

வா.ரங்கநாதன், தலைவர் 
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் - தமிழ்நாடு. 
தமிழ்நாடு அரசு நியமன அற்றவர்கள் சங்கம்
தொடர்புக்கு : 9047400485

வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன், 
மாநில ஒருங்கிணைப்பாளர், 
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்.
தொடர்புக்கு : 98653 48163.

வாஞ்சிநாதன்

ரங்கநாதன்





சனாதனத்திற்கு எதிராக மதுரையில் கருத்தரங்கம்!

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரைக் கிளையின் சார்பில் 25.03.2023 அன்று மதுரையில் கருத்தரங்கம் நடைபெற்றது.

சனாதனம்-அனைத்து சாதியினர் அர்ச்சகர் உரிமை மறுப்பு-ஸ்டெர்லைட் அநீதி என்ற கார்ப்பரேட்-காவிப் பாசிசத்தின் மூன்று கோணங்களை விளக்கித் தலைவர்கள் உரையாற்றினர். 

கார்ப்பரேட் அதானி - காவி ஆர் எஸ் எஸ்-ஐ காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி கடுமையாக எதிர்த்து வரும் சூழலில், அதன் பிறகு நடைபெற்று வரும் பின் விளைவுகளைப் பார்க்கும் போது, நீதித்துறையில் நிலவும் காவி மயத்தையும் எதிர்க்காமல் இனி அரசியல் இல்லை என்பது தெளிவாக்கப்பட்டது. 

பேச்சாளர்கள்-பங்கேற்பாளர்கள், நிகழ்வுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்த மதுரை கிளைச் செயலர் லயனல் அந்தோணிராஜ் தோழருக்கும், தலைவர் பேராசிரியர் சீனிவாசன் மற்றும் செயற்குழுவிற்கும் நன்றி!

வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன்
மாநில ஒருங்கிணைப்பாளர் 
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்







தோழர் சீனிவாசன்

தோழர் இராமசாமி

தோழர் வாஞ்சிநாதன்

தோழர் மருதையன்

தோழர் லயனல் அந்தோனிராஜ்









Saturday 11 February 2023

நீதித்துறையில் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவல்!

ஆர்.எஸ்.எஸ்-ன் ஊதுகுழலாக செயல்பட்டு வரும் வழக்கறிஞர் விக்டோரியா கௌரி என்பவரை பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்ததன் மூலம், நீதித்துறையில் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவி வருகிறது. இதனால் நீதித்துறையின் மாண்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர்  சே.வாஞ்சிநாதன் அவர்கள் Arakalagam ஊடகத்திற்கு அளித்த பேட்டி கீழே. பாருங்கள், பகிருங்கள்!

தகவல் 

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

Tuesday 7 February 2023

நீதித்துறை சுதந்திரமும், நீதிபதிகள் நியமனமும்!-----இனி?

நீதித்துறை சுதந்திரமும், நீதிபதிகள் நியமனமும்....இனி?  

என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை சேப்பாக்கம் ரிப்போர்ட்டர் கில்டு அரங்கில் 05.02.2023 அன்று நடைப்பெற்றது. அந்த நிகழ்ச்சியில் நீதிபதி D.அரி பரந்தாமன் (ஓய்வு),  இரா. வைகை,  மூத்த வழக்கறிஞர், S.வாஞ்சிநாதன், வழக்கறிஞர் மற்றும் வழக்கறிஞர் மில்டன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

கருத்தரங்கத்தின் ஒரு பகுதியாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது. 

தகவல்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம். (PRPC)









Thursday 25 August 2022

அனைத்து சாதி அர்ச்சகர் பிரச்சனை: தூங்குகிறாரா முதல்வர் மு க ஸ்டாலின்?

"திமுக தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றப்பட்டார், அவருக்குத் தெரியாமல் நடந்து விட்டது" என்பது அரசியல் ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழகநி ர்வாகத்தில், குறிப்பாக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற கருவறை தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் இந்த வாதங்களை ஏற்றுக்கொள்ள முடியாது .

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு முழுப் பொறுப்பு தமிழக முதல்வர் ஸ்டாலின்தான் ஏற்க வேண்டும். இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்.

சமீபத்திய நீதிமன்ற தீர்ப்பினால் அனைத்து சாதியினரும் எல்லா இந்து கோயில்களிலும் அர்ச்சராக முடியாது. இதற்கு முழு பொறுப்பு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட பிற அதிகாரிகளுமே முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உடனடியாக பதவி விலக வேண்டும்.

இத்தகைய மோசமான தீர்ப்புக்குப் பின்னால் உள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களின் அலட்சியம் மற்றும் அதிகாரிகளின் அக்கறையற்றத் தன்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அம்பலப்படுத்துகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சா.வாஞ்சிநாதன் அவர்கள். பாருங்கள்! பகிருங்கள்!!

அனைத்து சாதி அர்ச்சகர் பிரச்சனை என்பது தமிழ் மக்களின் தன்மானப் பிரச்சனை. தமிழகம் விழித்துக் கொள்ளவில்லை என்றால் மீண்டும் மீண்டும் பார்ப்பனியமே கோலோச்சும்.


Thanks:arakalagam


Friday 29 July 2022

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி : வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்!

தமிழகத்தையே உலுக்கிய மாணவி ஸ்ரீமதி மரணம். அது தற்கொலை அல்ல: மாறாக வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆதாரங்களை முன் வைக்கிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள். பாருங்கள்! ! 

ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கத் தொடர்ந்து போராடுவோம்!

இனியும் இது போன்ற கொடுமைகள் தமிழகத்தில் நடைபெறாமல் இருக்க நாம் விழிப்போடு செயல்படுவோம்.


நன்றி: அரண் செய்

Wednesday 20 July 2022

கள்ளக்குறிச்சி: மாணவி ஸ்ரீமதி மரணம்! குற்றவாளிகளை பாதுகாக்கும் தமிழக அரசு!

கள்ளக்குறிச்சியில் உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் படிக்கும் மாணவி மர்மமான முறையில் 12 ஆம் தேதி இரவு இறந்துள்ளார். அது 13 ஆம் தேதி தான் அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாணவியின் மரணத்தில் பள்ளி நிர்வாகத்தின் மீது சந்தேகம் இருப்பதாகக் கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. அதைத்தொடர்ந்து தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் போராடிய மக்களை அச்சுறுத்தும் வகையிலும், மாணவியின் தற்கொலைக்குக் காரணமான பள்ளி நிர்வாகத்தைப் பாதுகாக்கும் வகையிலும் அமைந்துள்ளதாகக் கூறுகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சென்னை கிளை செயலாளர் வழக்குரைஞர் ஜிம்ராஜ் மில்டன் அவர்கள். பாருங்கள்! பகிருங்கள்! ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கக் குரல் கொடுங்கள்.


Thanks: galatta voice