Tuesday 5 May 2020

ஆகக் கொடியது எது? கரோனாவா? கொடுஞ் சட்டமா?


2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் காவல்துறை அனுமதியுடன் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிரானப் போராட்டத்தை தனது சர்ச்சைக்குரியப் பேச்சால் மதக்கலவரமாக மாற்றிய பாரதிய ஜனதாக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் கபில் மிஸ்ரா மீது இன்றுவரை சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. ஆனால் அன்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியதற்காக பல்கலைக் கழக மாணவர்கள், கொடிய கரோனா ஊரடங்கு காலம் அமுலில் உள்ளபோதே, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் (UAPA) டெல்லியில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
ஜாமியா மிலிலா பல்கலைக் கழக மாணவர்கள் மீரான் ஹைதர் மற்றும் மூன்றுமாத கர்ப்பினியான சபுரா சார்கர் ஆகியோர் ஏப்ரலில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிபா வூர் ரகுமான் ஏப்ரல் 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சபுரா சார்கர் பிணையில் விடுதலையான பிறகும் வேறு ஒரு வழக்கில் அவரைக் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். மேலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கூட்டுக் குழுவைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் தேடப்பட்டு வருகின்றனர். இவர்கள் மீது குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்துள்ள முதல் தகவல் அறிக்கையில் மாணவர்கள் ஆயுதங்கள் வைத்திருந்ததாகவோ, குற்றச் சதியில் ஈடுபட்டதாகவோ முதலில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் பின்னர், புலனாய்வு என்ற பெயரில் அவர்களைச் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) மற்றும் தேசியப் புலனாய்வு முகமை (NIA) மூலம் கைது செய்வதற்கு ஏற்ப, வழக்கின் போக்கையே மாற்றி அமைத்துள்ளனர். இதன் அடிப்படையில் இஸ்ரத் ஜகான், காளித் சாயி மற்றும் சபு அன்சாரி ஆகியோர் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் ஏப்ரலில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதக் கலவரத்திற்குக் காரணமான கபில் மிஸ்ராவை விட்டுவிட்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் உமர் காலித் தலைமையில் மாணவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதாகவும், மேலும் அமெரிக்க அதிபரின் இந்திய வருகையின் போது சாலைகளை மறித்து சைக்கிள் செயின், ஆசிட், பெட்ரோல் குண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு கலவரத்தில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க திட்டமிட்டதாகவும் உமர் காலித் மீது குற்றம் சுமத்தி உள்ளது மோடி அரசு. இதில் வேடிக்கை என்னவென்றால் ட்ரம்ப் இந்தியா வந்த அன்று தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத இஸ்லாமியர்கள் மீதும் ட்ரம்ப் வருகையை சீர்குலைக்கத் திட்டமிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்றையொட்டி, உலகெங்கிலும் சிறையில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட்டு வரும் வேளையில், இந்தியாவில் மட்டும் வெளியில் உள்ளவர்களை சிறைக்கு அனுப்பி வருகிறது மோடி அரசு.
கரோனா காலத்தில் தங்களது மக்களைக் காப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன உலக நாடுகள். ஆனால் மோடி அரசோ காவிரி மேலாண்மை வாரியத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தமிழக மக்களை வஞ்சிக்க முயலுகிறது. புதிய மின்சார மசோதா ஒன்றை ஏப்ரலில் சுற்றுக்குவிட்டு 21 நாட்களுக்குள் அதன் மீது கருத்துக்கூற வேண்டும் என கெடுவிதிக்கிறது நடுவண் அரசு. கரோனா காலத்தில் இது சாத்தியமில்லை எனத் தெரிந்தும் கொல்லைப்புற வழியாக தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முனைகிறது மோடி அரசு.

புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப வழிவகை செய்ய வேண்டும் என அணுகிய போது அதில் வாய்தா போட்டதே தவிர அதற்கு வழி சொல்லவில்லை உச்சநீதி மன்றம். பல ஆட்கொணர்வு மனுக்களையும் கண்டு கொள்ளவே இல்லை. ஆனால் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரத்திற்காக ரிபப்ளிக் தொலைக் காட்சி அர்ணாப் கோஸ்வாமி மீது பத்துக்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலிலும் அவரைக் கைது செய்யக்கூடாது எனவும், உரிய பாதுகாப்புக் கொடுக்க வேண்டும் எனவும் காவல் துறைக்கு உத்தரவிடுகிறது உச்சநீதி மன்றம். ஊடகத் துறையில் தமிழ் நாட்டில் மோடியியின் பிரச்சார பீரங்கி பாண்டே போல அர்ணாப் கோஸ்வாமி டெல்லியின் பிரச்சார பீரங்கி. நாட்டுக்காக உழைக்கும் தொழிலாளர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு மோடிக்காக ஜால்ரா தட்டும் கோஸ்வாமிகளைக் காப்பதில் குறியாய் இருக்கிறது உச்சிக்குடுமி மன்றம். இது கரோனாவைவிடக் கொடியதல்லவோ!

தங்களது வாழ்வாதாரத்தைக் காக்க மக்கள் போராடும் போது அவர்களை சுட்டுத் தள்ளுகிறது அரசு. மனிதாபிமான அடிப்படையில் இத்தகையப் படுகொலைகளைக் கண்டிக்ககூட இனி முடியாது. ஆம்! மோடி அரசை எதிர்க்கும் எவர் ஒருவரையும் இனி சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) மற்றும் தேசியப் புலனாய்வு முகமை (NIA) மூலம் கைது செய்து சிறையில் அடைத்து சித்திரவதை செய்ய முடியும். மக்களுக்கு மருந்தாக இருக்க வேண்டிய நீதிமன்றங்களோ அநீதிக்கு அரணாய் நிற்கின்றன.

தற்போது மக்களை அச்சுறுத்தும் கரோனா கொள்ளை நோய் இன்று இல்லை என்றாலும் நாளை கட்டுக்குள் வந்துவிடலாம்; ஆனால் மக்களைக் கொடுஞ் சிறைக்குள் தள்ளும் கொடியச் சட்டங்கள் மட்டும் நீடிக்கலாமா?

ஆர்.ஜானகிராமன், 
வழக்குரைஞர்
மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.

No comments:

Post a Comment