Friday 8 May 2020

மோடியால் கரோனாவை எதிர் கொள்ள முடியுமா?


சென்னை மருத்துவர் சைமன் அடக்க நிகழ்வில் நடந்த வன்முறையை விடக் கொடியது .பி மாநிலம் ராம்பூர் மாவட்டத் தூய்மைப் பணியாளர் குன்வார்பால் படுகொலை. .பி அரசு உத்தரவுப்படி தெருக்களில் கிருமி நாசினி தெளித்து வந்தார் குன்வார்பால். தவறுதலாக ஒருவர் காலில் பட்டுவிட்டது. உடனே, ஐந்து நபர்கள் சேர்ந்து, குன்வார்பாலின் வாயில் புனலைத் திணித்து, கிருமி நாசினியை ஊற்றி, துள்ளத் துடிக்கக் கொலை செய்துள்ளனர். இன்று வரை கொலைகாரர்கள் கைது செய்யப்படவில்லை. ஏனென்றால் அவர்கள்எச்சில் துப்பியதப்லீக் ஜமாத்தினரோ - முசுலீம்களோ அல்ல; இராமன் கோவில் அமைய இருக்கும் புனித பூமியான உத்தரப் பிரதேசத்தில் மனுநீதியை அமல்படுத்தியவர்கள்.

நல்லவேளையாக, டாக்டர் சைமன் நிகழ்வில் இசுலாமியர்கள் யாரும் குற்றவாளிகள் இல்லை. ஒருவேளை இருந்திருந்தால் உறுதியாகஎன்கவுண்டர்தான். அரபுலகின் இந்துத்துவ எதிர்ப்பிற்கு, காவிகள் பணிவதுபோல நடிப்பதற்குக் காரணம் அவர்கள் பெருமுதலாளிகள் என்பதால் மட்டுமே. எந்தச் சூழலிலும் இந்துத்துவா கூட்டமும்அரசுக் கட்டமைப்பும், கார்ப்பரேட் சேவையில்தான் ஈடுபடும்.

தூத்துக்குடி போல்டன்புரம் கொரானாவால் இறந்தவரின் பகுதி. வேறு யாரும் பணிபுரியத் தயங்கிய சூழலில் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றிப் பணிபுரிந்தனர் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகள். உடனே களமிறங்கியது ஸ்டெர்லைட். அடுத்த சில மணி நேரத்தில் தன்னார்வலர் அட்டையை ஒப்படைக்கச் சொன்னது மாவட்ட நிர்வாகம். காரணம் கேட்டால், நீங்கள்அரசுக்கு எதிராகப் போராடக் கூடியவர்கள்என காவல்துறை அறிக்கை அளித்துள்ளது! என்கிறார்கள்.

ஆனந்த் தெல்தும்டே, ஜாமியா பல்கலைக் கழக சிஏஏ எதிர்ப்புப் போராளிகள் மீரான் ஹைதர், சபூரா, காசுமீர் பத்திரிக்கையாளர்கள், தப்லீக் மாநாட்டிற்கு வந்த வெளிநாட்டு இசுலாமியர்களின் கைதுகள் காட்டும் உண்மை, கரோனா காலத்திலும் ஆர்.எஸ்.எஸ்-மோடி அரசு தனது கார்ப்பரேட்-காவிப் பாசிச செயல்திட்டத்தில் தீவிரமாக உள்ளது என்பதையே!

கரோனா சட்டம்-ஒழுங்கு சார்ந்த பிரச்சனை அல்ல. சமூகப் பிரச்சனை. வழக்கமாக மேலிருந்து அமலாக்கப்படும் அரசு நிர்வாக நடைமுறைகள் மூலம் மட்டும் கரோனாவை வெல்ல முடியாது. கீழிருந்து, மக்கள் திரளிலிருந்து வரும் பங்களிப்பு கரோனா போரில் மிகவும் கேந்திரமானது. இதற்கான எந்த முன்னெடுப்பும் அரசிடம் இல்லை. எல்லா இயற்கைப் பேரிடர்களிலும் தங்களைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்ட மக்கள் இயக்கங்கள், அமைப்புகள், இசுலாமியர்களின் பங்களிப்பையும் தற்போது தீவிரமாகத் தடுக்கிறது அரசு.

புலம் பெயர் தொழிலாளர்கள் பிரச்சனையில், அவர்களிடம் பணிசெய்யும் தொழிற்சங்கங்கள் கலந்தாலோசிக்கப்படவில்லை. அவர்களின் குரலுக்கும் செவிமடுக்கவில்லை. இந்த நிகழ்வுகள் உணர்த்தும் செய்தி என்ன? சாதி, வர்க்கம், மதம், மொழி, இனம் என ஏற்கனவே பிளவுண்டு கிடக்கும் நாட்டை, ஒற்றுமைப்படுத்தி, ஓரணியில் நிற்கவைக்கும் ஆற்றல் ஆளும் கட்சிக்கோ அல்லது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பிற அரசியல் கட்சிகளுக்கோ இல்லை. கரோனாவை சமூகமாக எதிர்கொள்வதில் இங்குள்ள மிகப்பெரிய பிரச்சனை இது.

இந்தியாவைத் தாண்டிய உலகிலும், கரோனாவின் விளைவுகள் குறித்து சரியான விவாதங்கள் நடக்கவில்லை. கரோனா எங்கு உருவானது என்பது குறித்து விவாதிக்கும் உலகம், கரோனா போன்ற சூப்பர் வைரஸ்கள் ஏன் உருவாகின்றன? என்பது குறித்து விவாதிக்கவில்லை. இலாபத்தை மையப்படுத்திய முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரம், இயற்கையை, சுற்றுச் சூழலை அழித்ததே கரோனா, சார்ஸ், எபோலா, பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் கிருமிகள் உருவாக முக்கிய காரணம். சில ஆண்டுகளுக்கு முன்பே கிருமிகளால் மனித சமூகம் கடும் பாதிப்பிற்குள்ளாகும் என்பது தெரிந்தும், சுகாதாரம், கிருமி ஆராய்ச்சிகள், மருந்துகளுக்கு உரிய நிதியை நாடுகள் ஒதுக்காமல் தடுத்ததும் முதலாளித்துவமே. பிரச்சனையின் மையத்தைக் கண்டறிய விடாமல், சீனா பரப்பியதா/அமெரிக்கா பரப்பியதா? என்று பேசவைப்பதும் அதே முதலாளித்துவமே.

கரோனா காலத்தில் மோடி அரசு-பாஜக-ஆர்எஸ்எஸ்-சங் பரிவாரத்தின் செயல்பாடுகள்

இந்தியாவில் ஜனவரி 30-அன்று முதல் கரோனா தொற்று அறியப்பட்டது. உலக சுகாதார நிறுவனம் ஜனவரி 31,2020 அன்றேகரோனா உலக சுகாதார நெருக்கடி நிலையை அறிவித்துவிட்டது. பிரதமர் மோடியோ விழிப்புடன் இருக்க வேண்டிய முக்கியக் காலகட்டத்தில், சிஏஏஎன்பிஆர்- என்ஆர்சி போராட்டங்களில் பங்கேற்ற இசுலாமியர்களைத் தனிமைப்படுத்துவது, மாணவர்களை ஒடுக்குவதென தீவிரமாயிருந்தார்.

மார்ச் 13 அன்றுஇந்தியாவில் மருத்துவ நெருக்கடி நிலை இல்லைஎன மத்திய அரசின் சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டது. மார்ச் 22 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்படவில்லை. மார்ச்.23 வரை பாராளுமன்றம், மார்ச் 24 வரை தமிழக சட்டமன்றம் நடந்தது. தொடர்ந்து, முன்னேற்பாடுகள் ஏதுமற்ற 21 நாட்கள் ஊரடங்கு மார்ச் 24-ல் அறிவிக்கப்பட்டது.

புலம் பெயர் தொழிலாளர்கள் தொடர்பான அணுகுமுறை குறித்து கடும் விமர்சனத்தை எதிர்கொண்டிருந்த மோடி அரசு, ஊரடங்கிற்கு முன் டெல்லியில் நடந்த தப்லீக் மாநாட்டை, மிகக் கேவலமான முறையில் தனது இசுலாமிய வெறுப்பு அரசியல் மற்றும் திசைதிருப்பும் உத்திக்கு பயன்படுத்திக் கொண்டது. “இசுலாமியர்களின் கரோனா ஜிகாத்என்று சங்பரிவாரங்கள் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்தன. வெகுஜன ஊடகங்களும் தப்லீக் மாநாட்டை ஊதிப் பெருக்கின. உரிய காலத்தில் சர்வதேச விமானங்களைத் தடை செய்யாத மோடி அரசின் தவறு தப்லீக் மீது மட்டுமல்ல, ஒட்டுமொத்த இசுலாமியர்கள் மீதும் திருப்பப்பட்டது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி முதல் .பி.வரை களமிறங்கிய ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மக்களுக்கு உதவிகள் செய்வதுபோல இசுலாமிய வெறுப்பை விதைத்தனர். பலன் இன்று அரேபியாவரை நீண்டு இந்தியத் தொழிலாளர்களுக்கு நெருக்கடி வரும் நிலை.

கரோனா சூழலை எதிர்கொள்ளும் நம்பிக்கைக்குரிய தலைவரா மோடி?

கரோனா தடுப்பில் மோடி அரசு முற்றிலும் தோற்றுப் போனது என்பதே உண்மை. சீனா, உலக சுகாதார நிறுவனத்தின் மீது அமெரிக்க டிரம்ப் பழியைப் போட்டது போல, இசுலாமியர்கள் மீது பழியைப் போட்டுத் தப்பிக்க முயற்சித்தது மோடி அரசு. இந்த ஒரு சார்பான தலைமையின் கீழ் நாடு எப்படி ஒன்று சேரும்? நாட்டின் மக்கள் தொகையில் 14.5 சதவீதம் உள்ள இசுலாமிய மக்களிடமிருந்து ஏற்கனவே தனிமைப்பட்டிருக்கிறது மோடி அரசு. பழங்குடிகள், தலித்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பும் மோடி அரசின் மீது வருத்தத்தில் உள்ளன. இதனால்தான் நிதி கொடுங்கள் என்று மோடி கேட்டதற்கு, நாட்டின் பெரும்பான்மை மக்கள் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.

சுதந்திரப் போராட்டம், சீனா, பாகிஸ்தான் போர்களின்போது, தங்கள் உடைமைகள் அனைத்தையும் தர முன்வந்த இந்தியச் சமூகம் இன்று மோடி அரசிடமிருந்து விலகி நிற்கிறது. இதைவிட முக்கியமாக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவரை, பரிவோடு பார்க்காமல் வெறுப்போடு பார்ப்பது, ஒதுக்குவது, தங்கள் பகுதியில் சிகிச்சை செய்யக் கூடாதென்பது, மருத்துவர் உடலைக் கூட அடக்கம் செய்ய எதிர்ப்புத் தெரிவிப்பது, மருத்துவர்களை வீட்டைக் காலி செய்யச் சொல்வது, இசுலாமியர்களுக்கு மருத்துவம் மறுப்பது, சந்தேகத்தோடு பார்ப்பது…..என்ற வகையிலான சமூகத்தின் எதிர்வினை காட்டுவது இந்திய சமூகம் பிளவுண்டதாக, காரியவாதமானதாக மாறிவிட்டது என்பதையே.

கரோனாவுக்கு முன்பான இந்தியச் சமூகத்தில் சங் பரிவாரங்கள் முன்னெடுத்த வெறுப்பரசியல், அரசுகளின் தொடர் கார்ப்பரேட் முதலாளித்துவ ஆதரவுக் கொள்கை, 30 ஆண்டுகளாக நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கை தோற்றுவித்த காரியவாதம், மக்களின் வெறுப்பு-சுயநலக் கருத்தாக்கத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இதோடு, மாநிலங்களையும் சுயமாக செயல்படவிடாமல் முடக்குகிறது மோடி அரசு. ஜிஎஸ்டி, பேரிடர் நிதியைத் தர மறுக்கிறது. பிஎம் கேர்ஸ் என்று கார்ப்பரேட்டுகளிடம் தனியாக நிதி திரட்டிக் கொள்கிறது. மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட குறைவான நிதியிலும் வடக்கு,தெற்கு என பாரபட்சம் காட்டுகிறது.

முடக்கப்பட்ட பொருளாதாரம்!

கரோனாவின் உடன்விளைவாக உலகம் முழுக்க எதிர்கொள்ள இருக்கும் மிகப்பெரும் நெருக்கடி-பொருளாதாரக் கட்டமைப்புச் சிதைவு. ஏற்கனவே ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு (அழிப்பு), வங்கிகள் திவாலால் தள்ளாடி வரும் இந்தியப் பொருளாதாரம் சரிசெய்ய முடியாத அதல பாதாளத்திற்குச் சென்று, மேலும் ஆழமான கட்டமைப்பு நெருக்கடியில் சிக்கலாம். கரோனாவிற்கு முன்பே ஜிஎஸ்டி+வருமான வரி வருவாய் எதிர்பார்த்த அளவிற்கு வரவில்லை. பற்றாக்குறை மட்டும் 2,00,000 கோடி. ரிசர்வ் வங்கியின் அவசர கால கையிருப்பில் 1,70,000 கோடியை எடுத்தாயிற்று. தனியார் முதலாளிகள் தர வேண்டிய 8,00,000 கோடி வராக் கடன் தள்ளுபடி செய்தாகிவிட்டது. சாலை, விமானப் போக்குவரத்து, சுற்றுலா, ஹோட்டல், பேக்கரி, ஜவுளி, ரியல் எஸ்டேட், ஆட்டோமொபைல், செல், கார் தயாரிப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் மூடப்பட்டுவிட்டன.

விவசாயிகளுக்கோ ஈடு செய்ய முடியாத இழப்பு. அன்றாடம் கூலி வேலை செய்து வாழும், அமைப்புசாரா தொழில்களில் உள்ள சுமார் 45 கோடி மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். தமிழகத்தின் திருப்பூரில் மட்டும் வேலை இழந்தோர் சுமார் 10 லட்சம் பேர். நாடு முழுவதும் பல கோடிப் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை இழந்துள்ளனர், இனியும் இழப்பர். இத்தனை பாதிப்புகளை எதிர்கொள்ள மோடி அரசு அறிவித்துள்ள தொகை மிகவும் சொற்பமே. இந்த சொற்பத்தொகை அறிவிப்பின் மூலம் மோடி அரசு சொல்லும் சேதி என்ன? – அரசின் உதவியை பெரிய அளவில் எதிர்பாராதீர்கள்! உங்களை நீங்களே காத்துக் கொள்ளுங்கள்! நிச்சயம் பொருளாதார நெருக்கடிகள் அனைத்தும் மக்கள் தலையில்தான் சுமத்தப்படும். சுங்கச் சாவடி கட்டண உயர்வு போல மக்களுக்கு மட்டுமல்ல, அந்நிய முதலீகளைச் செய்துள்ள சர்வதேச நிதி நிறுவனங்கள், கார்ப்பரேட்டுகள், அம்பானிகள்-அதானிகளுக்கும்தான் பொருளாதார நெருக்கடி உள்ளது. இந்த இரு தரப்பும் பாதிக்கப்படும்போது, மோடி அரசின் தராசு எந்தப்பக்கம் சாயும்?

சரி செய்ய முடியுமா இந்தியப் பொருளாதாரத்தை?

சரிந்து போன இந்தியப் பொருளாதாரத்தை, உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் அரசால் சமாளிக்க முடியும். 80 கோடி இந்திய மக்களின் சொத்தை விட, 4 மடங்கு அதிகச் சொத்தை வைத்துள்ளனர் 1% இந்தியப் பணக்காரர்கள். 63 இந்திய மெகா கோடீசுவரர்களின் மொத்த சொத்து மதிப்பு, மத்திய அரசின் 2019 பட்ஜெட் தொகையான ரூ.24,42,200 கோடியை விட அதிகம். இந்த 63 பணக்காரர்களுக்கு, 30% சொத்துவரி விதித்தாலே, 7 லட்சம் கோடிக்கு மேல் வரும். ஆயுதக் கொள்முதல் ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பு, அணு உலைகள், ரபேல் விமானங்கள் வாங்குவதை ரத்து செய்தல் என ராணுவ பட்ஜெட்டைக் குறைக்கலாம்.

இதுதவிர ஆந்திராவின் திருப்பதி, கேரளாவின் பத்மநாபசாமி கோவில், புட்டபர்த்தி சாய்பாபா மடம், நாடு முழுவதுமுள்ள சர்ச்சுகள், வக்பு வாரியங்கள், குருத்துவாராக்களில் உள்ள பணம் மட்டும் பல லட்சம் கோடி தேறும். இவற்றிற்கு 30% வரி விதித்தால் நிச்சயம் பொருளாதாரச் சரிவை ஈடு செய்ய முடியும்.

உணவு தானியக் கிடங்குகளில் தேங்கிக் கிடக்கும் தானியங்களை இலவசமாக விநியோகித்தால் பசிப் பிரச்சனை தீரும். ஆனால், லட்சம் பேர் செத்தாலும், தீவிர மக்கள் கலகங்கள் வெடிக்காமல் காவி-கார்ப்பரேட் மோடி அரசு இதனைச் செய்யாது.

கரோனா - தற்காலிகத் தீர்வு என்ன?

மக்கள் நல அரசை நோக்கிப் போவதே நீண்ட காலத் தீர்வு என்றாலும், நிலைமைகளில் உடனடியாகப் பெரும் மாற்றம் வராவிட்டாலும், மக்கள் சமூகத்தைத் திரட்ட, மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட குறிப்பிட்ட சில நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும்.

முதல் நடவடிக்கையாக….

(i) கரோனா கொள்கை வகுக்கப்பட வேண்டும். மருத்துவம், மக்களின் பசி போக்கல், பொருளாதார நெருக்கடியை சரிசெய்தல் என்ற முன்று அம்சங்களில் குறுகிய மற்றும் நீண்ட காலத் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். வரைவுத் திட்டத்தை உடனே வெளியிட்டு மக்களிடம் கருத்து கேட்கப்பட வேண்டும். திட்டத்தில், கீழிருந்து மக்களின் பங்கேற்பு உறுதி செய்யப்பட வேண்டும். மாவட்டங்கள் தோறும் மக்கள் இயக்கங்கள், அமைப்புகள், கட்சிகள், தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கொண்ட குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும்.

(ii) மோடி மட்டும் முடிவுகள் எடுத்து அறிவித்து பிரச்சனையைத் தீர்த்து விடுவார் என்பதை மாற்ற அனைத்துக் கட்சிக் குழு அமைத்தல். மாநிலங்களுக்கு அதிக அதிகாரம், நிதி அளித்தல்.

(iii) அனைத்துத் துறை வல்லுநர் குழு அமைத்தல். இக்குழு பொருளாதாரம், வேளாண்மை, கட்டுமானம், சேவைத்துறை, தொழில் துறை என சமூகத்தின் அனைத்துத் தரப்பையும் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், விவசாயிகள், தொழிலாளர்களின் பிரதிநிதிகளும் குழுவில் சேர்க்கப்பட வேண்டும். பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண, ரகுராம்ராஜன், ஜெயரஞ்சன் உள்ளிட்டோரைப் பயன்படுத்துவது அவசியம். மைய அளவில் மட்டுமல்லாது, மாநில அளவில் அனைத்துக் கட்சி மற்றும் வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். இக்குழுக்கள் அடிக்கடி விவாதித்து, முடிவுகள் எடுத்து விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும். தினந்தோறும் அதிகாரப் பூர்வ நிலவரங்களை மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும்.

சே.வாஞ்சி நாதன்
சீனா, கியூபா, தென்கொரிய நாடுகளின் மக்களுக்கு தங்கள் அரசுகள் மீது விமர்சனங்கள் இருந்தாலும், நெருக்கடியில் அரசு நம்மைக் காக்கும் என்று நம்பினார்கள். அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினார்கள். அரசும் தன்பங்கிற்கு மக்களுக்குத் தேவையான பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கி பட்டினி, பசி இன்றி பார்த்துக் கொண்டது. இந்த இரு தரப்பு புரிதல், ஒத்துழைப்பால் ஒரே நாடாக ஓரணியில் நின்று கரோனாவை எதிர்கொண்டு மீண்டார்கள்.

இந்தியாவில், தமிழகத்தில் நாமும், மக்கள் நம்பிக்கையைப் பெற்றால், மக்களை ஓரணியில் திரட்டினால் கொரானா உள்ளிட்ட எத்தகைய பேரிடரையும் எதிர்கொள்ள முடியும். அதற்கு உடனடியான தேவை எதிர்கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், சமூக வலைதளப் பதிவர்களின் கூட்டுச் செயல்பாடு. மோடி அரசை, தமிழக அரசை நோக்கிக் கேள்வி எழுப்பாமல்அவர்களை நிர்பந்திக்காமல் எதுவும் நடக்காது. இணையவழிப் போராட்டங்கள், வீட்டின் மாடியில், வாசலில் போராடுவது, வீட்டில் கருப்புக் கொடி ஏற்றி, உண்ணாவிரதம் இருப்பது, கருப்பு கோலம் இடுவது என்ற வடிவில் நமது போராட்டங்கள் இருக்கலாம். கூட்டாகச் சிந்தித்தால் இன்னும் பல வழிகள் பிறக்கலாம்! கடந்து போக முடியாத ஆறு என்று எதுவும் இல்லை! இதுவும் கடந்து போகும்!

வழக்குரைஞர் சே.வாஞ்சி நாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.
9865348163
குறிப்பு: 23.04.2020 அன்று முகநூலில் வெளியிடப்பட்ட கட்டுரை.

No comments:

Post a Comment