Sunday 10 May 2020

அரசின் ஊது குழலாகிப்போன போன ஊடகங்கள்!


130 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டின் பெரும்பகுதி மக்கள் ரோனா ஊரடங்கில் அன்றாடம் அனுபவிக்கும் துயரங்கள் பெருமளவு சமூக ஊடகங்கள் வாயிலாகவேத் தெரிய வருகின்றன.

ரோனா நோய் பரவாமல் இருக்க ஊரடங்கு அறிவித்ததைத் தவிர அரசு வேறு எந்த நடவடிக்கையும் உருப்படியாக மேற்கொள்ளவில்லை.

எந்தவித திட்டமிடலுமின்றி போதிய அவகாசம் அளிக்காமல் அவசரகதியில் ஊரடங்கை அறிவித்து மக்களைத் துன்பத்திலும், துயரத்திலும், பசியிலும், பட்டினியிலும்தான் இந்த அரசு தள்ளியுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு முடியும் முன்பே பல மாநிலங்களில் மதுபானக்கடைகளைக்கூட அரசு திறந்து வைத்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு மக்களின் கடும் எதிர்ப்பால் உயர் நீதிமன்றம் தற்காலிகமாக அவற்றை மூட உத்தரவிட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் தாங்கள் அளப்பரிய ஆற்றலுடன இந்தப் பேரிடரை கையாண்டு வருவதாகவும், மக்கள் வீட்டிலிருந்து வெளியே வரவேண்டிய தேவை இல்லாத அளவிற்கு மக்களுடைய அத்தியாவசியத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து வருவதாகவும், நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாண்டு வருவதாகவும் மிகைப் படுத்தி பொய்யான விளம்பரம் செய்து வருகின்றன.

மக்கள் நலனைப் பற்றி ஒருபோதும் சிந்திக்கத் தெரியாத, சிந்திக்க விரும்பாத, செல்லரித்த, செயலற்ற கட்டமைப்புடன் உள்ள அரசுகளிடம் இருந்து வேறு எதையும் நாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், செயலற்ற மத்திய, மாநில அரசுகளை தூக்கி நிறுத்துவதற்கு செய்தி ஊடகங்கள் படும்பாடுதான் அருவருப்பாக உள்ளது.

மக்கள் பிரச்சனைகளின்பால் ஊடகங்களின் அணுகுமுறை

செய்தி ஊடகங்களால் மக்கள் பிரச்சனைகள் எவற்றிற்கும் தீர்வு காண இயலாது என்பதில் ஐயமில்லை. அதைப்போலவே ரோனா உருவாக்கியிருக்கும் பேரிடரை தீர்பதற்கான தீர்வை இந்தச் செய்தி ஊடகங்களால் அரசுக்கு கொடுக்க இயலாது.
ஆனால் பிரச்சனையின் தீவிரத்தை, அரசின் செயலற்றத் தன்மையை, அரசின் பாசிச நடவடிக்கைகளை மக்களிடம் தீவிரமாக எடுத்துச் செல்ல முடியும். மேலும் இந்தப் பிரச்சனைகளைத் தீர்பதற்கு ஆலோசனைகளும் வழங்க முடியும். அதேபோல சாதாரண ஏழை, எளிய மக்கள் படக்கூடிய துன்பங்களையும், துயரங்களையும் அதே தீவிரத்துடன் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்.
கரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் உருவாகியுள்ள புதுப் புது பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் அரசு திணறுவதையும், பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் மீது பாசிச நடவடிக்கைகளை ஏவி விடுவதையும் அதே தீவிரத்துடன் இந்த ஊடகங்கள் அணுகுகின்றனவா? இல்லவே இல்லை!

அவ்வாறு அணுகுவது போல் பாவ்லா செய்து கொண்டு  நடுநிலையாகச் செயல்படுவதாக தங்களைத் தாங்களே விளம்பரப்படுத்திக் கொள்கின்றன. ஊடகங்கள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டுமேயன்றி நடு நிலமையாக அல்லமக்கள் மற்றும் அரசு இவற்றிற்கு இடையில் நடுநிலைமை என்ற கருத்தே ஒரு ஏமாற்று, நடு நிலை ஊடகம் என்பதும் ஒரு ஏமாற்றே! ஊடகங்கள் மக்கள் சார்பாக நேர்மையாக செய்திகளை வெளியிட வேண்டும்.

இரு வாரம் முன்பு குறிப்பாக ஒரு செய்தி மிகப்பெரிய அளவில் அனைத்து ஊடகங்களிலும் மூன்று நாட்கள் தலைப்புச் செய்தியாக, சரியாக சொல்வதானால் ஒற்றைச் செய்தியாக வலம் வந்து கொண்டிருந்தது. கரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்த மக்கள் பற்றிய செய்தி அது. மருத்துவர் உடலை அடக்கம் செய்யக் கூடாது என்று தடுத்த மக்களுடைய தவறை மிக ஆக்ரோஷமாகவும், சென்டிமென்டாகவும் ஊதிப் பெருக்கி அந்த எளிய மக்களை மிகவும் கொடூரமானவர்களாக சித்தரித்தன ஊடகங்கள். கரோனாவில் இறந்தவர் உடலை, இறந்தவர் குடும்பத்தினரிடம் கொடுக்காமல் மருத்துவமனை நிர்வாகமே ஏன் அடக்கம் செய்ய வேண்டும்? இந்தக் கேள்வியில் அடங்கியுள்ள அச்ச உணர்வை இந்த மக்களுக்கு ஏற்படுத்தியது யார்? கரோனா குறித்து அரசு ஏற்படுத்திய பீதியை மேலும் பெரிது படுத்தி மக்களிடம் கொண்டு சேர்த்தது இந்த ஊடகங்கள்தானே! இதன்விளைவுதான், இறந்து போன மருத்துவர் உடலை அடக்கம் செய்யவிடாமல் மக்களைத் தடுக்க வைத்தது, விளைவு இந்த மக்கள் இன்று குண்டர் சட்டத்தில் சிறையில்.

 கரோனா உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருந்த காலத்தில் அதைப் பற்றி எந்த அக்கறையும் இன்றி அலட்சியமாக நடந்து  கொண், இன்றளவும் மக்களுக்கு அநீதிகளை இழைத்துவரும் மத்திய, மாநில அரசுகள் மீது இந்தக் கோபத்தை ஒரு கணமேனும் ஊடகங்கள் வெளிப்படுத்தி இருக்கின்றனவா?

போதிய கால அவகாசம் கொடுக்காமல் தமிழக அரசு ஊரடங்கை அறிவித்தவுடன் பணமின்றி, உணவின்றி எப்படி வாழமுடியும் என்ற அச்சத்தின் காரணமாக சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காகக் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டமாகக் கூடிய இளைஞர்களால் தமிழகம் முழுவதும் கரோனா பரவிவிடும் என்று தலைப்புச் செய்தி வெளியிட்டு பீதியூட்டின ஊடகங்கள்.

அடுத்த சில நாட்களுக்குப் பிறகு போதிய அவகாசம் வழங்காமல் ஒரு நாள் இரவில் தோன்றி திடீரென நாடு முழுவதும் ஊரடங்கை அறிவித்தார் பிரதமர் மோடி. இந்தத் திடீர் அறிவிப்பால் பல இலட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலநூறு கிலோமீட்டர் தூரம் தங்கள் உடமைகளையும், குழந்தைகளையும் சுமந்து கொண்டு தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல நேர்ந்தது.


இந்த அரசுகள் தங்களைப் பட்டினி போட்டே சாகடித்து விடும் என்பது மட்டும் கோயம்பேட்டில் கூடியவர்களுக்கும் பலநூறு கிலோ மீட்டர்கள் நடந்தே சென்றவர்களுக்கும் உறுதியாக தெரிந்திருந்தது, ஆனால் இந்த ஆபத்தான இடப்பெயர்வுக்குக் காரணமான அரசு மீது கோபத்தை வெளிக்கொணரும் வகையில் என்றைக்காவது இந்த ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளனவா?

அரசின் ஊதுகுழலாக ஊடகங்கள்
 
நாடு முழுவதும் கரோனா நோய் பரவுவதற்கு டெல்லியில் தப்லிக் ஜமாஅத் நடத்திய மாநாடுதான் காரணம் என்று பாஜக-வினர் அவதூறு பரப்பினர். இந்த அவதூறு செய்தியை தலைப்புச் செய்தியாக திரும்ப திரும்ப ஊடகங்கள் வாசித்ததன் விளைவாக இந்தக் கருத்து மக்களிடத்தில் ஆழமாகப் பதிவாகிவிட்டன. ஊடகங்கள் நினைத்திருந்தால் ஆர்எஸ்எஸ்-பிஜேபி அரசினுடைய அவதூறு கருத்தை முளையிலேயே கிள்ளி எறிந்திருக்கலாம். மாறாக பாஜக அரசின் ஊதுகுழலாக மட்டுமே அவை செயல்பட்டன.

ஊரடங்கு காலத்தில் மருத்துவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக பால்கனியில் இருந்து கை தட்ட வேண்டும், மக்கள் ஒற்றுமையை காட்டும் விதமாக வீடுகளில் விளக்கேற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவிக்கிறார். இதை தலைப்புச் செய்தியாக மாற்றிய ஊடகங்கள் மறுநாள் எந்தெந்த ஊர்களில் எத்தனை பேர் கைதட்டினார்கள் என்பதை ஊர் ஊராகச் சென்று கணக்கெடுத்து பிரதமரின் கோரிக்கை  மக்களால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாக தலைப்புச் செய்தியாக வாசித்தன. அதே சமயம் மருத்துவத்திற்கு போதிய நிதி ஒதுக்குங்கள், ருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் கொடுங்கள் என்று கோரிக்கை வைத்த தமிழக மருத்துவர் உடனடியாக பணிமாற்றம் செய்யப்படுகிறார். மொத்த மருத்துவர்களின் கோரிக்கையும் இதுதான். மக்கள் நலனில் அக்கரை கொண்ட ஒரு நல்ல ஊடகம் மருத்துவர்களுடைய கோரிக்கையை தலைப்புச் செய்தியாக மாற்றி பிரதமரின் அறிவிப்பு ஒரு ஏமாற்று வேலை என்பதை அம்பலப்படுத்தியிருக்க வேண்டாமா? ஆனால் அதற்கு நேர்மாறாக, கரோனா நோயைக் கட்டுப்படுத்துவதில், கையாளுவதில் அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஊடகங்கள் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றன.

காவல் துறையின் அடக்குமுறையும் ஊடகங்களின் பாராமுகமும்

ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியில் செல்லும் பொதுமக்களை பொறுப்பற்றவர்களாக சித்தரித்து தலைப்பு செய்தி வாசிக்கும் ஊடகங்கள்,  மக்களுடைய வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வைத்துக் கொண்டு அவர்களை அடிப்பது, இழிவுபடுத்தும் விதமாக ஆடல், பாடல், தோப்புகரணம்... என்று இன்னும்பல வழிமுறைகளில் சட்ட விரோதமாக கொடுக்கும்  தண்டனைகளை நியாயப்படுத்தி செய்திகள் வெளியிடுகின்றன. ஒரு நல்ல ஊடகம் என்றால், “போலீசுக்கு இந்த அதிகாரங்களை வழங்கியது யார்?” என்று கேள்வி எழுப்பியல்லவா செய்தி வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் இத்தகைய செய்திகள் சமூக ஊடகங்களில் மட்டுமே வெளிவருகின்றன.

இந்தப் பேரிடர் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு மத்திய அரசு, மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடுவதாக மம்தா பானர்ஜி எழுப்பிய எதிர்ப்புக் குரலில் உள்ள நியாயத்தை அதற்குரிய முக்கியத்துவம் கொடுத்து தலைப்புச் செய்தியாக ஊடகங்கள் வெளியிட்டிருக்க வேண்டாமா?

"டீ "வியாபாரம் செய்யும் பெண்ணை தொழில் செய்ய விடாமல் தடுத்து அதிகாரத்தை நிலை நாட்டும் போலீசிடம் "நீங்கள் கொடுக்கக்கூடிய ஆயிரம் ரூபாய் எப்படி பத்தும்? நாங்களும் மூன்று பிள்ளைகளை வைத்திருக்கோம்!"  என்று வாக்குவாதம் செய்யும் அந்தத் தாயின் குரல்தான் மிகப் பெரும்பான்மை இந்திய மக்களின் குரலாக இருக்கின்றது, அந்தப்  தாயினுடைய உணர்வை பிரதிபலிக்கும் விதமாக ஊடகங்கள் தலைப்பு செய்தியாக வெளியிட்டிருக்க வேண்டாமா?

தன்னுடைய மகனின் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்ய முயலும் போலீசிடம் "எக்காரணம் கொண்டும் பைக்கை தரமாட்டேன். பைக் இல்லனா வியாபாரம் பண்ண முடியாது. எல்லாரும் ஒளிஞ்சி ஒளிஞ்சி தானே தொழில் பண்றோம்" என்று தங்கள் அவலத்தை கூறியபடி பைக்கை போலீசு கைப்பற்ற விடாமல் போராடும் தாயின் குரலையல்லவா ஊடகங்கள் தலைப்பு செய்தியாக வெளியிட்டிருக்க வேண்டும்!

எதிர் நிலை சக்தியாக ஊடகங்கள்

நிர்வாகம், சட்டம் மன்றம், நீதிமன்றம் இவற்றிற்கு அடுத்தபடியாக அரசமைப்புச் சட்டத்தின் நான்காவது தூணாகக் கருதப்படுவது ஊடகம். மேற்கண்ட மூன்றும் தவறு செய்யும்போது அதை மக்களிடம் எடுத்துச் செல்லவும், மக்களுக்கு ஆலோசனை சொல்லவும், அரசியல் சட்டத்தின் 19(1)(a) ஆவது பிரிவு ஊடகங்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. பத்திரிக்கை சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், பத்திரிக்கைத் தரத்தை மேம்படுத்தவும் 1965 ஆம் ஆண்டிலேயே “பிரஸ் கவுன்சில் சட்டம்” இயற்றப்பட்டுள்ளது. பிரஸ் கவுன்சில் சட்டம் இயற்றப்பட்ட காலகட்டத்தில் தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள் இல்லை. எனினும் இந்தச் சட்டத்தின் உள்ளடக்கம் தொலைக்காட்சி செய்தி ஊடகங்களுக்கும் பொருந்தும் என்று முன்னாள் பிரஸ் கவுன்சில் தலைவரும், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.

பல்வேறு காலகட்டங்களில் பத்திரிக்கைகளை அரசு அச்சுறுத்தி தங்கள் கட்டுப்பாட்டில் வைப்பதற்காக பத்திரிகை ஆசிரியர்கள் மீது வழக்குகள் தொடுத்தபோதும், பத்திரிகைகளை தணிக்கைக்கு உட்படுத்த வேண்டுமென்று அரசாணைகள் பிறப்பித்த போதும் அரசியல் சட்டத்தின் 19(1)(a)-வது பிரிவு வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்தை பத்திரிக்கைகளுக்கு உறுதி செய்து உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளது.

தனிப்பட்ட ஒருசில பத்திரிகையாளர்கள் மட்டுமே அர்ப்பணிப்போடு மக்கள் பக்கம் நின்று பணியாற்றுகினரே தவிர, ஒட்டு மொத்த ஊடகமும் அவ்வாறு இல்லை. இதற்கு மாற்றாக இன்று ஓரளவு சமூக ஊடகங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. சமூக ஊடகங்கள் வழியாக  சரியான கருத்துப் பரவுவதை தடுக்கவும், கருத்து கூறுவோரை ஒடுக்கவும் அரசு முயன்று வருகின்றது. சீரழிந்த அரசுக்கட்டமைப்பைப் போலவே, ஊடகங்களும் சீரழிந்து போய் மக்களுக்கு எதிர் நிலை சக்தியாக உள்ளன.

வழக்குரைஞர் சிவராஜ பூபதி
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

1 comment:

  1. ஊடகங்கள் பெரும்பாாாலும் முதலாளிகளின் சொத்து.லாாாபம் அவர்களது குறிக்கோள்.லாாபம் ஈட்டித் தருபவர்கள் மட்டுமே தலைமைப் பொறுப்பில் இருக்க முடியும்.மூலதனத்துக்குப் பங்கம் வராாமல் மக்கள் பிரச்னைகளைப் பேசுவது அவர்களது கொள்கை.சமூக ஊடகங்கள் மூலதனத்தில் நடப்பவை அல்ல.அவற்றையும் ஊடகங்கள் பயன்படுத்துகின்றன.நாாமும் ஊடகங்களைப் பயன்படுத்துகிறோம்.மக்களுக்குச் செய்திகளைக் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்கள் முக்கிய பங்காற்றுவதை மறுப்பதற்கில்லை.தங்கள் கொள்கை வழி நடக்கமுடியாாத சூழலில் சிலர் இணைய வழி ஊடகங்களை நடத்துகின்றனர்.அது படித்தவர்களுக்கு மட்டுமே பயன்படுகிறது.அவர்கள் மீது அரசின் ஒடுக்குமுறை ஏவப்படுகிறது.நாாம் விரும்புகிற வகையிலாான ஊடகங்களை நம்மாாலே கூட நடத்த முடியாது.ஊடகங்கள் குறித்த தோழர் வில்லவன் ராாமதாாாசின் காணொளி கவனிக்கத் தக்கது.

    ReplyDelete