Friday 15 May 2020

கரோனாவும் மனித உரிமைப் பறிப்பும்! முகநூல் நேரலை!

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக மார்ச் 25 முதல் இது வரை மூன்று கட்டங்களாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வருகிறது. மூன்றாவது கட்ட ஊரடங்கு மே 17 இல் முடிவடைய உள்ள நிலையில் அது மேலும் நீட்டிக்கப்படவே அதிக வாயப்புகள் உள்ளது.

கரோனாவை கட்டுப்படுத்துவதில் அரசு மேற்கொள்ளும் ஊடரங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் உண்மையில் கரோனாவை கட்டுப்படுத்தியதோ இல்லையோ,  வாழ்வாதாரங்கள் அனைத்தும் முடக்கப்பட்டு மக்களின் வாழ்வுரிமைதான் முற்றிலுமாக பறிக்கப்பட்டுள்ளது. வேலையின்றி, வருவாய் இன்றி மக்கள் பசி பட்டினியால் அவதியுறுகின்றனர். வேலைக்குச் சென்ற இடத்தில் முதலாளிகளால் கைவிடப்பட்டதால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வாழ வழியின்றி சொந்த ஊருக்குப் பல நூறு கிலோ மீட்டர்கள் நடந்தே செல்கின்றனர். கைக்குழந்தைகளையும் முதியோர்களையும் சுமந்து கொண்டு செல்லும் காட்சிகள் பார்ப்போரின் கண்களைக் குளமாக்ககின்றன. போகும் வழியில் போதிய உணவின்றியும், குடிக்க நீரின்றியும் மற்றும் விபத்துக்குள்ளாகியும் மாண்டு போகின்றனர். பலர் பாதி வழியில் தடுக்கப்பட்டு பழைய இடத்திற்கே திருப்பி அனுப்பப்படுகின்றனர் அல்லது ஆங்காங்கே அடைக்கப்படுகின்றனர். புலம் பெயர் தொழிலாளர்களின் துயரங்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அது ஒரு கொடுந் துயரம்.

ஆனால் அயல் நாடுகளில் உள்ள மேட்டுக் குடியினர் விமானங்கள் மூலம் பாதுகாப்பாக சொந்த ஊருக்குத் திரும்ப மோடி அரசு ஏற்பாடு செய்கிறது.  பிற மாநிலங்களில் படிக்கச் சென்ற வசதி படைத்தோரின் வாரிசுகள்  பேருந்துகள் மூலம் சொந்த ஊருக்குப் பத்திரமாகத் திரும்ப ஆதித்யநாத்கள் அக்கறை செலுத்துகின்றனர்.

கரோனாவைக் காரணம் காட்டி இனி 12 மணி நேரம் உழைக்க வேண்டும் என சந்தடி சாக்கில் சட்டத்தைத் திருத்தி தொழிலாளர்களை ஒட்டச் சுரண்ட முதலாளிகளுக்குச் சலுகை வழங்கி உள்ளது மோடி-அமித்ஷா கும்பல்.   

அவசியத் தேவைகளுக்காக வெளியில் வருவோரிடம் காவல்துறை அத்துமீறி நடந்து கொள்வதும், அடித்துத் துன்புறுத்திப் பல்வேறு வழிகளில் அவமானப்படுத்துவதும், வாகனங்களைப் பறிமுதல் செய்வதும், பொய்வழக்குகள் புனைவதும் அன்றாட நடவடிக்கையாகவே மாறிப் போயுள்ளது.

மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி உயிரைப் பணயம் வைத்துப் பணிபுரியும் சூழல்தான் இன்றும் நிலவுகிறது. எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யமால் டாஸ்மாக்கைத் திறக்க துடியாய்த் துடிக்கிறார் எடப்பாடி. சாராயக் கடைகளை திறக்கக்கூடாது என தமிழகமே எழுந்து நின்ற போதும் அதை துச்சமென மதித்து கரோனா பரவினாலும் பரவாயில்லை, தான் கல்லா கட்ட வேண்டும் என்பதற்காக மக்களின் உணர்வுகளில் மண்ணை அள்ளிப் போட்டதோடு, சாராயக் கடைகளைத் திறக்காதே எனக் குரல் கொடுத்தோரின் குரல்வளையை நெறித்துச் சிறையில் அடைத்தது தமிழக அரசு.

கரோனா காலத்தில் உயிருக்கு ஆபத்து எனத் தெரிந்திருந்தும் ஆனந்த் தெல்தும்டெ உள்ளிட்ட சமூகச் செயல்பாட்டாளர்களை சிறைக்கு அனுப்புகிறார் மோடி.

கரோனாவைக் காரணம் காட்டி மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டுள்ளது. கண்ணியமான வாழ்க்கை சிதைக்கப்பட்டுள்ளது. சுதந்திரம்,  கருத்துரிமை மறுக்கப்பட்டுள்ளது.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் இது குறித்து முகநூல் நேரலையில் விரிவாகப் பேசவிருக்கிறார். அனைவரும் இணைந்திருங்கள்.
தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

தொடர்புடைய பதிவுகள்

மோடியால் கரோனாவை எதிர் கொள்ள முடியுமா?
டாஸ்மாக் : கரோனாவின் கொலைக்கூடம்!
ஆகக் கொடியது எது? கரோனாவா? கொடுஞ் சட்டமா?
அரசின் ஊது குழலாகிப்போன போன ஊடகங்கள்!
டாஸ்மாக்கை மூடச்சொன்ன முதியவர் சிறைக் கொட்டடியில்!...

No comments:

Post a Comment