Saturday 30 May 2020

போராடும் மாணவச் சமுதாயத்தைப் பொட்டலத்தில் கட்டத் துடிக்கிறது மோடி அரசு!

கரோனாவின் தாக்குதலோடு சேர்ந்து மோடி அரசின் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவிகள் இருவரை டெல்லி ஜாஃப்ராபாத் போலிஸார் அன்மையில் கைது செய்துள்ளனர்.
நாடு முழுவதும் ஜூன், ஜூலை இறுதிக்குள் அதிகப்படியான கரோனா தொற்று பாதிப்புகள் ஏற்படும் என ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் 60 நாட்கள் சிறை படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.  புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்  வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிகப் பெரிய துன்பத்தில் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இதனால் உண்டாகியிருக்கும் சமூக- பொருளாதார அழிவு குறித்து, 20 லட்சம் கோடிக் காகிதத் திட்டத்தை அறிவித்து நாட்டு மக்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துவிட்டு, தன்னுடைய காவி-கார்ப்பரேட் பாசிசத்தை  இந்தப்  பேரிடர் காலத்தின் போதும்கூட  சிறிதும் சுணக்கம் இல்லாமல்  செயல்படுத்தி வருகிறது மோடி அரசு!

அதனடிப்படையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட பலர் கடந்த ஒரு மாதத்திற்குள் கைது செய்யப்பட்டு 'ஊபா' கருப்புச் சட்டப்படி  சிறைப்படுத்தப் பட்டுள்ளனர்.

2020 பிப்ரவரி மாதம், டெல்லி ஜஃப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பெண்கள் தலைமையில் நடந்த  CAA எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவிகள், பிஞ்ரா டோட் என்றக் குழுவைச் சேர்ந்த தேவங்கனா கலிதா மற்றும் நடாஷா நர்வால் ஆகிய இருவர் மீதும் I.P.C  சட்டப்பிரிவுகள் 186 மற்றும் 353 இன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறி, 3 மாதம் கழித்து தற்போது  டெல்லி காவல் துறை அவர்களைக் கைது செய்துள்ளது.
2020 மே 23 மாலை, வீட்டில் இருந்த இருவரையும் டெல்லி ஜாஃப்ராபாத் போலிஸ் கைது செய்ததோடு, அவர்களுடைய குடும்பத்தினரிடமும் எதற்காகக் கைது செய்யப்பட்டார்கள் என்பது குறித்து எந்த விவரமும் அளிக்கவில்லை. இவர்கள் மீது UAPA சட்ட நடவடிக்கையும் பாய உள்ளதாகத் தெரிகிறது. இது சட்ட விரோதமானது மட்டுமல்ல,  ஜனநாயகத்துக்கும் எதிரானதாகும்.
     
பாரதிய ஜனதாக் கட்சி 2019 ஆகஸ்டில் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் (UAPA) திருத்தம் கொண்டு வந்தது.  பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பாமல், அதன் பரிசீலனைக்கும் உட்படுத்தாமல் நிறைவேற்றிவிட்டது. UAPA சட்டப்படி தனி ஒருவரை தீவிரவாதி என்று முத்திரை குத்தி சிறையில் அடைக்க முடியும்.
அந்த வகையில், ஒரு நபரை தீவிரவாதி என்று அறிவிக்கவும் அல்லது அறிவிப்பை வாபஸ் பெறவும் மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என்று குறிப்பிடுகிறது இச்சட்டம். அதேசமயத்தில் குறிப்பாக யார் அதிகாரம் கொண்ட நபர்? யார் முடிவெடுக்கக் கூடிய நபர்? என்று குறிப்பிடப்படவில்லை. மத்திய அரசின் உள்துறை அமைச்சரா? உள்துறை செயலாளரா? தேசியப் புலனாய்வு முகமையா? அல்லது மாநிலக் காவல் துறை உயர் அதிகாரியா? அல்லது முடிவெடுக்க ஏதேனும் குழு உள்ளதா? அதில் எத்தனை உறுப்பினர்கள்? பங்கு கொள்ளும் நபர்கள் யார் யார்? என்ற எவ்வித விளக்கமும் இல்லை. இதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்று அச்சட்டத்தில் குறிப்பிடப்படவும் இல்லை. தீவிரவாதி என்று ஒரு நபரை அறிவிக்க என்ன அளவு கோல் வைத்திருக்கிறது?எதை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்வது? எவ்வகையான தகவல் அடிப்படையில், எந்த முகாந்திரம் மூலம் முடிவுக்கு வருவது என்று குறிப்பாக அதில் எதுவும் இல்லை. ஆக உருவமற்ற, வெளிப்படைத் தன்மையற்ற ஒன்றாக இச்சட்டம் உள்ளது.  பாரதிய ஜனதாக் கட்சி தன் விருப்பம் போலப் பயன்படுத்தவே இத்தகைய தெளிவற்ற நிலையில் வெளிப்படைத் தன்மை அற்றதாக இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

#மோசடியான நம்பிக்கை!

குடிமக்களைத் தீவிரவாதி என்று அறிவிக்க, அந்த நபர் தீவிரவாதி என்று 'நம்பினால்'  போதும் என்று சட்டம் சொல்கிறது. இது அப்சல் குருவிற்கு தூக்குத் தண்டனை வழங்கிய நம்பிக்கையைப் போன்றது மற்றும் அயோத்தியில்தான் இராமர் பிறந்தார் என்ற நம்பிக்கையைப் போன்றதாகும். மத்தியில் ஆளுகின்ற பா.ஜ.க அரசு நம்பினாலே, கருதினாலே ஒருவரை தீவிரவாதி என்று அறிவிக்க முடியும். அப்படி அறிவிப்பதும் கூட, வெளிப்படைத் தன்மையற்ற முறையில் மறைமுகமாக நடைபெறுகிறது.  குற்றம் சாட்டப்பட்ட நபரிடத்தில் விளக்கம் கூறும் நோட்டீசு கொடுக்கப்படுவதில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் தன் சுய விளக்கத்தினை அளிக்க வாய்ப்பும் இல்லை. அரசு, கெஜட்டில் அறிவித்தால் போதும் என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் ஒரு தனி நபர் எப்படி இதை தெரிந்து கொள்ள முடியும்? அதற்கு எதிர் வினையாற்ற சட்ட ஆலோசனை பெற்று இதைத் தடுக்க வாய்ப்பே இல்லாமல் உள்ளது.  பிரம்மாண்டமானஅரசு எந்திரத்தின் ஜனநாயக விரோதப் போக்கை எதிர்த்து தனிநபர் சட்டப் போராட்டம் நடத்துவது எதார்த்தத்தில் சாத்தியம் இல்லை. ஒரு கட்சி அல்லது அமைப்பு இத்தகைய சட்டப் போராட்டம் நடத்த வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ஒரு தனிநபரை தீவிரவாதி என்று அறிவித்த உடன் அவரைப்பற்றி ஊடகத்தில், நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பே, அவர் தீவிரவாதி என்று தீர்ப்பு வாசித்து விடுகிறார்கள். அதன் மூலம் அந்தத் தனிநபரின் சமூக அந்தஸ்து, மதிப்பு ஆகியவைக்கு குந்தகமும் பங்கமும் ஏற்படுவதாகவே அமைந்துவிடுகிறது. இது தனிநபர் சுதந்திரத்திற்குத் தீங்காகும்.

#நிரூபிக்கும் சுமை! (Burden of proof)

குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி ஒரு குற்றத்தை நிரூபிக்கும் சுமை அரசு தரப்பிற்கு மட்டுமே உரியவை ஆகும். ஆனால் இந்த 'ஊபா' சட்டப்படி குற்றம் சாட்டப்பட்ட நபர், தான் ஒரு நிரபராதி, தீவிரவாதி இல்லை என்று நிரூபிக்க வேண்டும் என்கிறது சட்டம். இத்தகைய கருப்புச் சட்டங்களின்படி விசாரணை நீதிமன்றத்தால் பல வழக்குகளில் தண்டனை கொடுக்கப்படவில்லை. ஆனால் பொய் வழக்குப் போட்டதற்கும், தனிநபர் சிறையில் வாடியதற்கும், அவரது சமூக வாழ்க்கை பாதிக்கப்பட்டதற்கும், பொருளாதார இழப்பு ஏற்பட்டதற்கும் நட்டத் தொகை எதுவும் அவருக்குக் கிடைப்பதில்லை.  இவ்வகை வழக்குகளில் மட்டுமில்லாமல் மற்ற எந்த வழக்குகளிலும் கொடுக்கப்படுவதில்லை. பொய் வழக்கு போட்டவர்களை தண்டிப்பதும் இல்லை.  குற்றம் சாட்டப்பட்டவரை விசாரணை காலத்திற்கு முன்பே நீண்ட காலம் சிறைப்படுத்தி அவருடைய சுதந்திரத்தை நசுக்கவே வழி வகை செய்யப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ், பாரதிய ஜனதாக் கட்சியை அரசியல் ரீதியில் விமர்சிக்கும் அறிவுத்துறையினர், கலைத்துறையினர், சிறுபான்மையினர் போன்ற மாற்று சித்தாந்த கருத்து உடையவர்களை பழிவாங்குவதற்கு வழிவகை ஏற்படுத்தி கொண்ட வேலைதான் இது.

#பழிவாங்க புதிய கருவி!

குற்றப்பின்னணி இல்லாமலும் ஏன் ஒரு எப்ஐஆர் கூட பதிவாகாமல் சிறந்த குடிமகனாக, வருமான வரி செலுத்தி வாழ்பவராக இருந்தாலும்கூட இச்சட்டப்படி தீவிரவாதி என்று ஒருவரை  அறிவிக்க முடியும். உதாரணத்திற்கு பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே, கௌதம் நவ்லகா ஆகியோர் தற்போது சிறையில் உள்ளதைக் குறிப்பிட முடியும். மேலும் CAA வுக்கு எதிராகவும், டொனால்ட் ட்ரம்ப் இந்திய வருகையின் போது மறியல் போராட்டங்கள் செய்த ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் ஷிபா உர் ரகுமான், மீரான் ஹைதர் மற்றும் சபுரா சார்கர் ஆகியோர் இச்சட்டப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தமிழகத்தில் டாஸ்மாக்கிற்கு எதிராக மக்கள் போராடுகின்ற நேரத்தில் அப்போராட்டத்தை ஆதரித்த, அப்போராட்டத்தில் பெண்களின் தாய்மார்களின் எழுச்சியை ஆதரித்த செயல்பாட்டாளர்கள், சமூக ஊடகங்களில் யாரெல்லாம் எழுதினார்களோ, பேசினார்களா  அவர்களை எல்லாம் சட்டப்படி குற்றவாளிகளாக்க முடியும் என்கிற அளவிற்கு மிகக் கொடூரமான சட்டம்தான் இது.

சட்டம் என்பது சமூக வாழ்விற்கும் அதன் வளர்ச்சிக்கும் தேவையான ஒன்று என்றால்  மக்களின் உரிமைகளை, ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்குப் பதிலாக, ஒடுக்குமுறைக் கருவியாக பயன்படுத்தப் படுவதையும் மக்களுக்கு எவ்வித பதிலும் சொல்லக் கடமைப் படாது இருக்கும் இவை, குற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்கும் இந்திய சாட்சிய சட்டத்திற்கும் மற்றும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும் எதிரானதாக இருக்கும் இத்தகைய கருப்புச் சட்டத்தை நாம் எதிர்த்தே ஆகவேண்டும்.!

R.ஜானகிராமன்
வழக்குரைஞர்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

No comments:

Post a Comment