Tuesday 19 May 2020

மருத்துவர்களின் பாதுகாப்பைக் காற்றில் பறக்க விடுகிறதா உயர் நீதிமன்றம்?

கரோனா சிகிச்சை - மருத்துவர்கள் பாதுகாப்பு உத்திரவாதப்படுத்தக் கோரிய வழக்கு ஒரு வாரம் தள்ளி வைப்பு:

27.03.2020 அன்று தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ்- கரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கக் கோரி PRPC சார்பில் வழக்குரைஞர் சு.ஜிம்ராஜ் மில்ட்டன் சார்பில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தோம்.அதில் முன்னணிப் பணியாளர்களின் (Front line Workers) பாதுகாப்பு, பிற மாநில தொழிலாளர்கள் (Migrant Workers) வாழ்வாதாரத்தை உத்திரவாதப்படுத்தக்கோரி - இடைக்கால மனு தாக்கல் செய்திருந்தோம். வழக்கு 18.05.2020 அன்று விசாரணைக்கு வந்தது. நமது சார்பாக மூத்த வழக்குரைஞர் பாலன் ஹரிதாஸ் ஆஜராகி வாதிட்டார். மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் பார்த்தசாரதி உடனிருந்தார்.

கடந்த வாரம் விசாரணையின்போது, 13.05.2020 அன்று அரசு தரப்பிலிருந்து அறிக்கை (Status Report) தாக்கல் செய்தனர். நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்தியநாராயணன் ஆகியோர் அறிக்கை முழுமையாக ல்லை என்பதால் முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

16.05.2020 அன்று அரசு தரப்பில் புதிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் கரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்ட மருத்துவ மனைகளின் எண்ணிக்கை, மருத்துவர்களின் எண்ணிக்கை, மருத்துவர்களுக்கு வழங்கப்படும் Personal Protective Equipment (PPE) எனப்படும் பாதுகாப்பு உபகரணங்களின் எண்ணிக்கை, சேமிப்பில் தயாராக உள்ள உபகரணங்களின் எண்ணிக்கை, அரசினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த எந்தவித தகவல்களும் இன்றி பொதுவான வழிகாட்டுதல்கள் மட்டும் இருந்தது.

மீண்டும் மற்றும் ஒரு அறிக்கையை 16.05.2020 அன்று அரசு தரப்பில் தாக்கல் செய்தனர். இதற்குப் பதிலளிக்கும் விதமாக 18.05.2020 அன்று நாம் மறுப்பு அறிக்கையை (Objections) தாக்கல் செய்தோம். அதில் PPE குறித்து WHO, தேசிய நோய்த் தடுப்பு மையமும் (NCDC), சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிலும் கொடுக்கப்பட்ட விளக்கத்தைக் குறிப்பிட்டிருந்தோம். அதன்படி மருத்துவர்களுக்கு WHO குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்படி

(1st Layer – Surgical Apron,
2nd Layer – Gown,
3rd Layer – Coverall/Gown (Fluid Resistence),

மூன்றடுக்கு பாதுகாப்பு ஆடை கொடுக்கப்படவில்லை. மாறாக அரசு மருத்துவர்களுக்கு கொடுக்கப்பட்டது PPE Kit – டே கிடையாது. அது வெறும் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மேலுடைதான் (Surgical Apron) என்று குறிப்பிட்டிருந்தோம்.

கூடுதலாக பல மருத்துவர்களிடம் நேரடியாக உரையாடிப் பெற்ற நடைமுறை தகவல்களோடு, மருத்துவர் ரவீந்தரன் அவர்கள் மூலம் பிரமாண பத்திரத்தையும் (Supporting Affidavit) தாக்கல் செய்திருந்தோம்.  மொத்தம் 112 சுகாதாரப் பணியாளர்களுக்கும், 150 க்கும் மேற்பட்ட காவலர்களும், 27க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களுக்கும், இன்னும் பல முன்னணியாளர்களுக்கும் (Front line Workers) கரோனா தொற்று உறுதியாகியிருப்பதையும் அதில் குறிப்பிட்டிருந்தோம்.

குறிப்பாக முதல் 7 நாட்கள் கரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், அடுத்த 7 நாட்கள் மருத்துவமனை தனிமைப்படுத்தலிலும், அதன் பிறகு மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் அடுத்த 7 நாட்கள் வீட்டுத் தனிமைப்படுத்தலிலும் இருந்து பின்பு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு அதன்பிறகுதான் மீண்டும் பணிக்குத் திரும்பவேண்டும் என்பவை முழுவதுமாக பின்பற்றபடுவதில்லை.

மேலும் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மட்டுமே பணி செய்யவேண்டிய மருத்துவர்கள், நிர்பந்தத்தினால் அரசு வழிகாட்டுதல்களை மீறி சில சமயம் 12 மணி நேரம் பணியமர்த்தப்படுவதையும் கூறினோம்.

மருத்துவமனை என்பதே நோய்த்தொற்றின் மையப் பகுதி (Hot spot) என்பதால் தமிழகத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளையும் High Risk Zone () Moderate Risk Zone என மட்டுமே தரம்பிரிக்க வேண்டுமெனவும், அதனடிப்படையில் உபகரணங்கள் வழங்கப்பட வேண்டுமெனவும் கோரினோம்.

குறிப்பாக கோவையில் குழந்தை பெற்ற பெண்ணுக்கும் கரோனா உறுதியாகியிருப்பதைச் சுட்டிக்காட்டி கரோனா சிகிச்சையில் ஈடுபடாத, பிரசவ அறையிலிருக்கும் மருத்துவர்கள் மற்றும் இன்னபிற மருத்துவர்களுக்கும் PPE கொடுக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டிருந்தோம். மேற்குறிப்பிட்ட அனைத்து விஷயங்களையும் ஆவணங்களோடு பதில் மனுவாக தாக்கல் செய்தோம்.

தாக்கல்செய்யப்பட்ட பதில் மனுவை படித்து, வாதம் செய்ய அரசு தரப்பு வழக்கறிஞர் ஒருவாரம் அவகாசம் கோரினார். நமது தரப்பில் ஏற்கனவே அவர்கள் தாக்கல் செய்த பதிலுரையிலுருந்தே நாங்கள் வாதம் செய்கிறோம் என முன்வைத்தோம். ஆனால் நீதிபதிகள் சத்தியநாராயனன் மற்றும் அனிதா சுமந்த் ஆகியோர் வழக்கை ஒருவாரம் கழித்து பட்டியலிட உத்தரவிட்டனர்.
கரோனா ஆபத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் மருத்துவர்கள் பாதுக்காக்கப்பட வேண்டும். அதனால்தான் மருத்துவர் சைமன் இறப்பின் போது, தானாக முன்வந்து விசாரித்தது நீதிமன்றம்.
ஆனால் தற்போது அரசே கரோனாவோடு வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளதால், நீதிமன்றம் விசாரணையில் 'அவசரம்' காட்டவில்லை போலும்.

ஆனால் முன்னணிப் பணியாளர்களின் நிலையோ ஆபத்துக் கட்டத்தில். இந்த அவல நிலைக்கு தீர்வு காண, அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்ப வேண்டும் என்பதே தற்போதைய நிலை.

வழக்குரைஞர் சு.ஜிம்ராஜ் மில்டன்
கிளைச் செயலாளர்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
சென்னை 

No comments:

Post a Comment