Wednesday 6 May 2020

உயிர் பறிக்கும் கரோனா காலத்தில் குரல்வளை நெறிக்கும் 'ஊபா'!


·  பீமா கோரேகான் வழக்கை ரத்து செய்!
·  கைது செய்யப்பட்ட உரிமைச் செயல்பாட்டாளர்களை உடனே  
    விடுதலை செய்!
·   பாசிச ‘ஊபா’ (UAPA) சட்டத்தை நீக்கு!

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
முன்னெடுக்கும் தொடர் இயக்கம் ___________________________________________________________________

ஆர்.எஸ்.எஸ்-சின் அரசியல் பிரிவான பாஜக - மோடி அரசின், மக்கள் விரோத நடவடிக்கைகளை கூர்மையாக அம்பலப்படுத்தி வந்த சிந்தனையாளர்கள், மனித உரிமை, தொழிலாளர் உரிமை செயல்பாட்டாளர்களைக் குறிவைத்து அவர்கள் மீது தொடர் அடக்குமுறைகளை ஏவிவருகிறது மோடி அரசு. குறிப்பாக ஆகஸ்ட் 28, 2018 அன்று மக்கள் உரிமைச் செயல்பாட்டாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சுதா பரத்வாஜ், வெர்னான் கன்சால்வேஸ், அருண் பெரெய்ரா, எழுத்தாளர் வரவர ராவ் ஆகியோரை ஊபா’ (UAPA) சட்டத்தின் கீழ் குற்ற எண்.4/2018 வழக்கில் கைது செய்து மகாராட்டிரா பாஜக அரசின் காவல்துறை. கடந்த 20 மாதங்களாகச் சிறையில் இவர்கள் வதைக்கப்பட்டுவரும் சூழலில், பிணை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.
சுதா பரத்வாஜ், வெர்னான் கன்சால்வேஸ், வரவரராவ், கௌதம் நவ்லகா, அருண் பெரெய்ரா,
இதற்கிடையே மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோற்று சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தவுடன், வழக்கை தேசியப் புலனாய்வு முகமைக்கு மாற்றித் தன் கையில் வைத்துக் கொண்டது மோடி அரசு. தொடர்ந்து அம்பேத்கர் குடும்பத்தைச் சேர்ந்த சிந்தனையாளர், கோவா ஐ.ஐ.எம். பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டெ,  சமூகச் செயல்பாட்டாளர் கவுதம் நவ்லகா ஆகியோரை பீமா கோரேகான் வழக்கில் கடந்த ஏப்ரல்,14,2020 அன்று கைது செய்தது மோடி அரசு. கரோனா பேரிடர் காலத்தில் எல்லாக் கைதிகளும் வெளிவரும் நேரத்தில், இவர்களை உள்ளே அடைத்தனர். உலகம் முழுவதும் எழுந்த கண்டனத்தைக்கூட மோடி அரசு கண்டு கொள்ளவில்லை.
ஆனந்த் தெல்தும்டெ
பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டாக ஊடகங்களில் பரப்பப்பட்டது மோடியை கொல்லச் சதி செய்தார்கள்என்பதே.

பீமா கோரேகான் நிகழ்வு

1818 ஜனவரி 1 அன்று மகாராஷ்டிரா மாநிலம் பீமா கோரேகானில் நடந்த ஒரு போரில், ஆங்கிலேயப் படையில் இணைந்த மகர் சாதி தலித் மக்கள் தங்களைக் காலம் காலமாக ஒடுக்கிவந்த, மேல்சாதி பார்ப்பனப் பேஷ்வா ஆட்சியாளர்களை வென்றார்கள். அந்தப் போரின் 200 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு, கடந்த டிசம்பர்,31,2017-இல் நூற்றுக்கும் மேலான தலித் மனித உரிமை தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் முற்போக்காளர்கள் உள்ளடங்கிய எல்கர் பரிசத்’ (Elgar Parisad) அமைப்பால் நடத்தப்பட்டது. ‘எல்கர் பரிசத்’தில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி.சாவந்த், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கோல்சே படேல் ஆகியோரும் உறுப்பினர்களாக உள்ளனர்.

2018 ஜனவரி 1 ஆம் தேதியன்று தலித் இயக்கங்கள் நடத்திய பீமா கோரேகான் 200 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் இலட்சக்கணக்கான தலித் மக்கள் அணிதிரண்டனர் சாதி ஆதிக்கத்துக்கு எதிராக தலித் மக்களும், முற்போக்காளர்களும் இணைந்து பங்கேற்கும் நிகழ்வாக பீமா கோரேகான் வளர்வதைக் கண்டு அச்சமுற்ற ஆர்.எஸ்.எஸ்பா.ஜ.க. உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகள், சாதிப் பிரச்சனையைத் தூண்டி சில உயர்சாதி பினாமி அமைப்புகள் மூலம் டிச-31, 2017 அன்று நிகழ்வில் பங்கேற்ற மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் வன்முறை நிகழ்த்திய ஆர்.எஸ். எஸ்பா.ஜ.க வினரை விட்டவிட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நூற்றுக் கணக்கானோர் மீது வழக்குப் பதிவு செய்தது மகாராஷ்டிரா காவல்துறை. அதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்பா.ஜ.கவை அரசியல் ரீதியாக எதிர்க்கும் சிந்தனையாளர்கள் மற்றும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களைக் குறிவைத்து வழக்கில் சேர்த்துக் கைது செய்து வருகிறது.

உண்மையில், கைது செய்யப்பட்டுள்ள சமூகச் செயல்பாட்டாளர்கள் டிசம்பர், 31, 2017 பீமா கோரேகன் நிகழ்வில் பங்கேற்கவில்லை. குற்ற எண்.4/2018 முதல் தகவல் அறிக்கையில் கைதானவர்கள் பெயர்களும் இடம்பெறவில்லை. மோடியைக் கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டார்கள் என்கிற மோடி கொலை சதிக் கடிதம் குறித்து குற்ற எண். 4/2018 முதல் தகவல் அறிக்கையிலும், பீமா கோரேகான் வழக்குகளிலும் இடம்பெறவில்லை. குறைந்தபட்சம் மோடி கொலை சதிக் கடிதம்’ தொடர்பாக தனியாகக்கூட ஒரு முதல் தகவல் அறிக்கையும் இல்லை. பீமா கோரேகன் நிகழ்வில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆஜரான வழக்கறிஞர்களையும் அதே வழக்கில் சேர்த்து விட்டனர். இந்த அநீதிக்கு மிகவும் அடிப்படையாக இருப்பது ‘ஊபா’ என்கிற சட்ட விரோத நடவடிக்கைககள் தடுப்புச் சட்டம் (UAPA).

கருப்புச் சட்டம் ‘ஊபா’ (UAPA)

மக்கள் உரிமைச் செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) என்ற ஊபா’ சட்டத்தின் கீழ். இச்சட்டத்தின்கீழ் பிணை வாங்குவது கடினம். 1967-லிருந்து இன்றுவரை ‘ஊபா’ சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், அரசியல் சட்டம் வழங்கும் கருத்துரிமையை மறைமுகமாக ஒழித்துள்ளது. போராடும் அமைப்புகள் மற்றும் மக்களைக் குறிவைத்துக் கொண்டுவரப்பட்ட இச்சட்டம் உரிய தெளிவின்றி, எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளும் வகையில்  எழுதப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட ஊபா’ சட்டப்படி நாட்டின் பொருளாதார பாதுகாப்புக்கு எதிரானச் செயல்கள், அத்தியாவசியப் பொருட்களைத் தடை செய்தல் ஆகியவை பயங்கரவாதக் குற்றமாகக் கருதப்படும். இதன்மூலம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், விவசாயிகள், மீனவர்கள் போராட்டம் என அனைத்தும் பயங்கரவாதச் செயல்கள்தான். இதற்கு ஆயுள் தண்டனை விதிக்கலாம். ஜாமீன் இன்றி 180 நாட்கள் சிறை, 30 நாட்கள் போலீசு காவல் என எல்லாம் உண்டு. ஏற்கனவே மருத்துவர் பிநாயக் சென், பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்டோர் ‘ஊபாசட்டத்தில் தண்டிக்கப்பட்டுள்ளனர். தடா’(TADA), ‘பொடா’வைப் (POTA) போன்றே ‘ஊபா’ சட்டமும் முழுக்க முழுக்க அரசின் பழி வாங்கும் நடவடிக்கைக்கு மட்டுமே உபயோகிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2014-ஆம் ஆண்டில் ‘ஊபா’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 72.7% பேர் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னமும் பலர் சிறையில் வாடி வருகின்றனர். அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளான கருத்துரிமை, வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டுமானால் ஊபா’ சட்டம் நீக்கப்பட வேண்டும்.

எனவே,
·  "பீமா கோரேகான் வழக்கில் பொய்குற்றச் சாட்டின்கீழ் கைது 
   செய்யப்பட்டுள்ள அனைத்து மக்கள் உரிமைச்  
   செயல்பாட்டாளர்களையும் உடனே விடுதலை செய்!
·  பாசிச ‘ஊபா’ சட்டத்தை நீக்கு!
·  பொய்வழக்குகளை ரத்து செய்!” 
என்ற முழக்கங்களை முன்வைத்து தொடர் இயக்கம் எடுக்க வேண்டியுள்ளது.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் முன்னெடுக்கும் இயக்கத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் இணைய வேண்டுமென அழைக்கிறோம்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
-------------------------------------------------------------------------------------------------------------------
தொடர்புக்கு: 
வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன்98653 48163 
வழக்குரைஞர் சு.ஜிம்ராஜ் மில்டன்98428 12062

2 comments:

  1. தலைப்பில் மட்டுமே கொரோனாாவைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது.கட்டுரையில் எதுவும் இல்லை.குரல்வலை என்பது தவறு.குரல்வளை என்பதே சரி.அனைத்து நீதிமன்றங்களும் இந்த கருப்புச் சட்டத்திற்கு ஆதரவாாகச் செயல்படுவதை அம்பலப்படுத்தி இருக்கலாம்.தேசிய பாாதுகாாப்பு முகமையின்(NIA)வரம்பற்ற அதிகாாரத்தைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம்.

    ReplyDelete
  2. வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி. எழுத்துப் பிழை சரிசெய்யப்பட்டுள்ளது.

    ReplyDelete